திங்கள், நவம்பர் 26, 2018

காஞ்சிவரத்திற்கு வந்து பெருமை சேர்த்த பௌத்த அறிஞர்கள் III வண.புத்தகோசர்


புத்தகோசர் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அறிஞர். சமஸ்கிருதம், பாலி மற்றும் சிங்கள மொழி வல்லுநர். பௌத்த உரைகள் பாலி மொழியில் கிடைக்க பெறவில்லை. பௌத்த உரைகள் சிங்கள மொழியில் கிடைத்தது, அவற்றை படித்து புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. எனவே வண. ரேவதா அவர்களின் ஆலோசனின் படி இலங்கைக்கு சென்று சிங்களம் கற்றறிந்து பின்னர் பாலி மொழியில் மொழிபெயர்க்க விரும்பினார். பாலிமொழியில் உள்ள திரிபிடக நூல்களுக்கு உரைகளை எழுதியவர். புத்தகோசர் பற்றி கிடைக்கும்  ஆதாரங்கள்  மகாவம்சம்,  புத்தகோசுப்பட்டி, கந்தவம்சம் மற்றும் பிற ஆதாரங்கள் என வகைப்படுத்தலாம். 

01) மகாவம்சம் (Mahavamsa)
இலங்கையில் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது மகாவம்சம் (Chapter (XXXVII)  
புத்தகோசர் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவர் புத்தகயா அருகே பிறந்தார். வடமொழி வேதங்களை (Sanskrit) நன்கு கற்றறிந்தவர். தத்துவார்த்த விவாதங்களில் மிகுந்த ஆர்வம் மிக்கவர். வண.ரேவதா அபிதம்மாவிலிருந்து ஒரு பத்தியை கோசருக்கு கற்பித்தார். அதன் பிறகு வண.ரேவதா (Revata) அவர்களால் ஈர்க்கப்பட்டு, கோசர் ஒரு புத்த பிக்குவானார். வண.ரேவதா பிக்குவினால் தான் கோசர் விவாதத்தில் சிறந்தவராக இருந்தார். கோசா என்ற தம் பெயரை புத்த கோசர் என்று மாற்றிக்கொண்டார். பாலி மொழியில் புத்தகோச என்பதன் பொருள் புத்தரின் குரல்.
திரிபிடகாவின் ஆய்வு மற்றும் அதன் விளக்கங்களை மேற்கொண்டார். இந்தியாவில் வர்ணனை இழந்த ஒரு நூலை கண்டறிந்தபோது, புத்தகோசர் இலங்கைக்கு சென்று அங்கு பாதுகாத்து வந்திருந்த சிங்கள விளக்கங்களை பயில விரும்பினார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மகாநாமன் (கி.பி.409-431) ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அநுராதபுரம் மகா விகாரையில் மூன்று ஆண்டுகள் தங்கி சிங்கள மொழியை கற்றறிந்தார். அதன் பிறகு சிங்கள மொழில் இருந்த அட்டகதை பாலி மொழிக்கு மொழிபெயர்க்க விரும்புகிறேன், மற்ற எல்லா நூல்களையும் கொடுத்து உதவுங்கள் என்று புத்தகோசர் சங்கபாலாவிடம் கேட்டார். திரிபிடகத்தை நன்கு கற்றறிந்த மூத்த பிக்குகள் புத்தகோசவின் அறிவை முதலில் சோதித்துப்பார்க்க விரும்பினர். எனவே புத்தகோசருக்கு உங்கள் திறமையை நிரூபித்த பிறகு, நாங்கள் எங்கள் புத்தகங்களை எல்லாம் தருகிறோம் என்று (Two Verses) இரண்டு வசனங்களைப் பற்றிய கோட்பாட்டை விரிவுபடுத்துவதற்கான பணியை வழங்கினார். புத்தகோசர் அவற்றை விசுதி மக்கா (Visuddhimagga- தூய்மை பாதை) என்று பாலிமொழியில் இயற்றினார். அதன் பிறகு புத்தகோசரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். 
02) புத்தகோசுப்பட்டி  (Buddhaghosuppatti)
பர்மாவில் 15 ஆம் நூற்றாண்டில் மகாமங்களா என்பவரால் புத்தகோசுப்பட்டி எழுதப்பட்டது
கயாவிலுள்ள போதி மரம் அருகே கோசா என்று ஒரு நகரம் இருந்தது. அதன் ஆட்சியாளர் கேசி (Kesi -பிராமணர்) கேசினி (Kesinì) என்ற பெண்ணை மணந்தார். கேசியின் நண்பராக இருந்த ஒரு பிக்கு, புத்தரின் போதனை சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்ததை மக்கள் புரிந்து கொள்ளவில்லை, அப்பொழுது அங்கு வாழ்ந்த கோசா இதனை செய்யக்கூடிய திறன் உள்ளவர் என்றறிந்தார்.
கோசா வேதங்களைக் கற்றறிந்தவர். ஒருமுறை கோசாவின் வீட்டிற்கு கேசி பிக்குவை அழைத்தார். இங்கு பிக்கு கோசாவை சந்திக்கிறார். அவர் அபிதம்மாவை கோசாவிற்கு விவரிக்கிறார். அதன் பிறகு கோசா பிக்குவானார். மூன்று பீடங்களை நன்கு கற்று தேர்ந்தார். அதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர்  புத்த கோசா.
03. கந்தவம்சம் 
பர்மாவில் 17 ஆம் நூற்றாண்டில் (Nandapanna) நந்தபாணா என்பவரால்  கந்தவம்சம் எழுதப்பட்டது.
கந்தவம்சம் பாலிமொழியாக்கம் செய்வதில்  வண.புத்த கோசாவிற்கு அடுத்ததாக  வண.புத்ததாத்தாவை குறிப்பிடுகிறது. வண.புத்தகோசர் இலங்கைக்கு ஒரு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த போது, வண.புத்ததத்தா (Buddhadatta) இலங்கையில் இருந்து காவிரிப்பூம்பட்டினம் திரும்பி வருகிறார். இருவரும் சந்தித்தபொழுது, வண.புத்தகோசர் பகவன் புத்தரின் போதனைகள் சிங்கள மொழில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது, நான் இலங்கைக்கு சென்று பாலி மொழியில் மொழிபெயர்க்க விரும்புகிறேன் என்றுரைத்தார்.
இதற்கு பதிலுரைத்த வண.புத்ததத்தா நானும் மொழி பெயர்ப்புக்கு தான் இலங்கைக்கு சென்றேன். நான் 01. ஜினாலங்காரம் The Jinalaokara  02.தண்டவைச The Dantavaísa 03. தாதுவைச The Dhátuvaísa 04. போதிவைச The Bodhivaísa மட்டும்  மொழி பெயர்ப்பு செய்திருக்கிறேன். ஆனால் வர்ணனைகள் மற்றும் துணை வர்ணனைகளை மொழி பெயர்ப்பு செய்யவில்லை. நீங்கள் சிங்களத்தில் இருந்து பாலியில் மொழிபெயர்க்க உள்ளதால் திரிபிடக்கத்தை மொழிபெயர்க்கவும் என்று கூறினார். 
வண. புத்தகோச ஏற்கனவே  வண.புத்த தாத்தாவை பற்றி கேள்விப்பட்டிருந்தார். அவர்  வண.புத்த தத்தரின் ஜினாலங்காரத்தை பாராட்டினார். உங்களின் நூல் மிக ஆழமாக உள்ளது ஆனால் போதிய அறிவு இல்லாதார் புரிந்துகொள்ள கடினமாக உள்ளது. 
நீங்கள் இந்த பணியை செய்ய இலங்கைக்கு செல்வதற்கு முன் நான் சென்று வந்திருக்கிறேன். என்னால் அங்கு நீண்ட நாள் இருக்க முடியவில்லை, கிடைத்த குறைந்த நேரத்தை வைத்து மொழிபெயர்த்து இருக்கிறேன்.  இதனால் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை, நீங்கள் இதனை தவிருங்கள் என்று பதிலுரைத்தார் வண.புத்ததத்தா.  
மேலும் கடுக்காய் (Gall-nut), இரும்பு எழுத்தாணி மற்றும் ஒரு கல் அவருக்கு அளித்தார். உங்களுக்கு கண் தொல்லை அல்லது முதுகுவலி இருந்தால், இந்த கல் மீது கடுக்காயை தேய்த்து காயப்படுத்தும் இடத்தில் தடவவும். உங்கள் வியாதி மறைந்துவிடும் என்றுரைத்தார். 
கந்தவம்சம் 10 தென்இந்திய பௌத்த அறிஞர்கள் காஞ்சியில் தங்கி பாலியில் எழுதினர் என்றுரைக்கிறது. அவர்கள் புத்ததத்தா, ஆனந்தர், தம்மபாலா, மகாவஜ்ர பௌதீ, குள்ளவஜ்ர பௌதீ, தீபங்கரா, குள்ளதம்மபாலா, கசப்பா மற்றும் இரு அறிஞர்களின் பெயர்களை குறிப்பிடாமல் அவர்கள் எழுதிய நூலை குறிப்பிட்டுள்ளது.          

பிற ஆதாரங்கள்
(A) காஞ்சியில் பிறந்தவர்
சில அறிஞர்கள் புத்தகோசர்  காஞ்சியில் பிறந்தவர்  என்று முடிவுக்கு வருகிறார்கள். 
01.புத்தகோசர் வருணை விளக்கங்களில் இந்தியாவில் ஒரே ஒரு இடத்தைக் குறிக்கின்றன, அவ்விடம் கான்சிவரம்.  02.புத்தரின் பிராந்தியத்திற்கு நெருக்கமான உறவுகளை வழங்குவதற்கு, புத்தகயா அருகே பிறந்தார் என்று கூறப்படுகிறது. 03.சில நவீன பௌத்த வல்லுநர்கள் புத்தகோசர் காஞ்சியில் பிறந்த உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள்.
தமிழ் ஆராட்சி பேறிஞர் மயிலை சினி வேங்கடசாமி
01. தமது நண்பர்களான சுமதி, ஜோதிபாலர் என்னும் பௌத்த பிக்குகளுடன் புத்தகோசர் காஞ்சிபுரத்தில் வசித்திருந்ததாகவும், அவர்கள் வேண்டுகோளின்படி, இலங்கைக்குச் சென்றதாகவும் புத்தகோசர் தமது மனோரதபூரணீ என்னும் உரையில் குறிப்பிடுகிறார். இவர்கள் வேண்டுகோளின்படி புத்தகோசர் ஸாராத்த பகாசினீ, மனோரத பூரணி என்னும் உரைநூல்களை இயற்றினார்.
"ஆயாசிதோ ஸுமதினா தேரேன பத்தந்த ஜோதிபாலேன
காஞ்சிபுராதிஸு மயா புப்பே ஸத்திம் வஸந்தேன" -மனோரத பூரணி
02. புத்தகோசர் காஞ்சியில் இருந்த போது அவருக்கு அண்டாத்தகதா என்னும் நூல் கிடைத்ததாகவும், அந்நூல் தாம் திரிபிடகங்களுக்கு உரை எழுதுவதற்குத் துணையாக இருந்தது என்றும் புத்தகோசர்  சாமந்தபாசாதிகா என்னும் உரையில் கூறுகிறார். 
(B) பர்மாவில் பிறந்தவர் 
புத்தகோசர் பர்மாவில் பிறந்தார் என்று பர்மா கூறுகிறது. பர்மா அரசன் தம்மபாலன் என்பவர் புத்தகோசரைத் வரவேற்று வழிபட்டார் என்பது பர்மிய இலக்கியங்களிலிருந்து தெரியவருகிறது. இந்த ஆதாரத்தை ஆதாரங்களில் மதிப்பீடு செய்ய கடினமாக உள்ளது என்றுரைகின்றனர்.
(C) ஆந்திரபிரதேசத்தில் பிறந்தவர்
புத்தகோசர் ஆந்திரபிரதேசத்தில் பிறந்தவர் என்று மற்றொரு கூற்று இருக்கிறது
புத்தகோசர் எழுதிய உரைநூல்கள் 
புத்தகோசர் இலங்கைக்கு செல்வதற்கு முன் எழுதியது நானோதயாவாகும். அதன் பிறகு இலங்கையில் அவர் எழுதிய வருணனை  விசுதி மக்கா. திரிபிடக நூல்களுக்குப் புத்தகோசர் பாலிமொழியிலே உரைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வுரைகள்:-

பிடக நூலின் பெயர்    -உரைநூலின்  பெயர் 
I.விநய பிடகம் 
1. விநயபிடகம் - சமந்தபாசாதிக
2. பாதிமோக்கம் - கங்கா விதரணீ

II. சூத்திர பிடகம்
1. தீக நிகாய - ஸூமங்கள விலாஸினீ
2. மஜ்ஜிம நிகாய - பபஞ்சஸூடனீ
3. சம்யுத்த நிகாய - ஸாரத்த பகாஸினீ
4. அங்குத்தர நிகாய - மனோரதபூரணீ
5. குட்டக நிகாய
5.1 குட்டக பாதம் - பரமார்த்த ஜோதிகா
5.2. தம்ம பதம் - தம்மபதாட்டகதா
5.3. ஸத்தநி பாதம் - பரமார்த்த ஜோதிகா
5.4 ஜாதகம் - ஜாதகாத்தகதா

III. அபிதம்ம பிடகம் 
1. தம்மசங்கணீ  - அத்தஸாலினீ
2. விபங்கம் - ஸம்மோஹ வினோதனீ
3.கதாவத்து -பஞ்சப்பகரண 
4. புக்கல பஞ்ஞத்தி  - பஞ்சப்பகரண அட்டகதா 
5. தாதுகதை  - பஞ்சப்பகரண அட்டகதா
6. யமகம்  - பஞ்சப்பகரண அட்டகதா
7. பட்டானம்  - பஞ்சப்பகரண அட்டகதா