ஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும் விளக்கமும் அளிக்கப்படும். இந்த மாத தலைப்பு "களப்பிரர் ஆட்சியில் தமிழகம்" இந்த மாதம் 19 ஞாயிறு அன்று என்னுடைய உரை.
களப்பிரர் காலம்
தமிழகத்தின் வரலாற்றை பார்க்கும் பொழுது தமிழகத்தை அரசாண்ட மன்னர்கள் யார் யார்? எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தனர்? அவர்களின் ஆட்சி எவ்வாறு இருந்தது? அவர்களின் காலத்தில் வந்த நூல்கள் என்ன? அவர்களின் காலத்திய கல்வெட்டுகள், செப்பேடுகள், காசுகள் என்ன? அவர்களின் காலத்திய சிலைகள், கோவில்கள், கட்டிடங்கள் என்ன? என்று கால வரிசைப்படி பார்க்கும் பொழுது கி பி 250 ல் இருந்து 575 வரை வரலாறுகள் ஏதும் இல்லை. வரலாற்று அறிஞர்கள் இக்கால வரலாற்றை அறிய தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை என்று ஒற்றை வரியில் எழுதி முடித்தனர் இருண்ட காலம் என்று.
களப்பிரர் வரலாற்றை அறிய உதவும் சான்றுகள்
வரலாற்றை அறிய உதவும் சான்றுகள் இரண்டு. ஒன்று தொல்பொருள் சான்றுகள் மற்றோன்று இலக்கிய நூல்களின் சான்றுகள். களப்பிரர் வரலாற்றை அறிய கிடைத்த தொல்பொருள் சான்றுகள் 01. வேள்விக்குடி செப்பேடு 02.தளவாய் புரா செப்பேடு 03. கூரம் செப்பேடு 04.பள்ளன் கோவில் செப்பேடு 05.வேலூர் பாளையம் செப்பேடு 06.சின்னமனூர் செப்பேடுகள்.
இவைகள் எல்லாம் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கட சாமி அவர்கள் களப்பிரர் ஆட்சியில் தமிழகம் (1976) என்ற நூலை எழுதுவதற்கு முன் கிடைத்தவை. அவர் இயற்கை எய்துவதற்கு முன் (1980 ஆண்டு மே மாதம்) 1979 ஆம் ஆண்டு பூலங்குறிச்சி கல்வெட்டு தமிழக தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது.
கல்வெட்டு மற்றும் செப்பேடுகளுக்கான வேறுபாடுகள்
களப்பிரர் வரலாற்றை பற்றி அறிய கிடைத்த தொல்பொருள் சான்றுகள் பெரும்பாலும் செப்பேடுகள். ஏன் செப்பேடுகள் அதிகமாக கிடைத்தது என்று வினா எழுப்பினால் அதில் நுட்பமான பதில் ஒன்று ஒளிந்து இருக்கிறது. இந்த நூட்பமான பதிலை அறிய கல்வெட்டு மற்றும் செப்பேடுகளுக்கான வேறுபாட்டை அறிந்தால் போதும்.
கல்வெட்டுகள் பொது இடங்களில் கோவில்கள், குளங்கள், குகைகள், மலைகள் என பெரிய பெரிய பாறைகளில் எழுதிவைக்கப்படுகிறது. பாறைகளில் எழுதப்படும் எழுத்துக்களின் அளவு பெரியதாக இருக்கும். தானம் அளிப்பவர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைப்போன்று தானம் பெறுபவரும் யார் வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. கல்வெட்டு மூலம் அளிக்கப்படும் தானம் பொது பயன்பாட்டிற்க்கு மக்களுக்கு அளிக்கப்படுபவை.
செப்பேடுகள் அளவில் சிறியதாக இருக்கும். கைக்கு அடக்கமாக இருக்கும். எனவே எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லமுடியும். தானம் அளிக்கும் உரிமை மன்னனுக்கு மட்டுமே உள்ளது. அதைப்போன்று தானம் பெரும் உரிமையும் பிராமணர்களுக்கே உள்ளது. இதற்க்கு ஆதாரம் வேண்டும் என்றால் திரு வி பாலம்மாள் பாண்டிய மன்னன் அளித்த செப்பேடுகள் அனைத்தும் பார்ப்பனர்களுக்கு அளித்தவையே என்றுரைக்கிறார்.
தானம் அளிக்கப்படும் நிலத்தின் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
- வேள்வி குடி: பாண்டிய மன்னன் முது குடுமி பெருவழுதிக்கு வேள்வி செய்து வந்து கிராமத்தை இரு பிராமணர்களுக்கு தானம் அளிக்கப்பட்டது. அக்கிரமத்தை வேள்வி குடி என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
- திருமங்கலம்: தளவாய்புரம் என்ற கிராமம் பன்னிரண்டு பிராமணர்களுக்கு தானம் அளிக்கப்பட்டது. இக்கிராமம் திருமங்கலம் என்று மாற்றம் செய்யப்பட்டது.
- சாசன மங்களம்: (சிவகாசி செப்பேடு) நாலாபுரம் என்ற கிராமம் பிராமணர்களுக்கு தானம் அளிக்கப்படுகிறது. அக்கிரமம் சாசன மங்களம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இதை போன்று சதுர்வேதி மங்களம்,
செப்பேட்டின் மூலம் தானம் அளிக்கும் மன்னன் யார் என்று தெரியும், தானம் பெரும் பிராமணர்கள் யார் என்று தெரியும். செப்பேடுகள் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளில் எழுதப்படுகிறது. இரு மொழி அறிஞர்களால் செப்பேடுகள் எழுதப்படுகிறது. எனவே அவர்கள் செய்யுள் வடிவில் செப்பேட்டை எழுதுகின்றனர். அவர்கள் வணங்கும் கடவுளை வாழ்த்தியும் வணங்கியும் செப்பேட்டில் எழுதுகின்றனர்.
சிவன்: வேள்வி குடி செப்பேடு சிவனை வணங்கி எழுதப்பட்டுள்ளது .
முக்கடவுள்: தளவாய்புரம் செப்பேடு சிவா, விஷ்ணு பிரம்ம ஆகிய முக்கடவுளையும் வணங்கி எழுதப்பட்டுள்ளது.
களப்பிரர் வரலாறு பற்றிய அறிய கிடைத்த செப்பேடுகள்
வேள்வி குடி செப்பேடு. களப்பிரர் வரலாறு பற்றிய அறிய கிடைத்த முதல் வரலாற்று சான்று வேள்வி குடி செப்பேடு. இது 1920 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது எங்கு கண்டு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. இதனை கண்டறிந்தவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். இந்த செப்பேடு லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இது கி பி எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த செப்பேடு. பாண்டிய மன்னன் நெடுஞ்சாடையான் உடையது. இது மொத்தம் பத்து செப்பேடுகளை கொண்டது. தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. 155 வரிகளை கொண்டுள்ளது. முதல் வரி முதல் முப்பது வரிவரை மேலும் 143 வரையில் இருந்து எட்டு வரி வரை மொத்தம் 38 வரிகள் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டுள்ளது. மீதம் உள்ள 117 வரிகள் தமிழில் எழுதப்பட்டுள்ளது.
திரு கே ஜி சங்கரன் என்பவர் கி பி எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களை படித்தறிந்து கி பி இருபதாம் நூற்றாண்டில் உள்ளவர்கள் புரிந்துகொள்ள கூடிய வகையில் எளிமையாக எழுதி செந்தமிழ் என்னும் இதழில் வெளியிட்டார். அதன் பிறகு 1923 ஆண்டு Epigrapia indica என்னும் ஆங்கில இதழில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.
தளவாய் புரா செப்பேடு: பாண்டிய மன்னனின் செப்பேடு. திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில் பட்டி என்னும் வட்டத்தில் தளவாய்புரம் என்னுமிடத்தில் கிடைத்தது. இங்கு ஏழு செப்பேடுகள் கிடைத்தது.
பிற செப்பேடுகள்: பல்லவ மன்னனின் கூரம் செப்பேடு, அதைப்போன்று பள்ளன் கோவில் செப்பேடு, வேலூர் பாளையம் செப்பேடு, சின்னமனுர் செப்பேடுகள்
களப்பிரர் வரலாறு பற்றிய அறிய கிடைத்த கல்வெட்டு: பூலாங்குறிச்சி கல்வெட்டு. இது 1979 ஆண்டு தமிழக தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. திரு நடன காசிநாதன், நாகசாமி மற்றும் பேராசிரியர் அ பத்மாவதி அவர்கள் சென்று பார்த்து அதில் உள்ள எழுத்துக்களை படித்தறிந்து வெளியிட்டனர். இங்கு மூன்று கல்வெட்டுகள் கிடைத்தது. ஒன்று முழுமையாக சிதைந்து இருந்தது எழுத்துக்கள் தெளிவில்லாமல் இருந்தது. இரண்டாவது கல்வெட்டு பாதி எழுத்துக்கள் சிதைந்து இருந்தது. மூன்றாவது கல்வெட்டு தெளிவாக இருந்தது. இதன் காலம் கி பி 442 அதாவது ஐந்தாம் நூற்றாண்டு.
களப்பிரர் வரலாறு பற்றி அறிய உதவும் நூல்கள். பெரிய புராணம் மற்றும் யாப்பெரும்கலம் ஆகிய இரண்டு நூல்களை மட்டுமே வரலாற்று அறிஞர்கள் பயன்படுத்தி உள்ளனர். மேலும் யாப்பெரும்கலம் கூட ஒரு சில செய்யுள்களை மட்டுமே பயன்படுத்தி உள்ளனர். இலக்கிய இலக்கண நூல்களை வரலாற்று அறிஞர்கள் சரிவர பயன்படுத்தவில்லை என்று குற்றம் சுமத்துகிறார் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி அவர்கள். அவர் 1976 ஆம் ஆண்டு களப்பிரர் ஆட்சியில் தமிழகம் என்று நூலை வெளியிட்டார். இந்த நூல்தான் களப்பிரர் காலம் இருண்ட காலமில்லை என்றுரைத்த முதல் நூல். களப்பிரர் காலம் தமிழர் பண்பாடு தழைத்தோங்க வைத்த காலம் என பல சான்றுகளை அளிக்கிறார்.
அவர் நூல் வெளிவந்த பிறகு களப்பிரர் பற்றி வரும் வரலாறு மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் உரைப்பது என்னவென்றால் களப்பிரர் காலம் இருண்ட காலமில்லை அது பொற்காலம் (அ) இருட்டடிப்பு செய்யப்பட்ட காலம் என்று. உதாரணம் திரு க ப அறவாணன் அவர்கள் எழுதிய "களப்பிர காலம் பொற்காலம்" என்ற நூல். பேராசிரியர் ஆ பத்மாவதி அவர்கள் எழுதிய "களப்பிரர் கால மொழி எழுத்து கலை சமயம்" என்ற நூல்.
அவர் நூல் வெளிவந்த பிறகு களப்பிரர் பற்றி வரும் வரலாறு மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் உரைப்பது என்னவென்றால் களப்பிரர் காலம் இருண்ட காலமில்லை அது பொற்காலம் (அ) இருட்டடிப்பு செய்யப்பட்ட காலம் என்று. உதாரணம் திரு க ப அறவாணன் அவர்கள் எழுதிய "களப்பிர காலம் பொற்காலம்" என்ற நூல். பேராசிரியர் ஆ பத்மாவதி அவர்கள் எழுதிய "களப்பிரர் கால மொழி எழுத்து கலை சமயம்" என்ற நூல்.
களப்பிரர் காலம் இருண்ட காலம் என வரலாற்று அறிஞர்கள் சொல்லியதற்கு காரணம் களப்பிரர் வரலாறு அறிய தரவுகள் கிடைக்கவில்லை என்பது கரணம் இல்லை அது வைதீகத்தை ஒடுக்கிய காலம் என்பதால் என்றுரைக்கிறார். பேராசிரியர் ஆ பத்மாவதி அவர்கள். களப்பிர மன்னனை கலி அரசன் என்றும் களப்பிர காலத்தை கலி காலம் என்று சொல்லப்பட்டது என்றுரைக்கிறார்.
ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கட சாமி அவர்களுக்கு முன்பு களப்பிரர் காலம் இருண்ட காலம் என்றுரைத்தார்கள் யார்? அந்த இருண்ட கால கண்டுபிடிப்பாளர்கள் யார்? என்று பார்த்தால் அவர்கள் வைதிக சிந்தனையாளர்கள் என்றுரைக்கின்றனர். (வரலாற்று அறிஞர்கள் 01 கே கே பிள்ளை 02 நீலகண்ட சாஸ்திரி 03 இராசமாணிக்கம்)
களப்பிரர் தமிழரா? கன்னடரா? வட இந்தியரா? தென்னிந்தியரா?
ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கட சாமி அவர்களுக்கு முன்பு களப்பிரர் காலம் இருண்ட காலம் என்றுரைத்தார்கள் யார்? அந்த இருண்ட கால கண்டுபிடிப்பாளர்கள் யார்? என்று பார்த்தால் அவர்கள் வைதிக சிந்தனையாளர்கள் என்றுரைக்கின்றனர். (வரலாற்று அறிஞர்கள் 01 கே கே பிள்ளை 02 நீலகண்ட சாஸ்திரி 03 இராசமாணிக்கம்)
களப்பிரர் தமிழரா? கன்னடரா? வட இந்தியரா? தென்னிந்தியரா?
களப்பிரர் வட இந்தியர்: திரு சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் களப்பிரர் வட இந்தியாவிலிருந்து வந்தார்கள் என்றுரைக்கிறார். அதற்க்கு அவர் அளிக்கும் விளக்கம். களப்பிரர் சுரேனியம் என்னும் சமண சமயத்தவரின் மொழியையும் பாலி என்னும் பௌத்தர்களின் மொழியையும் தமக்கு உரிய மொழியாக பயன்படுத்தினர். சமணமும் பௌத்தமும் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவிற்கு வந்தது. எனவே களப்பிரர் வட இந்தியாவிலிருந்து வந்தார்கள் என்றுரைக்கிறார்.
களப்பிரர் தமிழர்: திரு இரகவா ஐயங்கார் மற்றும் கிருஷ்ணா சாமி ஐயங்கார் ஆகியோர் களப்பிரர் என்பவர் கள்வர்கள் என்றுரைக்கின்றனர். அவர்கள் வட தமிழகத்தின் எல்லையில் அதாவது தமிழக ஆந்திர பகுதியில் வாழ்ந்தவர் என்று விளக்கம் அளிக்கின்றனர்.
களப்பிரர் கன்னடர் - தென்னிந்தியார்: மேற்சொன்ன இந்த இரண்டு கருத்துக்களும் தவறு என்றுரைக்கிறார் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி. அதற்கு அவர் நான்கு ஆதாரங்களை அளிக்கிறார். கள்வர் வேறு களப்பிர வேறு, கள்வர் என்பவர் தமிழர், களப்பிரர் என்பவர் கன்னடர், களப்பிரர் வட இந்தியாலிருந்து வந்தவரில்லை அவர்கள் தென் இந்தியர். வடுக இனத்தை சேர்ந்த திராவிடர் என்றுரைக்கிறார்
01. பெரிய புராணம் - சேக்கிழார் (கி பி 1113 -1150) அறுபத்தி மூன்று நாயன்மார்களில் இரண்டு நாயன்மார்களை பற்றி பேசும்பொழுது களப்பிரர் கன்னடர் என்று குறிப்பிடுகிறார். ஒருவர் பாண்டிய நாட்டை சேர்ந்த மூர்த்தி நாயனார் இன்னொருவர் சோழ நாட்டை சேர்ந்த கூற்றுவ நாயனார்.
மூர்த்தி நாயனார் - இவர் பாண்டிய நாட்டில் வாழ்ந்தவர். ஒரு வணிகர். சிவனடியார்க்கு சந்தனம் அரைத்து கொடுப்பவர். இவர் வாழ்ந்த காலத்தில் கடல் போன்ற தனைகளோடு வடுக கருனாட வேந்தன் பாண்டிய நாட்டை கைப்பற்றினான். சிவனுக்கு சந்தனம் கிடைக்காமல் செய்துவிட்டான். இவனுக்கு பிள்ளை பெரு இல்லை. எனவே மன்னன் இறந்த பின் முடி சூட மகன் இல்லை. எனவே பட்டத்து யானையின் கண்களை கட்டி நகர வீதியில் விடுகின்றனர். நகர வீதியில் நடந்து சென்று இருந்த மூர்த்தி நாயனாரை தூக்கி கொண்டு வந்துவிட்டது. அவருக்கு அமைசர்கள் முடி சூட சென்ற போது பொன் முடி வேண்டாம் சடை முடி, திருநீறும் ருத்திராசரமும் போதும் என்று முடி சுடாமல் ஆண்டான் என்றுரைக்கிறது. மயிலை சினி வேங்கட சாமி இங்கு இரு வினா எழுப்புகிறார். ஒன்று மூர்த்தி நாயனார் எத்தனை ஆண்டுகள் ஆண்டார்? இரண்டாவது மீண்டும் எப்படி களப்பிரர் ஆட்சி மலர்ந்தது? இதுவரை பதிலில்லை.
கூற்றுவ நாயனார் இவர் சோழ நாட்டில் வாழ்ந்தவர். இவர் காலத்தில் களப்பிர மன்னன் சோழ நாட்டை கைப்பற்றுகிறான். பின்னர் பிராமணர்களை அழைத்து முடி சுட கட்டளையிடுகிறான். சோழ மன்னனுக்கு மட்டுமே முடிசூட்டுவோம் என்று களப்பிர மன்னனுக்கு முடிசூட மறுத்து மன்னனுக்கு பயந்து சேர நாட்டிற்கு பொன்முடியோடு ஓடிவிட்டனர். எனவே முடிசூடாமல் களப்பிர மன்னன் ஆண்டான் என்றுரைக்கிறார் சேக்கிழார். மேலும் இவர் சைவர் என்றுரைக்கிறார் சேக்கிழார்.
02. கல்லாடம் என்ற நூல். இந்நூல் களப்பிரரை கன்னடர் என்றுரைக்கிறது.
03. கன்னட நூல்களும் கல்வெட்டுகளும் களப்பிரரை கன்னடர் என்றுரைக்கிறது
04. சமண சமய நூல் வட்டாராதனெ களப்பிரரை கன்னடர் என்றுரைக்கிறது. அசோக மன்னனின் பாட்டன் சந்திரா குப்தா மௌரியர் நாட்டை துறந்து ,சமணம் ஏற்று, வட நாட்டை விட்டு தென்னாட்டிற்கு வந்து கன்னட நாட்டில் உள்ள களபப்பு என்ற இடத்தில் தாங்கினார். இங்கிருந்து வந்தவர்கள் தான் களப்பிரர் என்றுரைக்கிறது இந்நூல்.களப்பிரர் அரசாண்ட பகுதி
களப்பிரர் முதலில் பாண்டிய நாட்டை கைப்பற்றினார். பின்னர் சேர நாடு, சோழ நாடு. களப்பிரர் பல்லவ நாட்டை தவிர்த்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளையும் வென்றனர். களப்பிரரால் ஏன் பல்லவ நாட்டை கைப்பற்ற வில்லை என்பது ஆய்வுக்கு உரிய வினா. கேரளா நாட்டை முழுவதும் வென்று ஆண்டனர். கருநாடக மற்றும் ஆந்திர ஆகிய மாநிலங்களில் ஒரு சில பகுதிகளையும் இலங்கை நாட்டில் ஒரு சில பகுதிகளையும் வென்று அரசாண்டனர்.
களப்பிரர் தமிழகத்தை கைப்பற்றியது எவ்வாறு?
தமிழகத்தை பல சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் ஆட்சி செய்தனர். இவர்கள் எப்பொழுதும் ஒருவர் மீது ஒருவர் போரிட்டு கொண்டே இருந்தனர். போருக்கு காரணம் புலவர்கள் புகழ்வார்கள் என்றும் போரிடுவது வீரத்தின் அடையாளம் என்றும் போரிடாமல் இறந்து விட்டால் ஏற்படும் அவமானம் கருதியும் போரிட்டனர். மன்னன் ஒருவன் போரிடாமல் இறந்துவிட்டால் அவனக்கு மிகப்பெரிய தண்டனை அளிக்கப்படுகிறது. இறந்த உடலை தருப்பைப்புல்லின் மீது வைத்து வாளால் மார்பை வெட்டி விழுப்புண் உண்டாக்கி பின் அடக்கம் செய்யப்படுகிறது. இந்த சூழ்நிலை தமிழகத்தை பலவீனப்படுத்தியது. இதனை பயன்படுத்தி களப்பிரர் கைப்பற்றினர் என்றுரைக்கிறார் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி.
தமிழகத்தில் வைதிகத்தின் செல்வாக்கு
தமிழகத்தில் வைதிகத்தின் செல்வாக்கு
வைதிகம் தமிழகத்தில் செல்வாக்கு பெருமுன் மன்னனுக்கும் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. மன்னன் மக்களுக்காக போரிட்டான். எனவே போரில் மரணமடைந்தால், மன்னனுக்கும் மாவீரர்களுக்கும் நடுக்கல் இட்டு வழிபட்டனர். மக்களுக்காக மரணமடைந்தவன் சொர்க்கத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நடுக்கல் வைத்தனர். இரம்பையும் ஊர்வசியும் ஆடிப்பாடி அவர்களை மகிழவைப்பது போன்று அமைக்கப்பட்டது.
ஆனால் வைதிகர்கள் மன்னர்களுக்கும், மாவீரர்களுக்கும் மக்களுக்கும் சொர்க்கம் செல்ல வேறுவழியை காண்பித்தனர். வேள்வி மற்றும் சடங்கின் மூலம் சொர்க்கம் செல்லலாம் என்று. அதனால் செல்வமும் அதிகாரமும் பெற்றவராக இருந்தனர். இதனை பண்டித அயோத்தி தாசர் பணம் சேர்க்கும் சாமி விவரம் என்ற தலைப்பில் எடுத்துரைக்கிறார்.
பொன் அணிகலன்களையும் இரத்தின அணிகலன்களையும் அணிந்து யாக குண்டம் அருகே அரசன் நின்று கொண்டு இருக்கிறான். அவ்வழியே வரும் ஒரு பிக்கு மன்னனை நோக்கி, மன்னா நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர் என வினாவினார். மன்னனும் பதிலுரைத்தார் நான் யாக குண்டத்தில் குதித்து சொர்க்கம் சொல்லப்போகிறேன் என்று. சொர்க்கம் செல்ல வழி உங்களுக்கு தெரியுமா என்று மீண்டும் வினாவினார். எனக்கு தெரியாது ஆனால் இங்கே மந்திரங்கள் ஓதிக்கொண்டிருக்கும் வைதீகர்களுக்கு தெரியும் என்று பதிலுரைத்தார் . அப்படியானால் வழி தெரிந்தவர்களை உங்களுடன் அழைத்து செல்லுங்கள் என்றார் பிக்கு. பிக்குவின் அறிவுரை சரி என உணர்ந்த மன்னன் வைதீகர்களை அழைத்து முதலில் யாக குண்டத்தில் நீங்கள் குதியுங்கள் பின்னர் அதை தொடர்ந்து நான் குதிக்கிறேன். எனக்கு சொர்க்கத்தை காட்டிவிட்டு நீங்கள் புவிக்கு சென்றுவிடுங்கள் என்றதும் வைதிகர்கள் கடும் கோபம் கொண்டனர். நீச மொழியையும் நீசனின் வார்த்தையும் கேட்டதால் நீயும் நீசனாகி விட்டாய் எனவே சொர்க்கம் செல்லும் தகுதி உனக்கில்லை என்றுசொல்லி விட்டு விரைந்தனர்.
களப்பிரர்கள் செய்தது என்ன?
01. வேள்வி மற்றும் சடங்குகள் செய்வதை தடை செய்தனர்
செல்வங்களும் ஆதிகாரமும் வைதீகர்களிடம் குவிந்திருப்பதை கண்ட களப்பிர மன்னன் அதற்க்கு காரணமான வேள்வி மற்றும் சடங்குகள் செய்வதை தடை செய்கின்றனர். உயிரினங்கள் பாலியிடுவதிலிருந்து காப்பாற்றப்பட்டது. உழைப்பினால் விளைந்த விளைபொருள்களை வீணாக்கப்படுவது தடுக்கப்பட்டது.
02. பொது நீக்கினர்: மேலும் வேள்வி மற்றும் சடங்கின் மூலம் அவர்கள் தனமாக பெற்ற நிலங்களை திரும்ப பெற்று பொது பயன்பாட்டிற்க்கு (மக்களுக்கு) கொடுத்துவிட்டனர்.
வேள்வி குடி செப்பேடு சொல்லும் விவரம் கி பி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நெடுஞ்சாடையான் என்னும் பாண்டிய மன்னனிடம் ஒரு பிராமணன் வேண்டுகோள் விடுகிறான். முதுகுடுமி பெருவழுதி என்ற பாண்டிய மன்னனுக்கு வேள்விகள் செய்து வந்திருந்த கொற்கை கிழான் மற்றும் நற்கொற்றன் என்னும் எங்கள் மூதாதையர்க்கு அந்த கிராமத்தையே தனமாக அளித்தான் மன்னன். அவர்களுக்கு பிறகு அவர்களின் குடும்பத்தினர் வேள்வி குடி கிராமத்தை பயன்படுத்தி வந்தனர். களப்பிர மன்னன் பாண்டிய நாட்டை கைப்பற்றிய போது இந்த கிராமத்தை திரும்ப பெற்று பொது பயன்பாட்டிற்கு மக்களுக்கு கொடுத்துவிட்டான். அருள் கூர்ந்து அந்த கிராமத்தை அவர்களின் வாரிசான எங்களுக்கு அளிக்க வேண்டும் என வேண்டுகிறான். பாண்டிய மன்னனும் இசைந்து அவர்களுக்கே கொடுத்து விடுகிறான்.
03. நிதி உதவினர் அச்சுதன் என்னும் களப்பிர மன்னன் இரு பிறப்பாளர்கள் என்னும் வைதீகர்களுக்கு நிதி ஈந்து மனம் மகிழ்ந்தான் என்ற குறிப்பதை அளித்து களப்பிரர்கள் வைதீகர்களின் பகைவர் இல்லை என்பதை விளக்குகிறார் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கட சாமி.
04. தமிழ் மொழியின் வரி வடிவங்களை மாற்றினர் தமிழ் மொழியின் வரிவடிவம் இது வரை மூன்று பரிமாணங்களை கொண்டுள்ளது.
- தமிழி கி பி மூன்றாம் நூற்றண்டு வரை உள்ள தமிழ் மொழியின் வரி வடிவத்திற்கு தமிழி என்று பெயர்.
- வட்டெழுத்து கி பி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி பி பத்தாம் நூற்றாண்டு வரை இருந்த எழுத்திற்கு வட்டெழுத்து என்று பெயர்.
- தமிழ் எழுத்து கி பி பதினோராம் நூற்றாண்டில் இருந்து இன்றுவரை உள்ள வரி வடிவத்திற்கு தமிழ் எழுத்து என்று பெயர்.
கி பி மூன்றாம் நூற்றாண்டு வரை இருந்த தமிழி என்ற வரி வடிவத்தை வட்டெழுத்தாக மாற்றியர்கள் களப்பிரர்கள். ஏன் இந்த எழுத்தை மாற்றினார்கள் என்றால் தமிழி என்ற எழுத்து கோடுகளை கொண்ட எழுத்து. ஓலை சுவடிகளில் எழுதினால் ஓலை சுவடிகள் கிழிந்து விடும், மேலும் அது நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்பதால் கோடுகளை கொண்ட எழுத்தை வட்டெழுத்தாத மாற்றினார்.
தமிழ் மொழியில் உள்ள சிறப்பு எழுத்துக்களாக "ற" "ன" "ள" "ழ" ஆகிய எழுத்துக்கள் பிராகிருத மொழியில் இல்லை. எனவே களப்பிரர்கள் தமிழ் மொழியின் சிறப்பை குன்ற செய்யாமல் பிராகிருத மொழியில் இல்லாத "ற" "ன" "ள" "ழ" ஆகிய எழுத்தைகளை உருவாக்கினர்.
ஓலை சுவடிகளை களப்பிரர் காலத்திற்கு முன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்பொழுது ஓலை சுவடிகளில் பதிவிட்டு பாதுகாக்க வேண்டிய அவசியம் என்னவென்றால். பகவன் புத்தரின் போதனைகள் எல்லாம் மக்கள் மொழிகளில் தான் இருக்க வேண்டும் என்பது புத்தரின் அருள் மொழி. எனவே புத்தரின் போதனைகளை பதிவிடவே பிராகிருத மொழி வடிவத்தை இங்கு கொண்டுவந்து இருக்கின்றனர்.
05. புதிய பாக்களை உருவாக்கினர் களப்பிரர் தமிழகத்தை கைப்பற்றும் முன் தமிழில் நான்கு பாக்கள் இருந்தன. அவைகள் 01. ஆசிரியப்பா 02.வஞ்சிப்பா 03.வெண்பா 04.கலிப்பா. களப்பிரர்கள் மேலும் புதிய மூன்று பாவினங்களை உருவாக்கினர். அவைகள் 01. தாழிசை 02. துறை பா 03. விருத்தப்பா. பழைய நான்கு பாக்களும் புதிய மூன்று பாக்களும் கலந்து ( 4 x 3 ) புதிதாக பனிரெண்டு வகை செய்யுள்கள் உருவாக்கப்பட்டன.
06. புதிய இலக்கணம் எழுதப்பட்டது புதிய பாவினங்களுக்கு இலக்கணம் தேவைப்பட்டது. ஆகவே, யாப்பிலக்கணம் (செய்யுள் இலக்கணம்) எழுதப்பட்டது.
யாப்பிலக்கண நூல்கள்
- காக்கைபாடினியம் - காக்கைபாடினியார்.
- நத்தத்தம் - நத்தத்தனார்
- பல்காப்பியம் – பல்காப்பியனார்
- பல்காப்பியப் புறனடை – பல்காப்பியனார்
- அவிநயம் – அவிநயனார் சைன சமயத்தவர
07. புதிய நூல்கள் இந்த புதிய எழுத்துக்கள், புதிய பாக்கள், புதிய இலக்கணம் எல்லாம் சேர்ந்து பல புதிய நூல்களை உருவாக்க உதவியாக இருந்தது. களப்பிரர் காலத்தில் பல இலக்கண இலக்கிய நூல்கள், சமய நூல்கள், மருத்துவ நூல்கள் வெளிவந்தன. ஆராய்ச்சி பேரறிஞர் களப்பிரர் காலத்தில் வெளிவந்த சமண மற்றும் சைவ இலக்கிய நூல்களை பட்டியலிட்டு அளிக்க முடிந்த அவரால் பௌத்த இலக்கிய நூல்களை குறிப்பிட்ட முடியவில்லை. அதற்க்கு அவர் அளிக்கும் விளக்கம் களப்பிரர் காலத்தில் பௌத்தம் செழிப்புடன் இருந்தது. பௌத்த நூல்கள் அனைத்தும் மறைந்து போனது (அழிக்கப்பட்டுவிட்டது)
களப்பிரர் சமயம் எது?
களப்பிரர் சைவராக அல்லது வைணவராக இருந்தால் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்ற சொல்லே வந்திருக்காது.
களப்பிரர் சைவராக அல்லது வைணவராக இருந்தால் களப்பிரர் காலம் இருண்ட காலம் என்ற சொல்லே வந்திருக்காது.
(A) களப்பிரர் சைவர்
பெரிய புராணம் கூற்ற நாயனார் என்ற களப்பிர மன்னனை சைவர் என்றுரைக்கிறது.
சைவ சமயத்திற்க்கு உயர்வு வேண்டி பெரியபுராணம் வரலாற்றை திருத்தி தமக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொண்டது என்றுரைக்கிறார் பேரறிஞர் அண்ணா. மேலும் அது சாக்கிய நாயனார் என்னும் ஒரு பௌத்த பிக்குவின் வரலாற்றையே தலைகீழாகி ஒரு சிவனடியாரின் வரலாறாக மாற்றிவிட்டது என்றுரைக்கிறார். எனவே பெரிய புராணம் கூற்ற நாயனாரை சைவார் என்றுரைப்பதை புறம் தள்ளவேண்டியுள்ளது. சாக்கிய நாயனார்
(B) களப்பிரர் வைணவர்
அச்சுத விக்கந்தன் என்னும் களப்பிர மன்னன் வைணவன் என்றுரைக்கிறார் மயிலை சினி வேங்கட சாமி அவர்கள். அதற்க்கு அவர் அளிக்கும் விளக்கம்.
01 திருமாலை வழிபட்டான்: அலை கடல் கதிர் முத்தம் என்று வரும் யாப்பருங்கல விருத்தி என்னும் இலக்கண நூல் பாடலில் சங்கு சக்கரம் ஏந்திய திருமாலை வழிபட்டு, திருமாலின் அருளினால் பெரிய நிலத்தை ஆளும் பெரு பெற்றான் என்று கூறுகிறது.
02 அசுத்தனை காக்க திருமாலை வேண்டப்படுகிறது: கேடல் அரு மாமுனிவர் என்று வரும் பாடலில் அசுத்தனை காக்கவேண்டும் என்று திருமாலை வேண்டப்படுகிறது. திருமாலை வேண்டுவதால் அச்சுதன் வைணவ சமயத்தில் ஈடுபாடு கொண்டவன்.
03 அச்சுதன் என்பது வைணவ பெயர்: அச்சுதன் என்பது களப்பிர அரசர்களின் பொதுப் பெயர். பாலி மொழியில் எழுதப்பட்ட ஒரு பௌத்தச் செய்யுள் ஒரு களப்பிர அரசரை அச்சுதன் என்று கூறுகிறது. இது வைணவரை குறிப்பது என்றுரைக்கிறார்.
04. விண்ணவன் என்பது விஷ்ணு : ‘நலங்கிளர் திருமணியும்’ என்று தொடங்குகிற இன்னொரு செய்யுள், செங்கோல் விண்ணவன் (விண்ணவன் - விஷ்ணு) என்றும் களப்பிர அரசனுடைய ஆட்சி ஓங்கவேண்டும் என்றும் அருகக் கடவுளை வேண்டுகிறது. விண்ணவன் (விண்ணு - விஷ்ணு) என்று பெயர் பெற்றிருப்பதனால் இவ்வரசன் வைணவ சமயத்தவன் என்று தெரிகிறான் என்றுரைக்கிறார் .
(C) களப்பிரர் சமணர்கள்
மயிலை சினி வேங்கட சாமி அவர்கள் களப்பிரரை சமணர் என்றே கூறுகிறார் அதற்க்கு அவர் அளிக்கும் விளக்கம்.
01. சூலவம்சம் என்னும் இலங்கை நூல்
மொக்கல்லானன் II என்னும் இலங்கை மன்னனை கஸ்ஸபன் துரத்திவிட்டான். பிறகு இவன் தமிழ்நாட்டுக்கு வந்து அடைக்கலம் புகுந்தான். மொக்கல்லானன் தமிழ்நாட்டிலிருந்த பன்னிரண்டு நிகந்தர் நண்பர்களோடு இலங்கைக்கு சென்றான். பின்னர் மொக்கல்லானன் பதினெட்டுயாண்டு (கி. பி. 497 - 515) அரசாண்டான் என்றுரைக்கிறது சூலவம்சம்.
நிகந்தர் என்பது இங்குக் களப்பிரரைக் குறிக்கிறது. நிகந்தர் என்றால் சமணர் அல்லது ஜைனர் என்று சூலவம்சம் கூறுகிறது. எனவே, மொக்கல்லானன் தமிழ்நாட்டிலிருந்து சமண களப்பிர அரசரின் உதவி பெற்று இலங்கைக்குப் போனான் என்பது தெரிகிறது.
இலங்கையை ஆண்ட களப்பிர மன்னர் சமணரா பௌத்தரா? கடல் கடந்து செல்லக்கூடாது என்பது சமண சமயத்தில் உள்ள மரபு பின் எவ்வாறு அங்கு சென்றனர்? என்ற வினா எழுகிறது
(D) களப்பிரர் பௌத்தர்கள்
களப்பிரர் சைவர் (கூற்ற நாயனார்), வைணவர் (அச்சுத விக்கந்தன்) மற்றும் சமணர் (சூலவம்சம்) என்பதற்கு ஆதாரம் அளிக்கும் ஆராய்ச்சி பேரறிஞரால் பௌத்தர் என்பதற்கான ஒரு ஆதாரமும் அளிக்கமுடியவில்லை. ஆனால் களப்பிரர் காலத்தில் பௌத்தம் சிறப்பு பெற்று இருந்தது என்று மட்டுமே கூறமுடிந்தது அவரால்.
01. வண. புத்த தத்தர்: கி பி ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்த தத்தர் அசுத்தன் என்னும் களப்பிர மன்னன் காலத்தில் வினைய வினிசம் என்ற நூலை எழுதினார். அசுத்தன் புத்த தத்த தேரரை ஆதரித்தார் என்றும் மயிலை சினி வேங்கட சாமி கூறுகிறார்.
02. அருக கடவுள் நலங்கிளர் திருமணியும் என்று தொடங்கும் யாப்பருங்கல விருத்தி என்னும் இலக்கண நூல் பாடலில் களப்பிரர் ஆட்சி ஓங்க வேண்டும் என்று அருக கடவுளை வேண்டுகிறது என்ற குறிப்பையும் அளிக்கிறார். இங்கே அருகன் என்பதை தீர்த்தங்கர் என்று கூறுகிறார். அருகன் என்பது பகவான் புத்தரை குறிப்பது. அருகன் மேடு
03 கடல் வணிகம்: கடல் வணிகத்தில் செழிப்புடன் இருந்தது தமிழகம். சமணர் கடல் கடந்து செல்லக்கூடாது என்பது மரபு. வைணவருக்கும் இது பொருந்தும். ஆனால் இந்த மரபு பௌத்தத்திற்கு பொருந்தாது. கடல் வழி வணிகம் செய்து செல்வம் ஈட்டி செழிப்புடன் வாழ்ந்தவர்கள் பௌத்தர்கள் என்றுரைக்கிறார் பேராசிரியர் பத்மாவதி அவர்கள். அழிந்து போன பௌத்த விகாரங்களில் அகழாய்வு செய்தபோது பெருமளவு வெளி நாட்டு காசுகளும் பொருள்களும் இங்கு கிடைத்தது.
உலகில் உள்ள கடலோடிகளுக்கும் தமிழுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது அது தமிழ் பௌத்தம் என்றுரைக்கிறார் கடல் ஆய்வாளர் ஒரிசா பாலு அவர்கள்.
04 அக்கசாலை நாணயங்களை வெளியிடும் அக்கசாலை என்பது பௌத்த விகாரங்களையே நம்பி இருந்தது. அக்க சாலை பெரும்பாலும் விகார் அருகே அமைந்திருந்தது என்றுரைக்கிறார் பேராசிரியர் பத்மாவதி அவர்கள்.
05 பௌத்த அடையாளங்கள் அழிப்பு வைதீகத்தை தொடக்கம் முதல் இறுதிவரை கடுமையாக தாக்கியது பௌத்தம் மட்டுமே. சமணம் பௌத்தம் போன்று தாம் அழிக்க கூடாது என்பதால் வைதிகத்துடன் சமரமானது. எனவே பௌத்த விகாரங்கள் அழிக்கப்பட்டது, சிலைகள் அழிக்கப்பட்டது, நூல்கள் அழிக்கப்பட்டது ஆனால் சமண சமயத்தில் அவைகள் காக்கப்பட்டது என்றுரைக்கிறார் பேராசிரியர் பத்மாவதி அவர்கள்.
01 .நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் (தட்டச்சு வடிவில்)
களப்பிரர் ஆட்சியில் தமிழகம் மயிலை சீனி. வேங்கடசாமி
02. பேராசிரியர் ஆ பத்மாவதி களப்பிரர் பற்றிய உரை
03. களப்பிரர் - நடன காசிநாதன்
04. V.Balammbal - Some common Features in Six Pandya Copper Plates
05. ரவிக்குமார் - பூலாங்குறிச்சி: அழிந்துகொண்டிருக்கும் வரலாறு
06. இரா.கிருஷ்ணமூர்த்தி - களப்பிரர் நாணயம்
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக