வெள்ளி, பிப்ரவரி 25, 2011

பணம் சேர்க்கும் சுவாமி விவரம்

அயோத்திதாசர் சிந்தனைகள்
சமயம், இலக்கியம் - தொகுப்பு II

தொகுப்பாசிரியர் - திரு ஞான அலாசியஸ்


தந்திர சாமிகளின் செய்கைகளை மந்திர சமிகளாம் பௌத்தர்கள் விளக்கிக் கொண்டு வந்தபடியால் அவர்களை பல வகையாலும் கொல்லவும் பறையர்கள் என்று சொல்லவும் நேர்ந்தது.


இதன் பகரமாய் பௌத்த தன்மம் இத்தேச முழுவதும் நிறைந்திருந்த காலத்தில் சில வேஷ பிராமணர்கள் கூடி ஓர் பேதை அரசனை அணுகி அரசே நாங்கள் விசேஷ யாகம் செய்யப் போகிறோம். அதில் தங்களிடம் உள்ள பொன் ஆபரணம் யாவையும் அணிந்துக் கொண்டு நாங்கள் பூசிக்கும் யாக குண்டலத்தில் குதிப்பீர் ஆனால், அணிந்துள்ள ஆடை 
ஆபரணங்களுடன்  தெய்வலோகம்  சென்று ஆரம்பாஸ்தீரிகள் யோகம் அனுபவிப்பீர் என்றார்கள்.


அதைக் கேட்ட அரசன் அவர்கள் வாக்கை தெய்வவாக்கு   என நம்பி தன்னிடம் உள்ள பொன் ஆபரணம் இரத்தின ஆபரணம் யாவையும் அணிந்துகொண்டு யாக குண்டத்தில் அருகில் வந்து சேர்ந்தான். அதே காலத்தில் ஓர் பௌத்த குருவும் அவ்வழியே வந்து யாக குண்டம் எரிவதையும் அரசன் அருகினில் நிற்பதையும் கண்டு அரசே யாது செய்கிறீர்கள் என்றார்.


பௌத்த குருவே, நான் யாக குண்டலத்தில் குதித்து தெய்வலோகத்திற்குப் போகின்றான். அதைக் கேட்ட பௌத்தகுரு அரசே தெய்வலோகத்திற்குப் போகும் வழிகள் யாவும் உமக்கு  நன்றாய் தெரியுமா என்றார். பௌத்த குருவே, நான் கண்டதில்லை என்றான். அரசே, உம்மை தெய்வலோகம் போவதற்கு யாக குண்டலத்தில் குதிக்க சொன்னவர்கள் யார் என்றார்.


பௌத்த குருவே, இதோ எதிரில் மந்திரம் செய்து கொண்டிருக்கும் பிரமணர்களே சொன்னார்கள் என்றான். அரசே, அப்படியானால் அந்த பிரமணர்களை முதலில் யாக குண்டலத்தில் குதிக்கச் செய்து நீர் பின்பு குதிப்பீர் ஆனால் அவர்கள் முன்பு தெய்வலோகத்தின் வழிகளை காட்டிக்கொண்டே சென்று உம்மை அவ்விடம் விட்டு அவர்கள் இவ்விடம் வந்து சேர்ந்து விடுவார்கள். நீங்களும் சுக யோகத்தில் இருக்கலாம் என்றார்.


அதைக் கேட்ட அரசன் நமக்கும் தெய்வலோகத்து வழி தெரியாது. பிராமணர்கள் முன்பு வழிகாட்டிக் கொண்டு நடப்பது நன்று என்று பிரமணர்களை அழைத்து சாமிகளே தாங்கள் முதலில் யாக குண்டத்தில் குதிப்பீர் ஆனால் நானும் கூடவே குதிக்கிறேன். என்னை நீங்கள் கூட்டிக்கொண்டு தெய்வலோகத்தைக் காட்டிவிட்டு இவ்விடம் வந்துவிடலாம் என்றான்.

இதைக் கேட்ட வேஷ பிராமணர்கள் ஆ ஆ இன்று கிடைக்கக் கூடிய இலக்ஷ பொன்னுக்கு மேற்ப்பட்ட ஆபரணங்கள் போய்விட்டது என்று வருந்தி இப் பௌத்த பிக்குவே கெடுத்துவிட்டான் என்று எண்ணி ஏ அரசே, நீர் நீச்சனை அணுகி, நீச்ச வார்த்தைகளைக் கேட்டு நீயும் நீச்சனாகி விட்டீர். ஆதலின் உமக்கு தெய்வலோக சுகம் கிடைக்காமல் போய்விட்டது. போம் போம் என்று கூறி குடிமியை தட்டிக் கொண்டே போய்விட்டார்களாம்.

பக்கம் 98 -99