வெள்ளி, ஜூன் 26, 2015

தமிழ் பௌத்த இலக்கியங்கள்


தமிழ் பௌத்த இலக்கியங்கள்

நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை

ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Authority of India -SC/ST Employees Welfare Association, Meenambakkam dt 21/02/2015


இந்தியாவில் புத்தர் வாழ்ந்த காலத்தில் எத்தனை மொழிகள் இருந்ததென சிந்தித்தால், இன்று இருக்கும் அளவுக்கு மக்கள்தொகையும் புத்தர் வாழ்ந்த காலத்தில் அன்று இல்லை. எந்தெந்த இடங்களில் நதிக்கரைகள் இருந்ததோ அந்தந்த இடங்களில் தான் மக்கள் இருந்தனர். வட இந்தியாவில் கங்கை நதிக்கரையில் மிகப்பெரிய பேரரசுகள் என சொல்லப்படுகின்ற மகதப்பேரரசும்,கோசலப்பேரரசும் உருவாகியது. இங்குதான் இநதியாவின் முதல் பேரரசு உருவாகியது.

தென்னிந்தியாவில் காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய இந்த மூன்று நதிப்படுகையில் தான் நிலைகுடிகள் (Settled People) உருவாகினர்.  நிலைகுடிகள் உருவாகின்ற இடங்களில் தான் ஒரு அரசு (State) உருவாக முடியும். அப்படி தென்னிந்தியாவில் உருவான பாண்டிய பேரரசு தான் முதல் பேரரசு. இதைப்போன்று நைல் நதி பள்ளத்தாக்கில் கிரேக்க பேரரசு உருவானது. சீனாவிலும் சில இடங்களில்  நதிக்கரைகள்  இருந்த இடங்களில் மிகப் பெரிய பேரரசுகள் உருவானது.

இப்படி பேரரசுகள் உருவாகும்போது கிரேக்கத்தில் சாக்ரட்டிஸ், அரிஸ்டாட்டில், அரிலியஸ் போன்ற உலகப் புகழ் பெற்ற சிந்தனையார்கள் பிறந்தனர், சீனாவில் கன்புசியஸ், லாவோ   போன்ற அறிஞர்கள் பிறந்தனர். இங்கே இந்தியாவில் கங்கை  நதிக்கரையில் மிகப்பெரிய சிந்தனையாளருமான புத்த பகவனும் மகாவீரரும் பிறந்தனர் .

இந்தியாவில் பேசப்பட்ட மொழிகள் என்றால் புத்தர் வாழ்ந்த அந்தப் பகுதியில் பாலியும் பிராகிருதமும். அதன் பிறகு இம்மொழிகள் இந்தியா முழுவதும் பேசப்பட்டது.

இந்தியா முழுவதும் பேசப்பட்ட மொழி தமிழ்மொழி.  இந்தியாவில் பெரும்பாலும் பேசப்பட்டமொழி தமிழ்மொழி என அயர்லாந்தில் பிறந்து இந்தியாவிற்கு வந்து திருநெல்வேலியில் தங்கி ஆய்வு செய்த கால்டுவெல் கூறுகிறார். இந்திய முழுவதும் தமிழ் பேசப்பட்டது என அறிவர் அண்ணல் அம்பேத்கர் தம் ஆய்வில் குறிப்பிட்டு இருக்கிறார்( தீண்டதகாதவர்கள் பற்றிய நூல் தொகுதி 14). இந்தியா முழுவதும் அன்று மக்கள் மொழியாக பேசப்பட்ட மொழிகள் தமிழ், பாலி மற்றும் பிராகிருதம். அன்றும் இன்றும் மக்கள் மொழியாக வாய்மொழி மூலம் பேசப்படாத மொழி சமஸ்கிருதம். இம்மொழி intellectual communicative language அறிவு தொடர்பாக இருந்த மொழி. 

பகவன் புத்தரிடம், புத்தரின் உரைகளை சமஸ்கிருத மொழியில்  எழுதலாமா என்று கேட்டதற்கு, அவ்வேண்டுகோளை  மறுத்துவிட்டார். காரணம் மக்கள் மொழியில் எந்தெந்த இடங்களில் மக்கள் வாழ்கின்றனரோ, அந்தந்த இடங்களில் பேசப்படுகின்ற மக்கள் மொழியில் தான் தம் உரைகளை சொல்லப்பட வேண்டுமென என்றுரைத்தார். தாய்மொழி வழி கல்வியை 2500 ஆண்டுகளுக்கு முன்பே வலியுறுத்தியவர் பகவன் புத்தர். தாய்மொழி வழி கல்வியின் முன்னோடி என பகவன் புத்தரை குறிப்பிடமுடியும்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் பேசப்பட்ட மொழிகளில் சமஸ்கிருதம் வெறும் சடங்குகளோடும் சம்பிரதாயங்களோடும் இன்றும் இருக்கிறது. மகத பேரரசு மற்றும் கோசல பேரரசு விழ்ச்சிக்கு பிறகு பாலி மொழிக்கும் பிராகிருத மொழிக்கும் போதிய ஆதரவில்லை. இன்று வடஇந்தியாவில் பேசப்படுகின்ற பல்வேறு மொழிகள் இந்தி உட்பட மராத்தி, குஜராத்தி போன்ற மொழிகள் எல்லாம் சமஸ்கிருதமும் பாலியும், பிராகிருத மொழியும் கலந்து அதன் மூலம் தோன்றிய மொழிகள் தான். தமிழ் மொழி 2000 ஆண்டுகளாக ஏற்பட்ட மாற்றங்களால் கொஞ்ச கொஞ்சமாக தென்னிந்தியாவிலேயே நின்றுவிட்டது. தமிழ் மொழியின்   கிளை மொழிகள் தான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள்.  தமிழ் மொழியின் தொன்மை என்பது பகவன் புத்தர் காலத்திற்கும் முன் தோன்றியது.  

சமஸ்கிருதமோ, பாலியோ, பிராகிருதமோ, ஏற்பட்ட காலவெள்ளத்தில் அவை தாங்கி போகவில்லை. ஆனால் தமிழ் காலவெள்ளத்தை தாண்டியது.  இன்றும் தமிழ் மக்கள் மொழியாக இருக்கிறது. உலகத்தில் பல நாடுகளில் சிங்கப்பூர்,  மலேசியா,  மௌரிசியஸ்  போன்ற நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்கிறது. உலகம் முழுவதும் பரவி இருக்கின்ற மொழியாக தமிழ் மொழி இருக்கிறது

2000 ஆண்டுகளுக்கு முன் உள்ள காரணத்தால் பாலி மொழியில் புத்தரின் உரைகள் நேரடியாக பதிவாகி இருக்கிறது. புத்தரின் உரைகள் அனைத்தும் அவர் பேசிய பாலிமொழியில் உள்ளது. திரிபீடகம் என்று அவ்வுரைகளை குறிப்பிடுவர்.   திரிபீடகம்  (அ) முக்கூடை என்பது 01.சுத்த பீடகம் 02. வினைய பீடகம் 03. அபிதம்ம பீடகம். முதலில் இரண்டு பீடகங்கள் மட்டுமே இருந்தது. சுத்த பீடகம் புத்தருடைய உரைகளை கொண்டது. வினைய பீடகம் பிக்குகளுக்கும் பிக்குனிகளுக்கும் உரியது.   பிக்கு பிக்குணி சட்ட திட்டங்களை கொண்டது.

சுத்த பீடகம் புத்தருடைய நேரடியான உரைகள், புத்தர் அவர் வாழ்நாளில் ஆற்றிய பல்வேறு உரைகளின் தொகுப்பு. இதற்கு பின்னர் நீண்ட காலம் கழித்துதான்   புத்தரின் உரைகளில் (Highly philosophical) உயர்ந்த தத்துவங்களை இருக்கின்றவைகளை எடுத்து அபிதம்ம பீடகம் என்று தொகுக்கப்பட்டது. அதன் பிறகு பாலியில் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை இலக்கியங்கள் தொகுக்கப்பட்டது.

“Questions of Milinda” மிலிந்த பங்க கிரேக்க மன்னனோடு வண. நாகசேனன் என்கின்ற பிக்கு வினா விடையாக பேசப்படுகின்ற விசயங்களை பின்னாளில் தொகுக்கின்றனர். Post-canonical Works என்று பாலியில் குறிப்பிடுகின்றனர். அதாவது திருமுறைகளை சாரதா இலக்கியங்கள். திருமுறைகள் என்றால் புத்தருடைய அந்த மூன்று படைப்புகள் (திரிபீடகம்). திரிபீடகங்கள் இல்லாத படைப்புகள் எல்லாம் Post Canonical Works என்று பாலியில் குறிப்பிடுகின்றனர்.

வண. பிக்கு போதி பாலா (மதுரை) அவ்வப்போது இதனை குறிப்பிடுவதுண்டு. திரிபீடகங்களுக்கு மிகப்பெரிய அளவில் (உலக அளவில்) உரை எழுதியவர்கள் 12 பேர்இன்று பர்மா, இலங்கை, சீனா, ஜப்பான் ஆகிய உலகத்தின் பல்வேறு நாடுகளில் பாதுகாத்து வைத்து இருக்கின்ற திரிபீடகத்திற்கு உரை எழுதியவர்கள் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். இந்த பன்னிரண்டு பெயரில் ஒன்பது பேர் தமிழர்கள். மீதம் உள்ள மூவரில் ஒருவர் இலங்கையை சார்ந்தவர், இருவர் மட்டுமே வெளிநாட்டை சார்ந்தவர். ஆக தமிழர்கள் பௌத்த இலக்கியங்களை தமிழில் மட்டுமே எழுதவில்லை. பாலியிலும்  எழுதியிருக்கின்றனர்.

எனவே தான் நாம் அவர்களை சுத்தமாக மறந்துவிட்டோம். இது 20 ஆம் நூற்றாண்டில் பண்டித அயோத்திதாசர்  காலத்தில் இயற்பியல் பேராசிரியரான திரு. லட்சுமி நரசு  இருந்தார். அவர் நான்கு புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதினார்.           
1. Essence of Buddhism
02. What is Buddhism
03. Study of Caste
04. Religion of the Modern Buddhist
20 ஆம் நூற்றாண்டின் லட்சுமி நரசுவை மறந்தது போன்று திரிபீடகங்களுக்கு பாலியில் உரை எழுதிய தமிழர்களையும் நாம் மறந்துவிட்டோம்.

தமிழ் மொழி 3000 ஆண்டு பழமை வாய்ந்த மொழி. பகவன் புத்தர் பேசிய பாலி மொழி இன்று பேசப்படவில்லை. சாக்ரட்டிசும், அரிஸ்டாட்டிலும் பேசிய கிரேக்க மொழி இன்று மிகக்குறைந்த அளவிலே பேசப்படுகின்றது. திருவள்ளுவர், மூதா அவ்வை, கபிலர், பரணர், மாமூலர் போன்றோர் பேசிய தமிழை நாம் இன்று பேசிக்கொண்டு இருக்கிறோம்        

3000 ஆண்டு பழமைவாய்ந்த நம் தமிழ் மொழியில் நமக்கு இப்பொழுது கிடைக்கின்ற முதல் இலக்கியம் என்று சங்க இலக்கியத்தை சொல்கிறோம். அதற்க்கு முன்னே நமக்கு தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல் இருக்கிறது. முதலில் நமக்கு கிடைக்கிற முதல் நூலே இலக்கண நூல். ஒரு மொழியில் எடுத்த உடனே யாரும் இலக்கணம் எழுதிவிட முடியாது. இலக்கியம் இல்லாமல் ஒரு மொழியில் யாரும் இலக்கணம் எழுதிவிட முடியாது. எள் இருந்தால் தானே எண்ணெய் கிடைக்கும். "

“எள்ளினின்று எண்ணெய் எடுப்பதுபோல்,
இலக்கியத்தினின்று எடுபடுவது இலக்கணம்”

அப்பொழுது தொல்காப்பியம் என்னும் முதல் நூல் கி.மு நான்கு () எட்டாம் நூற்றாண்டு என்று சொல்கின்றனர். இதுவே இலக்கண நூல். அப்பொழுது அதற்க்கு முன்னாடியே நம்மிடம் ஏராளமான இலக்கியங்கள் இருந்தது. ஆனால் அவைகள் நமக்கு கிடைக்கவில்லை. அவைகள் எல்லாம் அழிந்துவிட்டது.

இலக்கியங்களை நாம் இன்று சாதரணமாக நினைக்கிறோம். ஜெர்மன் நாட்டைச்   சேர்ந்த திரு ஆல்பர்ட் ஸ்செச்வர் ALBERT SCHWEITZER என்பவர், ஜெர்மன் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளை படித்துவிட்டு இந்திய சிந்தனையின் வளர்ச்சி  "Indian Thought and Its Development"   என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். இது மிகப்புகழ் பெற்ற நூல். திருக்குறள் போன்று ஒரு இலக்கிய நூல் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் தோன்றியிருக்கிறது என்றால், அம்மொழி எவ்வளவு பெரிய உயர்ந்த மொழியாக இருக்க வேண்டும் என வியக்கிறார்   ஆல்பர்ட் ஸ்செச்வர்   

நமக்கு துவக்கத்திலேயே இலக்கண நூல் கிடைத்திருக்கிறது. தொல்காப்பியத்திற்கு அடுத்ததாக நாம் பார்ப்பது சங்க இலக்கியங்கள். சங்க இலக்கியங்கள் என்று சொன்ன உடனே நினைவுக்கு வருவது சங்கம் என்ற சொல். தமிழர்களிடம் "சங்கம்" என்ற சொல்லே கிடையாது.

நாம் 2000 ஆண்டுகளுக்கு முன் சென்று பார்த்தால் இந்தியாவில் சங்கம் என்ற சொல் முதன் முதலாக பகவன் புத்தரால் தான் தொடங்கப்பட்டது. அதற்க்கு முன் சங்கம் என்ற சொல் கிடையாது. தமிழிலும் இருந்தது "அவை", "குழாம்" , "கூடல்" என்ற சொற்கள் தான் இருந்தது. அறிஞர்கள் ஆங்காங்கே கூடி பேசுவார்கள் () சிந்திப்பார்கள். ஆனால் சங்கம் என்ற சொல் கிடையாது. அது கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் சங்கம் என்ற சொல் தமிழில் வருகிறது.
மதுரை தமிழ் சங்கத்தால் தோற்றுவிக்கப்பட்ட இலக்கியங்களை தான் இன்று சங்க இலக்கியம் என்று சொல்லப்படுகிறது தமிழ் சங்கத்தால் தொகுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற இலக்கியங்கள் தான் பத்துப்பாட்டும் எட்டுத் தொகையும். பத்துப்பாட்டு என்றால் ஒவ்வொரு பாட்டும் 150 அடி, 200 அடி, 300 அடி ஏன் 700 அடி கூட இருக்கும். (Ten long Poems)

எட்டுத்தொகை என்பதுThe Eight Anthologies”ஒவ்வொரு பாட்டும் 500 பாட்டு 400 பாட்டு என்று இருக்கும். புறநானூறு என்றால் புறம்  பற்றிய நானூறு பாடல்கள். நற்றினை நானூறு என்றால் அது ஒரு பாடல்களின் தொகுப்பு. குறுந்தொகை 500 பாட்டு. இவ்வாறு collection of Bunch of Poems.    அதனால் தான் இதனை anthology தொகை என்கின்றனர். இந்தப் பாடல்களில் ஏராளமான பௌத்த கருத்துக்கள் உள்ளன.

பௌத்த தமிழ் இலக்கியம் என்றால் கி.மு மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி 19ஆம் நூற்றாண்டு வரையில்  உள்ள நூல்களை மயிலை சினீ வேங்கடசாமி  எழுதிமுடித்துவிட்டார். 20ஆம்  நூற்றாண்டில் எழுதப்படாத இருந்த பகுதியைத் தான் நான் எழுதியுள்ளேன். (பண்டித அயோத்திதாசர் முதல் இன்று வரை)

சங்க இலக்கியத்தில் நிறைய பௌத்த சிந்தனைகள் உள்ளது. நேரடியாக பௌத்த இலக்கியமாக மணிமேகலை, குண்டலகேசி இந்த இரண்டை மட்டுமே சொல்வார்கள். வீரசோழியம் என்பது இலக்கண நூல். இந்த நூலை புத்தமித்திரன்  என்பவர் எழுதியது. அனால் இந்நூலுக்கும் பௌத்தத்திற்கும் நேரடியான தொடர்பில்லை. இது தமிழ் மொழியை பற்றிய  இலக்கணத்தை பற்றி சொல்கிறது. ஆனால் இதில் எடுத்துக்காட்டுப்  பாடல்களில் புத்தர் பற்றிய செய்திகளை  சொல்கிறார்.

மணிமேகலை, குண்டலகேசி தவிர சங்க இலக்கியத்தில் பௌத்த செய்திகள் இல்லை என்று பலர் சொல்கின்றனர். ஆனால் நாம் அழமாக சென்று பார்த்தால், சைவ இலக்கியம் என்று சொல்லப்படுவது கி.பி ஆறாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் நமக்கு வருகிறது. சிவபெருமானை முழுமுதல் கடவுளாக வழிபடுபவர்கள் சைவர்கள். இன்று வரை தமிழ் என்று சொன்னாலே சைவம் என்று நினைக்கிறார்கள். ஏன் என்றால் தமிழ் இலக்கியங்களை எல்லாம் அச்சில் முதன் முதலாக கொண்டுவந்தனர்  (திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்பு கழகம்). எல்லா தமிழ் இலக்கியங்களையும் சைவ முத்திரை குத்தியே வெளியிட்டனர். அதனால் தான் நமக்கு எல்லா இலக்கியங்களும் சைவ இலக்கியமோ என்று சந்தேகம் எழுகிறது. உதாரணமாக மணிமேகலையை முதன் முதல் அச்சில் கொண்டுவருகிறார் மயிலை சண்முகம் பிள்ளை. அவர் அச்சிடும் போது மதுரை கூல வணிகர் சீத்தலை சாத்தனார் இயற்றிய மணிமேகலை என்று தான் அச்சிடுகிறார் 1891ல். ஆனால் அந்த அச்சுவந்த புத்தகம் கிடைக்கவில்லை. 1894ல் வெளிவந்த அவரின் அச்சு கிடைக்கிறது. ரோஜா முத்தையா நூலகத்தில் இந்நூல் இருக்கிறது. அப்பொழுது அச்சில் போடும் போது கூட சைவ முத்திரைகள் எல்லாம் வரவில்லை. ஆனால் . வே. சாமிநாதா ஐயர் பதிப்பிக்கும் போது "கணபதி துணை" என்று முதல் பக்கத்தில் போட்டு பதிப்பிக்கிறார். அப்பொழுது எந்த நிறுவனத்தின் மூலம் வருகிறதே அதனைச்  சார்ந்த கருத்துக்களை, பௌத்தத்தை இந்து சாயுலோடு அச்சில்  கொண்டுவருகின்றனர்.

கி.பி ஆறாம் நூற்றண்டுக்குப் பிறகு தான் சிவனை முன்னிலைபடுத்தி சைவ இலக்கியங்கள் வருகிறது. அதே காலகட்டத்தில் கி.பி ஆறாம் () ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் வைணவம் வருகிறது. வைணவம் விஷ்ணுவை முழுமுதல் கடவுளாக கொண்டது. இவர்கள் சிவனை சர்வ சாதரணமாக நினைப்பார்கள். விஷ்ணுவே பரம்பொருள் என்று நினைப்பார்கள். அந்த காலத்தில் சைவர்களும் வைணவர்களும் அவர்களுக்குள்ளே வெட்டி மடிந்தார்கள். அதற்க்குப்  பிறகு சைவர்களையும் வைணவர்களையும் ஒன்றாக சேர்த்து இந்து என்று முத்திரையை  குத்தினார்கள் வெள்ளையர்கள்.

 இந்த சைவர்களும் வைணவர்களும் எழுதியதுதான் இலக்கியம் என்பதில்லாமல் அதற்கும் முன்னாடி இருக்கிற ஐம்பெருங்காப்பியம் ஐஞ்சிறுங்காப்பியம் எல்லாம் ஜைன பௌத்த இலக்கியங்கள்அதற்க்கு சற்று மூன்னாடி சென்றால் பதினெட்டு கீழ்கணக்கு உள்ளது. ஏற்கனவே பத்துப்பாட்டு எட்டுத்தொகை என்னும் பதினெட்டு  மேல் கணக்கு இருப்பதால் இதனை பதினெட்டு  கீழ்கணக்கு என்கின்றனர்.

பதினெட்டு கீழ்கணக்குகள் எல்லாம் ஒழுக்கம் தொடர்பானவை. ஆனால் சங்க இலக்கியங்களில் காதல், வீரம் இவற்றைப்  பற்றி பேசுகிறது. காதலும் வீரமும் தான் இங்கு பாடுபொருள். இவைகளில் இறைவனுடைய புகழ் பற்றி பெரிதாக இல்லை. ஆங்காங்கே பரிபாடலில்  இலேசாக பேசப்படுகிறது. ஆனால் தனிப்பட்ட முறையில்  பெரிதாக கி.பி ஆறாம் நூற்றண்டுக்குப்பிறகு   தோன்றியதுபோல் வழிபாடுகள் இல்லை.

அந்தக்காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்த பௌத்த சிந்தனைகள் தமிழ் மொழியில் ஏராளமாக  பரவியிருந்தது. உதாரணமாக அவ்வையார் பாடலில்.

“நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே

இது தம்மபதத்திலும் இருக்கிறது. இதை சி.பி. மீனாட்சி சுந்தரம் என்ற அறிஞர்தான் முதன் முதலில் எடுத்துக்காட்டுகிறார். தம்மபதம் காலத்தால் முந்தியது. அப்பொழுது அங்கிருந்து இங்கே தமிழுக்கு வந்து இருக்க வேண்டும். அல்லது   Great men think alike மாமனிதர்கள் ஒரே மாதிரி சிந்திப்பார்கள் என்பது போல அவ்வை பாலி மொழியை பயிலாமலும்கூட எழுதியிருக்கலாம். இதில் முக்கியம் என்னவெனில் இங்கேயும்   பௌத்த சிந்தனை இருக்கிறது என்பது தான்.
இந்த அடிப்படையிலேயே அவ்வையும் இயல்பாகவே சிந்தித்து இருக்கலாம். இன்னும் பல பாடல்களில். உதாரணமாக

“இன்னா தம்ம இவ்வுலகம்
இனிய காண்க இதன் இயல்புணர்ந்தோரே !!”

இந்த உலகத்தின் இயற்க்கை என்பது இயல்பாகவே துன்பமயமாக ஒரு அதிருப்தியாகவே உள்ளது. யார் இந்த உலகத்தின் இயல்பை உணர்ந்தவரோ அவரே  மயக்கம் (அறியாமை போக்கியவர் ) தெளிந்தவர்.

மகா பண்டிதர் தமிழ் இலக்கியங்களை பகுத்துப் பார்க்கும்பொழுது இவை சைவ இலக்கியம் என்று கொள்கின்றார். இவைகளெல்லாம் பின்னாடி வந்தவைகள். அதற்க்கு முன்னாடி இருந்த இலக்கியங்களெல்லாம் பௌத்தமாக இருக்கிறதே என்றார் பண்டிதர் சங்க இலக்கியம், நாலடியார், திருக்குறள், நாலடிநானூறு   போன்றவைகளெல்லாம் பௌத்தமாக இருக்கிறது என்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். ஏனெனில் புத்தரின் போதனைகள் எல்லாம் அவ்வாறு இருக்கிறது. அதனால் தான் கணியன் பூங்குன்றன்

“ பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”

பகவன் புத்தர் இதனை தான் உள்ளச்சமநிலை  (Equanimity) என்கிறார். புத்தரின் உரைகளில் மிக முக்கியமானது, இந்த மனித சமுதாயத்திற்கு அறிவைக்கொடுக்க  வேண்டும் என்பது தான். அறிவை கொடுக்க வேண்டும் என மிக ஆழமாக தமிழ் இலக்கியங்கள் சொல்கிறது.
நாலடியாரில் ஒரு பாட்டு 

“இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
தம்மை விளக்குமால் தாம் உளராக் கேடின்றால்
எம்மை உலகத்தும் யாம் காணேம் கல்விபோல்
மம்மர் அறுக்கும் மருந்து”.

தமிழ் இலக்கியங்களில் பௌத்தக் கருத்துக்கள் மிக ஆழமாக, ஆலமரத்தின் வேர்கள் உடுறுவி மண் எங்கும் பரவி இருப்பது போல் ஆழமாக பதிந்து இருக்கிறது. பன்னிரு திருமுறைகள், நாலாயிராம் திவ்ய பிரபந்தம் என படித்து இருக்கிறேன், ஆனால் எத்தனை நூல்களில் அறிவை தேடச்சொல்கிறது. சில நூல்கள் இருக்கிறது. மாணிக்க வாசகரும் பாடியிருக்கிறார், காரைக்கால் அம்மையாரும் பாடியிருக்கிறார். ஆனால் அறிவை ஆழமாக தேடச்சொல்லவில்லை.     

ஐம்பெருங்காப்பியங்கள் ஐஞ்சிறுகாப்பியங்கங்களுக்குப் பிறகு தான், சைவ வைணவ இலக்கியங்கள் வருகிறது. இவை வரும்பொழுது பௌத்த இலக்கியங்கள் எவ்வாறு நின்று போகும்? நிதி ஆதாரங்கள் கிடைப்பதால் அரசாங்கத்தைச் சார்ந்து சைவ வைணவ இலக்கியங்கள் எழுதினர். அந்தக் காலக்கட்டத்தில் தான் நமக்கு சித்தர்கள் இலக்கியங்கள் கிடைக்கிறது. சித்தர்கள் பல்வேறு துறை அறிஞர்கள். அவர்களின் படைப்புகள் நமக்கு எளிமையாக புரியாது போனதற்கு காரணம்கூட அவர்கள் Multi-facility Person பல்வேறு துறை அறிஞர்களாக இருப்பதால் தான். சித்தர்களின் இலக்கியங்களில் ஏராளமான பௌத்த சிந்தனைகள் உள்ளது. அனாத பிண்டிகருக்கு ஆற்றிய உரையில் பகவன் புத்தர் கடவுள் என்ற தன்மை என ஒன்றும் இல்லை என மிகப்பெரிய அளவில் போதிக்கிறார். சிவா வாக்கியார் அழகாக எழுதுகிறார்.

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

அதாவது உள்ளிருக்கின்ற ஆற்றலை உணராமல் மனிதன் வெளியே திரிகிறான் என்கிறார்.

சைவ, வைணவ இலக்கியங்களிலும் பௌத்த கருத்துக்களை பலவற்றை உள்வாங்கிக்கொண்டு காப்பியங்களை இயற்றியது. அப்படித்தான் கம்பராமயணத்தைப் பார்க்கும் போது, இரமாயணம் என்னும் காப்பியத்தை கம்பர் வால்மீகி எழுதுவது போல் அல்லாமல், தமிழ் மண்ணுக்கு ஏற்றார் போல் மாற்றுகிறார் என பலர் சொல்கின்றனர். ஆனால் கம்பர் அழமாக அசுவகோசரை Ashvaghosha) படித்து இருக்கிறார். அசுவகோசர் புத்த சரிதத்தில், பகவன் புத்தரைப்  பற்றி சொல்கிறார். அறிவர் அண்ணல் அம்பேத்கரும் “புத்தரும் அவர் தம்மமும்” என்ற நூலிலும் இதனை எழுதியிருக்கிறார்.

தோள் கண்டார் தோளே கண்டார்;
தொடுகழல் கமல அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்.  

திருவள்ளுவர் மட்டுமல்ல கம்பரும் பௌத்தத்தின் சிறப்பான உவமைகள், சிறப்பான கருத்துக்களை தன் வயப்படுத்துகிறார். இங்கேயே இருந்து நாட்டை ஆள் என்று சொன்னாலும் சரி அல்லது காட்டுக்குச் செல் என்று சொன்னாலும் சரி, இராமனின் முகம் எப்படி இருந்தது என்றால்

“சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும்”

என கம்பர் எழுதுகிறார். இன்பம் என்றாலும் சரி, துன்பம் என்றலும் சரி இராமன் இரண்டையும் ஒன்றாக (சமநிலைத்தன்மை) ஏற்றுக்கொண்டார் கம்பர் கற்பனை கதா பாத்திரத்தைக்கூட உண்மையான வரலாற்று பூரமான ஒரு மேன்மையோடு படைக்கிறார் கம்பராமயணத்தில் ஏரளாமான பௌத்தக் கூறுகள் இருக்கின்றன

குன்றத்தூரில் இருந்த சேக்கிழார் தான் பெரியபுராணம் இயற்றியது. அந்த பெரிய புராணத்தில் வரும் அடியார்கள் எல்லாம் நம் அனாத பிண்டிகர் போல தானம் செய்பவர்களாக வடிவமைக்கப்படுகின்றனர். பௌத்தத்தில் இருந்த கொடையாளர்களை பார்த்து அப்படியே உருவாக்குவது போல் இருக்கிறது. அது உண்மையாகவே அவ்வாறு இருந்திருக்கலாம் (இந்து) மதத்திற்கு செய்பவர்கள்.  

ஒரு சைவர் தொ. மு. பாஸ்கர தொண்டைமான் தொ. மு. சிதம்பர ரகுநாதனின் அண்ணன் அவர் எழுதுகிறார் தமிழ் நாட்டில் பகவன் புத்தர் இருந்த இடத்தில் திருமால் நிறுத்தப்பட்டார், மகாவீரர் இருந்த இடத்தில் சிவபெருமான் நிறுத்தப்பட்டார் என்று. கோவிலில் மட்டும் ஒரு சிலையை அகற்றிவிட்டு வேறு சிலை எடுத்து வைப்பதில்லை, கருத்தியலிலும் ஜைன, பௌத்த சிந்தனைகளை அப்படியே எடுத்து சைவ வைணவ சிந்தனைகளாக வருகிறது. 

அதன் பிறகு பல்வேறு அடியாளர்கள் வருகின்றனர். தாயுமானவர், பட்டினத்தார், சிவபிரகாச சாமிகள், வடலூர் வள்ளலார் இராமலிங்க சாமிகள் வரையில். இந்த படைப்பாளிகள் எல்லோருமே ஒரு நிறுவனம் சார்ந்த, ஒரு கோவில் சார்ந்த வர்கள். தமிழ் நாட்டில் எப்பொழுதுமே கோவில் சார்ந்த அதிகார மையம் உருவாகும் போது படிநிலை அதிகாரம் உருவாகிவிடும். அதைப்  பகிர்ந்துக்கொள்ள அவர்களுக்கு நேரம் சரியாகிவிடும். எப்பொழுதும் சுரண்டப்படும் அளவிலேயே இருப்பதால் தான் தாயுமானவர் போன்றவர்கள், போரூரில் ஒரு சிதம்பரம் சாமிகள் போன்றவர்கள் கோயில் சார்ந்து சுரண்டல்கள் உருவாகும் நேரத்தில் வேறுவிதமான  மாற்று கருத்தியலை (ஆன்மிகம் தொடர்பாக) உருவாக்கினர். அதில் புகழ் பெற்றது தாயுமானவர்.

எல்லா உயிரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே

இது அப்படியே பகவன் புத்தர் சொன்னது தான்
“பவது சப்ப மங்களங்”

எல்லா உயிர்களும்  இன்புற்றிறுப்பதாக”