திங்கள், டிசம்பர் 28, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் X பட்டு

பட்டு
அமைவிடம் 
ஊர்                            : பட்டு, மாங்காடு அருகில்
வட்டம்                    : திருபெரும்புதூர் வட்டம் (Sriperumbudur Taluk)
மாவட்டம்              : காஞ்சீவரம் மாவட்டம்

பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து 6.50 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது  பட்டு என்னும் கிராமம் அல்லது போரூரில் இருந்து  5 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.
மாங்காட்டுக்கு அருகில் உள்ள பட்டு என்னும் கிராமத்தில் ஒரு விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், புத்தர் உருவச்சிலையொன்று இருந்தது. இதற்கு அருகில் 200 அடி தொலைவில் தர்மராஜா கோயிலும் இருக்கிறது. இங்கு ஆதியில், புத்தர் கோயிலை அழித்து விநாயகர் கோயிலையும் தர்மராஜா கோயிலையும் கட்டியிருக்க வேண்டும். புத்தர்கோயிலை, விநாயகர் கோயிலாகவும், தர்மராஜர் கோயிலாகவும் அமைப்பது பிற்காலத்து வழக்கம்.   
பட்டு என்னும் கிராமத்தில் விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில் இருந்த புத்தர் உருவச்சிலை சென்னைப் அருங்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது என்றுரைக்கிறார் ஆராட்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் என்ற தம் நூலில்.  
தற்பொழுது இச்சிலை  ஆசியவியல் நிறுவனத்தில் (Institute of Asian Studies) உள்ளது. அதன் முகவரி. ஆசியவியல் நிறுவனம், வீர வாஞ்சிநாதன் தெரு, (Prof. S.A. Teacher Training Institute (அ) Jeppiaar Salt pvt Ltd அருகில்)  செம்மண் செரி, சோளிங்கநல்லூர் வட்டம், காஞ்சீவரம் மாவட்டம், http://www.instituteofasianstudies.com/index.html

சிலையமைப்பு   
கை  சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிறுக்கிறது, முழு தோரணம், பீடத்தில் மூன்று சிங்கங்கள் உள்ளது, சிலை உயரம் 2 1/2 அடி உயரம் நூற்றாண்டு  கி.பி 13 ஆம் நூற்றாண்டு,


சிலையின்  பின்புறம் 


காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் IX ஆற்பாக்கம்

ஆற்பாக்கம்
ஆதிகேசவப் பெருமாள் கோயில்
அமைவிடம்
ஊர்                       : ஆற்பாக்கம்
வட்டம்               : காஞ்சிவரம் வட்டம்
மாவட்டம்         : காஞ்சிவரம் மாவட்டம்

காஞ்சிவரம்  பேருந்து நிலையத்தில் இருந்து  14.4 கி. மீ தொலைவில் உள்ளது ஆற்பாக்கம். காஞ்சிவரம் உத்திரமேரூர் வழி சாலை வழியாக ஆற்பாக்கம் மண்டபத்தில் இருந்து  1 கி.மீ தொலைவில் உள்ளது ஆதிகேசவப் பெருமாள் கோவில். இது ஜின ஆலயம் அருகில் அமைந்துள்ளது. 

புத்தர் சிலைகள் 
01. நன்னிலையில் உள்ள சிலை
02. கேட்பாரற்று முட்புதரிலிருக்கும் சிலை
03. காணாமல் போன சிலை 
01. நன்னிலையில் உள்ள சிலை 

அமைவிடம்
ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளே பின்புறம் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது 
 சிலையமைப்பு 
வலது கை காக்கும் கை, இடது கை வழங்கும் கை, (இருகரங்களும் உடைக்கப்பட்டுள்ளது) கால்கள் சமநிற்கை, ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள், கழுத்து கோடுகள் மூன்று, ஒளிவட்டம் திருவாசி தோரணம், சீவர ஆடை இடப்புற தோள் மற்றும் இரு கால்களின் பாதத்தின்மேலும் இடது கையில் இருந்து சீவர ஆடை கால்பாதம் நோக்கி தொங்கி இருக்கிறது. இரு கால்களின் முட்டிக்கு கீழே மூன்று மடிப்புகளுடன் அலை போன்று சீவர ஆடை இருக்கிறது. சிலை உயரம் 2 ½ அடி உயரம், சிலை அகலம் 1 அடி அகலம், அரசு சோழர் கால சிற்பம். 
01. இக்கோவிலுக்குள் ஆண்டாள் சன்னதி சுற்றுபுறத்தில் கைகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இது முன்பு ஆண்டாள் சன்னதியில் வழிபாடும் சிலையாக புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றுரைக்கிறார் பௌத்த ஆர்வலர் தி ராஜகோபாலன் (போதி மாதவர்  - பக் 165) 
02. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட நின்ற நிலையில் உள்ள சிலை ஜாவா தேசத்து அமைப்பில் காணப்படுகிறது என்றுரைக்கிறார் G. சேதுராமன்  (பௌத்த கலை வரலாறு . பக் 192 )  
02. கேட்பாரற்று முட்புதரிலிருக்கும் சிலை
அமைவிடம்
புத்தர் தோட்டத்தில் (அ) கோவிலின் பக்கவாட்டில் உள்ள முட்புதரில் உள்ளது 
 சிலையமைப்பு
கை நிலத்தை தொடும் கை, கால் செம்பாதி தாமரை அமர்வு, கழுத்து கோடுகள் மூன்று, சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது, சிலை உயரம் 3 ½ அடி உயரம், சிலை அகலம் 2 ½ அடி அகலம், அரசு சோழர் கால சிற்பம். தலை உடைக்கப்பட்ட நிலையில் உள்ளது
03. காணாமல் போன சிலை  

சிலையமைப்பு
கை சிந்தனை கை, கால் செம்பாதி தாமரை அமர்வு, ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள், கழுத்து கோடுகள் மூன்று, ஒளிவட்டம் இரு தோள்கள் வரை அமைந்துள்ள தோரணம், சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது, சிலை உயரம் 5 அடி உயரம், சிலை அகலம் 3 அடி அகலம், நெற்றி திலகத்துடன் காணப்படுகிறது (Urna) அரசு சோழர் கால சிற்பம். சிலை.
25.11.2003 அன்று இரவு இச்சிலை காணாமல் போனது. காவல் துறையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருடு போன புத்தர் சிலையைக் இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை.
காணாமல் போன இச்சிலையின் படம் பௌத்த ஆர்வலர் தி ராஜகோபாலன் அவர்களின் நூலில் இருந்து எடுத்தது
புத்தர் தோட்டம்

01. புத்தர் தோட்டம் பல ஏக்கர் நிலப்பகுதியை கொண்டது. இந்த புத்தபள்ளி தோட்டத்தில் தான் இன்றைய ஆதிகேசவப் பெருமாள் கோயில் (மேலே உள்ள கோவில்) எழுப்பப்பட்டுள்ளது. இப்போது புத்தர் தோட்டம் உட்பட புத்தர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள், மனைகள் ஆதிகேசவப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக உள்ளன.
இந்தப் புத்தர் தோட்டத்தைத் தவிர புத்தமன பேட்டை என்கிற இடத்தில் அகழ்வாராய்வு நடத்தினால் பல புத்தர் சிலைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சி.மீனாட்சி கூறுகிறார். (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu Pg 73)
02. ஆதிகேசவ பெருமாள் கோவில் பௌத்த பள்ளி இருந்த இடத்தில் கட்டப்பட்டு இருக்கிறதாக கருதப்படுகிறது. இங்குள்ள தோட்டம் புத்த பள்ளி தோட்டம் என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. G. சேதுராமன் - பௌத்த கலை வரலாறு.
குறிப்புகள் 
01. மேலே குறிப்பிட்ட மூன்று புத்தர் சிலைகள் ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் உள்ளே இருந்தன. அமர்ந்த நிலையில் இருந்த இரு புத்தர் சிலைககளை சிலர் ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் வெளியில் எறிந்து விட்டதாக ஆர்ப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பலர் தெரிவித்தனர். பல ஆண்டுகளாக இச்சிலைகள் இரண்டும் கோயில் அருகே கேட்பாரற்று முட்புதரில் கிடந்தன.
சில ஆண்டுகளுக்கு முன்பு இச்சிலைகளைச் சுற்றியிருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டு, சிலைகள் தெளிவாகத் தெரியும் வண்ணம் வைக்கப்பட்டிருந்தன. சிலையின் பெருமையை உணர்ந்தவர்கள் அவ்வப்போது சிலைகளைப் பார்த்தும், வணங்கியும் வந்தனர். பவுத்த ஆய்வுக்காக வருபவர்கள் பலரும் இச்சிலைகளை ஆய்வு செய்துள்ளனர் என்றுரைக்கின்றார் எழுத்தாளர்  மு.நீலகண்டன் அவர்கள்.   
02. இவ்வூரில் இராசகுளம் அருகில், (ஆற்பாக்கம் காலனி அடுத்து) உள்ள ஒரு கொல்லை மேட்டில்  சிறுவர்களால் முகம் சிதைக்கபட்ட நிலையில் சிலை  உள்ளது என பௌத்த ஆர்வலர் தி இராசகோபாலன்  போதி மாதவர் என்ற தம் நூலில் குறிப்பிட்டுள்ளார் (பக் 261). இங்கு இரண்டு முறை சென்று இராசகுளம் அருகிலும், அங்குள்ள மக்களிடம்  திரு இராஜ கோபாலன் நூலில் இருந்த புத்தர் சிலை படத்தை காண்பித்து விசாரித்தேன். அங்கிருக்கும் மக்களிடம் பார்த்தது இல்லை என்ற பதிலே கிடைத்தது.     
 03. சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை  இங்கு 2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொண்டனர். 

மேலும் விரிவாக படிக்க 
காஞ்சியில் புத்தர் தோட்டம்- மு.நீலகண்டன்
ஆற்பாக்கம் அகழாய்வு 

வெள்ளி, டிசம்பர் 18, 2015

பகவன் புத்தரின் தலைமுடி

நீண்ட தலைமுடியும், நீண்ட தாடியும், நீண்ட மீசையுடன் துறவிகள் வாழ்ந்து வந்திருந்த காலத்தில், உடலை தூய்மையாக வைத்திருக்க தலைமுடி, தாடி மீசை ஆகியவற்றை மழித்து துறவு வாழ்வை மேற்கொண்டார் பகவன் புத்தர். புத்தரும் நிகண்ட நாத புத்திரர் என்ற மகாவீரரும் தான், தங்களது சீடர்கள் தலையை மழித்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு புதிய முறையை ஏற்படுத்தினார்கள்.

இது இந்திய துறவியல் முறைக்கு முற்றிலும் புதியது மட்டுமல்ல முரண்பட்டதும் கூட ஏனெனில் இந்திய யோகிகளும், துறவிகளும் தவசீலர்களும் நீண்ட ஜடாமுடியைக் கொண்டு மரஉரி ஆடைகள் அல்லது மான், புலி போன்ற விலங்கினங்களின் தோல்களை ஆடையாக அணிந்து இருந்தினர்.

வைதிகத்தில் தலைமுடி மழித்தல் நீண்டகாலமாக ஒரு அபசகுனமாக இருந்தது. பௌத்தத்தின் மீது இருந்த வெறுப்பும் எதிர்பும் தான் அதற்க்கு காரணம். வைதிகத்தில் அர்ச்சகர் பலரும் தலைமுடியை மழித்து இருப்பர். ஆனால் தலையின் பின்புறம் ஓர் மயிர் கற்றையை விட்டு மழிப்பர். முழுமையான தலைமுடி மழிப்பு இருக்காது. வைதிக மரபில் ஆண்கள் தங்கள் இல்லத்தில் தமது மூத்தோர் இறந்தால் தான் தலைமுடியை மழிகின்றனர். பெண்கள் கணவர் இறந்தால் தான் தலைமுடியை மழிகின்றனர். முடி மழித்தலை துக்கமாக (அ) துக்கத்தை கடைபிடிக்கும் நேரமாக பார்க்கிறது வைதிகம். முடி மழித்தல் என்பது வைதிக தம்மத்திற்கு எதிரானது. 

ஆனால் அவர்கள் தற்பொழுது கோவிலில் சென்று தலைமுடி மழிப்பது பௌத்த நடைமுறையை பின்பற்றித்தான். அதிலும் பெருமாள் கோவிலுக்கு சென்று தலைமுடி மழிப்பதில்லை. திருப்பதி பாலாஜி கோவிலுக்கு சென்று தலைமுடி மழிப்பது அத்தளம் பௌத்த தளமாக இருந்ததால் அந்த நடைமுறையை பின்பற்றபடுகிறது.

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பிக்குகளும் பிக்குனிகளும் முடியை மழிக்க வேண்டும் (அ) இரண்டு அங்குலத்திற்கு மேல் வளர்ந்தால் மழிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார் பகவன் புத்தர். மீசை நீண்டு இருந்தால் பிக்குகள் மீசையை மழிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார் பகவன் புத்தர்.

01. பகவன் புத்தர் தலைமுடியுடன் காணப்பட்டார் என்பதற்க்கு அளிக்கப்படும் விளக்கங்கள்.

01.01 பகவன் புத்தரின் 32 அங்க அடையாளங்களை பற்றி குறிப்பிடும் போது புருவங்களின் மத்தியில் ஒரு வெள்ளை முடி கற்றை உள்ளது என தீக நிகாயம் (DN30)  மற்றும் மஜ்ஜிம நிகாயம் (MN91)  குறிப்பிடுகிறது.
01.02. பகவன் புத்தர் துறவு மேற்கொள்ளும் போது தமது வாள் கொண்டு தமது முடியை வெட்டினார். அவரது தலை முடியின் நீளம் இரண்டு அங்குலமாக குறைக்கப்பட்டு, வலது பக்கம் சுருண்டு அது நெருக்கமாக அவரது தலையில் இட்டிருந்தது. அதனால் மேலும் தலையை மழிக்கும் எந்த தேவையும் எழவில்லை என்று திரு ரைஸ் டேவிட்ஸ் கூறுகிறார்.
01.03. பர்மா (அ) மியன்மாரில் உள்ள  பொன்மலையில் (Golden Rock) ஒரு பெரிய பாறை ஒன்று இருக்கின்றது. இது கடல் மட்டத்தில் இருந்து 3600 சதுர அடி உயரத்தில் உள்ளது. இப்பாறை புத்தரின் தலை முடியை தாங்கியிருப்பதாக நம்பப்படுகிறது. பகவன் புத்தரின் பல வருகையில் ஒரு முறை தம் தலைமுடி ஒன்றை துறவி ஒருவருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அத்துறவி பகவன் புத்தரின் தலை முடியிழையை தம் தலை முடியில் பாதுகாப்பாக வைத்திருந்து பின்னர் அதனை அரசனுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

02. பகவன் புத்தர் தலைமுடியை மழித்து இருந்தார் என்பதற்க்கு அளிக்கப்படும் விளக்கம்
02.01. வசல சுத்தத்தில் (Vasala Sutta):ஒரு நாள் பகவன் புத்தர் உணவு ஏற்கும் பொருட்டு ஜெதவனத்தில் உள்ள சாவதி நகருக்குள் சென்றார். அப்பொழுது பாரத்வாஜர் என்ற அந்தணர் பிரம்மயாகத்தை முடித்து ஒரு நல்ல சகுணத்திற்காகக் காத்திருந்த பொழுது புத்தர் தனது இல்லத்தை நோக்கி வந்து கொண்டுருப்பதை கண்ணுற்ற அவர், புத்தரை நோக்கி கடுஞ் சொற்களில் கூறலானார்.
அங்கேயே நில்லும்!
தலையை மழித்திருக்கும் துறவியே!
அனுதாபத்திற்க்குரிய யோகியே! தீண்டத்தகாதவனே!
'Stay there, you shaveling,stay there you wretched monk, stay there you outcast.'
புத்தர் பதிலுரைத்தார் உமக்கு தெரியுமா அந்தணரே யார் ஒருவன் தீண்டத்தகாதவன் என்று? நாம் கூறுபவைகளை மனதில் நன்கு இருத்திக் கொள்வீர் என புத்தர் மனிதனின் தீய குணங்களை பகவன் புத்தர் இந்த வசல சுத்தத்தில் (Vasala Sutta)  பட்டியல் இட்டுக் காட்டுகிறார். இந்த சுத்தத்தை விரிவாக படிக்க யார் தீண்டத்தகாதவன்? பார்க்கவும் 
02.02. மஜ்ஜிமநிகாயம் 140 ஆவது சூத்திரத்தில் (புக்குசாதி)புத்த பகவான் ஒரு குயவனுடைய சாலையில் இரவைக்கழித்தார். அதே சாலையில் ஏற்கனவே அங்குவந்து சேர்ந்த ஒரு இளம் சந்நியாசியும் இருந்தார். ஆனால் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளவில்லை. இந்த வாலிபர் இல்லறத்தைத் துறந்து சந்நியாசங் கொண்டது தம்முடைய தருமத்தைப் பின்பற்றியே என்பதை புத்தர் உணர்ந்தார். தான் இன்னார் என்பதைக் காட்டிக் கொள்ளாமலே பகவன் பின்னர் சத்தியம் என்றால் என்ன என்பதைப் பற்றி மிகச் சிறந்த உபதேசத்தைப் செய்தார். பகவனுடைய அறிவுரையை கேட்டு முடியுந்தருவாயில் தனக்கு தரும போதனை செய்தவர் புத்தர் என்பதை உணர்கிறார் புக்குசாதி. மேலும் விரிவாக பார்க்க  பகவான் புத்தர் அருளிய போதனைகள் -புக்குசாதி
03. பகவன் புத்தர் தலைமுடியை மழித்து இருந்தார் என்பதற்கு பொருந்தும் காரணங்கள்
03.01அங்க அடையாளங்கள் மறுப்பதற்கான காரணங்கள்( 01.01 )
பகவன் புத்தரின் 32 அங்க அடையாளங்களை பற்றி நீண்ட பேருரையிலும் (தீக நிகாயத்தில்) (DN30) இலட்சன சுத்தத்திலும் இடைப்பட்ட பேருரையிலும் (மஜ்ஜிம நிகயத்தில்) (MN91) பிராமயு சுத்தத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
a) இந்த அங்க அடையாளங்கள் வைதிக சிந்தனை. இதனை பௌத்தத்தில் பின்னர் இணைக்கப்பட்டுள்ளது. அசித்தர் பிறந்த குழந்தையை (சித்தார்த்த கெளதமரை) பார்க்க வந்தபொழுது மகா புருஷர் அங்க அடையாளங்களை குறிப்பிடுகிறார். இவைகள் பௌத்த சிந்தனைகளுக்கு முந்தியவை.
உயர்வானவர்கள் (Maha Purusan) உடல்கூறுகள் மூலம் அறியப்படுதல் என்பது வைதிக சிந்தனை என்பதை பகவன் புத்தர் நன்கு அறிந்து இருந்தார் மேலும் இக்கருத்தை அவர் நிராகரித்தார். ஒருமுறை ஒருவர் பகவன் புத்தரிடம் வினாவினார் உயர்வான மனிதர் என்பவர் யார்? எது ஒருவரை உயர்வான மனிதர்க்குகிறது? என்று. மனதினை விடுவிப்பதினால் (Freeing the mind) தான் ஒருவர் உயர்வான மனிதராக முடியும். மனதினை விடுவிக்காமல் ஒருவரால் உயர்வடைய முடியாது என பதிலுரைத்தார். (S.V,157) தம்மவிக்கி
b) அந்த காலத்தில் இந்த இலட்சணங்களின்  மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. பக்தர்கள் புத்தருடைய பெருமை பாராட்ட வேண்டும் என்பதற்காக நடந்த முயற்சி இது. ஆதலால் இதில் தனிப்பட்ட உண்மை இருப்பதாக கருத வேண்டிய   அவசியம் இல்லை. தர்மானந்த கோசம்பி.
c) இந்த இலட்சணங்கள் புத்த ஜாதகத்து நிதானங்களில், லலிதாவிஸ்தரத்திலும், திரி பீடாக இலக்கியத்திலும் இவற்றை பற்றிய விரிவுகள் வருகின்றன.  உதாரணமாக  
திக நிகாயம் - அம்பட்ட சுத்தம்
போக்கரஸாதி என்னும் அந்தணன் இளைஞன் அம்பஷ்டன் என்பவனை பகவன் புத்தரின் உடலில் இந்த 32 இலட்சணங்கள் இருக்கின்றனவா இல்லையா என்று பார்பதற்கு அனுப்பினார். அம்பஷ்டன் 30 இலட்சணங்களை தெளிவாக பார்த்தான். ஆனால் இரண்டு இலட்சணங்கள் அவன் கண்களுக்கு புலப்படவில்லை. புத்தர் அவற்றை அவனுக்கு காண்பித்தார். (புத்த பகவன் - தர்மானந்த கோசம்பி பக்கம் 110)
பகவன் புத்தர் அம்பஷ்டனுக்கு காண்பித்ததாக சொல்லப்படுகின்ற அந்த இரண்டு  அங்க அடையாளங்கள்.  ஆண் உறுப்பு மற்றும் நீளமான நாக்கு. முதலில் ஆண் உறுப்பை காண்பித்தார் என்பதை ஏற்க முடியவில்லை. பகவன் புத்தரின் 32 அங்க அடையாளங்களை பற்றி அறிய 32 அங்க அடையாளங்கள் 
d) பகவன் புத்தர் 32 அங்க அடையாளங்கள் கொண்டிருந்தால் பகவன் புத்தரை பிறர் எளிதாக அடையாளம் கண்டிருக்க முடியும் 
அரசன் அஜாதசத்து பகவன் புத்தரை காண சென்ற பொழுது பகவன் புத்தரை அவருடன் இருந்த சீடர்களிடம் இருந்து கண்டறிய முடியவில்லை (D.I,50). 
புக்குசாதி என்ற துறவி பகவன் புத்தரை கண்ட உடனே பகவன் புத்தர் என்று அடையாளம் கண்டிருக்க முடியும். பகவனுடைய அறிவுரையை கேட்டு முடியுந்தருவாயில் தனக்கு தரும போதனை செய்தவர் புத்தர் என்பதை உணரதேவையில்லை.   
03.02 திரு ரைஸ் டேவிட்ஸ் கருத்தை மறுப்பதற்கான காரணங்கள் ( 01.02 )
a) பௌத்த சமய துறவு வாழ்க்கையில் மட்டுமல்லாமல் சமண சமய துறவு வாழ்க்கையிலும் தலைமுடி மழிப்பு என்பது முதன்மையானது. பகவன் புத்தர் மற்றும் போதி சத்துவர்களின் வடிவங்கள் மட்டுமல்லாமல் சமண சமய தீர்த்தங்கரின் சிலைகளும் தலைமுடி மழிக்கபடாமல் அமைக்கப்பட்டிருப்பதால் சிலைகளை அமைக்கும் முறையில் பகவன் புத்தரின் தலைமுடி அமைக்கப்பட்டிருக்கலாம்.
பகவன் புத்தரை தலை முடியுடன் சித்தரித்து இருப்பது வரலாற்று அடிப்படையில் அல்ல, சிற்ப மரபு படியாக இருக்கலாம் என்றுரைக்கிறார் வண. தம்மிக்கா.  வண. S தம்மிக்கா
b) பகவன் புத்தர் எதனை கடைபிடித்தாரோ அதனையே போதித்தார். எனவே தலைமுடியை மழிக்காமல், பிக்குகளுக்கு, பிக்குணிகளுக்கு தலைமுடி  மழிப்பை கட்டாயப்படுத்தி இருக்கமாட்டார்.
c) பகவன் புத்தரின் தலை முடி வலது பக்கம் சுருண்டு அது நெருக்கமாக புத்தரின் தலையில் இட்டிருந்தது  என்றுரைக்கிறார் திரு ரைஸ் டேவிட்ஸ். 
நத்தையின் சுருள் போன்று இருக்கும் தலை முடி தீர்த்தங்கரின் சிலைகளிலும் அமைத்துள்ளது. எனவே சிற்ப மரபு படியாக தலை முடி அமைக்கப்பட்டிருக்கலாம். 
மேலும் பகவன் புத்தரின் தலை முடி இரண்டு வகைகளில் அமைக்கப்பட்டுள்ளது.  ஒன்று நத்தையின் சுருள் போன்று, மற்றொண்டு நீண்ட அலை போன்று ஒரு முடிச்சுடன் காணப்படும் தலை முடி. நீண்ட அலை போன்று ஒரு முடிச்சுடன் காணப்படும் தலை முடியை பெரும்பான்மையானவர்கள்  அது சிற்ப மரபு என்று கூறுகின்றனர்.  
03.03 பொன்மலையில்  புத்தரின் தலை முடி உள்ளது என்ற கருத்தை மறுப்பதற்கான காரணங்கள் ( 01.03 )

பொன்மலையில் உள்ள பாறை பகவன் புத்தரின் தலைமுடியை தாங்கி இருப்பதால் தொங்கும் நிலையில் உள்ளது  (Hanging). இந்த நம்பிக்கை நம் முன்னோர்களின் அறிய அறிவியல் நுட்ப சிந்தனையை அடைய முடியாததால் ஏற்பட்ட நம்பிக்கையே. The Hanging Pillar of Lepakshi Temple

குறிப்புகள் 
01. பகவன் புத்தர் காலத்தில் இருந்த தீண்டமை வேறு தற்பொழுது உள்ள தீண்டமை வேறு (தலித் சமுகத்தின் மீது உள்ள தீண்டமை).

வியாழன், டிசம்பர் 17, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VIII மணிமேகலைக் கோயில்

காஞ்சீவரம் மணிமேகலைக் கோயில்
அமைவிடம் 
ஊர்                              : காஞ்சீவரம், PTVS பள்ளி அருகில்
தெரு                           : அறப்பெருஞ்செல்வி தெரு* 
வட்டம்                      : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்               : காஞ்சீவரம் மாவட்டம்

காஞ்சீவரம் மணிமேகலைக் கோயில் காஞ்சீவரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.

* காவிரிப்பூம் பட்டினத்தில் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்த அறவண அடிகள், பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் வந்து தங்கிப் பௌத்த மதத்தைப் போதித்து வந்தார் என்பதும் மணிமேகலையினால் பெறப்படுகின்றது. இன்றைக்கும், காஞ்சிபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டு. அது 'அறவணஞ்சேரி' என்பதன் மரூஉ. அறவண அடிகள் தங்கியிருந்த சேரி (சேரி = தெரு) ஆதலின், அத் தெரு இப்பெயர் பெற்றது. இப்போது அப்பெயர் அறப்பெருஞ்செல்வி தெரு எனமாற்றப்பட்டிருக்கிறது. (பௌத்தமும் தமிழும்- ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி) 

இந்த கோயில் மிகவும் பழமையானது. “ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன்” கோயில் முற்காலத்தில் மணிமேகலைக் கோயிலாக இருந்தது. மணிமேகலை என்ற அறச்செல்வியை நினைவுகூரும் வகையில் இந்தத் தெரு “அறம்பெருஞ்செல்வி” என அழைக்கப்படுகிறது. (பௌத்த ஆய்வாளர் தி.இராசாகோபாலன்  நூல் போதி மாதவர்) 

காஞ்சீவரம் மணிமேகலைக் கோயில்
ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் பழமையான இரண்டு அரச (போதி) மரங்கள் காணப் படுகின்றன. தற்போது உள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் முன்பு இருந்த மணிமேகலை, புத்த பிக்குணிகள் சிற்பங்கள் உடைக்கப்பட்டு மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள நத்தப்பேட்டை ஏரி கரையில் போட்டுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. உடைந்து சிதைவடைந்த சிற்பங்களைத் தவிர்த்து, முழு அளவில் உள்ள மணிமேகலை, புத்த பிக்குணிச்சிற்பங்களை ஏரிகரையில் திறந்த வெளியில் வைத்து இந்து முறைப்படி வணங்கி வருகிறார்கள். எழுத்தாளர்: மு.நீலகண்டன் காஞ்சியில் மணிமேகலை



மணிமேகலை கோவிலில் போத்தராஜா  என்று குறிப்பிடபட்டுள்ள இடத்தில் உள்ள சிலை தேவி சிலை.  போத்தராஜா (அ) போதிராஜா என்பது பகவன் புத்தரை குறிப்பதாகும். இக்கோவில் உள்ள தூண்களில் மணிமேகலை புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றது. அச்சிற்பங்கள் மீது நீல நிற வர்ணம் (Paint) பூசப்பட்டுள்ளதால் முகம் தெளிவாக தெரியவில்லை.
கடல் தெய்வம் மணிமேகலை வேறு காப்பியத் தலைவி மணிமேகலை  வேறு.
கடல் தெய்வம் மணிமேகலைக்கு உள்ள பிற பெயர்கள் 01. சமுத்திர மணிமேகலை 02. முது மணிமேகலை 03. தாரா தேவி. காப்பியத்தலைவி மணிமேகலைக்கு உள்ள பிற பெயர்கள் 01. அறச்செல்வி 02. அருளாழி 03. இறையருள் செல்வி 04. அன்னபூரணி என பல பெயர்களை கொண்டுள்ளாள். காஞ்சிவாரத்தில் காணப்படும் மணிமேகலை சிலை மணிமேகலா தெய்வமே தவிர காப்பிய தலைவி மணிமேகலை அல்ல.
மணிமேகலை (காப்பிய தலைவி) பல இடங்களை சுற்றி பௌத்த தொண்டை செய்து வருகையில், காஞ்சிபுரத்தில் பசிக் கொடுமை தலை விரித்து ஆடுதலை கேட்டு அங்கு சென்றாள். அவளை இளன்கிள்ளி வரவேற்றான். தான் கட்டி இருந்த புத்தர் கோவிலைக் காட்டினான். அதற்க்கு தென் மேற்கில் ஒரு சோலையில்  புத்த பிடிகையை அமைத்து, பொய்கை எடுத்து, தீவதிலைகையையும்   மணிமேகலா தெய்வத்தையும் வழிபடக்கூடிய கோவிலையும் அங்கு உண்டாக்கி பூசை, திருவிழா முதலியன அரசனை கொண்டு நடைபெறுமாறு செய்வித்து, அறம் வளர்ப்பாள் ஆயினாள் என்று உரைக்கிறார் சோழர் வரலாறு நூலின் ஆசிரியர் திரு.இராசா மாணிக்கம் Pg 104

தமிழக தொல்பொருள் ஆய்வு துறை, கல்வெட்டு ஆய்வாளர் Dr. பத்மா தெய்வ சுந்தரம் தாராதேவியே*1 மணிமேகலை தெய்வம் என்று உரைக்கிறார்.
01.மணிமேகலையில் காவியநாயகி மணிமேகலை, மணிமேகலா தெய்வத்திற்கு காஞ்சியில் சோழ மன்னன் உதவியுடன் கோவில் அமைத்தாள் எனக் கூறப்படுகின்றது
02  சுதமதி என்ற பெண்ணிடம் புகாரில் நடக்கும் இந்திர விழாவைக் காண வந்ததாக மணிமேகலை தெய்வம் கூறுகிறது, மணிமேகலா தெய்வத்தின் கோவில் காஞ்சியில்  இருந்ததால் அது அவ்வாறு காஞ்சியிலிருந்து  புகாருக்கு வந்ததாக கூறியது 
03. மணிமேகலா தெய்வம் பௌத்த சமயக் கடல் தெய்வம். சிலப்பதிகாரத்தில் கோவலன் தன் முன்னோன் ஒருவனைக்  கடல் கொந்தளிப்லிருந்து காப்பற்றிய குல தெய்வமான மணிமேகலா தெய்வத்தின் பெயரைத் தன் மகளுக்கு சூட்ட வேண்டும் என்றான். அத்தெய்வத்தை, "திரையிம் பௌவத்துத் தெய்வம்" என்கிறான் கோவலன். (மணிமேகலை துயிலெழுப்பிய காதை வரி 33)
புத்த ஜாதகக் கதைகளாகிய "சங்க ஜாதகமும்" மகாஜன ஜாதகமும்" மணிமேகலா தெய்வத்தை பற்றியும், அத்தெய்வம் கடலில் முழ்கிய வணிகர்களைக்  காப்பாற்றியது பற்றியும் கூறுகிறது. எனவே சங்க ஜாதகம் மற்றும் மகாஜன ஜாதகம் கதைகளில் கூறப்படும் மணிமேகலையும் தமிழ்க்காப்பிய மணிமேகலா தெய்வமும் ஒன்றேயாகும்.
04 தாரா தேவி வழிபாடு மத்திய இந்தியாவில் தோன்றி, கிழக்கு கடற்கரைப்  பகுதிகளில் பரவியது. கன்ஹரிம் குகையிலும், நாகார்ஜூன் கொண்டவிலும் லடாக் பகுதியிலும் காணப்பட்டு, கீழைக்  கடற்கரை ஓரங்களில் பரவலாக வழிபடப்பட்டது       
05 கடல் தெய்வமாகிய இத்தெய்வம் கடலில் தோன்றும் அபாயத்திலிருந்து பக்தர்களை காப்பாவள் என்று இத்தெய்வம் பற்றிய பாடல் ஒன்று கூறுகிறது. இந்தப் பாடல் முலம் தாரா தேவியும் மணிமேகலா தெய்வமும் ஒன்றே என்பதை அறியலாம்.  
"The Eminent sages in the world
Call me Tara, because sages
O! Lord I take my worshipers
across the ocean of various dangers"
(Ref The Sakthi cult and Tara (ed) D.C.Sircar Iconography of Tara P.117) 
தாரா தேவி வழிபாடு திபேத், நேபால், சைனா, ஜப்பான், மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு பரவியது. நேபாள சைனா அரசியர்கள் தாராதேவியின்  மறுஉரு என்றே கருதப்படுகிறார்கள். நேபாள நூல்களில் காஞ்சி தாரா தேவி: கி,பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நேபாள நூல்களில் தாரா தேவி,  
'ஒட்டியானே மங்கா கோஷ்டே வஜ்ரா பாணி'
'பீடேஸ்வரி ஒட்டியான தாரா'
எனக் கூறப்படுகின்றாள்
திரு லோகேஸ் சந்திரா என்ற அறிஞர், ஒட்டியாணம் என்பது காஞ்சிபுரம் என்றும் அங்கு மங்காவாகிய (மங்கை) தாராதேவியின் பீடம் இருந்தது என்றும், அப்பீடம் உள்ள கோட்டத்தில் வஜ்ராபாணியின் உருவம் இருந்தது என்றும் தமது ஆய்வில் குறிப்பிடுகின்றார்.  (Tamil Civilization Vol 3 No 4 Kanchi and the Cultural Efflorescence of Asia P.18) 
வஜ்ராபாணி என்றல் வஜ்ரம் என்னும் ஆயுதத்தைத் தாங்கியவன் என்று பொருள்படும். இந்த  வஜ்ராபாணி இந்திரன் ஆவான். 
சிலப்பதிரத்தில் இந்திர விழவூரெடுத்த காதையில் அடியார்க்கு நல்லார் உரை எழுதும்போழுது ஒரு மேற்கோள் படலை எடுத்தாள்கின்றார். அப்பாடலும் கச்சியில் இருந்த காமக் கோட்டத்தில் மெய்சத்தான் காவல் இருந்ததை கூறுகின்றது.
"கச்சி வளைக் கைச்சி காமக் கோட்டங்காவல்
மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் கைச்செண்டு
கம்பக் களிற்று கரிகால்   பெருவளத்தூன்
செம்பொற்கிரி திரித்த செண்டு" 
எனவே காஞ்சிபுரத்தில் உள்ள தாரா தேவியின் கோட்டத்தில் காவலாக மெய்சாத்தனாகிய இந்திரன் இருந்தான் என்ற இந்த விளக்கத்தை உறுதிபடுத்தும் வகையில் கி.பி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரியார் பாடல் வரிகள் அமைந்துள்ளன 
'கவுரி திருக் கோட்டமமர்ந்த
இந்திரர் தம்பிரானே'
 நேபாள நூலும் அடியார்க்கு நல்லாரின் மேற்கோள் பாடலும் ஒன்று போலவே அமைந்துள்ளன.
நேபாள நூல் - ஒட்டியாணம்
மேற்கோள் பாடல் - கச்சி
கச்சி என்ற ஊரே காஞ்சி என அழைக்கப்படுகின்றது. காஞ்சி என்றல் இடுப்பில் அணியும் அணி என்று பொருள். அதாவது ஒட்டியாணம் என்னும் பொருள் ஒட்டியாணம் என்ற அணி மணிமேகலை என்றும் அழைக்கப்பெறும்.
நேபாள நூல் - மங்கா கோஷ்டம்
மேற்கோள் பாடல் - காமக்கோட்டம்
நேபாள நூல் - தாரா
மேற்கோள் பாடல் - வளைக்கைச்சி (வளையல் அணிந்த கரங்களை உடையவள்)
நேபாள நூல் - வஜ்ரபாணி
மேற்கோள் பாடல் -மெய்ச்சாத்தன்
இவ்வாறு மங்காகோஷ்டம் அல்லது காமக்கோட்டமும் அதன் காவல் தெய்வம் வஜ்ரபாணி அல்லது மெய்ச்சாத்தனுமே இன்று காஞ்சிபுரத்தின் காளி கோட்டமாகிய காமாட்சியாகவும் அதை ஒட்டிய குமார கோட்டமாகவும் அமைந்துள்ளது. இன்றும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தின் மேற்குச் சுவரில் ஒரு சிறிய சன்னிதியில் சாத்தனின் உருவம் வைக்கப்பட்டு அதனருகில் அடியார்க்கு நல்லாரின்  மேற்கோள் பாடலும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. (சோழர் கால உற்பத்தி முறை - ஆய்வு வட்ட வெளியிடு- தலைப்பு காஞ்சி காமாட்சி கோயிலின் பௌத்த ஆதாரங்கள்) 
தமிழக தொல்பொருள் ஆய்வு துறை, கல்வெட்டு ஆய்வாளர் Dr. பத்மா தெய்வ சுந்தரம் அவர்கள் தாராதேவி காமாட்சியாக மாறிவிட்டதால் தாராதேவியின் சிறப்பு இயல்புகளாக கூறப்பட்டவை அனைத்தும் காமாட்சி அம்மனுக்கு ஏற்றி கூறப்பட்டு இருக்கின்றன என்றுரைக்கிறார். அவர் அளிக்கும் உதாரணங்கள் 
01. தாரா தேவியை பௌத்த நூல்கள் அகிலத்தின் இறைவியாகவும், போதிசத்துவர்கள் அனைவருக்கும் அன்னை என கூறுகின்றது. காமாட்சியை பிரம்மாண்ட புராணம் பிரம்மா, விஷ்ணு, சிவன் வணங்கும் தெய்வம்  என போற்றுகிறது.
02. தாரா தேவியை நேபாள நூல் ஒன்று " பீடேஸ்வரி*2 ஒட்டியான தாரா"  எனக் குறிப்பிடுகின்றது (Tamil civilization Vol 3 No 4 Kanchi and the Cultural Efflorescence of Asia P.18). காமாட்சியை பிரம்மாண்ட புராணம் மகா பீட பரமேஸ்வரி, சிம்மாசனேஸ்வரி  எனக் கூறுகிறது. சேக்கிழார் தம் நூலில் 'அரம்புரப்பவள் கோவிலான போக பீடம்' என்றும் 'சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோகா பீட முளதேன்றும்' கூறுகிறார்.       
03. சிலப்பதிகாரத்தில் மாதவியின்  கனவில் தோன்றிய மணிமேகலா தெய்வம் அவள் மகள் மணிமேகலையின்  எதிர்காலம் பற்றி கூறுகிறது. பிரம்மாண்ட புராணத்தில் தசரதனின் மனைவியின் கனவில் காமாட்சி தோன்றியதாக கூறப்படுகிறது. 
04. மணிமேகலையில் மணிமேகலா தெய்வம் தான் நினைத்த போது தோன்றுவதும் மறைவதுமாக உள்ள தன்மை உடையதாக வர்ணிக்கப்.பட்டுள்ளது.பிரம்மாண்ட புராணத்தில் காமாட்சியும் தான் நினைத்த போது தோன்றுவதும் மறைவதுமாக உள்ள தன்மை உடையதாக வர்ணிக்கப்.பட்டுள்ளது. (சோழர் கால உற்பத்தி முறை - ஆய்வு வட்ட வெளியிடு- தலைப்பு காஞ்சி காமாட்சி கோயிலின் பௌத்த ஆதாரங்கள்) 
தமிழக தொல்பொருள் ஆய்வு துறை, கல்வெட்டு ஆய்வாளர் Dr. பத்மா தெய்வ சுந்தரம் அவர்கள் காம கோட்டம் என்பது பௌத்தத்தின் தாக்கம் உள்ள சாதவாகன மன்னர்கள் காலத்திலேயே தோன்றிவிட்ட தேவி கோவில்களே பின்னர் அக்கோவில்களில்  மாற்றப்பட்டு விட்டதாகவும் சைவ சமயத்தின் தேவி கோவில்களும் காம கோட்டம் என்று அழக்கப்படுவதையும் விளக்குகிறார்  
01. காம கோட்டம் என்பதிலுள்ள 'காம' என்பதற்கு 'விருப்பமுள்ள', விரும்புகிற தேவி உரைகின்ற கோவில் என்று பொருள் கூறுவர். கி .பி 11ஆம் நூற்றாண்டு முதல் சிவன் கோயிலில் உள்ள தேவி சன்னதிகள் அனைத்தும் காமக் கோட்டம் என்று அழைக்கப்படுவதை பல கல்வெட்டுகள் கூறுகின்றன. 
02. சாதவாகன  மன்னர்கள். காலத்தில்  'நகர'    'நிகம'  'காம' என்று மூன்று வகை ஊர்கள் இருந்தன. இதில் காம என்பது சிறிய ஊர். இந்த ஊரில் உள்ள தேவியின் கோட்டமே காமக்கோட்டம் ஆகும்.
03. காம கோட்டம் பற்றி காலத்தால் முந்தியக் கல்வெட்டு தொண்டை மண்டல சாத்தமங்கலம் என்ற ஊரிலுள்ள இரண்டாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனின் கல்வெட்டாகும். (Damilica Vol.I (1970) P 121 சாத்தமங்கலம் கல்வெட்டுகள் இரா. நாகசாமி ). இம்மன்னன் கி.பி எட்டாம் நூற்றண்டில் வாழ்ந்தவன். இம்மன்னனது சமகாலத்தில் வாழ்ந்த சுந்தரர் தமது காஞ்சி ஒணகாந்தன்  தளி பதிகத்தில் 
'கச்சிமூதூர் காமக் கோட்ட முண்டாக நீர்போய் ஊரிடும் பிச்சைக் கொள்வதென்னோ' என சிவனைப் பார்த்து கேட்பது போலப் பாடியுள்ளார். சாதமங்கலமும் காஞ்சியும் பௌத்த சமயப் புகழ் பெற்ற இடங்களாகும். எனவே காமக்கோட்டம் என்ற பெயர் பௌத்த சமய தாராதேவி அல்லது மங்கையின்  கோட்டமே 
04. சதாவாகன மன்னர்கள் கல்வெட்டுகளில் பிராகிருத மொழியில் 'காம' என்று அழைக்கப்படும் ஊர் சம்ஸ்கிருத மொழியில்  கிராமம் என்று அழைக்கப்படும். காஞ்சி காமகோடி மடவளாகத்தில் 1962-63 ல் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை அழகாய்வு செய்த போது அங்கு கி.பி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த சாதவாகன  மன்னன் ருத்ர சதகர்ணி  என்பவனின் காசு கிடைத்தது. (தமிழ் நாட்டு தொல்லியல் அகழாய்வுகள் (1995) பக் 126 சு. இராஜவேலு , கோ.திருமூர்த்தி)
அது போல 1971-72 ல் சென்னை பல்கலைகழகத் தொல்லியல் துறை, காமாட்சி அம்மன் கோவிலின் அருகில் அகழாய்வு செய்த போது சாதவாகனா காலத்தை சேர்ந்த மண்ணாலான காசுகள் அச்சடிக்கும் அச்சுகளும், (Mould) தேய்ந்து போன காசுகளும் கிடைத்துள்ளன.  (Indian Archaeology A Review 1971-72 Page 42-43)
காமக்கோட்டம் என்று பிராகிருத மொழியில் அமைந்த தேவி கோவில் பௌத்த சமயத்தில் சமஸ்கிருதம் செல்வாக்கும் பெரும் முன்னரே ஏற்படுத்தப்பட்டு விட்டது  எனத் தெரிகிறது. தமிழ் நாட்டின் தலைநகர்களாகவும், துறைமுகங்களாகவும் விளங்கிய புகழ் பெற்ற ஊர்கள் எல்லாம் களப்பிர மன்னர் காலத்திலும் அதற்க்கு முன்னரும் சாத வாகன மன்னர்கள் கால ஊரமைப்புடன் கூடியதாகவே விளங்கியிருக்கின்றன.(சோழர் கால உற்பத்தி முறை - ஆய்வு வட்ட வெளியிடு- தலைப்பு காஞ்சி காமாட்சி கோயிலின் பௌத்த ஆதாரங்கள்)

குறிப்புகள் 
*1 தாரா என்ற சொல்லிற்கு கடலை கடத்தல் என்று பொருள். எனவே தாராவை  மணிமேகலை தெய்வத்துடன் ஒப்பிடலாம். Dr G. சேதுராமன்

*2 பிடகத்தை (திரிபிடகத்தை) அறிவித்தவள் என்பதால் பிடகறி, பிடாறி என்று பெயர் பெற்றாள் என்றுரைக்கிறார் பண்டித அயோத்திதாசர்.

மணிமேகலை கோவில் படங்கள் 

வியாழன், நவம்பர் 26, 2015

புதுவையில் புத்தர் சிலைகள்


  1. அருகன்மேடு
  2. புதுவை அருங்காட்சியம்
2.1 கருவடிக்குப்பம்
2.2 கோரிமேடு- பழைய பொதுப்பணித்துறை அலுவலகம்
2.3 கிருமாம்பாக்கம்    
1. அருகன்மேடு
அமைவிடம்
புதுவை (அ) புதுச்சேரி (அ) பாண்டிச்சேரியில் உள்ள  அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்லும் வழியில் காக்காயன் தோப்பு என்ற குக்கிராமம் உள்ளது. அதற்கு வடக்கே அரிக்கன்மேடு உள்ளது. இது புதுவை தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. புதுவை பேருந்து நிலையத்திலிருந்து வில்லியனூர் வழியாக சென்றால் 9.2 கி. மீ (அ) தேசிய நெடுஞ்சாலை 45A வழியாக சென்றால் 10.8 கி. மீ.

சிலையமைப்பு
கை சிந்தனை கை  கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் மகரத்துடன் கூடிய தோரணம் சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 4 அடி உயரம் சிலை அகலம்  2 அடி அகலம் நூற்றாண்டு  கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்



அருகன்
பகவன் புத்தருக்கு 1000 சிறப்பு பெயர்கள் உள்ளது என மணிமேகலை குறிப்பிடுகிறது. 1000 சிறப்பு பெயர்களில் ஒன்று அருகன் என்பது. பகவன் புத்தரை பகவன் என்றும் புத்தர் என்றும் வடஇந்தியாவில் அழைத்தது போன்று தென்இந்தியாவில் இந்திரர் என்றும் அருகன் என்றும் அழைத்தனர்.
11 வது நிகண்டு - தகரவெதுகை
 புத்தன் மால் அருகன் சாத்தன்  
 ரகரவெதுகை 
 தருமராசன்றான் புத்தன் சங்கனோ டருகன்றானும் 
பகவன் புத்தரை இந்திரர் என்று இந்திர விழா என்று கொண்டாடிவந்ததை மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், காசிக்கலம்பகம் முதலிய நூல்களில் இருந்து அறிந்துக்கொள்ளலாம்.

சாந்தமும் அன்பும் நிறைந்த அருமையானவர் என்பதினால் அருகன் என்று கொண்டாடினார்கள். அனைவரும் இதனை மறவாது கொண்டாடுவதற்காக அருகம் புல்லை வணங்கும் வழக்கத்தை செய்து வைத்தார்கள். பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பிறகு, உடலை எரித்து, உடல் சாம்பலை ஏழு அரசர்கள் கட்டிடங்கள் (சேதியங்கள்) கட்டிய பொழுது, அந்த உடல் சம்பல் வைத்துள்ள இடம் விளங்குவதற்காக குழவிகல்லை போல் உயர்ந்த பச்சைகளினாலும் வைரத்தினாலும் செய்து அந்த இடத்தில் ஊன்றி வைத்தார்கள். ஒவ்வொரு பௌத்தர்களும் தங்கள் இல்லங்களில் நிறைவேறும் சுபகாலங்களில் பசுவின் சாணத்தால் குழவிபோல் சிறிதாக பிடித்து அதன் பேரில் அருகன் புல்லை கிள்ளி வந்து ஊன்றி அருகனை சிந்தியுங்கள் என்று அருகம் புல்லை வணங்கும் வழக்கத்தை செய்து வைத்தனர் என்று உரைக்கிறார் பண்டித அயோத்திதாசர் (அயோத்திதாசர் சிந்தனைகள் (சமயம், இலக்கியம்) தொகுதி II பக்கம் 106.)

அருக்கன்மேடு தான்  அரிக்கமேடானது என்று உரைக்கிறார்  பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ அவர்கள்.
  1. கசாலின் பார்வையில் அரிக்கமேடு என்னும் நூலில் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் அரிக்கன்மேடு என்று பெயர் வரக்காரணம் புத்தருக்கு ‘அருக்கன்’ என்ற ஒரு பெயருமுண்டு (சூடாமணி நிகண்டு) என்று குறிப்பிடுகிறார். 
  2. அருக்கன்மேட்டின் ஒட்டிய பகுதியாகிய காக்காயன் தோப்பு முற்காலத்தில் சாக்கையன் தோப்பு என்று வழங்கப்பட்பட்டது. சாக்கியன் - சாக்கையன் வழிபாடு நிகழ்த்தப்பட்ட தோப்பு சாக்கையன் தோப்பு. சாக்கியன் என்பது புத்தரைக் குறிக்கும் பெயராகும்.
  3. இக்கால அருக்கன்மேடுதான் பண்டைக்காலத்தில் பொதுகே என்னும் பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் உண்மையை இப்பகுதியில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்ட மார்டடிமர் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.15)
  4. இப்புத்தர் சிலை புத்த விகாரையாக இருந்த காலத்தில் இக்கோயிலுக்கு பர்மா கோயில் என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்து சமயக் கலப்புடன் அப்பகுதி மக்கள் தொடக்கத்தில் பிரமன் கோயில் என்றழைத்தனர். அண்மை காலத்தில் விருமன் கோயில் என்று வழங்கப்படுகிறது. புத்தர் சிலைக்கு ருத்ராட்சம் அணிவித்து நெற்றியிலும் உடம்பிலும் திருநீறு பூசி கோயிலின் கருவறையின் மேல் புதிதாக ஸ்ரீ பிரும்மரிஷி ஆலயம் என்று வைக்கப்பட்டுள்ளது
சில அறிஞர்கள் அருக்கன்மேடு என்பதை அழிவின் மேடு (அ) ஆற்றின் கரை மேடு (அ) புத்தர் மேடு (அ) ஜைன மேடு என்று அழைக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார் D.C Ahir (Buddhisim in South India)

2. புதுவை அருங்காட்சியம்
புதுவை பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது புதுவை அருங்காட்சியம். இங்கு இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகள் காணப்படுகிறது. இச்சிலைகள் கருவடிக்குப்பம் (அ)  கரடி குப்பம் மற்றும் பழைய பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்திருந்த  கோரிமேடு என்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டது. 

2.1 கருவடிக்குப்பம்
அமைவிடம்
புதுவை பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்றால் 5.3 கி.மீ (அ) கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றால் 6.8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கருவடிக்குப்பம். இது புதுவை வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.

சிலையமைப்பு 
கை சிந்தனை கை உள்ளங்கையில் தாமரை வடிக்கப்பட்டுள்ளது கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது தோரணம் தலையை சுற்றி தோள்கள் வரை உள்ள மகர தோரணம் சிலை உயரம் 4 அடி உயரம் சிலை அகலம் 2 1/2 அடி அகலம் நூற்றாண்டு கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்

Story of Buddhism with special reference to South India (Published by the Commissioner of Museums, Govt Museum, Egmore, Chennai) என்ற நூலில் இருந்து எடுத்த படம்
தற்பொழுது தலையின்றி  புதுவை அருங்காட்சியகத்தில் காணப்படும் சிலை. 


2.2 பழைய பொதுப்பணித்துறை அலுவலகம்
அமைவிடம்
புதுவை பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 66 வழியாக சென்றால் 4.7 கி. மீ (அ) கராமராஜ் சாலை வழியாக சென்றால் 5.4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழைய பொதுப்பணித்துறை அலுவலகம் கோரிமேடு.

சிலையமைப்பு
கை சிந்தனை கை  உள்ளங்கையில் தாமரை வடிக்கப்பட்டுள்ளது கால் செம்பாதி தாமரை அமர்வு சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 5 அடி உயரம் சிலை அகலம்  3 அடி அகலம் நூற்றாண்டு  கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம். 

2.3 கிருமாம்பாக்கம்
அமைவிடம்
புதுவை பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 45A வழியாக கடலூர் செல்லும் வழியில் 13.30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கிருமாம்பாக்கம்.

சிலையமைப்பு
கிருமாம்பாக்கத்தில் ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளது. உடைத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் இப்புத்தர் தலைச்சிற்பம் 40 செ.மீ. உயரமுள்ளது. தலையின் அளவை நோக்க இச்சிலை முழுவடிவத்தில் சுமார் 120 செ.மீ அளவில் அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த உயரம் உடையதாய் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. கிருமாம்பாக்கத்தில் கிடைத்த இப்புத்தர் தலைச் சிற்பம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்பார் கே. இராஜாராம் தம் புதுவையில் அருங் காட்சியகங்கள் என்ற கட்டுரையில். (புதுச்சேரி மரபும் மாண்பும், ப. 223)



மேலும் விரிவாக பார்க்க
புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-1

அரிக்கமேடு - பெயர்க் காரணம் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி 2

அருக்கன்மேடு – அரிக்கமேடானது -புதுச்சேரியில் பௌத்தம் -பகுதி 3

சாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-4

பௌத்தம் அழிக்கப்பட்டது -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -5

அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -6

போதிகாவா? பொதுகாவா? எது பழைய புதுச்சேரி?

சரவணன்  அவர்களின் காணொளி காண
https://drive.google.com/folderview?id=0B2WMRIF-1cD3WWUzMG1aNFRGUFE&usp=sharing

செவ்வாய், நவம்பர் 17, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை

கணிகிலுப்பை

அமைவிடம் 
ஊர்                       : கணிகிலுப்பை, கீழ்நாயக்கன் பாளையம்
வட்டம்               : செய்யார் வட்டம்
மாவட்டம்         : திருவண்ணாமலை மாவட்டம்

காஞ்சிவரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கணிகிலுப்பை. காஞ்சீவரம் பேருந்து நிலையத்திலிருந்து 17.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கணிகிலுப்பை, அல்லது ஆற்பாக்கம் கிராம மண்டப அருகில் உள்ள மேனல்லூரில்  இருந்து 2 கி.மீ வில் உள்ளது கணிகிலுப்பை.

சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் திருவாசி தோரணம் சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிறுக்கிறது சிலை உயரம் 3 அடி உயரம் அகலம் 2 1/2 அடி நூற்றாண்டு கி.பி  8 ம் நூற்றண்டு  அரசு சோழர் கால சிற்பம்.

ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி
01. கணிகிலுப்பையில் உள்ள இந்த புத்தர் சிலையை 15/07/1946ல் அவ்வூரின் ஏரிக்கரையில் கண்டதாக  குறிபிட்டுள்ளார்.

02. புத்தர் கோயிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள்.* பிறகு புத்த உருவத்தை ஏரிக்கரையில் கொண்டுப்போய்ப் போட்டுவிட்டார்கள். பண்டைக் காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தவை, பிற்காலத்தில் விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

03. விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், இந்தப் புத்தர் உருவம் இருந்த கருங்கல் பீடம் அழியாமல் இருக்கிறது. அவ்வூர்த்தெருவின் எதிர்க்கோடியில் பௌத்தர்களுடைய தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட  5 அடி உயர கருங்கல் நாட்டப்பட்டிருக்கிறது.
தியான முத்திரையுடைய 1 1/2 ஒரு அடி உயர சிலை ஒன்றும்  அங்கு காணப்படுகிறது. 


* இன்று இவ்விநாயகர்  கோவிலும் பாழடைந்து உடைந்து விழும் அளவிற்குள்ளது.

திங்கள், நவம்பர் 09, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VI சிவக்காஞ்சி காவல் நிலையம்

சிவக்காஞ்சி காவல் நிலையம்

அமைவிடம்
தெரு                         : தேரடி தெரு-காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்கு அருகில்
ஊர்                            : காஞ்சீவரம்
வட்டம்                    : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்              : காஞ்சீவரம் மாவட்டம்

சிவக்காஞ்சி (அ) பெரிய காஞ்சீவரம் காவல் நிலையம், காஞ்சி ஏகாம்பர ஈசுவரர் கோயிலுக்கு அருகில் உள்ள இடத்தில் இக்காவல் நிலையத்தைக் கட்டத் தொடங்கிய காலத்தில் இச்சிலை கிடைத்தது. இச்சிலையை காவல் துறை மாநில உயர் அலுவலர் (The inspector General of Police) திரு W.I. தேவாரம் IPS அவர்கள் 1992 ஆம் ஆண்டு சிவக்காஞ்சி காவல் நிலையத்தில் நிறுவினார்.


சிலையமைப்பு
கை  சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிறுக்கிறது சிலை உயரம் 2 ½ அடி உயரம் நூற்றாண்டு  கி.பி 7ஆம் நூற்றாண்டு, 

குறிப்புகள் 
01. சோழர் காலத்து முகத்தோற்றம் இல்லாமல் ஜாவா தேச முகத்தை ஒத்துள்ளது. 

02. நூற்றாண்டு கி.பி 7ஆம்  நூற்றாண்டு   

வெள்ளி, நவம்பர் 06, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் V களகாட்டூர்

களகாட்டூர்  
அமைவிடம் 
ஊர்                              : களகாட்டூர்
வட்டம்                      : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்               : காஞ்சீவரம் மாவட்டம்

காஞ்சிபுரம் உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது களகாட்டூர் (10.4 கி.மீ). இவ்வூர் எரி அருகில் உள்ள வயல் வெளியில் மூன்று சிறிய கோவில்கள் உள்ளது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையை நோக்கியிருக்கிறது. இரண்டு கோவில்களுக்கும்  இடையில் அமைந்துள்ள பிடாரியம்மன்  கோவிலின் வாசலில் அமைந்துள்ளது இப்புத்தர் சிலை.

சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக, தலைமுடி சுருள் சுருளான முடிகள், கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் இரு தோள்கள் வரை உள்ள தோரணம் அமைக்கப்பட்டுள்ளது சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 2' 10" அடி உயரம் நூற்றாண்டு  கி.பி 10 * நூற்றாண்டு *சிலையின் தலைபகுதி உடலில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. வலது கை  (Right hand) மணிக்கட்டு அருகே உடைந்துள்ளது .  




குறிப்புகள்
01. கோவில்களை சுத்தம் செய்யும் சென்னை சேவா என்ற அமைப்பினர் 18-04-2015 அன்று களகட்டூர் சென்று அங்கிருந்த மூன்று கோவில்களை சுத்தம் செய்தனர். பகவன் புத்தர் சிலையில் இருந்த சுண்ணாம்பு கரையையும்  அகற்றினார்கள்.     

02.*அங்குள்ள அக்னீஸ்வரர் (சிவன்)  கோவிலில் உள்ள கல்வெட்டுகள் 10 ஆம் நூற்றாண்டுக்குரியது என்கின்றனர் ஆய்வாளர்கள்.  எனவே இம்முன்று கோவில்களும் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கும்.  மேலும் கி.பி 10 ஆம் நூற்றண்டு முதல் களகாட்டூர் என்று அழைக்கப்படுகிறது என்றுரைக்கிறார் காஞ்சிபுர மாவட்ட தொல்லியல் கையேடு என்ற நூலின் ஆசிரியர் இரா. சிவானந்தம் பக் 148. 

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் IV ஏனாத்தூர்

ஏனாத்தூர்  

அமைவிடம்
ஊர்                    : ஏனாத்தூர்
வழி                   : கோனேரி குப்பம்  வழி ஏனாத்தூர் சாலை
வட்டம்             : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்       : காஞ்சீவரம் மாவட்டம்
தொலைவு      : காஞ்சிபுர நகர பேருந்து நிலையத்தில் இருந்து 5 கிமீ                                                       தொலைவில் உள்ளது ஏனாத்தூர்,

பௌத்த அடையாளங்கள்  
போதி சத்துவர் சிலை
தருமசக்கரம்                 

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (அ) பெருமாள் கோவில் அருகில் போதிசத்துவர் சிலையும் அதனருகில் தருமசக்கரம் பொரித்த தூண் ஒன்றும் இருக்கிறது. போதிசத்துவர் சிலையை அம்மக்கள் புத்தர் சிலை என்றே இன்றும் அழைக்கின்றனர். பௌத்த ஆர்வலர், ஆய்வாளர் மற்றும் இலங்கையை சேர்ந்த பிக்குகள் வந்து வணங்கி சென்றுள்ளதாலும், போதி சத்துவர் பற்றி தெரியாததாலும் எளிமையாக புத்தர் என்று சொல்கின்றனர்.

புத்தருக்கும் போதி சத்துவர்க்கும் உள்ள வேறுபாடுகள் 
01.பரி பூரண மெய் ஞான நிலையை  அடைந்தவர் புத்தர். பரி பூரண மெய் ஞான நிலையை  அடைய முயற்சிப்பவர் போதி சத்துவர்.
  • புத்தர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைந்ததை குறிக்கும் சின்னங்கள் 01. ஞானமுடி 02 . தாமரையில் அமர்ந்தோ, நின்றோ கிடந்தோ இருப்பது 03. அமர்வு - செம்பாதி அல்லது முழு தாமரை அமர்வு 04. இரண்டு கைகள்.  
  • போதி சத்துவர் பரி பூரண மெய் ஞான நிலையை அடைய முயற்சிப்பதை குறிக்கும் சின்னங்கள் 01. தாமரையை தாங்கி (கையில் பிடித்து) இருப்பது 02. ஆபரணங்களை அணித்து இருப்பது  03. இரண்டு (அ) நான்கு கைகள்  
02. ஆசிரியர்
  • புத்தரின் போதனைகள் அவரின் சுய கண்டுபிடிப்புகள். புத்தருக்கு ஆசிரியர் கிடையாது. புத்தர் என்பவர் தாதாகர் அதாவது வழிகாட்டி  
  • போதி சத்துவர்களின் போதனைகள் அனைத்தும் புத்தரின் போதனைகள். எனவே  போதி சத்துவர்களின் ஆசிரியர் புத்தரே. 
03. மறுபிறப்பு 
  • புத்தர் மறுபிறப்பு அற்றவர் 
  • போதி சத்துவர் மறுபிறப்பு பெறுபவர்  

சிலையமைப்பு
நேரமர்வு (சுகானம்) - உடலை எப்பக்கம் சாய்வின்றி நேராக நிமிர்த்தி கைகளை சமச்சீருடையதாக இருக்கச்செய்து ஒரு காலை இருக்கையில் கிடத்தி, மறுகாலை தொங்கவிட்டு அமைந்திருக்கிறது.
கைகள் முழங்கையின்றி  உள்ளது. நான்கு கைகள் கொண்ட சிலை.
கால்கள் இடது கால் (Left Leg) செம்பாதி தாமரை அமர்வு போன்றும் மடித்தும், வலது கால்  மடிக்காமல் தொங்கிய நிலை போன்று சிறிய தாமரையின்  மீது இருக்கும்.
அணிகலன்கள்
  • இடுப்பை சுற்றி அணிகலன்
  • கழுத்து  அணிகலன்கள்
  • இருகரங்களிலும் கைப்பட்டை (Amrs Band) 
  • தோள்பட்டையில் இருந்து  தொடை வரை தொங்கும் ஆபரணம்
  • தலை கிரீடத்தில் இருந்து இரு தோள்கள் மீது படர்ந்து இருக்கும் ஆபரண அணிகலன்
  • தொப்புள் மேல் அணிகலன்
மூக்கு - மூக்கு சிதைந்துள்ளது
சிலை உயரம் 3 அடி உயரம் சிலை. ஒரு அடி ஆழம் வரை மண்ணில் புதைந்து இருக்கலாம் என்பதால் சிலையின்  மொத்த உயரம் 4 அடியாக இருக்கும்.

சிலையின்  முழங்கை மற்றும் தலை பகுதி எப்பொழுது உடைந்தது என்று தெரியவில்லை. 50து  வயது முதிர்ந்த அவ்வூரை சேர்ந்த ஒருவர், அவர் அறிந்தவரை சிலை கை மற்றும் தலை பகுதி சிறிது உடைந்து இருப்பதாக  கூறினார்.

தருமசக்கரம்
புத்தர் தமது முதல் போதனைகளை சாரநாத்தில் (உத்திரபிரதேசம்) ஐவருக்கு அளித்தார். இவ்வுரைக்கு தம்ம சகர பரிவர்த்தன (அ) சக்கரத்தை சுழற்றுதல் என்று பெயர். நான்கு, எட்டு, பன்னிரண்டு மற்றும் இருபத்தி நான்கு ஆரங்களை கொண்ட தம்மச்சக்கரம் இருக்கிறது. 
  • நான்கு ஆரங்களை கொண்ட தம்மச் சக்கரம் நான்கு உயர்ந்த உண்மைகளை குறிப்பிடுகிறது
  • எட்டு   ஆரங்களை கொண்ட தம்மச் சக்கரம் ஆரிய அட்டாங்க மார்க்கம் என்னும் எண் முறை வழியை (அ) எட்டு வித ஒழுக்கத்தை குறிப்பிடுகிறது
  • பன்னிரண்டு ஆரங்களை கொண்ட தம்மச் சக்கரம் பன்னிரண்டு நிதானங்களை (காரண காரியம் (அ)  பன்னிரு சார்பு) குறிப்பிடுகிறது.
  • இருபத்தி நான்கு ஆரங்ளை கொண்ட தம்மச் சக்கரம் வாழ்க்கை சுழற்சியை குறிப்பிடுகிறது. இந்த 24 ஆரங்களில் பன்னிரண்டு ஆரங்கள், தோற்ற வரிசை (அ) பிறப்பிற்கு காரணமான பன்னிரண்டு சார்புளையும், மீதம் இருக்கிற பன்னிரண்டு ஆரங்கள் மறைவு வரிசை (அ) இன்பத்திற்கு காரணமான பன்னிரண்டு சார்புளையும் குறிப்பிடுகிறது. 
தமிழகத்தில் காணப்படும் தம்ம சக்கரம் 
  • கணிகிலுப்பை -கீழ்நாயக்கன் பாளையம், (காஞ்சீவரம் பேருந்து நிலையத்திலிருந்து வலத்தோட்டம் செல்லும் வழியில் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது,) வெம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம் 
  • கூவம் - திருவள்ளூர் மாவட்டம் 
  • திருச்சி   
  •  ஏனாத்தூர் , காஞ்சீவரம் வட்டம், காஞ்சீவரம் மாவட்டம் 

ஏனாத்தூர் தருமசக்கரம் 
  1. எட்டு ஆரங்களை கொண்டுள்ளது. 
  2. தம்ம சக்கரத்தின் இருபுறமும் அம்பும் வில்லும் காணப்படுகிறது 
  3. 1 1/2 அடி மண் மேலும், ஒரு அடி மண் அடியிலும் புதைந்துள்ளது
  4. சக்கரத்தின் அடியில் உள்ள எழுத்தினை பார்க்கும் பொழுது 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்


இச்சிற்றுர் உள்ள ஒரு தெருவின் முடிவில் ஒரு தீர்த்தங்கரர் சிலையும் (வர்த்தமான மகாவீரர்) உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக மண் எடுக்கப்பட்ட போது, இந்த தீர்த்தங்கரர் சிலையை கண்டு எடுத்தனர். 

வியாழன், நவம்பர் 05, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் III கோனேரிகுப்பம்

கோனேரிகுப்பம் புத்தர்  
அமைவிடம்
ஊர்                                  :கோனேரி குப்பம்
அமைவிடம்               : காஞ்சீவரம் பூக்கடை சத்திரத்தில் இருந்து ஏனாத்தூர்
                                            செல்லும் சாலையில் சாக்கிய நாயனார் கோவில் (அ)                                                     மரியா அக்ஸ்லியம் பெண்கள் மேல் நிலை பள்ளி                                                            அருகில்  உள்ளது.
வட்டம்                         காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்                   காஞ்சீவரம் வட்டம்

பௌத்த அடையாளங்கள்
   ஐந்து அடி உயர தூண்                            
   உடல் பகுதியின்றி உள்ள புத்தர் சிலை    
   போதி தர்மாவின் ஓவியம்            

ஐந்து அடி உயர தூண்
25 டிசம்பர் 1988ல் ஐந்து அடி உயர தூண் ஒன்று கிடைத்தது. திரு N. சந்திர சேகர் அவர்கள் ஒரு அடி ஆழத்தில் அத்தூணை மண்ணில் புதைத்து 4 அடி வெளியே தெரியும் படி அங்கே நிறுவினார். தற்பொழுது அத்தூண் 4 1/4 அடி மண்ணில் புதைந்து 3/4 அடி மட்டும் வெளியே தெரியும் படி உள்ளது. இத்தூணில் மூன்று பக்கங்களில் மூன்று புடைப்பு சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. பகவன் புத்தரின் புடைப்பு சிற்பம் ஒன்றும் போதி சத்துவர்களின்  புடைப்பு சிற்பம் இரண்டும் காணப்படுகிறது.

பகவன் புத்தர் சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் கால்கள் இரண்டும் சிதைந்து காணப்படுகிறது ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிக்கிறது சிலை உயரம் 3/4 அடி உயரம் தோரணம் தலையை சுற்றி தோல் வரை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. 

போதி சத்துவர்களின் சிலையமைப்பு
கை சிந்தனை கை கால்கள் கால்கள் இரண்டும் சிதைந்து காணப்படுகிறது ஞான முடி பகவன் புத்தருக்கு மட்டுமே ஞான முடி காணப்படும், போதி சத்துவர்ருக்கு காணப்படாது.அணிகலன்கள் கழுத்து அட்டிகைகள் (Necklace) மூன்று உள்ளது. இடுப்பை சுற்றி அணிகலன் உள்ளது. சிலை உயரம் 3/4 அடி உயரம் தோரணம் தலையை சுற்றி தோல் வரை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. தோரணம் முழுமையாக  காணப்படவில்லை அது உடைந்து இருக்கலாம்.


கை வலது கை தாமரை தண்டை பிடித்து கொண்டு இருக்கிறது அணிகலன்கள் கழுத்தில் அட்டிகைகள் (Necklace)  உள்ளது. ஒட்டியாணம் காணப்படுகிறது. சிலை உயரம் 3/4 அடி உயரம் தோரணம் தலையை சுற்றி தோல் வரை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. வலது பக்கம் தம்ம சக்கரம் உள்ளது.  

உடல் பகுதியின்றி உள்ள புத்தர் சிலை
உடல் பகுதியின்றி தலையுடன் பகவன் புத்தர் சிலை ஒன்றும் இங்கு கிடைத்தது. மூன்று வருடங்களுக்கு முன் உடற் பகுதி ஒன்றை உருவாக்கி புத்தரின் தலைபகுதியை இணைத்துள்ளனர். தலைபகுதியை பளபளபாக்க நன்கு தேய்த்து மெருகேற்றப்பட்டது. அதனால் புத்தர் தலை அதன் அழகை இழந்து விட்டது. மேலும் திறமை வாய்ந்த சிற்ப கலைஞரிடம் பணியை கொடுக்கப்படவில்லை. வண்ண புச்சு சேர்ந்து பகவன் புத்தர் சிலையை மேலும் கெடுத்து விட்டது. மேலே உள்ள படத்தின் இடப்பக்கம் (Left side ) அமைந்துள்ள சிலையை ( கற்பிக்கும் கை) பார்க்கவும். 

போதி தர்மாவின் ஓவியம்
கொரிய நாட்டை சார்ந்த ஒருவர் அளித்த போதி தர்மாவின் ஓவியம் ஒன்று சுவற்றில் உள்ளது.


காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் II கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோயில்

கருக்கில் அமர்ந்தாள் அம்மன் கோயில்
அமைவிடம்
இடம்                          :பிள்ளையார் பாளையம்
ஊர்                             : காஞ்சீவரம்
வட்டம்                     : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்               : காஞ்சீவரம் மாவட்டம்

பௌத்த அடையாளங்கள்  
புத்தர் சிலைகள்                   : 02 
மணிமேகலை சிலை         : 01
தார தேவி சிலை                 : 01
பழமையான போதி மரம்  : 02

இன்று காமாட்சி அம்மன் சந்நிதி தெரு என்னும் பெயர் கொண்டுள்ள தெரு "புத்தர் கோவில் தெரு" என்று வழங்கப்பெற்றது. அத்தெருவின் இப்பண்டையப் பெயரைப் பனை ஓலைப் பத்திரங்களில் பார்த்த முதியவர் திருவாளர்.  பால கிருட்டிண முதலியார் இன்றும் அத்தெருவில் இருக்கிறார். 30 ஆண்டுகட்கும் அவரது இல்லத்திற்கு எதிரில் நான்கைந்து வீடுகளுக்கு பின்னாள் உள்ள தோட்டத்தில் புத்தர் சிலைகள் இரண்டு கிடைத்தன. இன்று அவை கருக்கினில் அமர்ந்தால் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது. அச்சிலைகள் இருந்த இடம் பண்டைய காலத்தில் புத்தர் கோவிலாக இருந்தது. புத்தர் கோவில் பகுதிகளை கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டது என்றுரைக்கிறார் "பல்லவர் வரலாறு" (1944) என்ற நூலில் ஆசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கம்.

இதே கருத்தை  மயிலை சினி வேங்கடசாமி அவர்களும் கூறுகிறார். கருக்கினில் அமர்ந்தாள் கோயிலில் இரண்டு புத்தச்சிலைகள் முன்பு காஞ்சிமேட்டுத் தெருவில் இருந்தன என்று. 


சிலையமைப்பு
கை                                      : நிலத்தை தொடும் கை
கால்                                    : செம்பாதி தாமரை அமர்வு
ஞான முடி                        : தீப்பிழம்பாக
தலைமுடி                         : சுருள் சுருளான முடிகள்
கழுத்து கோடுகள்         : மூன்று
ஒளிவட்டம்                      : தோல்கள்  வரை அமைந்துள்ள தோரணம்
சீவர ஆடை                      : இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால்                                                                               போர்த்தப்பட்டிருக்கிறது
சிலை உயரம்                  :  3 அடி உயரம்
நூற்றாண்டு                     : கி.பி 7ஆம் நூற்றாண்டு
அரசு                                    : சோழர் கால சிற்பம். 


கை                                     : சிந்தனை கை
கால்                                   : செம்பாதி தாமரை அமர்வு
ஞான முடி                       : தீப்பிழம்பாக
தலைமுடி                       : சுருள் சுருளான முடிகள்
கழுத்து கோடுகள்      : மூன்று
ஒளிவட்டம்                    : தோல்கள் வரை அரை  வட்ட வடிவமாகவும்,                                                                      தோல்களிலிருந்து இருபுறமும் தூண்களை                                                                          கொண்டுள்ளது தோரணம்
சீவர ஆடை                     : இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால்                                                                              போர்த்தப்பட்டிருக்கிறது
சிலை உயரம்                  : 2’ 6” உயரம்
நூற்றாண்டு                    : கி.பி 7ஆம்  நூற்றாண்டு
அரசு                                    : சோழர் கால சிற்பம். 


மணிமேகலை சிலை: 
மார்பு வரை உள்ள ஒரு அடி உயர சிலை, கழுத்தணி (Neckless) மற்றும் Chain னுடன் காணப்படுகிறது. காதுகள் நீண்டு இருக்கிறது. முக்கின் நுனி சிறிது சிதைந்து உள்ளது.