ஞாயிறு, டிசம்பர் 30, 2018

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XIX ஒட்டியம்பாக்கம்

அமைவிடம் :
கோவில் : ஒட்டிஸ்வரர் சிவன் கோவில்
இடம்        : ஒட்டியம்பாக்கம் ஏரி சாலை மேடவாக்கம் அருகில்
வட்டம்    : தாம்பரம்
மாவட்டம் : காஞ்சிவரம் 600130.
கிழக்கு தாம்பரம் மற்றும் சென்னை புற நகர் பேருந்து நிலையத்திலிருந்து  (CMBT) இங்கு செல்லலாம்.

28/12/2018 வெள்ளிக்கிழமை மாலை ஒட்டியம்பாக்கம் சிவன் கோவில் சென்றேன். பகவன் புத்தரின் சிலை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அக்கோவில் நிர்வாகத்தினர் ஒருவரிடம் பகவன் புத்தரின் சிலை இங்கு காணவில்லை, அச்சிலை  எங்கிருக்கிறது என்று வினாவினேன். அச்சிலை இக்கோவில் பின்பக்கம் வைக்கப்பட்டது. இன்னேரம் யாரவது உடைத்து இருப்பார்கள் என்றார். பிறகு இருவரும் சென்று சிலையை பார்த்தோம்.

இச்சிலை இக்கோவிலின் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் (மூன்று வீடுகள் தள்ளி உள்ள வீடு) இருந்து பெறப்பட்டது, நின்ற நிலையில் உள்ள சிலை என்ற தகவல் தான்  புத்தரின் சிலையை பார்த்து கூறினார். பிறகு அங்குள்ள சிவன் கோவில் மற்றும் கட்டி எழுப்ப உள்ள பெருமாள் கோவில் பற்றியே அவரின் பேச்சு இருந்தது. 

மழையிலும் வெயிலிலும் காற்றிலும் சேதமடையும் இந்த புத்தர் சிலை உங்களுக்கு தேவையில்லையா என்ற வினாவிற்கு அவரின் மௌனம் தான் பதிலாக இருந்தது. இந்த நிலை நீடித்தால் சிலை அழிந்து போய்விடும். 

சிலையமைப்பு: 
நின்ற நிலை. தலைப்பகுதியை சுற்றி ஒரு தோரணம். மேலும் தலைப்பகுதி மேலிருந்து கால் பகுதிவரை மலர் தோரணங்களால் அமைக்கப்பட்டுள்ளது. முன்னங்கைகள் இரண்டும் உடைந்துள்ளது. பகவன் புத்தரை இரு கரம் உயர்த்தி வணங்கி மகிழும் ஒருவர் செதுக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் உள்ள படத்தை கவனிக்கவும் http://veludharan.blogspot.in/2016/09/a-heritage-visit-to-madambakkam_13.html எனேவ இச்சிலை காக்கும் கையுடன் உருவாக்கியிருக்கலாம் என கருதுகிறேன். பகவன் புத்தரின் முகம் சிதைந்துள்ளது. சிலை உயரம் 4 அடி, அகலம் 1.5 அடி.

தொல்லியல் துறை  இயக்குநர் அறிஞர் திரு Dr D தயாளன்
இச்சிலை 10-11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. கோவிலின் தென் கிழக்கு பகுதியில் அமைந்திருந்த வீடு ஒன்றில் இச்சிலை கண்டறியப்பட்டது. பின்பு இச்சிலை கோவிலில் வைக்கப்பட்டது. (Buddhist Remains in South India -Dr.D.Dayalan Page no 158)திங்கள், டிசம்பர் 17, 2018

காஞ்சிவரத்திற்கு வந்து பெருமை சேர்த்த பௌத்த அறிஞர்கள் IV ஆசாரிய புத்ததத்த மற்றும் தீபங்கர தேரர்

02. 02. ஆசாரிய புத்ததத்த மகாதேரர்
ஆசாரிய புத்ததத்த மகாதேரர் வாழ்ந்திருந்த காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். ஆசாரிய புத்ததத்த மகாதேரர் பாலிமொழியை நன்கு கற்றவர். பாலிமொழியில் உள்ள திரிபிடகம் நூல்களைத் கற்றுணர்ந்தவர். பாலிமொழியிலே இனிய கவிகளை இயற்றும் ஆற்றல் வாய்ந்தவர். இவர் தாம் இயற்றிய நூல்களில், தாம் பிறந்த சோழநாட்டையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் பூதமங்கலத்தையும் இனிமையான கவிகளால் புகழ்ந்து பாடியிருக்கிறார்.

காஞ்சிதொடர்பு:மாணவராகிய சுமதி என்பவர் வேண்டுகோளின்படி அபிதம்மாவதாரம் என்னும் நூலை காஞ்சியில் இயற்றினார்.

வண. புத்ததத்த  மற்றும் வண.புத்தகோசர்.
வண.புத்தகோஷரை விட வண.புத்ததத்தர் வயதில் மூத்தவர். சிங்கள மொழியில் இருந்து பாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்த முதல்வர் வண. புத்த தத்த அவர்கள். அவர் 01. ஜினாலங்காரம் (The Jinalaokara)   02.தண்டவைச (The Dantavaísa)  03. தாதுவைச (The Dhátuvaísa)  04. போதிவைச (The Bodhivaísa ) மட்டும்  மொழி பெயர்ப்பு எழுதியிருந்தார்.

புத்தகோசரை சந்தித்த போது சிங்கள மொழியில் இருந்து பாலி மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்து முடிக்கும் பொழுது  தமக்கு ஒரு பிரதியை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார். அவரின் கேட்பின் படி புத்தகோசரும் தம் நூல்களை புத்ததத்தாவிற்கு அனுப்பி வைத்தார். வண. புத்ததத்த வண.புத்தகோசரின் அபிதம்மா வருணைகளை சுருக்கி அபிதம்மாவதாரம் என்றும் வினைய வருணைகளை சுருக்கி வினயவினிச்சய என்றும் எழுதினார் (Buddhadatta' s Manuals or Summaries of Abhidhamma, edited by A.P. Buddhadatta).

புத்ததத்த இயற்க்கை எய்தியபொழுது புத்தகோசர் புத்ததத்தரை மிகுந்த ஞானமுள்ளவர் என்று வருணித்தார்.

பங்களிப்பு: இயற்றிய நூல்கள்  
மதுராத்தவிலாசினீ  (Madhurattha Vilasini):   காவிரிப்பூம்பட்டினம் புத்தமங்கலத்தில் கணதாசர் என்னும் சோழ அமைச்சர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது இவர் தம் மாணவராகிய புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி மதுராத்தவிலாசினீ என்னும் நூலை எழுதினார். இந்நூல் சூத்திரபிடகத்தின் 5 ஆவது பிரிவாகிய குட்டகநிகாய என்னும் நிகாயத்தின் உட்பிரிவாகிய புத்தவம்சம் என்னும் 14 ஆவது பிரிவுக்கு உரையாகும். இவ்வுரை நூலைப் புத்தவம்சாட்டகதா (Buddhavamsattagatha) என்றும் கூறுவர். 
வினயவினிச்சயம் (Vinaya Vinicchaya): பூதமங்கலம் என்னும் ஊரில், வேணுதாசர் (Venn Dasa) என்பவர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது வினயவினிச்சயம் என்னும் நூலைப் புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி இயற்றினார். Kalamba களம்ப (களபர Kalabara) குலத்தில் பிறந்த அச்சுதவிக்கந்தன்  (King Acyutavikrama) என்னும் அரசன் சோழநாட்டை அரசாண்ட காலத்தில் இந்நூலை எழுதியதாக இந்நூலில் இவர் கூறியிருக்கிறார். இந்நூல் 31 அத்தியாயங்களை கொண்டது. புத்தகோசரின் வினய பிடகாவை சுருக்கி வினயவினிச்சயம் என்று எழுதினார்.  
இவர் இயற்றிய வினய வினிச்சயம் என்னும் நூலுக்கு, இலங்கையை அரசாண்ட பராக்கிரமபாகு II (King Parakramavahu II)  (கி.பி 1247-1282) என்னும் அரசன் சிங்களமொழியில் ஓர் உரை எழுதினார். இப்போது அவ்வுரை நூல் கிடைக்கவில்லை என்றுரைக்கிறார் தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி.  
அபிதம்மாவதாரம் (Abhidhammavatara): மாணவராகிய சுமதி என்பவர் வேண்டுகோளின்படி அபிதம்மாவதாரம் என்னும் நூலை காஞ்சியில் இயற்றினார். இது அபிதம்ம பிடகத்திற்குப் பாயிரம் போன்றது. பௌத்த பிக்கு மற்றும் மாணவர்களிடையே தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வரும் நூல். புத்தகோசர் மற்றும் மற்றவர்களிடமிருந்து விதிவிலக்காக உயர்ந்த கல்வியறிவு பெற்றவர்களின் புத்தகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நூல். பாதி உரைநடையாகவும் பாதி வசனமாகவும் எழுதப்பட்டது. புத்தகோசரின் அபிதம்மா வருணனைகளை சுருக்கி அபிதம்மாவதாரம்  என்று எழுதினார். 24 அத்தியாயங்களை கொண்டது.  
ஐந்து கந்தங்களின் அடிப்படையில் புத்தகோசர் மனோபாவத்தை விளக்குகிறார். ஆனால் புத்ததத்தரோ அவற்றை நான்காக (மனம் Mind, மனநல பண்புகள் Mental properties, பொருள் தரம் Material quality, நிப்பான Nibbana) வகைப்படுத்தி விளக்குகிறார். புத்தகோசரை விட சிறப்பாக புத்த தத்தருடைய விளக்கம் அமைந்துள்ளது. புத்ததத்த அபிதம்ம பாரம்பரிய ஆய்வுக்கு விலைமதிப்பற்ற பணியை செய்து இருக்கிறார் 
ரூபாரூபவிபாகம் (Ruparupavibhaga) : Rupa+Arupa+Vibhagha நாம ரூபத்தை விரிவாக விளக்குகிறார். 
ஜினாலங்காரம் (Jinalankara): 300 பாடல்களை கொண்ட ஜினாலங்காரத்தில் 250 பாடல்கள் மட்டுமே பர்மாவில் கிடைத்தது. இந்த 250 பாடல்களும் 30 அத்தியாயமாக பிரிக்கப்பட்டுள்ளது.    


02.03 தீபங்கர தேரர் 
வாழ்ந்திருந்த காலம்: புத்தப் பிரிய தேரர் (Buddhappiya) என்றும் வேறொரு பெயர் இவருக்கு உள்ளது. வாழ்ந்திருந்த காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவர் இயற்றிய பஜ்ஜமது என்னும் நூல் கி.பி.1100ல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றபடியால், இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராவர்.

காஞ்சிதொடர்பு: சோழநாட்டில் பிறந்தவர், இவர் இலங்கைக்குச் சென்று ஆனந்த வனரதனர்  (Ananda Vanaratana) என்னும் தேரரிடம் சமயக் கல்வி பயின்று காஞ்சிவரத்திற்கு வந்தார். பாலிமொழியை நன்கு பயின்றவர். காஞ்சிவரத்திலிருந்த பாலாதிச்ச விகாரை  (Baladichcha vihara) என்னும் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தார்.

பங்களிப்பு: பாலி மொழியில் இயற்றிய நூல்கள்
01. ஜ்ஜமது (Pajjamadu) : இந்நூல் நூற்று நான்கு (104) செய்யுள்களைக் கொண்டது. புத்தரது உருவ அழகினையும் தம்மத்தையும் சங்கத்தையும் இந்நூலில் வியந்து கூறியிருக்கின்றார்.  
02. ரூப சித்தி (Rupasiddhi) (அ) பாடரூப சித்தி: இந்நூல் பாலிமொழி இலக்கண நூல்.  ஏழு அத்தியாயமாக பிரிக்கப்பட்டுள்ளது.
01. இணைப்புகள் / சேர்ப்புகள் - Combination
02. பெயர்ச்சொல் - Noun
03. வாக்கிய அமைப்பு - syntax
04. கலவைகள் - Compounds (Adverb, Numbers, etc)
05.
06. வினைச்சொல் - Verb
07. வாய்மொழி பெறுதல் -Verbal derivation
இதற்கு ஓர் உரையும் உண்டு. இந்த உரையினையும் இவரே இயற்றினார். கக்காயானாவின் (Kaccayana) விதிகளை மறு ஒழுங்கு செய்து அவற்றை புரிந்து கொள்ள எளிதாக்குவதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் நல்ல புரிந்துணர்வுக்காக மற்ற நூல்களிலிருந்து சில விதிகள் சேர்த்திருக்கிறார்.

Books

திங்கள், நவம்பர் 26, 2018

காஞ்சிவரத்திற்கு வந்து பெருமை சேர்த்த பௌத்த அறிஞர்கள் III வண.புத்தகோசர்


புத்தகோசர் கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த அறிஞர். சமஸ்கிருதம், பாலி மற்றும் சிங்கள மொழி வல்லுநர். பௌத்த உரைகள் பாலி மொழியில் கிடைக்க பெறவில்லை. பௌத்த உரைகள் சிங்கள மொழியில் கிடைத்தது, அவற்றை படித்து புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. எனவே வண. ரேவதா அவர்களின் ஆலோசனின் படி இலங்கைக்கு சென்று சிங்களம் கற்றறிந்து பின்னர் பாலி மொழியில் மொழிபெயர்க்க விரும்பினார். பாலிமொழியில் உள்ள திரிபிடக நூல்களுக்கு உரைகளை எழுதியவர். புத்தகோசர் பற்றி கிடைக்கும்  ஆதாரங்கள்  மகாவம்சம்,  புத்தகோசுப்பட்டி, கந்தவம்சம் மற்றும் பிற ஆதாரங்கள் என வகைப்படுத்தலாம். 

01) மகாவம்சம் (Mahavamsa)
இலங்கையில் 13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது மகாவம்சம் (Chapter (XXXVII)  
புத்தகோசர் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். அவர் புத்தகயா அருகே பிறந்தார். வடமொழி வேதங்களை (Sanskrit) நன்கு கற்றறிந்தவர். தத்துவார்த்த விவாதங்களில் மிகுந்த ஆர்வம் மிக்கவர். வண.ரேவதா அபிதம்மாவிலிருந்து ஒரு பத்தியை கோசருக்கு கற்பித்தார். அதன் பிறகு வண.ரேவதா (Revata) அவர்களால் ஈர்க்கப்பட்டு, கோசர் ஒரு புத்த பிக்குவானார். வண.ரேவதா பிக்குவினால் தான் கோசர் விவாதத்தில் சிறந்தவராக இருந்தார். கோசா என்ற தம் பெயரை புத்த கோசர் என்று மாற்றிக்கொண்டார். பாலி மொழியில் புத்தகோச என்பதன் பொருள் புத்தரின் குரல்.
திரிபிடகாவின் ஆய்வு மற்றும் அதன் விளக்கங்களை மேற்கொண்டார். இந்தியாவில் வர்ணனை இழந்த ஒரு நூலை கண்டறிந்தபோது, புத்தகோசர் இலங்கைக்கு சென்று அங்கு பாதுகாத்து வந்திருந்த சிங்கள விளக்கங்களை பயில விரும்பினார்.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மகாநாமன் (கி.பி.409-431) ஆட்சி புரிந்த காலப் பகுதியில் அநுராதபுரம் மகா விகாரையில் மூன்று ஆண்டுகள் தங்கி சிங்கள மொழியை கற்றறிந்தார். அதன் பிறகு சிங்கள மொழில் இருந்த அட்டகதை பாலி மொழிக்கு மொழிபெயர்க்க விரும்புகிறேன், மற்ற எல்லா நூல்களையும் கொடுத்து உதவுங்கள் என்று புத்தகோசர் சங்கபாலாவிடம் கேட்டார். திரிபிடகத்தை நன்கு கற்றறிந்த மூத்த பிக்குகள் புத்தகோசவின் அறிவை முதலில் சோதித்துப்பார்க்க விரும்பினர். எனவே புத்தகோசருக்கு உங்கள் திறமையை நிரூபித்த பிறகு, நாங்கள் எங்கள் புத்தகங்களை எல்லாம் தருகிறோம் என்று (Two Verses) இரண்டு வசனங்களைப் பற்றிய கோட்பாட்டை விரிவுபடுத்துவதற்கான பணியை வழங்கினார். புத்தகோசர் அவற்றை விசுதி மக்கா (Visuddhimagga- தூய்மை பாதை) என்று பாலிமொழியில் இயற்றினார். அதன் பிறகு புத்தகோசரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர். 
02) புத்தகோசுப்பட்டி  (Buddhaghosuppatti)
பர்மாவில் 15 ஆம் நூற்றாண்டில் மகாமங்களா என்பவரால் புத்தகோசுப்பட்டி எழுதப்பட்டது
கயாவிலுள்ள போதி மரம் அருகே கோசா என்று ஒரு நகரம் இருந்தது. அதன் ஆட்சியாளர் கேசி (Kesi -பிராமணர்) கேசினி (Kesinì) என்ற பெண்ணை மணந்தார். கேசியின் நண்பராக இருந்த ஒரு பிக்கு, புத்தரின் போதனை சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்ததை மக்கள் புரிந்து கொள்ளவில்லை, அப்பொழுது அங்கு வாழ்ந்த கோசா இதனை செய்யக்கூடிய திறன் உள்ளவர் என்றறிந்தார்.
கோசா வேதங்களைக் கற்றறிந்தவர். ஒருமுறை கோசாவின் வீட்டிற்கு கேசி பிக்குவை அழைத்தார். இங்கு பிக்கு கோசாவை சந்திக்கிறார். அவர் அபிதம்மாவை கோசாவிற்கு விவரிக்கிறார். அதன் பிறகு கோசா பிக்குவானார். மூன்று பீடங்களை நன்கு கற்று தேர்ந்தார். அதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட பெயர்  புத்த கோசா.
03. கந்தவம்சம் 
பர்மாவில் 17 ஆம் நூற்றாண்டில் (Nandapanna) நந்தபாணா என்பவரால்  கந்தவம்சம் எழுதப்பட்டது.
கந்தவம்சம் பாலிமொழியாக்கம் செய்வதில்  வண.புத்த கோசாவிற்கு அடுத்ததாக  வண.புத்ததாத்தாவை குறிப்பிடுகிறது. வண.புத்தகோசர் இலங்கைக்கு ஒரு கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்த போது, வண.புத்ததத்தா (Buddhadatta) இலங்கையில் இருந்து காவிரிப்பூம்பட்டினம் திரும்பி வருகிறார். இருவரும் சந்தித்தபொழுது, வண.புத்தகோசர் பகவன் புத்தரின் போதனைகள் சிங்கள மொழில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது, நான் இலங்கைக்கு சென்று பாலி மொழியில் மொழிபெயர்க்க விரும்புகிறேன் என்றுரைத்தார்.
இதற்கு பதிலுரைத்த வண.புத்ததத்தா நானும் மொழி பெயர்ப்புக்கு தான் இலங்கைக்கு சென்றேன். நான் 01. ஜினாலங்காரம் The Jinalaokara  02.தண்டவைச The Dantavaísa 03. தாதுவைச The Dhátuvaísa 04. போதிவைச The Bodhivaísa மட்டும்  மொழி பெயர்ப்பு செய்திருக்கிறேன். ஆனால் வர்ணனைகள் மற்றும் துணை வர்ணனைகளை மொழி பெயர்ப்பு செய்யவில்லை. நீங்கள் சிங்களத்தில் இருந்து பாலியில் மொழிபெயர்க்க உள்ளதால் திரிபிடக்கத்தை மொழிபெயர்க்கவும் என்று கூறினார். 
வண. புத்தகோச ஏற்கனவே  வண.புத்த தாத்தாவை பற்றி கேள்விப்பட்டிருந்தார். அவர்  வண.புத்த தத்தரின் ஜினாலங்காரத்தை பாராட்டினார். உங்களின் நூல் மிக ஆழமாக உள்ளது ஆனால் போதிய அறிவு இல்லாதார் புரிந்துகொள்ள கடினமாக உள்ளது. 
நீங்கள் இந்த பணியை செய்ய இலங்கைக்கு செல்வதற்கு முன் நான் சென்று வந்திருக்கிறேன். என்னால் அங்கு நீண்ட நாள் இருக்க முடியவில்லை, கிடைத்த குறைந்த நேரத்தை வைத்து மொழிபெயர்த்து இருக்கிறேன்.  இதனால் என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை, நீங்கள் இதனை தவிருங்கள் என்று பதிலுரைத்தார் வண.புத்ததத்தா.  
மேலும் கடுக்காய் (Gall-nut), இரும்பு எழுத்தாணி மற்றும் ஒரு கல் அவருக்கு அளித்தார். உங்களுக்கு கண் தொல்லை அல்லது முதுகுவலி இருந்தால், இந்த கல் மீது கடுக்காயை தேய்த்து காயப்படுத்தும் இடத்தில் தடவவும். உங்கள் வியாதி மறைந்துவிடும் என்றுரைத்தார். 
கந்தவம்சம் 10 தென்இந்திய பௌத்த அறிஞர்கள் காஞ்சியில் தங்கி பாலியில் எழுதினர் என்றுரைக்கிறது. அவர்கள் புத்ததத்தா, ஆனந்தர், தம்மபாலா, மகாவஜ்ர பௌதீ, குள்ளவஜ்ர பௌதீ, தீபங்கரா, குள்ளதம்மபாலா, கசப்பா மற்றும் இரு அறிஞர்களின் பெயர்களை குறிப்பிடாமல் அவர்கள் எழுதிய நூலை குறிப்பிட்டுள்ளது.          

பிற ஆதாரங்கள்
(A) காஞ்சியில் பிறந்தவர்
சில அறிஞர்கள் புத்தகோசர்  காஞ்சியில் பிறந்தவர்  என்று முடிவுக்கு வருகிறார்கள். 
01.புத்தகோசர் வருணை விளக்கங்களில் இந்தியாவில் ஒரே ஒரு இடத்தைக் குறிக்கின்றன, அவ்விடம் கான்சிவரம்.  02.புத்தரின் பிராந்தியத்திற்கு நெருக்கமான உறவுகளை வழங்குவதற்கு, புத்தகயா அருகே பிறந்தார் என்று கூறப்படுகிறது. 03.சில நவீன பௌத்த வல்லுநர்கள் புத்தகோசர் காஞ்சியில் பிறந்த உண்மையை ஏற்றுக்கொள்கிறார்கள்.
தமிழ் ஆராட்சி பேறிஞர் மயிலை சினி வேங்கடசாமி
01. தமது நண்பர்களான சுமதி, ஜோதிபாலர் என்னும் பௌத்த பிக்குகளுடன் புத்தகோசர் காஞ்சிபுரத்தில் வசித்திருந்ததாகவும், அவர்கள் வேண்டுகோளின்படி, இலங்கைக்குச் சென்றதாகவும் புத்தகோசர் தமது மனோரதபூரணீ என்னும் உரையில் குறிப்பிடுகிறார். இவர்கள் வேண்டுகோளின்படி புத்தகோசர் ஸாராத்த பகாசினீ, மனோரத பூரணி என்னும் உரைநூல்களை இயற்றினார்.
"ஆயாசிதோ ஸுமதினா தேரேன பத்தந்த ஜோதிபாலேன
காஞ்சிபுராதிஸு மயா புப்பே ஸத்திம் வஸந்தேன" -மனோரத பூரணி
02. புத்தகோசர் காஞ்சியில் இருந்த போது அவருக்கு அண்டாத்தகதா என்னும் நூல் கிடைத்ததாகவும், அந்நூல் தாம் திரிபிடகங்களுக்கு உரை எழுதுவதற்குத் துணையாக இருந்தது என்றும் புத்தகோசர்  சாமந்தபாசாதிகா என்னும் உரையில் கூறுகிறார். 
(B) பர்மாவில் பிறந்தவர் 
புத்தகோசர் பர்மாவில் பிறந்தார் என்று பர்மா கூறுகிறது. பர்மா அரசன் தம்மபாலன் என்பவர் புத்தகோசரைத் வரவேற்று வழிபட்டார் என்பது பர்மிய இலக்கியங்களிலிருந்து தெரியவருகிறது. இந்த ஆதாரத்தை ஆதாரங்களில் மதிப்பீடு செய்ய கடினமாக உள்ளது என்றுரைகின்றனர்.
(C) ஆந்திரபிரதேசத்தில் பிறந்தவர்
புத்தகோசர் ஆந்திரபிரதேசத்தில் பிறந்தவர் என்று மற்றொரு கூற்று இருக்கிறது
புத்தகோசர் எழுதிய உரைநூல்கள் 
புத்தகோசர் இலங்கைக்கு செல்வதற்கு முன் எழுதியது நானோதயாவாகும். அதன் பிறகு இலங்கையில் அவர் எழுதிய வருணனை  விசுதி மக்கா. திரிபிடக நூல்களுக்குப் புத்தகோசர் பாலிமொழியிலே உரைகளை எழுதியிருக்கிறார்கள். அவ்வுரைகள்:-

பிடக நூலின் பெயர்    -உரைநூலின்  பெயர் 
I.விநய பிடகம் 
1. விநயபிடகம் - சமந்தபாசாதிக
2. பாதிமோக்கம் - கங்கா விதரணீ

II. சூத்திர பிடகம்
1. தீக நிகாய - ஸூமங்கள விலாஸினீ
2. மஜ்ஜிம நிகாய - பபஞ்சஸூடனீ
3. சம்யுத்த நிகாய - ஸாரத்த பகாஸினீ
4. அங்குத்தர நிகாய - மனோரதபூரணீ
5. குட்டக நிகாய
5.1 குட்டக பாதம் - பரமார்த்த ஜோதிகா
5.2. தம்ம பதம் - தம்மபதாட்டகதா
5.3. ஸத்தநி பாதம் - பரமார்த்த ஜோதிகா
5.4 ஜாதகம் - ஜாதகாத்தகதா

III. அபிதம்ம பிடகம் 
1. தம்மசங்கணீ  - அத்தஸாலினீ
2. விபங்கம் - ஸம்மோஹ வினோதனீ
3.கதாவத்து -பஞ்சப்பகரண 
4. புக்கல பஞ்ஞத்தி  - பஞ்சப்பகரண அட்டகதா 
5. தாதுகதை  - பஞ்சப்பகரண அட்டகதா
6. யமகம்  - பஞ்சப்பகரண அட்டகதா
7. பட்டானம்  - பஞ்சப்பகரண அட்டகதா     

வெள்ளி, மே 11, 2018

காஞ்சிவரத்தில் பிறந்த பௌத்த அறிஞர்கள் II

03. தருமபால ஆசிரியர்
வாழ்ந்திருந்த காலம் கி.பி. 528-560. இவர் காஞ்சிபுரத்து அரசனிடம் மந்திரியாயிருந்த ஒருவரின் மூன்றாவது மகன். இவருக்குத் காஞ்சி மன்னன் திருமணம் செய்விக்க ஏற்பாடு செய்தார். அரசு விருந்து ஏற்பாடுகள் நடைபெற்றது, ஆனால் ஒருவருக்கும் சொல்லாமல் ஒரு பௌத்த சங்கத்தை அடைந்து துறவு மேற்கொண்டு பௌத்த பிக்குவனார்.

ஆசாரிய தருமபாலர், தின்னாக (திக்நாக)ரிடத்திலும் சமயக் கல்வி பயின்றார். வட நாடுகளில் சுற்றுப் பிரயாணஞ் செய்தபோது கௌசாம்பி என்னும் இடத்தில் பௌத்தருக்கும் ஏனைய மதத்தாருக்கும் நிகழ்ந்த சமயவாதத்தில் பௌத்தர்களால் எதிர்வாதம் செய்ய முடியாமற்போன நிலையில், இவர் சென்று தனித்து நின்று பௌத்தர் சார்பாக வாதம் செய்து வெற்றிபெற்றார். எதிர்வாதம் செய்தவர்களையும் அவைத் தலைவராக வீற்றிருந்த அரசனையும் பௌத்த மதத்தில் சேர்த்தார்.

100 தேரவாத (ஈனயான) பௌத்தர்களுடன் ஏழுநாள் வரை வாதம் செய்து வெற்றிப்பெற்றுத் மகாயான பௌத்தக் கொள்கையை நிலைநாட்டினார். இவர் பௌத்தமத நூல்களையும் ஏனைய மத நூல்களையும் கற்றுத் தேர்ந்து பேராசிரியராக விளங்கினார். எனவே வட இந்தியாவில் பேர்பெற்று விளங்கிய நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இவரை ஏற்படுத்தினார்கள். நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பதவி யாருக்கும் எளிதில் அமைவதில்லை. நன்கு கற்றறிந்த அறிஞர்களுக்குத்தான் அப்பதவி கிடைக்கும்.

தருமபால ஆசிரியரின்  மாணவர்கள்:
01. சீலபத்திரர்-  Visesa Mitra தருமபால ஆசிரியரின் தலைசிறந்த மாணவர் சீலபத்திரர். தருமபால ஆசிரியருக்கு பிறகு நளாந்தைப் பல்கலைக்கழகத்தின் தலைமை ஆசிரியராக விளங்கிய புகழ்படைத்த மாணவர். 
தருமபாலர் நாளாந்தைக் கழகத்தின் தலைமை ஆசிரியராய் இருந்த பொழுது, தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிராமணர் அங்குச் சென்று இவரைத் தம்முடன் வாதம் செய்ய அழைத்தார். இவர் தமது மாணவராகிய சீலபத்திரரை அப்பிராமணருடன் வாதம் செய்யச் செய்து அவரைக் கடுமையாகத் தோல்வியுறச் செய்தார். சீலபத்திரரிடத்தில் தான் சீன யாத்திரிகரான யுவாங் சுவாங் என்பவர் சமஸ்கிருதம் பயின்றார். சீலபத்திரர் கி.பி. 585 முதல் 640 வரையில் தலைமையாசிரியராக நளாந்தைப் பல்கலைக்கழகத்தில் இருந்தவர்.
02.விசேஷமித்திரர்:
மைத்திரேயர் எழுதிய 'யோகசாரபூமி' என்னும் நூலுக்கு உரை எழுதியவர்.
03. ஜின புத்திரர் - Jina Mitra
மைத்திரேயர் எழுதிய  "போதிசத்வபூமி' என்னும் நூலுக்கு உரை எழுதியவர். 
04.ஞானசுந்தரர்:   Jana-Sundara
இத்சிங் என்னும் சீனயாத்திரிகர் இந்தியாவுக்கு வந்தபோது (கி.பி. 671 முதல் 695 வரையில்) திலக விகாரையில் வாழ்ந்திருந்தவர். 

04. ஆனந்த தேரர்
பௌத்தமத நூல்களை நன்கு கற்றுத் தேர்ந்தவர். பர்மா (அ) மியான்மர் நாட்டை சேர்ந்த சத்தம்ம ஜோதிபாலர் (அ) சாபதர் என்பவர் ஆனந்த தேரரை இலங்கையிலிருந்து பர்மாவுக்கு அழைத்துச் சென்றார். பர்மா தேசத்தை அரசாண்ட நரபதி ஜயசூரன் என்னும் அரசன் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மூன்று மகா தேரர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒரு யானையை பரிசாக வழங்கினார். சிவலி (Sivali) தாமலிந்த (Tamalinda) மற்றும் ஆனந்தா ஆகிய மூன்று மகா தேரர்களில் ஆனந்தா தமிழ் நாட்டை சேர்ந்த பிக்கு. (Vinaya) வினாயியின் விதிகளை பின்பற்றி சிவலி மற்றும் தாமலிந்த தாமக்கு தனமாக அளித்த யானைகளை காட்டில் விடுவித்தனர். ஆனால் ஆனந்ததேரர் அந்த யானையை காஞ்சிபுரத்திலிருந்த தமது உறவினருக்கு அனுப்பினார். இவர் நமக்குக் கிடைத்த யானையைத் தமது உறவினருக்கு அளித்தார் என்று கூறுகிறபடியால், யானையைக் காப்பாற்றக்கூடிய பெருஞ்செல்வத்தையுடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்று தோன்றுகின்றது என்றுரைக்கிறார் தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி. 

சிவலி மற்றும் தாமலிந்த ஆனந்தரின் செயல் ஒழுக்க விதிகளுக்கு எதிரானது என்று கருதினர்.  இச்செயல் ஆனந்தரை சிவலி மற்றும் தாமலிந்தவிடமிருந்து  பிரித்தது. சில ஆண்டுகள் கழித்து சிவலி தாமலிந்தவிடமிருந்து பிரிந்து தனியாக ஒரு சங்கத்தை அமைத்துக்கொண்டார். சிவாலி, தாமலிந்த மற்றும் ஆனந்தா மூன்று வெவ்வேறு பிரிவுகளை நிறுவினர்.

ஆனந்த தேரர் ஐம்பது ஆண்டு பர்மா தேசத்தில் பௌத்தமத குருவாக இருந்து பின்னர் கி.பி 1245 இல் காலமானார்.

The religious condition of Myanmar

ஞாயிறு, மே 06, 2018

உணர்ச்சிகளின் எண்ணிக்கை 108


பாண்டி - புளிச்ச பாளையம் விஹார்
பகவன் புத்தர் உணர்வுகளை (Feelings) ஏழு வகையாக வகைப்படுத்துகிறார்.  அவைகள்  இரு உணர்வுகள், மூன்று உணர்வுகள், ஐந்து உணர்வுகள், ஆறு உணர்வுகள், பதினெட்டு உணர்வுகள், முப்பத்திரண்டு மற்றும் நூற்றி எட்டு உணர்வுகள்.  (Vedanā-saṃyutta and  Mahāsatipaṭṭhāna-sutta )

01. இரு உணர்வுகள்
உடல் மற்றும் மனத்தால் எழும் உணர்வுகள். (Body and Mental Feelings)

02. மூன்று உணர்வுகள்
உடல் மற்றும் மனத்தால் எழும் உணர்வுகளை மேலும் மூன்று வகையாக பிரிக்கலாம். 01. சுகம் Pleasant 02. துக்கம் Unpleasant 03.  அதுக்கமாசுகம்  Neutral

03. ஐந்து உணர்வுகள் 
மேற்சொன்ன இரண்டு மற்றும் மூன்று உணர்வுகள் சேர்ந்த ஐந்து உணர்வுகள். 
01. உடலில் தோன்றும் சுகம்
02, உடலில் தோன்றும் துக்கம்
03, மனதில் தோன்றும் சுகம்
04. மனதில் தோன்றும் துக்கம்
05. உடல் மற்றும் மனத்தால் தோன்றும் மாசுகம் 
உடலில் தோன்றும் சுகத்திற்கும் மனதில் தோன்றும் சுகத்திற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் உடலில் தோன்றும் சுகம் பெயர்ச்சொல் (Noun)  மனதில் தோன்றும் சுகம் உரிச்சொல் (Adjective). அதாவது உடலில் தோன்றுவது இன்பம், சுகம், துன்பம், துயரம் மனதில்  தோன்றுவது  இன்பமான, சுகமான, துன்பமான, துயரமான  

04. ஆறு உணர்வுகள் 
மேற்சொன்ன ஐந்து உணர்வுகளின் வாயில் (Doors) ஆறுபுலன்கள்.
01. உடல்
02. வாய்/நாக்கு
03. மூக்கு
04. கண்கள்
05, காதுகள்
06, மனம் 
உயிரினங்களையும் புலன்களின் அடிப்படையில் வகைப்படுத்த படுகிறது.  மனிதர்கள் ஆறு புலனறிவு, விலங்குகள் ஐந்து புலனறிவுகள், ஊர்வன மூன்று (பாம்பு)    

 05. பதினெட்டு உணர்வுகள்    
மேற்சொன்ன ஆறுபுலன்களின்  வாயில் மற்றும் மூன்று உணர்வுகள் இணைந்து பதினெட்டு உணர்வுகள் உருவாகின்றன.  
01. உடலால் எழும் சுகம்
02. உடலால் எழும் துக்கம்
03. உடலால் எழும் அதுக்கமாசுகம் 
04, நாவினால்  எழும் சுகம்
05. நாவினால்  எழும் துக்கம்
06, நாவினால்  எழும்  அதுக்கமாசுகம்
07. மூக்கினால்  எழும் சுகம்
08. மூக்கினால் எழும் துக்கம்
09. மூக்கினால் எழும் அதுக்கமாசுகம் 
10. கண்ணினால் எழும் சுகம்
11. கண்ணினால் எழும் துக்கம்
12.கண் ணினால் எழும் அதுக்கமாசுகம் 
13. காதினால் எழும் சுகம்
14. காதினால் எழும் துக்கம்
15.காதினால் எழும் அதுக்கமாசுகம்  
16.மனதினால் எழும் சுகம்
17. மனதினால்  எழும் துக்கம்
18.மனதினால் எழும் அதுக்கமாசுகம் 
06. முப்பத்திரண்டு உணர்வுகள்
இல்லறத்தாருக்குறிய பதினெட்டு உணர்வுகள்
துறவறத்தாருக்குறிய பதினெட்டு உணர்வுகள்

07.நூற்றி எட்டு உணர்வுகள்

முப்பத்திரண்டு உணர்வுகள் x முக்காலம் ( நிகழ் காலம், இறந்த காலம், எதிர் காலம் ) 


நூற்றி எட்டு உணர்வுகள் ஆறுபுலன்கள் x மூன்று உணர்வுகள் (சுகம், துக்கம்.  சமநிலை) x இரு வாழ்நிலை (இல்லறம் மற்றும் துறவறம்) x முக்காலம்

108 feelings = 6 senses x  3 feelings x  2 life x 3 period


{eye, ear, nose, tongue, body, mind} × {gladness, sadness, equanimity} × {household life, renunciation} × {past, future, present} 

காஞ்சிவரத்தில் பிறந்த பௌத்த அறிஞர்கள் I

நாகப்பட்டிணம் வணிகத்தில் சிறந்த இடமாக இருந்தது. கல்வியில் சிறந்த இடமாக காஞ்சீவரம் அமைந்து இருந்தது. தென்னிந்திய வரலாற்றில் காஞ்சீவரம் அளவிற்கு எந்த ஒரு நகரமும் சிறந்த பௌத்த மையமாக திகழவில்லை. பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட பாலி இலக்கியங்களில் காஞ்சீவரம் பௌத்தப் பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது (ப 189 பௌத்தக் கலை வரலாறு- Dr.G. சேதுராமன்) கந்தவம்சம் காஞ்சிவரத்தில் இருபது ஆசிரியர்கள் பாலி புத்தகங்களை எழுதினர் என்றுரைக்கிறது.

இந்தியா முழுவதும் ஏன் அயல் நாட்டிற்கும் சென்று பௌத்தத்தை கொண்டு சென்றவர்களில் பெரும் பங்கு வகித்தவர்கள் காஞ்சி பௌத்த அறிஞர்கள். மேலும் பல அறிஞர்கள் காஞ்சிவரம் வந்து பெருமை சேர்த்தனர்.

காஞ்சிவரத்தில் பிறந்த பௌத்த அறிஞர்கள்
(01)  வண.ஆசாரிய திக்நாதர் (தின்னாகர்) (02)  வண.போதி தருமர்  (03) வண. சுமதி (04) வண.ஜோதிபாலர் (05) வண.தருமபால ஆசிரியர்  (06) வண.ஆனந்த தேரர்  (07) வண.புத்தாதித்தியர்

காஞ்சிவரத்திற்கு  வந்து பெருமை சேர்த்த  பௌத்த அறிஞர்கள்
(01) அறவண அடிகள் (02) மணிமேகலை (03) சீத்தலைச் சாத்தனார் (04) ஆசாரிய புத்ததத்த மகாதேரர் (05) ஆசாரிய தருமபாலர் (அ) தம்மபால (06)  யுவான் சுவாங் (07) தீபங்கர தேரர் (08) அநுருத்தர் (09)  புத்தகோசர் 

01. ஆசாரிய திக்நாதர் (தின்னாகர்) (Dinnaga)
வாழ்ந்திருந்த காலம்: (425 AD) ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை 

சீன அறிஞர் யுவான் சுவாங் தமது யாத்திரைக் குறிப்பில் தின்னாகரை பற்றி எழுதியிருக்கிறார். இவர் காஞ்சிபூரத்திற்குத் தெற்கில் இருந்த சிம்ம வக்த்ரம் என்னும் ஊரில் பிறந்தவர் என்பர். சிம்மவக்த்ரம் என்பது சீயமங்கலமாக இருக்கக்கூடும். (சீயம்=சிம்மம்சிங்கம்) செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள சிங்க பெருமாள் கோவில் என்னும் ஊரில் பிறந்தவர் என்றுரைக்கிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி. 
தின்னாகர் பிராமண குடும்பத்தில் பிறந்தார். வைதிக வேத நூல்களை நன்கு கற்றவர். தேரவாத பௌத்தத்தின் ஒரு பிரிவாகிய வாத்சீபுத்திரி (Vatsiputriya) பிரிவின் பிக்கு நாகதத்தரின் (Nagadatta) நட்பு ஏற்பட்டு பிக்குவானார். பின்னர் சில காலம் கழித்து தின்னாகருக்கும் நாகதத்தருக்கும் ஆன்மா பற்றிய கருத்தில் வேறுபாடு ஏற்பட்டு காஞ்சியை விட்டு வெளியேறினார். 

வடநாட்டிற்குச் சென்று பௌத்த தத்துவ மேதையான வசுபந்துவிடம் மாணவரானார். வசுபந்து அவர்களிடமிருந்து மகாயான பௌத்த தத்துவ இயலை நன்கு கற்று பௌத்த அறிஞர் ஆனார். 

பின்னர், நளாந்தைப் பல்கலைக்கழகஞ் சென்று பல நாள் தங்கியிருந்து, அங்கும் பல நூல்களைக் கற்றார். நளந்தாவில் ஒரு பிராமண அறிஞரிடம் துர்ஜயவிடம் மாதவிவாதத்தில் வென்றார், இந்தியா முழுவதும் பயணம் செய்தார். அரச பொருளாளர் படரபலித (Bhadrapalita) அவர்களை சமய மாற்றம் செய்தார். படரபலித (Bhorosila) அவர்கள் தின்னாகருக்காக ஒரு விகாரை ஒரிசாவில் உள்ள புரோசீலவில் மலையில் கட்டினார் தின்னாகர் தம் வாழ்வில் பெரும்பாலான காலம் ஒரிசாவில் உள்ள விகாரிலும் மகாராட்டித்தில் உள்ள அக்ரா (Accra) விகாரிலும் தங்கிருந்தார் ஒரிசாவிலே இயற்கை எய்தினார் என்று சிலர் கூறுகின்றனர். 

தர்க்க நூலில் இவர் நன்கு பயின்றவர். இவர் பௌத்த மதத்தில் விஞ்ஞான வாதப் பிரிவை உண்டாக்கினார் பௌத்த தர்க்கவியலின் (Epistemology) தந்தை என்று அறியப்படுகிறார் (Founder of the Buddhist Logic). நூற்றுக்கும் மேற்பட்ட தர்க்கம் (விவாதங்களை) எழுதியிருக்கிறார். அவருடைய நூல்கள் பலவற்றை சீன மொழியிலும் திபெத்திய மொழியிலும் பெயர்க்கப்பட்டுள்ளது. பிராமண சமுச்சய் தின்னாகரின் முக்கிய நூல். இதன் விளக்க உரை தான் தர்மகீர்த்தியின் பிராமண வார்த்தி
வடமொழியில் எழுதிய  தர்க்க நூல்கள் :
01. நியாயப் பிரவேசம்  
02. நியாயத்துவாரம் 
தின்னகரின் நூல்கள்

பிராமன்ஸ்சுக்காய (Pramansauccaya)
அலம்பன பரிக்ச (Alambana pariksha)
ஹெட்டுச்சக்கரடமரு (Hetuchakradmru) 
நியாய முக (Nyaya Mukha)
ஆஸ்தவள பிரகாரண (Hastavalaprakarana)
ஆரிய ப்ரஜன பார்மித விவரண (Arya Prajna Parmitavivarana)
அபி தர்ம கோஷா (Abidharmakosha)


02.  வண.போதி தருமர் கி.பி. 6 ஆம் நூற்றாண்டு

பல்லவ மன்னனின் மூன்றாவது மகன் போதி தருமர். போதி தருமரின் இளைய அண்ணன் போதி தருமர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். போதி தருமரின் இயற் பெயர் போதி தாரா.  அவரின் ஆசிரியர் பெயர் ப்ராஜன தாரா (Prajana Dhara). தன் தந்தை மறைந்த பிறகு இல்லறம் துறந்து துறவு மேற்கொண்டார். அப்பொழுது தன் பெயரில் உள்ள தாரா என்ற பெயரை நீக்கி தர்மா என்ற சொல்லை இணைத்துக்கொண்டார். பின்னர் இந்தியா முழுவதும் சென்று தியானத்தை போதித்தார்.

இந்தியாவில் பல ஆண்டுகள் இருந்த போதி தருமர் சீனா தேசம் செல்ல முடிவெடுத்தார். காஞ்சிவரத்தில் இருந்து மாமல்லபுரம் வரை பெரிய படகில் வந்து சேர்ந்தார். உறவினர்களும் நண்பர்களும் மாமல்லபுரம் வரை வந்து வழியனுப்பினர். பின்னர் மாமல்லபுரம் துறைமுகத்தில் இருந்து சுமத்திரா தீவு (ஜவா) சென்று குங் சவ் (Guang Zhou ) சீன சென்றார். சீனர் போதி தருமரை டா மொ (Ta Mo ) என்று அழைத்தனர்.  டா மொ என்றால் தம்மா (தருமா) என்று பொருள். இளைய அண்ணன் இரு வருடம் கழித்து போதிதருமரை காண சென்றார்.  பின்னர் அவருடன் சில காலம் தங்கிiயிருந்தார். போதி தருமரின் அண்ணனை டாக்சி டா மொ (Daxi Damo ) என்று அழைத்தனர்.
Ven.Bodhi Dharma in Kanchi
சீனா மொழியை பயின்றார். சீனர்களின் கலாச்சாரத்தை அறிந்துணர்ந்தார். அவர் தங்கிருந்த இடத்தை சுற்றி அமைந்திருந்த புத்த விகார்களுக்கு சென்றார். ஆற்றை சுற்றி மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வந்தார். கடல் நீர் உட்புகாமலிருக்க பணியாற்றினார். குடிநீருக்காக கிணற்றரை வெட்டினார். இக்கிணற்றை சீனர் டா மொ கிணறு என்று அழைத்தனர். தற்காப்பு கலை மற்றும் மருத்துவத்திலும் வல்லவரான போதி தருமர் அதனை சீனர்களுக்கு கற்பித்தர். 

சீனா தேசத்தை ஆண்டுவந்த ஊ டி (Wu Ti) அவையில் போதி தருமர் தியானத்தை கற்பித்தார். ஊ டி பௌத்தத்தில் பேரார்வம் கொண்டவர். பின்னர் ஊ டிக்கும் போதி தருமருக்கு மனத்தாங்கல் ஏற்பட்டது. எனவே அங்கிருந்து வட சீனா சென்று தியானத்தை கற்பித்தார். ஜப்பானுக்கு சென்று அங்கேயும் தியானத்தை கற்பித்தார். ஜப்பானியர் ஸென் (Zen) என்றும், சீனர் சான் (Ch'an) என்றும் போதி தருமரின் தியான மார்க்கத்தை அழைக்கின்றனர். போதி தருமரைச் சீனர் தமக்குரிய இருபத்தெட்டுச் சமய குரவர்களில் ஒருவராகக் கொண்டிருக்கின்றனர். சீனாவிலும் ஜப்பானிலும் போதி தருமருக்கு கோவில்கள் உள்ளது. இக்கோவில்களில் இரவும் பகலும் எண்ணெய் விளக்கு எரிந்து கொண்டிருக்கும். 

போதி தருமர் இயற்க்கை எய்திய பின்னர் கரடி காது என்ற மலையில் இறுதி அஞ்சலி செய்து ஸ்துப ஒன்றை நிறுவினார் (Bear Ear Mountain )

திங்கள், மார்ச் 26, 2018

உசைன் சாகர் புத்தர்

கனவை மெய்படுத்திய முதலமைச்சர் 
ஆந்திரா மாநிலத்தின் முதலமைச்சர் N. T. ராம ராவ் அவர்கள் நியூயார்க்கில்  உள்ள சுதந்திர தேவி சிலையை போன்று பகவன் புத்தர் சிலையை நிறுவ  விரும்பினார். புத்தர் சிலையை முதலில் நிறுவ விரும்பியது நாகார்ஜூனா கொண்டாவில் ஏனெனில் அது பண்டைய காலத்தில் பௌத்த தளமாக இருந்தது. நாகர்ஜுனாவில் உள்ள பகவன் புத்தர் சிலை கி.பி மூன்றாம் நூற்றாண்டை சார்ந்தது. இந்த பழமையான சிலையை பார்த்து புதிய மற்றும் பெரிய சிலை ஒன்றை நிறுவ விரும்பினார்.


ஐதராபாத்திலிருந்து 70 கி.மீ தொலைவில் அனுமாகொண்டா சாலையில் அமைந்துள்ள ராய்கிரியில் பாறை வெட்டப்பட்டது. 02-10-1985ல் புத்தரின் சிலையை செதுக்கும் பணியை  துவக்கி வைத்தார் முதலமைச்சர் N. T. ராம ராவ்.பாறை வெட்டப்பட்ட இடத்திலே சிலை பாதி செதுக்கப்பட்டது. பாதி பணி நிறைவடைந்த புத்தரின் சிலையின்  எடை 450 டன்.

உசைன் சாகர் ஏரி அமைவிடம்
N. T. ராம ராவ் மார்க்கம், உசைன் சாகர், கேர்த்தாபாத்து, ஐதராபாத்து, தெலுங்கான, 500029

பல துறை வல்லுனர்களின் பங்களிப்பு
18 மீட்டர் நீளமும் 450 டன் எடையும் கொண்ட சிலையை ஏற்றி சென்று ஏரியில் நிறுவுவது என்பது அசாதாரண பணி. எனவே இப்பணியை செவ்வன செய்ய பல துறை வல்லுனர்களின் பங்களிப்பு பெறப்பட்டது. அத்துறைகள்  
01. இந்திய புவியில் ஆய்வு (Geological Survey of India)
02. தேசிய புவியியல் ஆராய்ச்சி நிலையம் (National Geophysical Research Institute)
03.ஆந்திர பொறியியல் ஆராய்ச்சி ஆய்வகங்கள் (Andhra Pradesh Engineering Research Laboratories)
04.அரசு கட்டிடக் கலைஞர் (Government Architect)
05. இயந்திர கிளை நீர் பாசன துறை (Mechanical Branch of Irrigation Department)
06.ஆந்திர அரசு அறக்கட்டளை துறை (Endowment Department of Government of Andhra Pradesh)
07.சாலை மற்றும் கட்டிடத் துறை (Roads and Building Department)
08. ஐதராபாத் நகர்ப்புற வளர்ச்சி (Hyderabad Urban Development Authority)
09. மைய வடிவமைப்பு நீர்ப்பாசன துறை (Central Design Organisation of Irrigation Department)
10. அயல்நாட்டு தொழில் நுட்ப அறிஞர்கள் 
ஏபிசி இந்திய நிறுவனம் (ABC (India) Ltd)
கீழ் காணும் இப்பணிகளை செய்து முடிக்க ஏபிசி இந்திய நிறுவனத்திடம் கொடுக்கபட்டது.
01) முற்றுப்பெறாத பாதி செதுக்கப்பட்ட புத்தர் சிலையை இராய்கிரியில் இருந்து உசைன் சாகர் (Hussain Sagar) ஏரிக்கரையோரம் (62 KM) கொண்டு செல்லுதல்.
02) உசைன் சாகர் ஏரிக்கரையில் இருந்து ஏரியின்  மையத்திற்கு (2 KM) புத்தர் சிலையை கொண்டு செல்லுதல்  
450 டன்  எடை கொண்ட முழுமையாக முற்று பெறாத பகவன் புத்தர் சிலையை மலையில் இருந்து ஏற்றி உசைன் சாகர் ஏரிக்கரைக்கு கொண்டுவருவது என்பது எளிதான செயல் இல்லை. எனவே அயல் நாட்டு அறிஞர்களின் ஆலோசனையும் பெறப்பட்டது. 192 சக்கரங்களை கொண்ட (24 Axle 8 Tyres)  720 டன் எடையை தாங்கும் பின் இணைந்த ஊர்தி (Trailer) ஒன்றை ஜெர்மனியில் இருந்து கொண்டுவரப்பட்டது. இது 36 மீட்டர் நீளம் கொண்டது. ஏபிசி சிலையை ஏற்றி செல்ல ஏதுவாக அரசு சில சாலைகளை விரிவாக்கியது, பாலங்களை (Bridges) பலப்படுத்தியது, சாலையில் உயரம் குறைவாக உள்ள பல தடைகளை நீக்கியது.

சாதனை படைத்த பணி
புத்தர் சிலையை இராய்கிரியில் இருந்து உசைன் சாகர் ஏரிக்கரையோரம் 15-11-1988 அன்று கொண்டு வந்தது. 48 மணிநேரத்திற்குள் கொண்டு வந்து வரலாற்று சாதனை படைத்தது ஏபிசி இந்திய நிறுவனம். 

ஆந்திர அரசு அறக்கட்டளை துறை 
16-11-1988ல் சிற்ப வேலைகள் துவங்கப்பட்டது. மறைந்த  சிற்பி பத்ம சிறி S. M. கணபதி தபதி அவருடன் 40 சிற்பிகளும் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டு பகவன் புத்தர் சிலை முழுமை பெற்றது. 08-03-1990 மீண்டும் புத்தர் சிலையை ஏபிசி இந்திய நிறுவனத்திடம்  இரண்டவது பணிக்காக ஒப்படைக்கப்படுகிறது.

துயரத்தில் ஆழ்த்தியது இரண்டவது பணி
புத்தர் சிலையை ஹூசேன் சாகர் ஏரியில் ஏற்றி செல்வதற்கு முன் 06-03-1990 அன்று மணல் மூட்டைகளை தெப்பத்தில் (Barge) வைத்து சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்தது ஏபிசி இந்திய நிறுவனம்.

10-03-1990 அன்று 39 பணியாளர்கள், 320 டன் எடை கொண்ட புத்தர் சிலை, புத்தரின் சிலையை தாங்கி பிடித்து இருக்கும் 90 டன் எடை கொண்ட  J Stick (Hockey stick ஹாக்கி ஸ்டிக் போன்ற வடிவம்), 100 டன் எடை கொண்ட இணைந்த ஊர்தி என 510  டன் எடையை தாங்கி மிதவை தெப்பம் பயணித்தது.

உசைன் சாகர் ஏரி கரையிலிருந்து 60 மீட்டர் பயணித்த சிலை சுமார் 20 அடி ஆழத்தில் மாலை 6.30 மணிக்கு வழுக்கி நீரில் மூழ்கியது. பிறகு பின் இணைந்த ஊர்தியும் (Trailer) மிதவை தெப்பமும் (Barge) உசைன் சாகர் நீரில் மூழ்கியது. இந்த விபத்தில் திட்ட மேலாளர் திரு SK முன்தரா (SK Mundra) உள்பட 8 பொறியாளர்கள் உயிர் இழந்தனர். 6 பொறியாளர்கள் காயமடைந்தனர். பெரும்பாலானோர் நீந்தி கரையேறினார்.

விபத்துக்கான காரணம் 
விபத்துக்கான காரணங்கள் மூன்று சொல்லப்படுகிறது. (01) Pantoon Barge வடிவமைக்கப்பட்டதில் குறைபாடு. (02)  ஏபிசி இந்திய நிறுவனம் அதிக எடையை ஏற்றி சென்றது. (03) 510 டன் எடையை எப்படி நிரப்ப வேண்டும் என்ற முழுமையான பகுப்பாய்வை  ஏபிசி இந்திய நிறுவனம் செய்ய தவறியது.

முதல் இரண்டு காரணங்களும் ஏற்புடையதாக இல்லை. இணைஊர்தி  எடை தாங்கும் திறன் 720 MT. ஏற்றிச்சென்ற மொத்த எடை 520 MT.  மூன்றாவது காரணத்தை மறுக்கிறது ஏபிசி நிறுவனம். அந்த நிறுவனத்தின் இயக்குனர் மணல் மூட்டைகளை தெப்பத்தில் வைத்து சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்த பிறகு தான் புத்தர் சிலையை ஏற்றப்பட்டது என்றுரைக்கிறது.

மணல் மூட்டைகளை ஏற்றி செல்லும் போது அதன் புவி ஈர்ப்பு சமமாக பரவலாக்கப்படும். ஆனால் புத்தரின் சிலையை ஏற்றி செல்லும் போது அதன் புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிவது கடினமான பணி. புத்தரின் சிலையின் எல்லா பகுதியும் ஒரே எடையை கொண்டது இல்லை. புத்தர் சிலையின் தலை பகுதியின் எடை, கால் பகுதி மற்றும் உடல் பகுதி என ஒவ்வொன்றும் வெவ்வேறு எடையை கொண்டது. உதாரணத்திற்கு சிலையின் வலது புறம் (Right Side) எடை மிகுந்து இருந்தது, காரணம் காக்கும் கையில் சிலை அமைக்கப்பட்டு இருந்தது.

மேலும் நிலப்பகுதியின்  மேல் ஒரு பொருளை எடுத்து செல்லும் போது அதன் புவி ஈர்ப்பு மையம் நீரில் அதே பொருளை எடுத்து செல்லும் போது அதன் புவி ஈர்ப்பு மையமும் வேறுபடும். நீர் மட்டத்தின் அளவு (நீரின் ஆழம்) பொருத்தும் புவி ஈர்ப்பு மையமும் வேறுபடும். நீர் மட்டத்தின் அளவு மாறிக்கொண்டே இருக்க காரணம் சூரியனும் சந்திரனும். இது பௌர்ணமி (Full Moon Day)  மற்றும் அம்மாவாசை (New Moon) ஆகிய நாட்களில் (அலைகள்) அதிகமாக இருக்கும்.

உயர்நீதி மன்றம் ஏரில் கவிழ்ந்த புத்தரின் சிலையை மீட்டு எடுக்க ஏற்படும் செலவு முழுமையாக ஏபிசி இந்திய நிறுவனம்  ஏற்க வேண்டும்  என்றது.


வண. தலாய் லாமா
இரண்டு ஆண்டுகள் ஆற்றின் நீருக்கடியில் புத்தர் சிலை நிலத்தில் முகம் பதித்து இருந்தது. வானத்தை நோக்கி இருக்கவில்லை. இதனால் புத்தரின் சிலையில் 12 இடங்களில் சேதம் அடைந்தது (காது, சீவர ஆடையில் 10 இடங்கள்). 01-12-1992 அன்று பீடத்தில் சிலையை வெற்றிகரமாக நிறுவப்பட்டது. பீடத்தில் புத்தரின் ஜாதக கதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2006ல் வண. தலாய் லாமா புத்த அறநெறியை ஒப்பி பின் நிறைவு செய்தது ஆந்திர அரசு.

சிலையமைப்பு ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட கருங்கல் சிலை -நின்ற நிலை- காக்கும் கை முத்திரை (Abhya Mudra) - சம நிற்கை சிலையின் எடை 320 டன். சிலையின் மொத்த உயரம் 17.90 மீட்டர். சிலை பீடங்களின் மொத்த எடை 1050.  புத்தரின் முகத்தில் புன்முறுவலை காணவில்லை.


பயன்படுத்திய நூல் 
The Buddha Statue - the Story that rocked the Nation - Dr.T.R.Seshadri - Year of Publish 1994.

 ​மேலும் விரிவாக படிக்க 
India Today
India Toady1
en.wikipedia

புதன், மார்ச் 21, 2018

ரூபாயின் பிரச்சனை III -பாபா சாகிப்

பொன் மாற்று திட்டம் (Gold Exchange Standard) பற்றி நம் நாட்டில் பலர் தொடர்ச்சியின்றி எழுதி  வந்தனர். அப்படி எழுதி வந்தவர்கள் மிகப்பெரிய தவறை பொய்யை பரப்பினர். அந்த பொய்யினை அனைவரையும் உண்மை என நம்ப வைத்தனர். அந்த மிகப்பெரிய தவறு (Gross Error) என்ன என்றால்  பொன் மாற்று திட்டம் இந்திய அரசால் உருவாக்கப்பட்டது (அ) ஆலோசிக்கப்பட்டது என்பது தான்    
நம் நாட்டில் ருபாய் மதிப்பு குறைவு என்னும் பொருளாதார சீர்குலைவுக்கு கால் நூற்றாண்டு கடந்து பொன் திட்டம் (Gold Standard) தான் தீர்வு என்று உறுதிப்பாடு எடுத்தது. அந்த உறுதிப்பாடு கூட வேறு வழியின்றி 1892ல்  எடுக்கப்பட்டது.
ஏன் கால் நூற்றாண்டுகள் கடந்து இந்த உறுதிப்பாட்டை எடுத்தது என்றால், ருபாய் மதிப்பு குறைவுக்கு தீர்வு இரட்டை நாணய முறையே (Double Standard) என்று இந்தியா நம்பி இருந்தது. நம்பி ஏமாந்தது. இந்த இரட்டை நாணய முறை கொண்டுவர உருவாக்கப்பட்ட பன்னாட்டு நாடுகளின் மாநாட்டுக்கு பல உறுதிமொழிகளை இந்தியா வாரி வாரி வழங்கியது. மூன்று பன்னாட்டு மாநாடுகள் நடந்தது. அதனால்  எந்த ஒரு பயனும் இல்லை. ஏன் என்றால் அவை வெறும் வேற்று பேச்சுகளாக இருந்தது. இதில் பங்கு கொண்ட நாடுகள்  வெள்ளி திட்டத்தை (Silver Standard) நிறுத்தி பொன் திட்டத்திற்க்கு (Gold Standard) செல்வது என்று உறுதிகொண்டது. இதில் குறிப்பாக ஜெர்மன் முனைப்பாக இருந்தது, ஜெர்மனியை பின்பற்றும் நாடுகளும் உடனடியாக வெள்ளி திட்டத்தை நிறுத்தி பொன் திட்டத்திற்க்கு சென்றது. ஆனால் இங்கிலாந்து மட்டும் இரட்டை நாணய முறைக்கு ஆதரவு அளித்து இருந்தால் பல நாடுகள் மந்தையாடுகளை போல் இங்கிலாந்தை பின்பற்றி இருக்கும். இங்கிலாந்தின் ஆதரவின்மையால் இரட்டை நாணய முறை கைவிடப்பட்டது. இப்பொழுது இந்தியாவிற்கு பொன் திட்டத்தை ஏற்பதை தவிர வேறு வழியில்லை. 
ஆனால் பன்னாட்டு நாடுகளோ இந்தியாவை பொன் திட்டத்தை பின்பற்ற கூடாது. ஏற்கனவே இந்தியா பின்பற்றி வரும் வெள்ளி திட்டத்தை பின்பற்ற வேண்டும் என்று அச்சுறுத்தியது. இந்த அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாமல் பொன் திட்டத்தை பின்பற்றுவது என்று உறுதி கொண்டது. தங்க திட்டத்தை செயல்படுத்த தங்கம் அதிக அளவில் தேவைபடுவதால் பல நாடுகள் தங்கத்தை பெற முந்தியடித்தது. இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது வெள்ளியின்  விலை வீழ்ச்சியடைந்து. 
பொன்  திட்டத்தில் உறுதிகொண்டது இந்தியா 
இந்தியாவிற்கு தங்க திட்டத்தை செயல்படுத்த போதுமான அளவில் தங்கத்தின் இருப்பு இல்லை. இருந்தாலும் தங்கத்தை பயன்படுத்தி தங்க திட்டத்தை செயல்படுத்த திட்டத்தை வகுத்தது. இந்த திட்டத்தை குழி தோண்டி புதைக்க இரு மாற்று திட்டங்கள் இருவர் அளித்தனர். ஒருவர் புரோபின் மற்றோருவர் லிண்ட்சே (A.M.Lindsay) இந்த இருவரில் மிக முக்கியமானவர் லிண்ட்சே.
John Maynard Keynes
இந்திய செலவாணி மற்றும் நிதியங்கள் (Indian Currency and Finance) என்று நூலின் ஆசிரியர் கெய்ன்ஸ் (Johan Maynard Keynes) அவர்கள், லிண்ட்சே பற்றி தம் நூலில் குறிப்பிடுகிறார். லிண்ட்சே பெங்கால் வங்கியின் துணை செயலாளர் (Deputy Secretary of the Bank of Bengal). லிண்ட்சே தம்முடைய திட்டத்தை இந்தியா ஏற்க வேண்டும் என விரும்பினார். எனவே முதன் முதலில் 1876ல் தம்முடைய திட்டத்தை இந்தியாவிற்கு முன்மொழிந்தார். பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து 1878ல் மீண்டும் முன்மொழிந்தார். மீண்டும் ஏழு ஆண்டுகள் கழித்து 1885ல் முன்மொழிந்தார். பிறகு மீண்டும் ஏழு ஆண்டுகள் கழித்து 1892ல் முன்மொழிந்தார். இறுதியாக ஆறு ஆண்டுகள் கழித்து 1898ல் முன்மொழிந்தார் என்றுரைக்கிறார்.

புரோபின் மற்றும் லிண்ட்சே இவர்களின் மாற்று திட்டம் என்பது தங்க நாணய உற்பத்தி இன்றி தங்க திட்டத்தை செயல்படுத்துவது. இந்தியா இந்திய அரசின் தங்க திட்டத்தையும் இந்த இருவர் அளித்த மாற்று திட்டத்தையும் பிலௌர் குழுவுக்கு (Flower Committe) அளித்தது. பிலௌர் குழு இந்த மூன்று திட்டங்களை பகுத்தாய்ந்து ப்ரோபின் மற்றும் லிண்ட்சே திட்டத்தை நிராகரித்தது. இந்திய திட்டமே சரி என்றது.

இவ்வாறு இருக்கையில் பொன் மாற்று திட்டம் என்பது இந்திய திட்டம் என்றுரைப்பது பெரிய தவறு என்று பாபா சாகிப் தமக்குரிய முறையில் பகுத்தாய்ந்து ஆதாரங்களோடு விளக்குகிறார்

திட்டமும் செயலும் வெவ்வேறாக இருந்தது 
இந்திய அரசு 1898ல் பிலௌர் குழு பரிந்துரைத்த பொன் திட்டத்தை ஏற்றது. பதிமூன்று ஆண்டுகள் கழித்து 1911ல் சேம்பர்லைன் ஆணையம் ஒரு அறிக்கை அளித்தது. பிலௌர் குழு பரிந்துரைத்த திட்டமும் அதன் செயல்பாடுகளும் வேறுபடுகிறது என்று. அதோடு நிற்கவில்லை செயல்பாடுகள் எல்லாம் லிண்ட்சேவின் திட்டத்தை ஒத்திருக்கிறது என்றது. அதாவது எந்த திட்டம் பிலௌர் குழுவினால் நிராகரிக்கப்பட்டதோ அதே திட்டம் தான் இந்தியாவில் செயல்படுகிறது.

லிண்ட்சேவின் நிதியங்களின் காப்பும் போக்கும், இருப்பும் இயக்கமும் இந்தியாவின் செல்பாடுகளுடன் எவ்வாறு ஒத்து இருக்கிறது என்று விளக்குகிறார் பாபா சாகிப்.

லிண்ட்சேவின் திட்டம்
01) இருப்பிடம் அரசு செலுத்தல்களை (Govenment payments) இரு வகையாக பிரிக்கலாம். ஒன்று உள்நாட்டு செலுத்தல்கள் (Domestic Payments) மற்றோன்று அயல் நாட்டு செலுத்தல்கள் (Foreign Remittence). உள்நாட்டு செலுத்தல்கள் வெள்ளி நாணயம் மற்றும் காகித பணத்தின் மூலம் செலுத்துதல். அயல் நாட்டு செலுத்தல்கள் தங்க நாணயம்  மூலம் செலுத்துதல்.  
02) காப்பு இதனை செயல்படுத்த இரு அலுவலகம் வேண்டும்.  ஒரு அலுவலகம் இந்தியாவில் இயங்கும். இந்தியாவில் உள்ள அலுவலகம் ரூபாயை வைத்து இருக்கும் அதாவது வெள்ளியை (Silver Reserve).  இன்னொரு அலுவலகம் லண்டனில் இருக்கும். இந்த அலுவலகம் தங்கத்தை வைத்து இருக்கும் (Gold Reserve). 
இவ்வாறு ஒரு பகுதி தங்கமாகவும் ஒரு பகுதி வெள்ளியாகவும் August 1915 ஆண்டு வரை வைக்கப்பட்டிருந்தது. காகித பணம் என்பது கலப்பு தன்மை கொண்டது. அது தங்கம் வெள்ளி காப்புனை ஈடாக கொண்டது. எனவே காகித பணம் என்பது சட்ட பூர்வமான காப்பு இல்லை (Statutory Reserve). 
03) இயக்கம் லண்டனில் இருக்கும் அலுவலகத்திற்கு வெள்ளி தேவைப்படும் போது இந்தியா அரசின் மீது Draft on the letter (வரைஒலைகளை) விற்கும் இதற்கு (Council) என்று பெயர். அதைப்போன்று இந்தியாவிற்கு தங்கம் தேவைப்படும் போது இந்திய லண்டன் அலுவலகத்தின் மீது  Draft on the letter வரைஒலைகளை விற்கும்  இதற்கு (Reverse Council) என்று பெயர். இந்த council விற்பதும் Reverse Council விற்பதும் தங்க செலாவணி இல்லாத திட்டம் அதாவது  பொன் மாற்று திட்டம்.
சேம்பர்லைன் ஆணையம் Vs  பாபா சாகிப்
திட்டமும் அதன் செயல்பாடுகளும் வேறுபடுவது குறித்து சேம்பர்லைன் ஆணையம் என்ன தெரிவிக்கிறது என்றால், இந்தியாவின் திட்டமும் அதன் செயலும் வேறுபடுகிறது என்று சொல்வது என்பது யாரையும் கண்டிப்பது ஆகாது என்றுரைக்கிறது. பாபா சாகிப் இது ஏன் கண்டிப்புக்கு உள்ளாகாது என்று வினா எழுப்பி விளக்குகிறார்.

1878ல் இந்திய அரசால் முன்மொழிய பட்டதிட்டம் 1879ல் ஆய்வு குழுவால் கண்டிக்கபடவில்லையா என்று வினா எழுப்புகின்றார்? 1878ஆம் ஆண்டு இந்திய திட்டத்தையும் தற்பொழுது இயங்கும் லிண்ட்சே திட்டத்தையும் ஒப்பிட்டு விளக்குகிறார்.
01) நாணய சாலை (Mint)  மக்களுக்கு மூடல்  
1878 திட்டத்தில் நாணய சாலை பொது மக்களுக்கு திறந்து இருந்தது. லிண்ட்சே திட்டத்தில் நாணய சாலை அரசுக்கு திறந்து இருந்தது. அரசின் தனி உரிமையாக (Monopoly) இருந்தது. இங்கு ஒரு வினா எழுகிறது, நாணயம் அச்சிட்டு வெளியிடுவது என்பது அரசின் கடமை தானே. ஏன் 1878ஆம் ஆண்டு திட்டத்தில் நாணயத்தை பொதுமக்கள்  நாணய சாலையில் கொடுத்து அடித்துக்கொண்டனர் .     
(1873-1893) 20 ஆண்டுகள் இந்தியா தொழில் துறை வேகமாக  முன்னேறியது. இது நாணயத்தின் தேவையை அதிகரித்தது. எனவே பொது மக்கள் நாணயமடித்தல் நிறுத்தப்பட்டால், நாணயமடித்தல் அரசின் கடமையாகிவிடும். அப்பொழுது இருந்த சுழ்நிலையில் நாணயமடித்தலை அரசு ஏற்க முடியாத சூழ்நிலை. அப்படியே ஏற்றாலும் புல்லின் வாங்குவது இருப்பு வைப்பது என்ற வகையில் கொடுக்கல் வாங்கல் பெரும் சிக்கலாக இருக்கும். எனவே நாணயமடித்தல் பொது மக்களுக்கு திறந்து இருந்தது.
02)  நாணய வரி (Seignorage) நாணயமடித்தலின் மீது இலாபம்      
1878ஆம் ஆண்டு திட்டத்தின் படி நாணயமடித்தலிலும் தற்பொழுது இந்தியா செலயல்படுத்தும் லிண்ட்சே திட்டத்திலும் இலாபம் உள்ளது. ஆனால் 1878 ஆம் ஆண்டு திட்டத்தில் இலாபத்தின் அளவு சிறிது. இது இலாபத்தை ஊக்குவிக்கவில்லை. ஆனால் இந்தியா செயல்படுத்தியும் லிண்ட்சே திட்டத்தில் இலாபத்தை தேடி அலையும் நிலை. சந்தை விலைக்கும் நாணய சாலை விலைக்கும் (Mint and Market Price) உள்ள வேறுபாடு இலாபம்.  
II மாற்று திட்டத்திற்கு நம்பிக்கை ஊட்டவே சாம்பர்லைன் ஆணையம்  வாதிடுகிறது.
மாற்று திட்டம் என்பது புறந்தள்ளப்பட்ட ஒரு திட்டம்.   புறந்தள்ளப்பட்ட திட்டத்தை மறுபடியும் உயிரூட்ட சாம்பர்லைன் ஆணையம் வாதிடுகிறது.எப்படி வாதிடுகிறது என்றால் இந்த செலவாணி முறை (Currency System) ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிலும் வேறு சில இடங்களிலும் உள்ள செலவாணி முறையுடன் நெருங்கிய சாயல் உள்ளது என்று வாதிட்டது.  சரி அந்த சாயல்கள் என்ன?
திரு கெய்ன்ஸ் அவர்கள் இந்திய செலவாணி மற்றும் நிதியங்கள் என்ற நூல் எழுதியுள்ளார். அதில் இயல் IIல் (Chapter II)  அந்த சாயல்கள் என்ன  என்று குறிப்பிட்டுள்ளார். வெளிநாட்டு செலுத்தல்களுக்கு (Foreign remittance) வங்கிகள் Foreign Bill of Exchange வைத்து இருக்கிறது. Foreign Exchange Billய் விற்பதும் இந்தியா Reverse Council விற்பதும் ஒன்று தான் என்றுரைக்கிறார். 
ஆனால் பாபா சாகிப் கெய்ன்ஸ் அவர்களின் கருத்தை மறுக்கிறார். அவரின் கருத்தை தவறு என்று சுட்டி காட்ட முதலில் பேராசிரியர்  கெமரர் கருத்தை சுட்டி காட்டி பின் தம்முடைய கருத்தை பதிவிடுகிறார்  
Kemmerer
பேராசிரியர் கெமரர் (Kemmerer) என்ன சொல்கிறார் என்றால் England Foreign Countries Bill of Exchange வைத்து இருப்பதும் இந்தியா Reverse Council விற்பதும் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை, இவைகள் ஒன்றுக்கொன்று எதிர்மறையானது என்றுரைக்கிறார்.
ஆகவே  திரு கெய்ன்ஸ் நம்மை நம்ப சொல்வதை ஏற்க முடியாது.  இந்திய செலாவணி முறை ஐரோப்பிய செலாவணி முறையுடன் எவ்வகையிலும் ஒத்தது இல்லை என்றுரைக்கிறார் பாபா சாகிப். ஒப்புமை ஒன்று தேவைப்பட்டால் இங்கிலாந்தில் (1797 -1824) 25 ஆண்டுகள் அதாவது கால் நூற்றாண்டு வாங்கி இடை நிறுத்த காலத்தில் (Bank suspension period) நிலவிய செலாவணி முறையை தான் இந்திய செலாவணி முறையுடன் ஒத்து இருக்கிறது என்றுரைக்கிறார். 
இந்திய செலாவணி முறை01. தங்க சவரன் முழுமையான சட்ட செலாவணி
02. வெள்ளி ரூபாய் முழுமையான சட்ட செலாவணி
03.அரசு சவரங்களுக்கு வெள்ளி ரூபாயை அளிக்கும். ஆனால் வெள்ளி ரூபாய்க்கு தங்க சவரனை அளிக்காது.
இங்கிலாந்து செலாவணி முறை01. தங்க சவரன் முழுமையான சட்ட செலாவணி
02. இங்கிலாந்தில் காகித நோட்டுகள் சட்ட செலாவணி இல்லை. ஆனால் அது பொதுப்படையான ஏற்புடைய பணமாக புழக்கத்தில் சுற்றியன.
03. இங்கிலாந்து வங்கியானது தங்கம், Mercantile Bills, ஆகியவைக்கு காகித நோட்டுகளை தர பொறுப்பு ஏற்றுள்ளது. ஆனால் காகித நோட்டுகளுக்கு தங்க சவரனை அளிக்காது.
இது தான் இந்திய செலாவணி முறைக்கும் இங்கிலாந்து செலாவணி முறைக்கும் இருந்த ஒற்றுமை. அது கூட வாங்கி இடை நிறுத்த காலத்தில் நிலவிய செலாவணி அமைப்பு என்றுரைக்கிறார் பாபா சாகிப். ஆனால் திரு கெய்ன்ஸ் இதனை நம்ப மறுக்கிறார்.

வரம்புக்கு உட்பட்ட அளிப்பு (Limited Supply) தான் அதன் மதிப்பை காத்துக்கொள்ளும்
மாற்றத்தக்க செலாவணி மற்றும் மாற்ற முடியாத செலாவணிக்கும் (Convertable and Non Convertable currecny) உள்ள வேறுபாடு செலாவணி வெளியிடும் உரிமை விவேகத்துடன் ஆள்வதற்கும் விவேகமின்றி ஆள்வதற்கும் உள்ள வேறுபாடு தான். வாழைப்பழங்களை ஆப்பிள் பழங்களாக மாற்றினால் தான் வாழைப்பழங்களின் மதிப்பை காக்க முடியும் என்று எவரும் சொல்வதில்லை. வாழைப்பழங்களுக்கான தேவை (Demand) இருப்பதாலும் அவற்றின் அளிப்பு (Supply) வரம்புக்கு உட்பட்டு (Limited) இருப்பதாலும் அவை தம் மதிப்பை காத்துக்கொள்கின்றன. ஒன்றின் மதிப்பை காப்பதற்கு அவசியமானது அதன் (Limited Supply) அளிப்பு வரம்பு தான்.

நாணய சாலை பொது மக்களுக்கு திறந்து இருந்ததால், பொது மக்கள் வெள்ளியை நாணய சாலையில் கொடுத்து, நாணயமாக்கி கொள்கின்றனர். இங்கு நாணயத்தின் அளிப்பு (Supply) என்பது வரம்பின்றி உள்ளது. எனவே நாணயத்தின் மதிப்பு சரிகிறது. ஆனால் நாணய சாலையை பொதுமக்களுக்கு மூடிவிட்டால், நாணயம் வெளியிடுதல் அரசின் கடமையாகி விடுகிறது. அரசும் தம்மிடம் உள்ள எல்லா வெள்ளியையும் நாணயமாக்கிவிடுவதில்லை. மாற்றத்தக்க மற்றும் மாற்ற முடியாத செலாவணியை வைத்து இருக்கிறது.  இந்தியாவில் நாம் வைத்து இருக்கும் போலித்தனமான மாற்றத்தக்க செலாவணி ரூபாய் விட மாற்ற முடியாத செலாவணி உலகுக்கு எத்தனையே மேலானதாக இருக்கும். நாணயத்திற்கு மாற்றாக காகித நோட்டும் வெளியிடுகிறது. காகித நோட்டுகள் வெள்ளியை ஈடாக வைத்து வெளியிடுகிறது. எனவே நாணய சாலையை பொது மக்களுக்கு மூடுவது என்பது நாணயத்தின் அளிப்பை வரம்புக்கு உட்படுத்தப்படுகிறது. எனவே நாணயம் வெளியிடு வரம்புக்கு உட்பட்டு இருக்கும் போது அதன் மதிப்பு சரிவதில்லை.

வரைமுறை அற்ற பெருக்கம் ஏற்படும் சாத்தியபாட்டுக்கு எதிராகத்தான் கவனமாக இருக்கவேண்டும். மதிப்பிடும் முறை திட்டமான உலோக பணமாய் இருக்கும் போது மிக அதிகமாக பெருக்கம் ஏற்பட்ட முடியாது. ஏன் என்றால் உற்பத்தி செலவே போதிய வரம்பு கட்டும் காரணியாக செயல்படுகிறது. மற்றதக்க காகித பணமாக இருக்கும் போது சேம வைப்பு தொடர்பான வழி வகைகள் அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்த பயன்படுகிறது. வரைமுறையற்ற பெருக்கம் என்பது மதிப்பு குறைவு (அ)  விலையேற்றத்திற்கு மறு பெயராகும்} 

புதன், ஜனவரி 17, 2018

தமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் அமராவதி சிற்ப தொகுதி

தமிழக தொல்லியல் துறை அமராவதி கலைப்பாணி சிற்ப தொகுதி இரண்டை  சென்னையில் கண்டறிந்தது. இத்துறையால் கண்டறியப்பட்ட முதல் அமராவதி கலைப்பாணி சிற்பம் இராயப்பேட்டை புத்தர் சிலை. இரண்டாவது கண்டறியப்பட்ட சிற்பம் திருவல்லிக்கேணி பௌத்த சிற்பம். இவை பால் நாடு கல்லால் செய்யப்பட்ட சிற்பம்.  இது 3-4 நூற்றாண்டை சேர்ந்த சிற்பங்கள். 

இராயப்பேட்டை

கோவில் அமைவிடம்: பெரிய பாலயத்து அம்மன் கோவில், சீனிவாச பெருமாள் சன்னதி தெரு, கணபதி காலனிஇராயப்பேட்டை, சென்னை 600 014

Dr.D.தயாளன் (தொல்லியல் துறை இயக்குனர்)
இஸ்துபாவின் இரு புறமும் அமர்ந்த நிலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உயரம் 15 cm (அரை அடி) அகலம் 35 cm  (ஒரு அடி). சிற்பங்கள் தெளிவாக இல்லை. சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியாகத்தில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

மகா பண்டிதர் க. அயோத்திதாசர்
அயோத்திதாச பண்டிதர் இலங்கை மலிககந்த விகாரையில்  வண. சுமங்கள மகாநாயக்க அவர்களிடம் பஞ்சசீலம் ஏற்று சென்னையில் 1898ல் இராயப்பேட்டையில் சாக்கிய பௌத்த சங்கம் (SBS) ஒன்றை நிறுவினார். இதன் தலைவராக சிக்காகோவை  சேர்ந்த திரு Dr பால் கரசு (Paul Carsu)ம்   பொது செயலராக பண்டிதரும் இருந்தனர். இங்கு ஒவ்வொரு ஞாயிறும் பௌத்த சங்க கூட்டம் நடைபெறும். ஹொலண்ட், சீனா, ஜப்பான், பர்மா, இலங்கை, சியாம், சிங்கப்பூர், பெனாரஸ், புத்தகயா மற்றும் இன்னும் பிற இடங்களில் இருந்து பிக்குகளும் பிறரும் இங்கு அழைக்கப்பட்டு வந்து தங்கியிருந்திருக்கின்றனர். பல சாக்கிய பௌத்த சங்கம் உருவாக்கப்பட்டு அவற்றிக்கு மையமாக சென்னை சாக்கிய பௌத்த சங்கம் செயல்பட்டது.
01. மைசூர் - மாரிக்குப்பம்
02. மைசூர் - பெங்களூரு
03. வடஆற்காடு - திருப்பத்தூர்
04. ஹைட்ரபாத் - செகந்திராபாத்
05. பர்மா - ரங்கூன்
06. தென் ஆப்பிரிக்கா, டர்பன்   (பண்டித அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி இரண்டு பக்கம் 180 ).    
திருவல்லிக்கேணி
கோவில் அமைவிடம்: 48, எல்லையம்மன் கோவில் (அ) எல்லம்மன் கோவில், சுந்தர மூர்த்தி விநாயகர் (S M V ) கோவில் தெரு, ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் அருகில் திருவல்லிக்கேணி, சென்னை 600005. எல்லையம்மன் கோவிலும்  சுந்தர மூர்த்தி விநாயகர்  கோவிலும் ஒரே தெரு முனையின்  இரு பக்கமும் அமைந்துள்ளது.

ஆர். வசந்த கல்யாணி, கல்வெட்டாய்வாளர்,  தமிழக தொல்பொருள் ஆய்வு துறை 
கோவில் புற சுவரில் மாடம் போன்ற ஒரு பகுதியில் பௌத்த சிற்பம் ஒன்றை தமிழக தொல்லியல் துறை கண்டறிந்தது. அந்த சிற்ப தொகுதி அரை அடி அகலமும் ஒன்றரை அடி நீளமும் கொண்டதாக இருக்கிறது.
சிலையமையப்பு இச்சிற்பத்தில் ஆடவர் ஆறு பேர் உள்ளனர். முன்னும் பின்னுமாக மூவர் மூவராக வணங்கிய நிலையில் இருவரிசைகளில் காட்டப்பட்டுள்ளனர். தலையில் தடித்த தலைபாகை, காதுகளில் பத்ர குண்டலங்கள், இடையில் இடைகச்சம்,  இடையில் கட்டிய துணி கட்டு இருபுறமும் முழங்கால் வரை தொங்குகின்றது. 
சிற்பகலைப்பாணி சிற்பகலைப்பாணி அமராவதி ஸ்துப சிற்ப கலைப்பாணியை ஒத்ததாகும். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா ஆற்றங்கரையில்  கி. பி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்ததாக அமைந்திருந்த பௌத்த ஸ்தூபத்தின் சிற்பங்கள் சென்னை அரசு அருங்காட்சியகத்திலும் பாரிஸ் அருங்காட்சியகளிலும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அச்சிற்ப தொகுதியில்  ஒன்றாக இது இருக்க வேண்டும். (ஆவணம் இதழ் 7 ஆண்டு 1996 தலைப்பு 51 பக்கம் 187-188 )


கோவில் புற சுவரில் மாடம் போன்ற ஒரு பகுதியை இணைத்து கோவில் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. மாடம்  போன்று இருப்பதால் சிறிய விநாயகர் சிலையும் பிற பொருள்களை வைக்கும் இடமாக பயன்படுத்திக்கொண்டு இருக்கின்றனர்.

ஆவணம் இதழ் 7 1996 பக்கம் 187-188