வெள்ளி, அக்டோபர் 28, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVIII காஞ்சி கொடைபீகாருக்கு காஞ்சியின்  கொடை 

பீகார் என்ற ஒரு மாநிலத்தின் சொல்லே விகார் என்ற சொல்லின் மருவு. காஞ்சீவரம் (Conjeevaram) என்ற சொல்லும் சீவரம் என்ற சொல்லின் மருவுதான். காஞ்சீவரத்தில் இன்றும் பழைய சீவரம் என்ற இடம் இருக்கிறது.

சீவரம் என்பது பௌத்த துறவிகள் (பிக்கு மற்றும் பிக்குணி) அணியும் ஆடை. சீவரம் மூன்று ஆடைகளை கொண்டது.
ஒன்று உள்ளாடை (Antarvasaka)
மற்றோன்று மேலாடை (UttaraSanga)
மூன்றாவது  வெளியாடை (Sanghati). 
இந்த மூன்று சீவர ஆடையை திரிசீவரம் என்பவர். இந்த திரி சீவரம் என்ற சொல் தான் மருவி திருச்சி (திரிசீ-  திரி சீவர பள்ளி) யாக மாறியிருக்கலாம் என்பது என்கருத்து. 01. திரி 02. சீவரம் 03.பள்ளி இந்த சொற்கள் தமிழ் சொற்கள் இல்லை. இவை பாலி மொழி சொற்கள். இது மேலும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது          


குர்கிஹார்க்கு  காஞ்சியின்  கொடை 
குர்கிஹார் ஒரு மலை கிராமம். இது கயா மாவட்டத்தில் உள்ளது. பண்டைக் காலத்தில் குக்குட பாதகிரி என்னும் பௌத்த இடமாக இருந்தது. இது கயாவில் இருந்து 16 மைல் தொலைவில் அமைந்துள்ளது.

சீன அறிஞர்கள் பாகியான் மற்றும் யவங் சுவாங் இங்கு வந்து இருக்கின்றனர். ஜெனரல் டிட்டோ (Ditto) இங்கு இரண்டு முறை வந்திருக்கின்றார். அவர் இங்கிருக்கும் தொல்பொருள்களை முதன் முதல் (1847) கவனத்திற்கு கொண்டுவந்தார். இரண்டாவது முறை இந்திய தொல்பொருள் துறையை உருவாக்கிய ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்காம் அவருடன் இணைந்து அகழாய்வு குழிகள் எடுத்து  பல பௌத்த சிற்பங்களை வெளி கொண்டுவந்தார்.  ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்காமும் இங்கு இரண்டு முறை வந்திருக்கின்றார் (1861-62  மற்றும் 1879-80).

திடீர் என 1930 ஆம் ஆண்டு இக்கிராமத்திலிருந்து 226 வெண்கல தொல்பொருள்களும் 5 பிற பொருள்களும் குர்கிகரில் உள்ள ஒரு அறையில் இருந்து மீட்டு எடுக்கப்பட்டு வெளி கொண்டுவந்து உலகறிய செய்யப்பட்டது. அவைகள் புத்தர், அவலோகித்தர், லோகநாதர், தாரா தேவி, மணி, குவி மாடம், பீடம். இவைகள் அனைத்தும் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. பெரும்பாலும் வெண்கலத்தால் ஆனவை. ஒரு சில மட்டும் தங்கம், வெள்ளி மற்றும் செப்பு பூசப்பட்டிருந்தது. இவைகள் அனைத்தும் பாட்னா பொருட்காட்சியாகத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது. 231ல் 93ல் நாகரி எழுத்து பொறிக்கப்பட்டு இருந்தது. .

இந்த குறிப்பில் இருந்து கஞ்சிவரத்தை சேர்ந்த பௌத்த பிக்குகள் கொடையாக அளிக்கப்பட்ட வெண்கல சிலைகளும், பீடங்களும், மணிகளும் தெரிய வந்திருக்கிறது. பல எழுத்துக்கள் தெளிவாக இல்லை. சில இரண்டு அல்லது நான்கு எழுத்துக்கள் மட்டுமே இருக்கிறது. எனவே அவ் எழுத்துக்களை கொண்டு கொடை அளித்தவர் மற்றும் எங்கிருந்து அளிக்கப்பட்டது என அறிய முடியவில்லை.

கொடை அளித்த பௌத்த பிக்குகளின் பெயர்களும் கொடையின் விவரங்களும்.

01. அம்ருதவர்மன்
நாகரி எழுத்தில் இருந்து அறியப்படும் செய்தி : இவர் அகிலா (Akkila) என்று தொடங்கும் ஒரு கிராமத்தில் பிறந்தார். தலைமை பொருளாளர் அவதத்த நாகாவை (Avadata Naga) போன்று பிரபலமானவர் இவர் காஞ்சியில் நன்கு அறியப்பட்டவர்
கொடை: நின்ற நிலையில் உள்ள புத்தர் சிலை, காக்கும் கை பஞ்ச ரத பீடத்தின் மேல் இரு தாமரை பீடம் (Double Lotus Pedestal). நெற்றி திலகம், ஞான முடிமீது சுடர் - உயரம் : மூன்று அடி பத்து அங்குலம் ( 3' 10") - அகலம் ஒரு அடி ஏழு அங்குலம் ( 1' 7") - நூற்றாண்டு : பதினோராம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9589 - நூல் 
குறிப்பு S.No 6 பக்கம் .No 126

02. புத்தவர்மன் 03. தர்மவர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஒரு அடி அரை அங்குலம் (1' 1/2") - அகலம் ஒன்பது அங்குலம் ( 9") - தொல்பொருள் பதிவு எண் : 9597 - நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு -  நூல்  குறிப்பு  S.No 20 பக்கம் 130
04. தூதசிம்மன் 
கொடை:நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை - உயரம் : ஐந்து முக்கால் அங்குலம் ( 5 3/4") - அகலம் : இரண்டு கால் அங்குலம் ( 2 1/4") - நூற்றாண்டு : பத்தாம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9602 - நூல்  குறிப்பு : S.No 114 பக்கம் 146
05. பிரபாகரசிம்மன்
(A) கொடை:அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை - ஒரு தாமரை பீடம் - மூன்று ரத பீடம் - உயரம் : எட்டு அங்குலம் ( 8" ) - அகலம் : மூன்று அங்குலம் ( 3") - நூற்றாண்டு பத்தாம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9637 - நூல்  குறிப்பு : S.No 50 பக்கம் 135

(B) கொடை:நின்ற நிலையில் உள்ள தாரா தேவி சிலை - உயரம் : ஆறு அங்குலம் ( 6" ) - அகலம் : இரண்டு கால் அங்குலம் ( 2 1/4") -நூற்றாண்டு : பத்தாம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9604 -  நூல்  குறிப்பு - : S.No 115 பக்கம்146
06. மஞ்சுஸ்ரீ வர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள அவலோகித்தர் (அ) லோகநாதர் சிலை - உயரம் : பன்னிரண்டு அரை அங்குலம் ( 12 1/2" ) - அகலம் : ஏழரை அங்குலம் ( 7 1/2") - நூற்றாண்டு : பதினோராம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9618 -  நூல்  குறிப்பு : S.No 79 பக்கம் 139

(B) கொடை: நின்ற நிலையில் உள்ள அவலோகித்தர் (அ) லோகநாதர் சிலை - உயரம் : ஒரு அடி ஒரு அங்குலாம் ( 1' 1" ) அகலம் ஆறரை அங்குலம் ( 6 1/2") - நூற்றாண்டு : பதினோராம் நூற்றாண்டு - தொல்பொருள் பதிவு எண் : 9619 - நூல்  குறிப்பு : S.No 79 பக்கம் 139
07. வீரியவர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் :பத்து அங்குலம் (10") - அகலம் ஐந்து அங்குலம் ( 5") - தொல்பொருள் பதிவு எண் : 9633 - பிற பொருள் ஒளிவட்டம் (தனியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது) - உயரம் : ஒன்பது அங்குலம் (9") - அகலம் : ஐந்து அங்குலம் (5") - தொல்பொருள் பதிவு எண் :9725 - நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 17 பக்கம் 129

(B)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, அறவழி முத்திரை - உயரம் : ஏழு அங்குலம் (7") - அகலம் நான்கு அங்குலம் ( 4") - தொல்பொருள் பதிவு எண் : 9634 - பிற பொருள் ஒளிவட்டம் (தனியாக பிரிக்கப்பட்டு இருக்கிறது) - உயரம் : எட்டு அங்குலம் (8") - அகலம் : நான்கு அங்குலம் (4") - தொல்பொருள் பதிவு எண் :9810 - நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு  : S.No 14 பக்கம் 128
08.  புத்தவர்மன்
(A)கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஐந்தரை அங்குலம் (5 1/2") - அகலம் மூன்றே கால் அங்குலம் ( 3 1/4 ") - தொல்பொருள் பதிவு எண் : 9775 - - நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு  : S.No 11 பக்கம்128

(B) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9650 நூல்  குறிப்பு: S.No 207 பக்கம் 159
09  புத்த ஞானர் 10. சுகசுகர் 
கொடை: பீடம் - அளவு : 11" x 5 1/2" x 8" தொல்பொருள் பதிவு எண்: 9728 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 166  பக்கம்156
11. விரோசன சிம்ம ஸ்தவிரர் 
கொடை: பீடம் - அளவு : 13" x 7" x 7 1/2" தொல்பொருள் பதிவு எண்: 9729 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 164 பக்கம் 155 -
இவர் காஞ்சிக்கு அருகில் உள்ள நரசிம்ம சதுர்வேதி மங்கலம் என்னும் ஊரில் பிராமண குடும்பத்தில், பிறந்து, வேத வேதாந்தங்களைக் கற்றுணர்ந்து, பின்னர் பிரஞ்ஞசிம்மர் அன்னும் பௌத்தகுருவின் சீடராகி விரோசன சிம்ம ஸ்தவிரர் என்னும் துறவுபெயர் கொண்டவர்
12. நாகேந்திரவர்மன்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஒரு அடி ஒரு அங்குலம் (1' 1") - அகலம் ஏழு அங்குலம் (7")- தொல்பொருள் பதிவு எண்: 9789 -நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு  : S.No 15 பக்கம் 129
13.  சந்திரவர்மன்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : ஒன்பதே கால் அங்குலம் (9 1/4") - அகலம் ஐந்து அங்குலம் (5")- தொல்பொருள் பதிவு எண்: 9759 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 21 பக்கம் 130
14.  ரகுலவர்மன்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை - உயரம் : எட்டரை கால் அங்குலம் (8 1/2") - அகலம் நான்கரை அங்குலம் (4 1/2")- தொல்பொருள் பதிவு எண்: 9752 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 49 பக்கம் 134
15.  வீரவர்மர்
கொடை: அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை, நிலத்தை தொடும் முத்திரை- உயரம்: பத்து அங்குலம் (10 ") - அகலம் நான்கு அங்குலம் (4")- தொல்பொருள் பதிவு எண்: 9632 -நூற்றாண்டு: ஒன்பதாம் நூற்றாண்டு - நூல்  குறிப்பு : S.No 9 பக்கம் 127
16.  அவலோகித சிம்மர்
கொடை: பீடம் - அளவு : 2 1/2" x 4" தொல்பொருள் பதிவு எண்: 9806 -நூற்றாண்டு: பத்தாம் நூற்றாண்டு -  நூல்  குறிப்பு : S.No 165 பக்கம் 156
 இவர் கேரள தேசத்திலிருந்து வந்து காஞ்சியில் தங்கியவர்
17.  புத்தவர்மன் (கந்த குடி )
(1) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9648 நூல்  குறிப்பு: S.No 205 பக்கம் 159
(2) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9649 நூல்  குறிப்பு: S.No 206 பக்கம்159
(3) பிற பொருள்: மணி - தொல்பொருள் பதிவு எண் :9651 நூல்  குறிப்பு : S.No 208 பக்கம் 159
இவர் காஞ்சியில் இருந்த கந்தகுடியில் இருந்தவர். புத்தர் கோயிலுக்குக் கந்தகுடி என்பது பெயர்.


~*~
01. இவர்களில் வர்மர் என்னும் பெயருடையவர்கள் பல்லவ அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் .என்றுரைக்கிறார் தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி.

02. நூல் குறிப்பு பக்கம் Patna Museum Catalogue of Antiquities (1965)


நூல் குறிப்புகள்04. பௌத்தமும் தமிழும்  தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி

சனி, அக்டோபர் 15, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVII சாக்கிய நாயனார் கோவில்

சாக்கிய நாயனர்  கோவில்  (அ) திருமிகு வீரட்டானேசுரர்   கோவில்


அமைவிடம் 
ஊர்                            : கோனேரி குப்பம்
வட்டம்                    : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்              : காஞ்சீவரம் மாவட்டம்
சாக்கிய நாயனர்  கோவில் காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் கோனேரிகுப்பத்தில் உள்ளது. மரியா அக்ஸ்லியம் பெண்கள் மேல் நிலை பள்ளி அருகில் உள்ளது இக்கோவில்.

பௌத்த அடையாளங்கள் 
மிகப் பழமையான (பருமனில் பெருத்து) போதி மரம் ஒன்று இங்குள்ளது. இக்கோயில் உள்ளே புத்தரது பாதபீடிகை மற்றும் சாக்கிய நாயனார் படிமம் (அஸ்தி) உள்ளது.


டாக்டர் ம. இராசமாணிக்கனார் 
நம்பியாண்டார் நம்பிக்கு ( கி. பி 985 - 1014) ஏறத்தாழ 100 ஆண்டுகள் பின் வந்த சேக்கிழார் (கி. பி 1113 - 1150) பெரிய புராணத்தை எழுதினார். அப்பர் மற்றும் சம்பந்தர்க்கு காலத்திற்கு முற்பட்டவர் சாக்கிய நாயனார். சாக்கிய நாயனார் காலம் கி, பி 400 - 600. சாக்கிய நாயனார் காஞ்சிக்கு அருகில் சங்க மங்கை என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வேளாளர் மரபில் தோன்றினார்.  காஞ்சிக்கு சென்று பல சமயங்களை ஆய்வு செய்தவர். சாக்கியர் என்பது காரணப்பெயர்.  பௌத்த வேடத்துடன் சிவலிங்க வழிபாடு செய்தவர். சிவனை கல் எறிந்து வழிபட்டார்.  ( நூல் பெரிய புராண ஆராய்ச்சி )  

 எழுத்தாளர் மு.நீலகண்டன் 
பௌத்தம் காஞ்சியில் பலமான செல்வாக்குடனும், சிறப்புடனும் இருந்தமையால் வெளிப் படையாகப் பௌத்த சமயத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர சாக்கியரால் இயலாமற்போயிற்று. இதனால், பௌத்தத் துறவிக்கோலத்தை மாற்றாமல் ஒரு சிவலிங்கத்தைச் சிறுகல்லால் எறிந்து பூசை செய்து வந்தார். 

அறிஞர் அண்ணாவின்  வினாவும்  விளக்கமும்
01. சாக்கியர், முதலில் எந்தச் சமயவழி நின்றார்?
சாக்கியர் முதலில் எந்தச் சமயவழி நின்றார் என்பதனை அறிய புராணத்தில் எவ்வித சான்றும் இல்லை. சாக்கியர் வேளாளர் மரபிலே தோன்றியவர் என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது. இதனைக்கொண்டு சாக்கியர், முதலில் எந்தச் சமயத்தைச் சார்ந்தவர் என்று எப்படிக் கூறமுடியும்? 
பெரியபுராணம் எழுதுவதற்கு முதல் நூல் வகுத்துக் கொடுத்த நம்பியாண்டார் நம்பிக்கும், பெரியபுராணத்தை எழுதிய சேக்கிழாருக்கும் சாக்கியர், முதலில் எந்தச் சமயத்தை சேர்ந்தவர் என்று தெரியாதா அல்லது தெரிந்தும் மறைத்தார்களா?
02. சாக்கியர்  என்ன ஆராய்ச்சி செய்தார்?
சாக்கியர் எந்தச் சமயம் உண்மையான சமயம் என்று ஆய்வு செய்தாரா அல்லது  துன்பங்களை நீக்கக்கூடிய சமயம் எது என்று ஆய்வு செய்தாரா?
03. சாக்கியருக்குத் துன்பங்களை நீக்கிக் கொள்வதற்கு ஒரு வழி கண்டுபிடிக்க வேண்டும்  ன்ற எண்ணம் ஏன் தோன்றிற்று? எப்படித் தோன்றிற்று? 
எந்த ஒரு சமயத்தையும் சாராது பொதுநெறியில் நிற்கும் ஒருவருக்குப், பிறப்புத் துன்பங்களை நீக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருபோதும் தோன்றாது. காரணம் பிறப்பினாலும் இறப்பினாலும் துன்பங்களே உண்டாகின்றன என்ற கோட்பாடு சமய நூற்களில் தான் வலியுறுத்தப்பட்டுள்ளன. பொது அறிவு நூல்களில் அது கூறப்படவில்லை.
சாக்கியர் தாம் இருந்த முதல் சமயத்தில் துன்பங்களை நீக்குவதற்குரிய வழிகள் காணப்படவில்லை என்பதால் துன்பங்களை நீக்கிக்கொள்ள வழிகளை காட்டும் ஒரு சமயத்தை நாட விரும்பியிருக்க வேண்டும்.
04. சங்கமங்கை என்னும் ஊரில் இருந்த சாக்கியர் காஞ்சீபுரத்துக்குச் சென்றதற்கு காரணம் என்ன? 
இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. 01. சாக்கியர் கல்வியறிவு இல்லாத காரணத்தால் காஞ்சீபுரம் சென்றார். 02. சாக்கியரின் ஊரில் சமய நூல்களைக் கற்றுத் தெளிந்த எவரும் இல்லை அதனால் அவர் தம்முடைய ஊரைவிட்டுக் காஞ்சீபுரம் சென்றார்.
முதல் காரணம் ஏற்புடையதாக இல்லை. ஏனென்றால், சாக்கியர் கல்வியறிவில் சிறந்தவர். அவர் ஓர் ஆராய்ச்சி நிபுணர். இதனை பெரியபுராணமே கூறுகிறது.  எனவே, அவர், கல்வியறிவு இல்லாத காரணத்தால் காஞ்சீபுரம் சென்றார் என்று கூறமுடியாது.
இரண்டாவது காரணம்  ஏற்புடையதாக இருக்கிறது. தம்மை விட கல்வியறிவிலும், சமய ஆராய்ச்சியிலும் திறமையுடையோர் காஞ்சீபுரத்தில் இருக்கின்றனர் எனவே அங்கு சென்று தம்முடைய ஐயப்பாட்டினை நீக்கிக் கொள்ளலாம் என்று எண்ணிக் காஞ்சீபுரம் சென்றார் என்பது சரியானதாக இருக்கும். 
05. சாக்கியரை பிக்குவாக (பௌத்த துறவியாக) மாற யாராவது அவரை கேட்டார்களா?
காஞ்சி சென்ற  சாக்கியர் பல வழிகளில் தம்முடைய ஆராய்ச்சியைச் செய்து பௌத்த சமயத்தைத் தழுவினார். பௌத்த பிக்குவாகவும் மாறினார். பௌத்தம் ஏற்றும் அவர் தம்முடைய ஆராய்ச்சியை நிறுத்தாமல் நடத்தி வந்தார். கடைசியில் சைவமே சிறந்த சமயமெனக் கண்டு அச்சமய வழி நின்றார் என்றும் கூறப்படுகின்றது.
முதலில் அவர் செய்த ஆராய்ச்சியினால்தான் பௌத்தம் ஏற்றார். ஏற்ற பின்னரும் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என்பது விந்தையானது. தம்முடைய ஐயப்பாட்டினை பௌத்தம் நீக்கவில்லை என்றால் பௌத்தம் தழுவிய சாக்கியர் பிக்குவாக மாறியது ஏன்?
சாக்கியரை பிக்குவாக மாற யாராவது அவரை கேட்டார்களா? அப்படி கேட்டிருந்தாலும், இன்னும் என்னுடைய ஐயம் நீங்கவில்லை, ஆராய்ச்சியும் முடியவில்லை, இன்னும் பல சமயங்களை ஆராயப்போகின்றேன் என்று கூறியிருக்கலாம்.
06. சாக்கியர் சைவ சமயத்தை பின்பற்ற அச்சப்பட்டாரா?
பௌத்தம் ஏற்ற பின் சாக்கியர் தொடர்ந்த ஆராய்ச்சியால் சைவமே உண்மைச் சமயமெனக் கண்டறிந்த பின்னர் அதனை பின்பற்ற  அச்சப்பட்டார் என்பது தெரியவில்லை. பொய் எது மெய் எது என்று கண்டறிந்த ஒருவர் பொய்யை புறக்கணித்து விட்டு மெய்யை பின்பற்ற வேண்டும்.

சாக்கியர் தம்மை பிக்குவாக பிறருக்கு காட்டிக்கொண்டார்.(சீவர ஆடையை தவிர்க்கவில்லை. சாக்கியர் என்ற காரண பெயரையும் நீக்கவில்லை. பிக்கு சங்கத்தில் தான் தாங்கினார். இறந்த பின்னும் அவரின் படிமம் அருகில் புத்த பாதம் வைக்கப்பட்டது )

சைவ சமயத்தைப் பின்பற்றுவதற்கு அறிகுறியாக எதையும் அவர் காட்டிக்கொள்ளவில்லை. (திருநீறு  பூசிக்கொள்ளவில்லை அக்கமணியை அணியவில்லை)
07. சைவத்தை ஆராய்ச்சி செய்த சாக்கியருக்கு கடவுளை எப்படி வழிபடுவது என்பது தெரியாதா? 
பல சமயங்களை ஆராய்ந்த சாக்கியருக்கு கடவுளை எப்படி வழிபடுவது என்பது தெரியாமல் இருக்குமா? உண்மை என்னவென்றால் சினம் கொண்டு சிவலிங்கத்தை  கல்லால் அடித்தார் என்பது தான் உண்மை.
08. பௌத்தரான சாக்கியர் எவ்வாறு பெரிய புராணத்தில் இடம் பெற்றார்? 
பெரிய புராணம் என்ற ஒரு நூலை வெளியிட்டு அதன் வாயிலாகச் சைவ சமயத்துக்கு உயர்வு தேட முயன்றவர்கள் பல கதைகளைப் புனைந்தும், மாற்றியும் திரித்தும் தமக்கேற்றபடி தொகுத்துக் கொண்டார்கள். திரித்துக் கூறப்பட்ட கதைகளில் சாக்கியர் நிகழ்ச்சியும் ஒன்று. பௌத்த பிக்குவின் வரலாற்றைத் தலைகீழாக்கி அதனை ஒரு சிவனடியாரின் வரலாறாக மாற்றிவிட்டனர்
சிலையமைப்பு
பௌத்தத்தில் புத்தருக்கும் போதிசத்துவர்க்கும் தான் சிலைகள் அமைப்பது வழக்கம். என்வே சாக்கிய நாயனாருக்கு சிலை அமைந்த்திருக்க வாய்ப்பு இல்லை.  கோவில்களில் காணப்படும் சாக்கிய நாயனாரின் சிலைகளில் பௌத்த அடையாளங்கள்  ஏதும் இல்லை. அவரின் சிலை சைவராக அமைக்கப்பட்டுள்ளது. 

நின்ற நிலை. வணங்கும் கை. தொங்கிய முடி. கால் அணி (தண்டை). கை அணி. கழுத்து அணிகள். இடையணிகள். முப்புரி நூல். தோள்பட்டை அணி.       

உதாரணமாக 63 நாயன்மார்களில் சாக்கிய நாயனாரின் தலைமுடியை (இரு பக்கமும் தொங்கும் தலை முடி) சடைமுடியாக மாற்றினால் அவர் திரு நீலகண்டர் ஆவார்.   இரு பக்கமும் தொங்கும் தலை முடியை  திருமுடியாக மாற்றினால் அவர் இயற்க்கை நாயனார் ஆவார்.  இரு பக்கமும் தொங்கும் தலை முடியை  வலது பக்கம் சாய்ந்த சடைமுடியாக மாற்றினால் அவர் இளையான் குடி மாறனார் ஆவார். இரு பக்கமும் தொங்கும் தலை முடியை உருத்திராக்க முடியாக மாற்றினால் அவர் மெய்ப்பொருள் நாயனார் ஆவார். திருமுடியும் தொரட்டி இருந்தால் அவர் வீரன் மீண்டார் ஆவார்  

விளக்கம் 
01. பௌத்தம் ஏற்பது எளிது. அனால் பௌத்த பிக்குவாக மாறுவது எளிதானது இல்லை. காரணங்களில் ஒன்று மனதையும் செயலையும் மாசு அற்றதாக செய்ய பௌத்தம் இல்லறத்தாரை ஊக்குவிக்குமே தவிர கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால் பிக்குவாவது எளிதானது அல்ல. ஒருவரை கட்டாயப்படுத்தி பிக்குவாக்க முடியாது. பிக்குகள் துறவு வாழ்க்கையை மேற்கொண்டவர்கள். அவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது. திரி பிடகத்தில் (முக்கூடை) ஒரு பிடகம் பிக்குகளுக்கு உரியது. பிக்குவான ஒருவர் துறவை துறந்து இல்லறம் ஏற்பது என்பது மிக எளிது. எனவே சாக்கியர் விரும்பினால் பௌத்த துறவு வாழ்வை நீக்கி வாழ்ந்திருக்கலாம்

02. சாக்கிய நாயனர்  கோவில் தூண்கள் பல அக்கோவில் அருகில் புதர் போன்று இருக்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. புதர்கள் இல்லாமல் இருந்தால் வேறு ஏதாவது அடையாளம் இருக்கிறதா என்று கண்டறிய உதைவியிருக்கும் 

மேலும் விரிவாக படிக்க உதவும் வலைத்தளங்கள் 
அறிஞர் அண்ணாவின் வினாவும் விளக்கமும்
எழுத்தாளர் மு.நீலகண்டன்

திங்கள், செப்டம்பர் 19, 2016

மூன்று சங்கங்கள்

மதுரையில் 10,000 க்கும் மேற்பட்ட பௌத்த சங்கங்கள் இருந்தது. ஆனால் மதுரையில் மூன்று சங்கங்கள் (முதற் சங்கம்  நடு சங்கம் கடை சங்கம் என) இருந்தது என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. (பண்டித அயோத்திதாசர் சிந்தனைகள் - தொகுதி இரண்டு - சமயம் - பக்கம் 538 )
01.  முதற் சங்கம் இருந்தது என்பதற்கு குறிப்புகள் ஏதும் கிடையாது.
02. அச்சங்கங்கள் எந்த மதத்தினை சார்ந்தது என்று திடம்பட கூற ஆதாரம் ஏதும் கிடையாது. 
03. தமிழ் சங்கங்கள் இருந்தது என்று ஏற்றுக்கொண்டாலும் அவை முதற் சங்கம், நடு சங்கம், கடை சங்கம் என்று வழங்கப்படவில்லை. அவைகள் முதற் சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம் என்றே வழங்கப்படும்.
04. கடை சங்கம் என்ற பின் நான்காம் சங்கம் தோன்றாது. ஆதாரம் அளிக்க வழியின்றி கடை சங்கம் என்று நிறுத்துக்கொண்டனர். 
05. தமிழ் மொழியை வளர்த்தவர்களும் சத்திய தன்மத்தை பரவ செய்தவர்களும் சமண முனிவர்கள். ஆதலினால் அவர்கள் கொண்டாடி வந்த புத்த, தம்ம, சங்க என்னும் முத்திரை மணிகளை முச்சங்கங்கள் என மாற்றிவிட்டார்கள். அதாவது முதலாவது தோன்றியது புத்தர், நடுவாக தோன்றியது தம்மம், கடைசியாக தோன்றியது சங்கம். இத்தனையே முத நடு கடை சங்கம் என வழங்கிவந்தார்கள்.
06. மெய்க்குருக்களின் போதனைகளையும் செயல்களையும் பொய்க்குருக்கள் மாறுபடுத்தி வயிறு பிழைக்க முயன்று முச்சங்களின் காலத்தை 10,000 வருட கணக்கை எழுதி வைத்திருக்கின்றார்கள். 100 வருட கணக்கை நுட்பமாக எடுத்து வரையறுத்து கூற வகையற்றவர்கள் 10,000 வருட கணக்கை எந்த அரசாங்க பதிவில் பதிந்து வைத்திருந்தார்கள்.  10,000 வருட கணக்கை எழுதி வைத்தவர்கள் எந்த யுகம் முதல் எது வரையில் என்பதை ஏன் எழுதாது விட்டனர்   

 • 4,500 ஆண்டுகள்    - முதற் சங்கம் 
 •  3,500 ஆண்டுகள்   - நடு சங்கம்   
 • 2,000 ஆண்டுகள்  - கடை சங்கம் 
 •  10,000 ஆண்டுகள்   - முச்சங்கம்
07. தமிழ் மொழியையும் இலக்கணத்தையும் அசோக அரசன் காலத்தில் மதுரையில் பிரபலபடுத்தபட்டதா அல்லது அசோக அரசன் காலத்திற்கு பின்  பிரபலபடுத்தபட்டதா என்பதை கல்வெட்டு சாசனங்கள் மற்றும் செப்பேடுகள் ஆராய்ச்சி செய்தால் விளங்கும்.
08. முச்சங்கங்கள் என்று பெயர் கொடுத்தவர்கள் சங்கத்தோரா அல்லது மக்களா?
09. முச்சங்கங்கள் மதுரையில் எங்கு நிறுவப்பட்டது? இதற்கான கல்வெட்டு ஆதாரம் எதும்  உண்டா?
10. ஞான நூல்களில் தோன்றிய முச்சங்கங்கள் என்னவென்றால் 
 • முதற் சங்கம் - ஓர் குழந்தை பிறந்தபோழுது அமுது ஊட்டி அன்னம் அளிக்க கூடும் கூட்டம் 
 • நடு சங்கம் - இல்லறமேற்கும் மணமக்களை வாழ்த்த கூடும் கூட்டம் 
 • கடை சங்கம் - இறந்த பின் கூடும் கூட்டம் 
ஆதாரம் - பட்டினத்தார் பாடல் 
முதற்சங்க முதூட்டு   மொய்குழு லார் தம் மெய்
நடுச்சங்க நல்விலங்கு பூட்டுங்
கடைச்சங்க  மாம்போத  னவூது  மம்மட்டோ விம்மட்டே நாம் பூமி வாழ்ந்த நலம்  

வெள்ளி, செப்டம்பர் 09, 2016

பகவன் புத்தரின் வருகை இலங்கை மற்றும் தென்இந்தியா

முனைவர் பிக்கு போதிபால அவர்கள் புத்த வேட்டிலும் மேலும் பல இடங்களிலும் அடிக்கடி அவர் கூறியது. காஞ்சிவரம் மற்றும் புத்தவேடு ஆகிய இவ்விரு இடங்களுக்கு பகவன் புத்தர் வந்து தங்கிருந்து பின் இலங்கைக்கு சென்றார் என்று. ஆனால் அவர் மொழியாக்கம் செய்த தீப வம்சம் என்ற நூலில் அதற்கான எந்த குறிப்பும் இல்லை.

இலங்கை வரலாற்றை கூறும் முதல் பாலி நூல் தீபவம்சம் என்பதால் மகாவம்சம் தீபவம்சத்தில் பகவன் புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வருகை புரிந்ததாக குறிப்பிடுவதை அப்படியே வழிமொழிகிறது. மூன்று முறையும் பகவன் புத்தர் வான்வழியாக இலங்கை சென்றதாக குறிப்பிடுகிறது. முதல் வருகை - புத்த நிலையை அடைந்த ஒன்பதாவது மாதம் இரண்டாவது வருகை -புத்த நிலையை அடைந்த ஐந்தாவது ஆண்டு மூன்றாவது வருகை -புத்த நிலையை அடைந்த எட்டாவது ஆண்டு.

தீபவம்சம் நூல் குறிப்பு
01. நிப்பான பேற்றை அடைந்த புத்தர் ஞானக் கண்களால் இலங்கையை கண்டார் (தீப வம்சம் இயல் ஒன்று செய்யுள் 45).

02. புத்தர் பெருமான் தனது இருத்தி (சித்தி) ஆற்றலால் வானில் மேலேழும்பி ஜம்பு தீபம் என்ற இந்திய நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தார் (தீப வம்சம் இயல் ஒன்று செய்யுள் 49).
ஆனால் பெருபான்மையான பௌத்த அறிஞர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் இக்கருத்தை ஏற்கவில்லை. காரணம்
01. பகவன் புத்தர் இலங்கைக்கு மூன்று முறை சென்றதாக தீபவம்சம் மற்றும் மகாவம்சம் ஆகிய இலங்கை நூல்கள் மட்டுமே கூறுகின்றன. தீபவம்சம் மற்றும் மகாவம்சம்களை தவிர வேறு சான்றுகள் ஏதுமில்லை. 
02. பகவன் புத்தர் வெறும் காலோடு பல மைல்கள் நடந்தே சென்று இருக்கிறார். மாட்டு வண்டியை கூட பயன்படுத்தியதில்லை. (அறிவர் அண்ணல் அம்பேத்கர்)   
தென்இந்தியா / காஞ்சிவரம் 
01.  கி பி 642ல் பல்லவர் காலத்தில் தமிழகம் வந்த சீன அறிஞர் யுவான் சுவாங் தாதகர் (புத்தர்) காஞ்சிக்கு அடிக்கடி வந்ததாக குறிப்பிடுகிறார். காஞ்சியில் 100 அடி உயரம் கொண்ட பௌத்த இஸ்துபம் இருப்பதை குறிப்பிடுகிறார். அசோகர் பகவன் புத்தர் சென்ற இடங்களில் எல்லாம் இஸ்துபங்களை நிறுவியதால், பகவன் புத்தர் காஞ்சி வருகை புரிந்ததாக குறிப்பு எழுதியிருக்கலாம். ஏனெனில் பகவன் புத்தர்  காஞ்சிபுரத்திற்கு வந்ததற்கு யுவாங் சுவாங் குறிப்பை தவிர வேறு சான்றுகள் ஏதும் இல்லை. ஆனால் தொல்லியல் துறையினால் இஸ்துபம் கண்டறியப்பட்டது (பார்க்க காமாட்சியம்மன் கோவில் கட்டுரை)    
02. பகவன் புத்தர் காஞ்சிக்கு வந்ததற்கு எந்த மொழி நூல்களிலும் சான்றுகள் இல்லை. 01. திரிபீடகம் 02. பாலி இலக்கிய நூல்கள் 03. தமிழ் இலக்கிய நூல்கள், 04. வடமொழி நூல்கள் 05. சிங்கள நூல்கள்.  
03. பகவன் புத்தர் வட இந்தியா முழுவதும் சென்றிருக்கிறார். ஆனால் தென்னிந்தியாவிற்கு வந்ததில்லை .என்பதே பலரின் கருத்து 
04. D.C. அகீர் அவர்களால் பகவான் புத்தர் தென்னிந்தியாவிற்கு வந்ததற்கு ஆதாரம் ஏதும் அளிக்க முடியவில்லை. ஆனால் பகவன் புத்தர் அவர் வாழ்நாளிலேயே  அவரின் போதனைகள் தென்னிந்தியாவிலுள்ள ஆந்திரா வரை வந்து சேர்ந்து இருக்கிறது என்பதற்க்கு ஆதாரம் ஒன்றை அளிக்கிறார்.
ஆந்திரவை சேர்ந்த பாவரி (Bavari) மற்றும் அவரை பின்பற்றும் 16 நபர்களை பற்றிய குறிப்புகள் திரிபிடகத்தில் காணப்படுகிறது. பாவரி இவர் ஒரு பிராமணர் அவருக்கும் பிறிதொரு பிரமணருக்கும் ஒரு கருத்து வேறுபாடு வருகிறது எனவே தம் சீடர்களை பகவன் புத்தரை சந்தித்து வரும் படி அனுப்பிவைக்கிறார். அவர்களும் பகவன் புத்தரை சந்திக்கின்றனர். குறிப்பு The Sutta Nipata - Sutta of Parayanavagga.(தென்னிந்தியாவில் பௌத்தம்  பக்கம் 19)
மணிமேகலையின் வான்வழி 
மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றதாகக் மணிமேகலைக் காவியம் கூறுகிறது. ஆகாய வழியே  மணிமேகலை பறந்து  சென்ற இடங்கள்.  
01. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து மணிபல்லவத் தீவுக்கு (யாழ்பாணத்துக்கு வடக்கே உள்ள தீவு) 
02. சாவக நாட்டுக்கு (கிழக்கந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஜாவா தீவு) அங்கிருந்து மணிபல்லவத்துக்கு
03. மணிபல்லவத்திருந்து சேரநாட்டு வஞ்சிமாநகரத்துக்கு
ஆகவே மணிமேகலை உண்மையில் இருந்தவள் அல்லள் என்றும் அவள் கற்பனையாகக் கற்பிக்கப்பட்டவள் என்றும் கருதத் தோன்றுகிறது. மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றாள் என்பது வெறுங்கற்பனைதான். ஏன் இப்படிக் கற்பித்தார் என்பதனை விளக்குகிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி.
மணிமேகலைக் காவியம் சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல். சங்ககாலத்தில் தமிழ்மகளிர் கடலில் பிராயாணம் செய்யக்கூடாது என்னும் மரபு இருந்தது. அந்த மரபை அக்காலத்துத் தமிழரும் தமிழ்ப்புலவர்களும் கடைப் பிடித்துக் கையாண்டார்கள். அவ்வாறே இலக்கணமும் எழுதி வைத்தார்கள். முந்நீர் வழக்கம் மகடூ உவோடில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. 
ஆனால், பௌத்த மதத்துப் பெண்மணிகளுக்கு இந்தத் தடை இல்லை. பௌத்த மதத்தைச் சேர்ந்த மணிமேகலை, கடல் கடந்த நாடுகளுக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தபடியால் அவள் கடலில் கப்பற்பிராயணம் செய்தாள். கடல் யாத்திரை செய்தது பௌத்தமதத்தவருக்கு குற்றம் அன்று. ஆனால், இந்த வரலாற்றைக் காவியமாக எழுதிய சாத்தனார், பௌத்தருக்காக மட்டும் காவியம் எழுதவில்லை. பௌத்தரல்லாத தமிழருக்காகவும் மணிமேகலை காவியத்தை எழுதினார். ஆனால், பௌத்தரல்லாத தமிழருக்கு மகளிர் கடற்பிரயாணம் செய்வது உடன்பாடன்று. அஃது அவர்களுடைய மரபுக்கும் பண்பாட்டுக்கும் மாறுபட்டது. ஆகவே சங்கப் புலவரான சாத்தனார் தம்முடைய காவியத்தில் கற்பனையைப் புகுத்த வேண்டியவரானார். 
மணிமேகலை கடற்பிரயாணஞ் செய்தாள் என்னும் உண்மையைக் கூறினால் அக்காலத்துத் தமிழுலகம் இந்த நூலை ஏற்காது. ஆகவே அவர்களும் ஏற்கத்தக்க விதத்தில் மணிமேகலை ஆகாயவழியாக அயல் நாடுகளுக்குப் பறந்து சென்றாள் என்று கற்பனை செய்து காவியத்தை முடித்தார். 
அந்தக் காலத்துத் தமிழரின் பழக்கவழக்கப் பண்பாடுகளுக்கு முரண்படாமல் கற்பனை செய்தபடியால் மணிமேகலைக் காவியத்தை அக்காலத்துத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த உண்மையை ஆராய்ந்தவர் மணிமேகலையைக் கற்பனை உருவம் என்று கருதமாட்டார்கள். மணிமேகலை உண்மையில் வாழ்ந்து இருந்த ஒரு பெண்மணி என்றே கொள்வார்கள். 

வியாழன், செப்டம்பர் 08, 2016

புத்தரா காரல் மார்க்சா ?

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் 

 நூல் தொகுதி 7 

( பகுதி 2 - இயல் 14 - பக்கம் 403 - 434)

பகவன் புத்தரின் தம்மத்திலும் காரல் மார்க்சின் புதிய பொருளாதார கொள்கையிலும் ஆர்வம் கொண்டவர் அறிவர் அண்ணல் அம்பேத்கர். பௌத்தர் மற்றும் பொருளாதார மேதையுமான அறிவர் அண்ணல் அம்பேத்கர் பகவன் புத்தரின் தம்மத்தையும் காரல் மார்க்சின் பொருளாதார கோட்பாட்டையும்  ஒப்பிட்டு அளித்துள்ளார்.

எளிமையை மனதில் கொண்டு சுருக்கமாக கொடுத்துள்ளேன். ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்கள் அறிவர் அண்ணல் அம்பேத்கரின் நூல் தொகுப்புபை படிப்பது பயனளிக்கும்.

பகவன் புத்தர் பண்டைய காலத்தை சேர்ந்தவர் (கி.மு. 563). காரல் மார்க்ஸ் நவீன காலத்தை சேர்ந்தவர் (கி.பி. 1818). புத்தருக்கும் காரல்  மார்க்ஸ்க்கும் 2381 (563+1818) ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது. புத்தரின் நோக்கமும் காரல் மார்க்சின் நோக்கமும் பொதுவானதாக இருக்கிறது ஆனால் நோக்கத்தை அடையும் வழிவகைகள் தான் வேறுபாடானதாக .உள்ளது என்றுரைக்கிறார் அறிவர்.  

A) கருத்தொற்றுமைகள்
01. உலகத்தின் தோற்றம்: பகவன் புத்தர் மற்றும் காரல் மார்ஸ் ஆகிய இருவரின் நோக்கம் உலகத்தின் தொடக்கத்தையும் முடிவையும் பற்றி விளக்குவதில்லை. உலகத்தை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றுவது தான் இருவரின் நோக்கம். கடவுள், ஆத்மா, சொர்க்கம், நரகம் போன்றவற்றை புத்தரோ காரல் மார்க்சோ கொண்டிருக்கவில்லை. 
மேற்கோள்பகவன் புத்தருக்கும் போத்தபாதா என்ற பிராமணருக்கும் இடையே நடந்த உரையாடல். 
மேற்கோள் விளக்கம்: போத்தபாதா என்பவர் பகவன் புத்தரிடம்   கீழ் காணும் வினாக்களை எழுப்புகிறார். உலகம் நிரந்தரமானதா? இல்லையா? உலகம் அளவுக்கு உட்பட்டதா? அளவற்றதா? ஆன்மாவும் உடலும் ஒன்றா? வெவ்வேறானதா? இவ்வினாக்களுக்கு பகவன் புத்தர் கருத்து ஏதும் தெரிவிப்பது இல்லை என்று விடையளித்தார். காரணம் கீழ்கண்ட வினாக்களுக்கு பகவான் புத்தர் விடையளிப்பது இல்லை.
 01) பயன் விளைவிக்காத வினாக்கள்
02) தம்மத்துடன் சம்பந்தபட்டாத வினாக்கள்
03) பற்றின்மை, காமத்தில் இருந்து தூய்மை பெற, அமைதியாய் இருப்பதற்கு, அறிவை பெறுவதற்க்கு, உயர் ஞானத்திற்கு உதவாத வினாக்கள். 

02. துன்பத்திற்கு காரணம்:
தனிஉடமையே உடைமையாளர்கள் உழைப்பாளர்கள் என்ற இரண்டு வர்க்க முரண்பாடுகளுக்கான காரணம் என்றுரைக்கிறார் காரல் மார்க்ஸ். துக்கம் என்பதற்கு சுரண்டல் என்று வைத்தால் பகவன் புத்தர் மற்றும் காரல் மார்ஸ் ஆகிய இருவரின் கோட்பாடுகளுக்கும் ஒன்றே என்றுரைக்கிறார் அறிவர் அண்ணல் அம்பேத்கர்..
மேற்கோள்: நான்கு உயரிய உண்மைகள் 
மேற்கோள் விளக்கம்: பகவன் புத்தரின் அட்டாங்க மார்க்கம் (எண் வகை பாதை) வர்க்க முரண்பாடு இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறது. இந்த முரண்பாடு தான் துன்பத்திற்கு காரணம்.
01) துக்கம் உள்ளது
02) துக்கத்திற்கு காரணம் உள்ளது
03) துக்கத்திற்கு நிவாரணம் உள்ளது
04) துக்க நிவாரணத்தை அடைவதற்கு வழி அட்டாங்க மார்க்கம்.
03. தனிஉடமை:
தனிஉடமை ஒரு வர்க்கத்தாருக்கு அதிகாரத்தையும் மற்றொரு வர்க்கத்தாருக்கு துன்பத்தையும் தருகிறது.
மேற்கோள் பகவன் புத்தருக்கும் ஆனந்தருக்கும்  இடையே நடந்த உரையாடல்.  
மேற்கோள் விளக்கம்: பேராசைக்கு காரணம் உடமைதான். உடமைக்கு காரணம் விடாப்பிடி தன்மை. யாருக்கும் எதற்கும் எந்தவிதமான உடமையும் இல்லை என்றால் பேராசை தோன்றாது. 

04. பொது உடமை:
தனிஉடமையை ஒழிப்பதன் மூலம் சுரண்டலை ஒழிப்பது அவசியம்.
மேற்கோள் பிக்கு சங்க விதிகள்.  
மேற்கோள் விளக்கம்: ஒரு பிக்கு கீழ்கண்ட எட்டு பொருட்களை மட்டுமே தனிஉடமையாக வைத்திருக்கலாம். இந்த விதிகள் ரஷ்யாவில் கம்யூனிசத்தில் உள்ளவற்றை விட மிக கடுமையானது. தினசரி உடுப்பதற்கு ஆடைகள் ( 3 ) இடையில் கட்டுவதற்கு பந்தனம் ( 1 ) உணவு ஏற்கும் பாத்திரம் ( 1 ) சவரக்கத்தி ( 1 ) ஊசி ( 1 ) தண்ணீர் வடிகட்டி ( 1 )

B) முரண்பாடுகள்  
01) வன்முறை 
மார்சியம்: பொதுவுடைமையை நிறுவுவதற்கு உள்ள முதல் வழி வன்முறை. சுரண்டலை தடுக்க போராட்டம் மற்றும் கொடுஞ்செயலை ஊக்குவிக்கிறது. இது இரு வர்க்கங்களுக்கு இடையே எப்பொழுதும் வன்முறை தொடர்ந்த வண்ணமாக வைத்திருக்கிறது. குறிக்கோளை அடைவதற்கு பலரை கொன்று இருக்கிறது. .
பௌத்தம்: பகவன் புத்தர் காட்டிய வழி வன்முறையற்றது, அறநெறியுடையது. ஒருவன் தானே மனமுவந்து செல்லும்படி அவனது அறநெறி உணர்வை செம்மைப்படுத்துவது. 
மனிதனின் துன்பத்திற்கு காரணங்கள் இரண்டு 01. தம் சொந்த செயலினால் விளையும் தீமை 02. பிறர் செயலினால் விளையும் விளையும் தீமை. தீமையை தவிர்க்க வழிகளும் இரண்டு 01. தம் சொந்த செயலினால் விளையும் தீமையை தவிர்க்க வழி பஞ்ச சீலம் 02. பிறர் செயலினால் விளையும் தீமையை தவிர்க்க வழி உன்னத எண் வழி பாதை.
எண் வழிபாதையை பின்பற்றுவதற்கு இடையூறாக பத்து தடைகள் உள்ளது. எனவே தினசரி வாழ்க்கையில் கடைப்பிடக்க வேண்டிய ஒழுக்கங்கள். 01. அறியாமையை போக்கிக்கொள்ள அறிவுடையோருடன் பழகி அறிவை வளர்க்க வேண்டும் 02. தவறு செய்ய நாணாவும், நன்மை செய்ய பேணவும் (பழகவும்) வேண்டும் 03. உலக இன்பத்தை துறக்க வேண்டும் 04. பிறர் நன்மைக்காக பயன் எதிர்பார்க்காமல் தானமளித்தல் வேண்டும் 05. எடுத்துக்கொண்ட செயலை முழு திறனுடன் செய்யவேண்டும் 06.வெறுப்பை தணிக்கும் பொறையுடைமையை பின்பற்றவேண்டும் 07. உண்மையை பேசவேண்டும் 09.குறிக்கோளை அடைவதற்கு உறுதி ஏற்கவேண்டும் 10. எல்ல உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும்.
வன்முறையை எதிர்த்த பகவன் புத்தர் நீதிக்கு அவசியமாயிருந்தால் வன்முறையை பயன்படுத்துவதை அவர் அனுமதித்தார்.
மேற்கோள் : புத்தருக்கும் வைசாலி படை தலைவருக்கும் (சிம்ம சேனாதிபதி)  இடையே நிகழ்ந்த உரையாடல். 
மேற்கோள் விளக்கம்: படைத்தலைவர் புத்தரிடம் எழுப்பிய வினா: நீங்கள் அகிம்சையை போதிக்கிறீர்கள். எனவே குற்றம் செய்த ஒருவனுக்கும் தண்டனையில் இருந்து விடுதலை அளித்திட வேண்டுமா? மக்களையும் செல்வங்களையும் காப்பாற்ற போர் செய்யக்கூடாதா? பகவன் புத்தர் அளித்த பதிலுரை, குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும். குற்றமற்றவன் விடுவிக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவனை தண்டிப்பது நீதியின் தவறு அல்ல.போர் இருக்கலாம் ஆனால் அது சுயநல நோக்கங்களுக்காக இருக்கக்கூடாது. 

02) சர்வாதிகாரம்
மார்சியம்: பொதுவுடைமையை நிறுவுவதற்கு உள்ள இரண்டாவது வழி உழைப்பாளர்களின் சர்வாதிகாரம். இது இரு வர்க்கங்களுக்கு இடையே எப்பொழுதும் சர்வாதிகார ஆட்சி தொடர்ந்த வண்ணமாக வைத்திருக்கிறது. ஒன்று உடமையாளர்களின் சர்வாதிகார ஆட்சி (அ) உழைப்பார்களின் சர்வாதிகார ஆட்சி. 
பௌத்தம்: சர்வாதிகாரத்தை புத்தர் விரும்பவில்லை. அவர் எப்பொழுதும் ஜனநாயகவாதியாக இருந்தார்.  ஆதாரம்   
01. புத்தர் வாழ்ந்த காலத்தில் 14 முடியரசும் 4 குடியரசும் இருந்தது. புத்தர் பிறந்தது கோசல நாட்டில். அது ஒரு குடியரசு நாடு. புத்தர் பரிநிர்வாணம் அடைவதற்கு முன் தங்கியிருந்த வைசாலியும் ஒரு  குடியரசு நாடு. தமது வழக்கப்படி வைசாலியை விட்டு வேறு எங்கேனும் செல்ல முடிவு எடுத்தார். சிறிது தூரம் சென்றபின் வைசாலியை திரும்பி பார்த்து ஆனந்தரிடம் புத்தர் வைசாலியை பார்ப்பாது இது தான் கடைசி முறை என்றார். அந்த குடியரசிடம் அவ்வளவு பிரியம் வைத்து இருந்தார்.
02. ஆரம்பத்தில் புத்தர் உட்பட எல்லா பிக்குகளும் கிழிந்த துணிகளால் ஆனா ஆடைகளை அணிந்தார்கள். மாபெரும் மருத்துவரான ஜீவகன் முழுமையான துணியால் ஆனா ஆடை ஒன்றை புத்தர் ஏற்றுக்கொள்ள செய்தார். புத்தர் உடனே ஆடை பற்றிய விதிகளை மாற்றி எல்லோருக்கும் அது பொருந்துமாறு செய்தார்          
03. புத்தரின் வளர்ப்பு தாயான மகாபிரஜாபதி கோதமி பிக்குணி சங்கத்தில் சேர்ந்து இருந்தார். ஒருமுறை அவர் புத்தருக்கு குளிர் ஏற்பட்டிருப்பதாக  கேள்விப்பட்டார். உடனே அவர் புத்தருக்கு என தலைக்கு கட்டும் துணி ஒன்றை செய்து புத்தரை அணிந்துக்கொள்ள வேண்டினார். ஆனால் அதை புத்தர் ஏற்க மறுத்துவிட்டார். அது அன்பளிப்பாக இருந்தால் அது சங்கம் முழுவதற்கும் அது அன்பளிப்பாக இருக்கவேண்டும். சங்கத்தின்  ஒரு உறுப்பினருக்கு இருக்க கூடாது என்று மறுத்துவிட்டார். 
04. புத்தர் பரிநிர்வாணம் எய்துவதற்கு முன் இரண்டு முறை புத்தருக்கு பின் சங்கத்தை நிர்வகிக்க அதன் தலைவராக ஒருவரை நியமிக்கும் படி கேட்டுக்கொள்ளபட்டார். ஒவ்வொரு முறையும் அவர் மறுத்துவிட்டார். தம்மம் சங்கத்தை வழிநடத்தும் என்று மறுத்துவிட்டார்.    
 03) நின்று நிலைத்து நீண்டு பயனளிப்பது
மார்சியம்: காரல் மார்க்சின் தத்துவத்தின் பயன் குறுகிய காலத்திற்குரியது. ஏனெனில் சர்வாதிகாரம் பலத்தினை பயன்படுத்து கிறது. பலம் தற்காலிகமானது எனவே இது நின்று நிலைத்து நீண்டு பயனளிக்காது. 
காரல் மார்க்சின் தத்தும் பொருளாதார நன்மைகளை மட்டுமே கொண்டது. சமய வளர்ச்சியை கொண்டதாக அது இல்லை. பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த  சகோதரத்துவம்  மற்றும் சுதந்திரம் ஆகிய இரண்டையும் தியாகம் செய்துவிடுகிறது. சர்வாதிகாரத்தில் கீழ்ப்படியும் கடமை மட்டுமே உள்ளது உரிமை ஏதும் இல்லை.   . 
பௌத்தம்: பகவன் புத்தரின் தத்துவத்தின் பயன் நீண்ட காலத்திற்குரியது. புத்தர் சர்வாதிகாரம் இல்லாமலே பிக்கு சங்கத்தில் பொதுஉடமையை நிறுவினார். எந்த  பலத்தையும் பயன்படுத்தாமல், கட்டாயம் இல்லாமல் தாங்களாகவே மனமுவந்து செய்யும் வகையில் மனித மனங்களை மாற்றுவதே புத்தரின் செயல் முறை. சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம். இந்த மூன்றும் சேர்ந்து இருப்பதால் புத்தரின் செயல் முறையே நின்று நிலைத்து நீண்டு பயனளிப்பது.
 இணைப்பு :  அம்பேத்கர் பேசும் எழுத்தும் நூல் தொகுதி 7   

செவ்வாய், ஆகஸ்ட் 23, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVI மாமல்லபுரம் & புஞ்சேரி

மாமல்லபுரம்  

தொல்லியல் துறை அறிஞர் திரு Dr D தயாளன் இயக்குநர்)  
1990-91 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் உள்ள குன்றில் (Draupathi Bath) அகழாய்வு மேற்கொண்டபொழுது மூன்று அடி உயரமுள்ள தலையில்லா ஒரு சிலை கண்டெடுத்தார். இச்சிலையை புத்தராகவோ அல்லது தீர்த்தங்கராகவோ இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். (D.Dayalan, computer application in Indian Epigraphy, Vol III, Bharatiya Kala Prakashan, Delhi 2005 Page 1273 ) ஆனால்

திரு Dr.K.சிவராமலிங்கம் (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu பக்கம் 77) அவர்கள் திரு Dr D தயாளன் அவர்கள் குறிப்பிட்ட சிலையை  பல்லவர் காலத்து புத்தர் சிலை என்றுரைக்கிறார்..

சிலையமைப்பு
மகாபலிபுரம் தொல்லியல் துறைக்கு (Archaeological Survey of India - Mahabalipuram Sub-Circle) 21/03/2016 அன்று சென்று அந்த சிலையை பார்த்தேன். மூன்று அடி உயர சிலை இரு பகுதிகளாக இருந்தது. ஒரு பகுதி கழுத்தில் இருந்து சிந்தனை கை வரை இருந்தது. மற்றொரு பகுதி செம்பாதி தாமரை அமர்விலிருந்து பீடம் வரை இருக்கிறது. திரு Dr D தயாளன் அவர்கள் குறிப்பிட்டதை போன்று புத்தரா (அ) தீர்த்தங்கரா என மயக்கம் ஏற்பட்ட காரணம் 
 • சிலை தலை பகுதியின்றி இருந்தது 
 • தோள்பட்டையில் இருந்து முன்னங்கை வரை கைகள் காணப்படவில்லை 
 • தொடைமீதிருக்கும் முழங்கை சிந்தனை கையில் இருக்கிறது. பகவன் புத்தர் மற்றும் தீர்த்தங்கருக்கு  சிந்தனை கை என்பது பொதுவான முத்திரை.  
 • பீடத்தில் தீர்தங்கருக்கான எந்த அடையாள சின்னமும் காணப்படவில்லை   
 • சிலையின் உடல் பகுதி அதிகமாக சிதைவுற்று இருந்தது. எனவே சீவர ஆடையுடன் செதுக்கப்பட்டதா என்று அறிய முடியவில்லை.
திரு Dr D தயாளன் அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அச்சிலை புத்தர் சிலை என்று குறிப்பிடுகிறார்  //The torso of Buddh image at Mamallapuram was noticed by me while I was doing excavation there//


காணாமல் போன சிலைகள் 
Dr.K.சிவராமலிங்கம் அவர்கள் குறிப்பிடும் மூன்று அடி உயரமுள்ள ஐந்து புத்தர் சிலைகளும் மகாபலிபுரம் அருங்காட்சியகத்தில் காணப்படவில்லை. இச்சிலைகள் தேசிய அருங்காட்சியாகத்திற்கு கொண்டுசென்றிருக்கலாம் என்று சிலரும் அவைகள் விற்கப்பட்டு விட்டன என்று சிலரும் குறிப்பிட்டனர்.

தொல்லியல் துறை அறிஞர் Dr.D.தயாளன் அவர்களிடம் தொடர்பு கொண்ட பொழுது அவர் அளித்த விளக்கங்கள்.
Dr.K.சிவராமலிங்கம் அவர்கள் குறிப்பிடும் ஐந்து புத்தர் சிலைகளும் மாமல்லபுரத்தில் கிடைத்தவை அல்ல. வேறு எங்கேயோ இருந்து கொண்டு வந்து அர்ஜுன தபசு அருகில் வைக்கப்பட்டவை. (தனியார் அருங்காட்சியகம்). இச்சிலைகள் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்படவில்லை. மேலும் அந்த சிலைகள் எல்லாம் தனியாருக்கு சொந்தமானவை (Private Collections), தற்காலத்து சிலைகள்.  அந்த சிலைகள் வேறு எங்கேயாவது கொண்டு சென்றிருக்கலாம் அல்லது விற்க்கபட்டிருக்கலாம்.
ஜமேஸ் பெர்சுசன் (James Fergusson) அவர்கள் மாமல்லபுரத்தை அசைக்கமுடியாத பௌத்த இடம் என்றுரைக்கிறார். காரணம் மாமல்லபுரத்தில் கட்டப்பட்டிருக்கும் நினைவு சின்னங்களின் அமைப்பின் முறை அமராவதி இச்துபத்தை ஒத்து இருக்கிறது என்று.

C.சிவராமமூர்த்தி தொல்லியல் அறிஞர் மகாபலிபுரத்தில் கண்டறியப்படும் பல உருவங்கள் அமராவதி சிற்ப தூண்டுதலில் உருவானவை. என்றுரைக்கிறார் (Amaravati Sculptures in the Chennai Government Museum by C.Sivarama Murthi M.A., 1998) 
01. விந்தையான உயிரினங்கள் (Queer Animals) (Govardhana Giridhara Krshna Mandapa)   கோவர்த்தன கிரிதர கிருஷ்ண மண்டபத்தில் ஒரு பகுதியின்  முடிவில் காணப்படும் மனித தலையுடைய சிங்கம் மற்றும் கழுகு தலையுடைய சிங்கம் (Plate iii, Fig 7 பக் 53)
02. சிம்மாசனம் (Lion Throne)
(Mahisha Sura Mardani Cave ) மகிச சூரா மர்தனி குகையின் மையப் பகுதியில் சோமஸ்கந்த குழு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது என்பது அமராவதி போதி சத்துவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை ஒத்திருக்கிறது  (Plate iii, Fig 8)     
03.ஞான முடியும் சுருள் முடியும்
Krshna Mandapa  கிருஷ்ண மண்டபம் கால் நடை மேய்ப்பவரின் தலையில் தலை முடி சுருள் சுருளாகவும், ஞான முடியும்  காணப்படுகிறது.  இது அமராவதி சிற்ப மரபை கொண்டுள்ளது (Plate iii, Fig 9). இது பகவன் புத்தரின் ஞான முடி மற்றும் சுருள் முடியை ஒத்துள்ளது. 
04. ஆடையின்றி நின்றிருக்கும் பெண்
ஆடையின்றி நின்றிருக்கும் பெண், அமராவதி மற்றும் அஜந்தாவில் காணப்படும் பெண்ணை ஒத்திருக்கிறது. (plate 1, Fig 3a(Amaravathi) 3b (Ajantha) 3c (Mahabalipuram)
05. இடையாடை மற்றும் வழிந்தோடும் குஞ்சம் அணிந்திருக்கும் குள்ள மனிதர் (Udarabandha) உதர பந்தா என்ற யாசகர் என்னும் குள்ள மனிதர் அணிந்திருக்கும் இடையாடை மற்றும் வயிறு பகுதி வழியாக வழிந்தோடும் குஞ்சம் (Plate iii, Fig 2a 3b(Amaravati) 2c(Mahabalipuram)
ஆனால் இவைகள் வலுவான ஆதாரங்களாக இல்லை.  

புஞ்சேரி

புஞ்சேரி மாமல்லபுரத்தில் இருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்.  

Dr K. சிவராமலிங்கம் 
புஞ்சேரியில் பல புத்தர் சிலைகள் கண்டறியப்பட்டது. அவைகள் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது என்று குறிப்பிடுகிறார். (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu பக் 76 and 127)
     
தொல்லியல் துறை அறிஞர் திரு Dr D தயாளன்
புஞ்சேரி மிக பழமையான துறைமுகம். பொருட்களை ஏற்றவும் இறக்கவும் இங்கு தான் கப்பல்கள் வந்து நிற்கும்,   புஞ்சேரி என்ற சொல் புகும் சேரி ~*~ என்ற சொல்லில் இருந்து மருவி இருக்கலாம். புஞ்சேரியை கடற்கழிவிடம் (Back Water Area) என்றுரைக்கிறார். (Articles "New light on the location of the Ancient seaport of Mamallapuram") 
கடற்கழிவிடம்   (Back Water Area)  என்பது கடல் நீரை கொண்ட இடம். கடற்கழி (Back Water) என்பது கடல் நீர். இது உப்பு நீரை கொண்டது. உப்பு தயாரிக்க உதவுகிறது. கடல் மட்டம் உயரும்பொழுது நிலத்தை நோக்கி கடல் நீர் புகுவதும், கடல் மட்டம் குறையும் பொழுது, நிலத்தில் வந்தடைந்த கடல் நீர் மீண்டும் கடலில் சேர்வது தான் கடற்கழி. இங்கு அலைகள் ஏற்படாது. புஞ்சேரி இயற்கையான கடற்கழிவிடம் என கப்பல் துறை அறிஞர் திரு சிவசாமி எனக்கு விளக்கம் அளித்தார் . 
தேசிய அருங்காட்சியகம் புது டெல்லி 

சிலையமைப்பு
5 அடி உயரம் 3.4 அடி அகலம் -  சிந்தனை கை - 9 to 10 நூற்றாண்டு 


~*~ அதாவது கடல் நீர் முதலில் உட்புகும் சேரி
இணைப்புகள்  
1990-91 Dr.D.தயாளன் மாமல்லபுரம் அகழாய்வு

தமிழத்தின் தொன்மையான துறைமுகம் புஞ்சேரி

திங்கள், ஜூன் 06, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XV கச்சபேஸ்வரர் கோயில்

கச்சபேஸ்வரர்  கோயில் 

அமைவிடம்
ஊர்                            : பெரிய காஞ்சிவரம், நெல்லுகாரத்தெரு,  ராஜவீதி
வட்டம்                    : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்              : காஞ்சீவரம் மாவட்டம்
காஞ்சிவரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி. மீ தொலைவில் அமைந்துள்ளது கச்சபேஸ்வரர்  கோயில். மிகப் பழமையான (பருமனில் பெருத்து) போதி மரம் ஒன்று இக்கோவிலில் உள்ளது. கச்சபேஸ்வரர்  கோயிலில் புத்தர் மற்றும் போதி சத்துவர்களின் புடைப்பு சிற்பங்கள் & பௌத்த அடையாள சின்னங்கள் அமைந்துள்ள இடங்கள்.
01. முன்கோபுரத்தின் அடித்தள கட்டிடம் 
02. நடராஜர் சந்நிதிக்கு அருகில் உள்ள சதுர் முருகேஸ்வரர் சன்னதி தூண்
01. முன்கோபுரத்தின் அடித்தள கட்டிடத்தில் உள்ள புத்தர் சிலைகள்
சிலையமைப்பு  
இரு புத்தர் சிற்பங்களும் சிந்தனை கையில் அமைந்துள்ளது. அரை அடி உயரம் கொண்டது.   
02. நடராஜர் சந்நிதிக்கு அருகில் உள்ள சதுர் முருகேஸ்வரர் சன்னதி தூண்களில் உள்ள புத்தர் மற்றும் போதி சாத்துவார்களின் புடைப்பு சிற்பங்கள். 
இரு வரிசைகளை (Rows) கொண்ட ஐந்து தூண்கள் என மொத்தம் பத்து தூண்கள் இங்குள்ளது. முதல் வரிசை தூண்களில் 11 சிற்பங்களும் இரண்டாம் வரிசை தூண்களில் 4 சிற்பங்களும் உள்ளது. இந்த தூண்களில் மூன்று பக்கங்களில் சிற்பங்களும், பிற அடையாளங்களும் காணப்படுகின்றது. நான்காவது பக்கம் பொதிகைகளை கொண்டுள்ளது. இச்சிற்பங்கள் அனைத்தும் ஒரு அடி உயரம் கொண்டவை.

முதல் வரிசை தூணில் பதினோரு பௌத்த சிற்பங்கள் உள்ளது  
 • முதல் தூணில் எட்டு பௌத்த சிற்பங்கள்
 • மூன்றாவது தூணில் பௌத்த இரண்டு சிற்பங்கள்
 • நான்காவது தூணில் ஒரு பௌத்த சிற்பம்
இரண்டாம் வரிசை தூண்கள் நான்கு பௌத்த சிற்பங்கள் உள்ளது
 • முதல் தூணில் ஒரு பௌத்த சிற்பம்
 • இரண்டாம் தூணில் ஒரு பௌத்த சிற்பம்
 • மூன்றாவது தூணில் இரண்டு சிற்பங்கள்
முதல் தூண் (8): தூணில் எட்டு பௌத்த சிற்பங்கள் மற்றும் ஒரு தாமரை மலர் அமைந்துள்ளது. தூணின் முன்புறமுள்ள சிற்பங்கள் மூன்று. இச்சிற்பங்கள் அனைத்தும் சிந்தனை கையில் அமைந்துள்ளது தோள்கள் வரை உள்ள தோரணத்தை கொண்டுள்ளது.

தூணின் பின்புறமுள்ள சிற்பங்கள் இரண்டு. தூணின் மேல்புறம் உள்ள சிற்பம் வழங்கும் கையுடன், தூணின் கீழ் பகுதியில் உள்ள சிற்பம் சிந்தனை கையுடன் அமைந்துள்ளது. இவ்விருசிற்பங்களும் தோள்கள் வரை உள்ள தோரணத்தை கொண்டுள்ளது. இந்த இரு சிற்பங்களுக்குமிடையே தாமரை மலர் பொதியப்பட்டுள்ளது.

இடதுபுறமுள்ள சிற்பங்கள் மூன்று. தோள்கள் வரை உள்ள தோரணத்தை கொண்டுள்ள இரண்டு சிற்பங்களும் சிந்தனை கையில் அமைந்துள்ளது. தோரணமின்றி தூணின் மையத்தில் அமைந்திருக்கும் சிற்பம் வழங்கும் கையில் அமைந்துள்ளது.  சிற்பங்களை பார்க்க இந்த தொடர்பு பயனளிக்கும் 

மூன்றாவது தூண் (2) இரண்டு சிற்பங்கள் தூணின் மேற்பகுதியில் காணப்படுகிறது. துணின் முன்புறம் ஒரு சிற்பமும் பின்புறம் ஒரு  சிற்பமும் உள்ளது.
நான்காவது தூண் (1) இடது புறம் மேற்பகுதியில் ஒரு சிற்பம் காணப்படுகிறது.

இரண்டாம் வரிசை தூண்கள் (4):
முதல் மற்றும் இரண்டாவது தூணின் வலது புறம் கீழ்பகுதியில் உள்ள சிற்பங்கள் சிந்தனை கையில் அமைந்துள்ளது.


மூன்றாவது தூண் (2) : தூணின் பின்புறம் மேற்பகுதியில் தியான முத்திரையுடன் ஒரு சிற்பமும் மையப்பகுதியில் நிலத்தை தொடும் முத்திரையுடன் ஒரு சிற்பமும் அமர்ந்துள்ளது. இவ்விரு சிற்பங்களும் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளது.சிற்பங்களை பார்க்க

கச்சீஸ்வரர் கோயில் பூர்வ புத்தர் கோயில்.  
காஞ்சிபுர கச்சீஸ்வரர் கோயில் பூர்வத்தில் புத்தர் கோயில் என்பதற்கு அறிஞர்கள்  அளிக்கும் ஆதாரங்கள்/ விளக்கங்கள் .

01) ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி: 
01. இக்கோயிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டடத்தில் சில புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இன்னும் சில முன்பு இருந்த உருவம் தெரியாமலிருக்குமாறு அழிக்கப்பட்டிருக்கின்றன.
02. கோயில் உள்மண்டபத்திலும் சில கல்தூண்களில் புத்த உருவங்கள் இப்போதுமிருக்கின்றன.
03. இக்கோயில் அருகில் உள்ள ஏரிக்கு 'புத்தேரி' என்றும் தெருவிற்கு 'புத்தேரித்தெரு' என்றும் பெயர்கள் ஏற்பட்டு இப்போதும் வழங்கிவருகின்றன. புத்தேரித் தெரு என்னும் பெயர் 'புத்தர் தெரு' என்பதன் மரூஉ. இத்தெரு முற்காலத்தில் புத்தர் தெரு என்று வழங்கப்பட்டு அவ்வாறே விக்கிரபத்திரங்களிலும் எழுதப்பட்டு வந்தன.
02 ) வரலாற்று  ஆராய்சியாளர் Dr.மா . இராசாமாணிக்கனார் 
01. புத்தர் கோவிற் பகுதிகளைக்கொண்டு கச்சபேசர் கோவில் புறச்சுவர் கட்டப்பட்டது.
02. இன்றுள்ள "புத்தேரி"த் தெரு என்பது புத்தர் சேரி என்று இருத்தல் வேண்டும். புத்தேரி தெரு என்றே சோழர் கல்வெட்டுகளில் பயின்று வருதல் இதன் பழமையைக் காட்டுகிறது (பல்லவர் வரலாறு - பக்  327 )
03) தமிழக தொல்பொருள் ஆய்வு துறை, கல்வெட்டு ஆய்வாளர் Dr. பத்மா தெய்வ சுந்தரம் 
01) இக்கோவிலில் வழிபட்டோர் தாராதேவியை வழிபட்ட பௌத்த மதத்துறவியாவர். ஐஞ்சந்திலும்  வழிபட்ட தாராதேவி  கோவில் துர்க்கை கோவிலாக மாறிய போது அத்துர்க்கா தேவியும் ஐஞ்சந்தி துர்க்கா பட்டாராகி என அழைக்கப்பட்டாள்.
02) துர்க்கா பட்டாராகி என்னும் இத்தேவி  தாரா தேவியாகவும், இத்தேவி உள்ள கச்சிஸ்வரர் என்னும் சிவபெருமாளின் பெயர் பௌத்த சமயக் காஸ்யப்பர் ஆகவும் இருத்தல் வேண்டும். இப்போதுள்ள கச்சிஸ்வரர் கோவில் மாற்றப்பட்ட பௌத்த கோவிலாக உருவத்தில் இல்லாவிட்டாலும் கூட பௌத்தத்தின் உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது (பக் 64)
04) பௌத்த ஆர்வலர் தி ராஜகோபாலன் : .
இக்கோவிலின் பின் பாதாதிட்டை (மேடு) சிதைந்துள்ளது, இக்கோவில் ஆதியில் புத்தர் கோவிலே. (போதி மாதவர் பக்கம் 163)

வெள்ளி, ஜூன் 03, 2016

தமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்

மைலாப்பூரில் பௌத்தாலயம்


அன்பு பொன்னோவியம் 
ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள்  சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற்கு அவர் அளிக்கும் விளக்கங்கள்.
01. புத்த கோஷர் 'விசுதி மக்க' என்ற தம் நூலில் மயூர சத்த பட்டணம் என குறிப்பிட்ள்ளர் .
02. புத்த தத்த தேரர் 'பபஞ்ச சூடாமணி' என்ற நூலை மயிலையில்   இருந்த ஒரு விகாரையில் எழுதியனார்.( உணவில் ஒளிந்திருக்கும் சாதி  - பக்கம் 330)
ஆராய்சி பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் புத்த தத்த தேரர் குறிப்பிடும் மயூரபட்டணம் என்பது மாயவரமாக இருக்கலாம் என்றுரைக்கிறார். அதற்க்கு அவரின் விளக்கம்
01. மயூரபட்டணம் சில பிரதிகளில் மயூரரூபப் பட்டணம் என்றும் எழுதப்பட்டுள்ளது. எனவே  இது மாயவரம் ஆக இருக்கலாம்
02. இவ்வூரில் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் பௌத்தவிகாரையும் பௌத்தர்களும் இருந்தனர்.
மயூரபட்டணம் என்பது சென்னையில் உள்ள மயிலாப்பூர் என்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாயவரம் என்றும் பல அறிஞர்களிடம் இருவேறு கருத்துகள் நிலவுகின்றது. உதாரணமாக

K.R.சினிவாசன் கண்காணிப்பாளர், சென்னை தொல்லியல் துறை 
மயிலாப்பூர் கிறிஸ்துவ நூற்றாண்டு முன் பௌத்த முக்கியத்துவம் பெற்ற இடங்களில் ஒன்றாக இருந்ததாக தெரிகிறது.  மயில் ஆர்ப்பு என்ற சொல்லின் மருவு தான் மயிலாப்பூர். அதாவது மயில்கள் ஆரவாரம் செய்யும் இடம் என்று பொருள். புத்த கோஷர் எழுதிய 'விசுதி மக்க' (Way of Purity - தூய்மை வழி) என்ற தம் நூலில் மயூர சத்த பட்டணம் என்ற சொல் பல இடங்களில் காணப்படுகின்றது.
Ayacito sumatina therena bhadanta Buddhamittena pubbe Mayurasuttapattanamahi saddhim vasantena;
Ayacito sumatina therena bhadanta jotipalena Kancipura disu maya pubbe saddhim vasantena;
விசுதி மக்க என்ற பாரதிய வித்யா பவன் பதிப்பு முன்னுரையில் (PP XVII and XVIII)  இந்த வர்ணனைகளில் இருந்து பௌத்த அறிஞர் புத்த மித்திரர் மற்றும் ஜோதி பால மயிலாப்பூர் தங்கினார் என்பது தெளிவாக தெரிகிறது. அவர்கள் அவரது சமகாலத்தவர்கள்

விசுதி மக்க (பாரதிய வித்யா  பவன் பதிப்பு பக் 506) புத்த கோசரின்  சொந்த ஊர் மொரண்டக கேதக (Morandakhetaka) என்றும் அவர் மயூர சத்த பட்டினத்தில் (அ) மயூரரூபா  பட்டினத்தில் சில காலம் வசித்தார் என்றும் கூறுகிறது.இதிலிருந்து ஒரு புத்த மடாலயம் மயிலாப்பூர் நிலவி வந்தது தெளிவாகிறது மொரண்டக கேதக - மயில் முட்டை கிராமம் என்று பொருள் (Story of Buddhisim with special reference to South India பக் 158). 

ஆனால் மதுரையில் உள்ள பிக்கு வண. போதி பாலா (தமிழகத்தில் தற்பொழுது தமிழ் மற்றும் பாலி மொழியில் புலமை பெற்று இருப்பவர்)  அவர்கள் மயிலை சினீ . வேங்கடசாமியின் கருத்தையே  ஏற்கிறார்.

மயிலாப்பூரில் பௌத்த ஆலயம் இருந்ததற்கு  "மயூரபட்டணம்" என்ற சொல்லை தவிர வேறு சான்றுகள் இல்லையா? பண்டித அயோத்திதாசரிடம் 1909 ஆம் ஆண்டு சமரபுரி முதலியார் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் பௌத்த ஆலயம் இருந்ததற்கான ஆதாரம் வேண்டி எழுதியதற்கு மகா பண்டிதர் அளித்த விளக்கங்களும் அவரின் கபாலீஸன் சரித்திர ஆராய்ச்சியும் மயிலாப்பூர் தொன்மையான பௌத்த தளம் என்றுரைக்கிறது.

பண்டித அயோத்திதாசர் 
பண்டித அயோத்திதாசர் சென்னையில் உள்ள மயிலையில் பௌத்த ஆலயம் இருந்தற்க்கு  அவர் அளிக்கும் விளக்கங்கள்.

01. மயிலாப்பூரில் உள்ள தெருக்களும் மடங்களும் பௌத்தர்களின் பெயரால் அழைக்கப்பட்டிருந்தது.
கணிதாதி சகல சாஸ்திர பண்டிதர் மார்க்கலிங்க நாயனார் "சுத்த ஞானம்" என்ற தம் நூலில் குறிப்பிட்டுள்ளார் 
02.மயிலாபூரில் பௌத்தர்கள் குடியிருந்தார்கள்
வள்ளுவர்கள், சாக்கியர்கள் என்ற வம்ச வரிசையோர்கள் விசேசமாக குடியிருந்தார்கள்    - மயிலை குப்புலிங்க நாயனார். 
03. புத்தர் ஆலயம் / புத்தர் சிலை 
கொன்றை ராஜன் என்ற சிற்றரசன் அந்நாட்டு பெயர் விளங்க அல்லமா என்னும் பிரபுவால் ஓர் மடம் கட்டி புத்தர் சிலை நிறுவினார். திரு மயிலை மடத்திற்கு அல்லமா பிரபு மடம் எனவும் குழந்தைவேற் பரதேசி  மடம் எனவும்  பெயர். 
04. பௌத்த பண்டிகை கொண்டாட்டம்  
பௌத்தர்கள் பகவன் புத்தரின் ஞபாக தினங்களை, பண்டு ஈகை, பண்டைய ஈகை, பண்டீகை என்று வழங்கி கொண்டாடி வந்தனர். மயிலாப்பூரில் அல்லமாப்பிரவால்   புத்தர் மடம் கட்டி மூன்று திங்கள்  பௌர்ணமி நாளில் ஆனந்தமாக கொண்டாடிய வந்தார்கள்.
 • பகவன் புத்தர் துறவடைந்த நாள் - மாசி மாத பௌர்ணமி
 • பகவன் புத்தர் மெய் ஞானம் (நிருவாண முற்ற) நாள் - பங்குனி மாத பௌர்ணமி
 • பகவன் புத்தர் இயற்க்கை எய்திய (பரிநிர்வாணமடைந்த) நாள் - மார்கழி மாத பௌர்ணமி
05. பௌத்தர்கள்  பாடிய கரபோலீஸன் பஞ்ச ரத்ன தியான படல் 
வருடந்தோறும் மயிலாபூரில் நடைபெறும் கபாலீஸன் கொண்டாட்டத்தைக் காண மணிவண்ணன் என்னும் அரசன் தனது மனைவி பூம்பாவையுடன் வந்திருந்தான். பூம்பாவை அங்கிருந்த சோலையில்  உலாவும் பொழுது பாம்பு கடித்து இறந்து விடுகிறாள். இதை வள்ளுவர்கள் துக்கங்கொண்டாடினார்கள். இதனை அவ்வருட கபாலீஸன் பாடலுடன் பாடி வைத்தார்கள். (சாக்கியர்கள் பாடிய கர போலீஸன் பஞ்ச ரத்ன தியான படலை இணைப்பில் பார்க்கவும்).
06. மயிலையை  தவிர வேறு எந்த சிவா ஆலயத்திலும் சிவனுக்கு பிச்சாண்டி வேட பெரிய விழா கொண்டாடுவது இல்லை.
சிவனின் பிட்ச பாத்திரத்திற்கு பிரம கபாலம் என்று பெயர். கபாலம் என்பது மண்டையோடு.   மண்டையோடு எப்படி உணவு ஏற்கும் பாத்திரமாகும்?  
இந்த கபாலத்தை எப்படி பெற்றார்?  சிவனுக்கு ஐந்து தலைகள் இருந்தது. அதைப்போல பிரமனுக்கும் ஐந்து தலைகள் இருந்தது. இதனால் பார்வதிக்கு சிவனென்றும், பிரம்மனென்றும் பல நாளாக தெரியாமல் இருந்தது. ஒருநாள் இதை பார்வதி சிவனிடம் உரைத்தாள். இதனால் சிவன் பிரமனின் ஐந்து தலைகளில் ஒரு தலையை கிள்ளி எடுத்து விட்டார். அத்தலை சிவன் கையில் ஒட்டிக்கொண்டது.  எனவே சிவன் கையில் இருக்கும் பாத்திரத்திற்கு (கபாலம் -மண்டையோடு) பிரம கபாலம் என்று பெயர் வந்தது.  இந்த கபாலம் கையில் ஒட்டிக்கொள்ளும் முன் எவ்வாறு உணவு ஏற்றார்?
சித்தார்த்தர் துறவு ஏற்று கர பாத்திரம் கொண்டு உணவு ஏற்றதை, திரித்து  சிவனுக்கு ஏற்றப்பட்டுள்ளது. சதுர் என்பது சது எனவும், கர்ம்மா என்பது கம்மா எனவும், கர்ப்பம் என்பது கப்பம் எனவும் ரகரம் மறைந்து வரும்.   ஆனால் கர, கரம் என்ற சொற்கள் தமிழில் க என வர வேண்டும். அது கை என்று வழங்கப்படுகிறது. கர + போல் = கபோல், கைபோல், கரபோலம்   என்னப்படும். 
மயிலை கபோலீஸன் விழாவை தவிர வேறு எந்த சிவா ஆலயத்திலும் சிவனுக்கு பிச்சாண்டி வேட பெரிய விழா கொண்டாடுவது இல்லை என்பதில் இருந்து திரித்து ஏற்றப்பட்டதை அறிந்துகொள்ளலாம்.   (க .அயோத்தி தாச பண்டிதர் சிந்தனைகள் -- தொகுதி ஒன்று -தலித் சாகித்ய அகாடமி முதல் பதிப்பு - கபாலீஸன்  சரித்திர ஆராய்ச்சி - பக் 85-106) 
தமிழக தொல்லியல் துறை கி.பி 10 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகளை மயிலாப்பூரில் 1972 ஆம் ஆண்டு கண்டுபிடித்தனர். அச்சிலைகள் தலையில்லாமல் இருப்பதால் சென்னை அருங்காட்சி காட்சி கூடத்தில் பார்வைக்கு வைக்காமல், பாதுகாப்பு கிடங்கு அருகில் வைத்து இருக்கின்றனர்.


சிலையமைப்பு
கை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு  சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம் 3  & 3 1/2 அடி உயரம் நூற்றாண்டு கி.பி 10 நூற்றாண்டு. 

இணைப்புகள் 
01. புத்த கோஷர் மற்றும் புத்த தத்த தேரர் பற்றி அறிய - ஆராய்சி பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் பௌத்தமும் தமிழும் தமிழ்நாட்டுப் பௌத்தப் பெரியார்

02. க .அயோத்தி தாச பண்டிதர் சிந்தனைகள் -- தொகுதி ஒன்று தலித் சாகித்ய அகாடமி முதல் பதிப்பு - கபாலீஸ்ன் சரித்திர ஆராய்ச்சி

03. க .அயோத்தி தாச பண்டிதர் சிந்தனைகள் -- தொகுதி இரண்டு - மைலாப்பூரில் பௌத்தாலயம் - பக்கம் 102 முதல் 104. மைலாப்பூரில் பௌத்தாலயம் 

புதன், மே 25, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XIV புத்தவேடு

புத்தவேடு

அமைவிடம்
விகார்                     : புத்தவேடு தியான புத்தர் திருமேனித் திருத்தலம்
ஊர்                           : சி.கே. எஸ் சாலை, புத்தவேடு, இரண்டாம் கட்டளை ஊராட்சி
வட்டம்                  : சிறிபெரும்புதூர் வட்டம்
மாவட்டம்            : காஞ்சீவரம் மாவட்டம் 600128

சென்னைலிருந்து 20 கி. மீ தொலைவில் குன்றத்தூர் அருகில் (அ) போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் சாலையின் இடது புறத்தில் அமைந்துள்ளது புத்தவேடு கிராமம். 

D.C.அகிர் 
புத்தவேட்டில் கண்டறியப்பட்ட தொல்லியல் சான்றுகள்
01. ஒரு புத்தர் சிலை
02. ஒரு கல்வெட்டு மற்றும்
03. ஒரு போதி மரம்.        
பகவன் புத்தர் சென்னைக்கு வருகைபுரிந்தற்க்கு  நேரிடையான ஆதாரங்கள் ஏதுமில்லை, எனினும் பகவன் புத்தர் தமிழகத்தில் இரு இடங்களுக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஒன்று காஞ்சிபுரம் மற்றொன்று புத்தவேடு.

பகவன் புத்தர் காஞ்சிவரத்திர்க்கு அடிக்கடி வருகை புரிந்து தர்மத்தைப் போதித்துள்ளார். அசோக மன்னர் பகவன் புத்தர் வந்து சென்ற காஞ்சிபுரத்தில் ஞாபகார்த்தமாக தூபிகளை நாட்டினார் என்று காஞ்சிபுரத்திற்கு கி.பி 640ல்   வந்த சீனா அறிஞர் யுவாங் சுவாங் குறிப்பிடுகிறார். (Buddhisim in South India பக் 18)    

சீனா அறிஞர் யுவாங் சுவாங் கருத்தை உறுதிபடுத்துவதாக அமைந்துள்ளது சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறையினால் 1970-71ல் காமாட்சி அம்மன் கோவிலின் அருகில் வெட்டப்பட்ட அகழாய்வு குழியினால் கண்டறியப்பட்ட ஸ்துபம்.

       
புத்தர் சிலை

சிலையமைப்பு கை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டு இருக்கிறது சிலை உயரம் 3 அடி உயரம் தோரணம் மகர தோரணம் அரசர் சோழர் கால சிற்பம் நூற்றாண்டு கி.பி 10 நூற்றாண்டு. 


புத்தவேடு கல்வெட்டு முதலாம் கொனேரின் மெய்க்கண்ட சுந்தர பாண்டிய தேவர் கி.பி 1251-64 காலத்தில் இந்த கிராமம் பள்ளி சந்தமாக (கொடையாக) வழங்கப்பட்டது. பௌத்த சங்கத்திற்கு ஊர் முழுவதையும் கொடையாக அளித்துள்ளது. 

தஞ்சையை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த முதலாம் இராஜராஜ சோழன் காலத்தை சார்ந்த 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு மூன்று புத்தர் சிலைகள் நிறுவப்பட்டிருந்ததாகவும் செய்தி கூறுகிறது. ஒரு சிலை மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. 

இக்கல்வெட்டு சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கிறது என்று இலங்கை செய்தி   ஒன்று கூறுகிறது. இதனை மறுக்கிறது சென்னை அருங்காட்சியகம். 


புத்தவேடு விகாரம் 
புத்தவேடு விகாரத்தை நிறுவியவர் வண. முதலக்குவிய இரத்தின ஜோதி தேரோ 11 மே 2003 அன்று நிறுவப்பட்டது. இலங்கையை சேர்ந்த திரு E.W. பாலாசூர்யா மற்றும் திருமதி  ஜெயாபாலா  சூரியா அவர்களின் உதவியால் இவ்விகார் கட்டப்பட்டது. இலங்கை தேவரம் மகா விகாரில் இருந்து 01-06-2006 அன்று கொடையாக கொண்டுவரப்பட்ட புத்தர் அஸ்தி கலசம் இங்கு வைக்கப்பட்டுள்ளது. புத்த கயா போதி மரக்கன்று இங்கு வைக்கப்பட்டுள்ளது. விகாரில் ஒரு பழமையான போதி மரமும் உள்ளது. 


வண. முதலக்குவிய இரத்தின சோதி தேரோ புத்தவேட்டில் 

இந்த கூடு ஏரிக்கரை அருகில் கண்டெடுக்கப்பட்டது.

திங்கள், பிப்ரவரி 01, 2016

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XIII ஏகாம்பரேஸ்வர் கோயில்

ஏகாம்பரேஸ்வர் கோயில் - I

அமைவிடம்
ஊர்                                                  : பெரிய காஞ்சிபுரம்
வட்டம்                                           : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்                                     : காஞ்சீவரம் மாவட்டம்
நகர பேருந்து அருகில் (ஒரு கிலோமீட்டர் தொலைவில்) ஏகாம்பரேஸ்வர் கோயில் உள்ளது.

மதிற்சுவர் 
கோவில் வெளிமதில் சுவர் விஜயநகர அரசனான கிருஷ்ணதேவராயரால் (1509-1530)ல் கட்டப்பட்டது. இக்கோயிலின் வெளிமதில் (கிழக்கு வெளிச்சுற்று சுவர்) கி.பி.1799ல் ஹாச்ஸன்  (HODGSON)என்பவரால் புதுப்பிக்கப்பட்டது. அதில் புத்தர் பரிநிர்வாணம் உருவ சிலை கோயில் மதிற்சுவரின் கீழே வைத்துக் கட்டப்பட்டிருக்கிறது.


A ) வெளிச்சுற்று சுவரில் உள்பக்கமாக உள்ள புத்தர் சிலைகள் 
கோவிலின் வெளிச்சுற்று சுவரில் உள்பக்கமாக தெற்கு கோபுரத்தின் அருகில் ஏழு புத்தர் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. அதாவது உலோகத்திருமேனிகள் (சிலைகள்) காப்பக மையம் (Icon Safety center) அருகில் அமைந்துள்ள மதிற் சுவரில் ஏழு புத்தர் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. ஏழு புத்தர் புடைப்பு சிற்பங்கள் சிந்தனை கையில் அமைந்துள்ளது. கால்கள் செம்பாதி தாமரை அமர்வில் உள்ளது. ஒரு அடி உயரம் கொண்டது. கி.பி எட்டாம்   நூற்றாண்டை சேர்ந்தது.  ஏழு சிற்பங்களில் மூன்று சிற்பங்கள் இரு தோரணங்களை கொண்டும் நான்கு சிற்பங்கள் ஒரே ஒரு தோரணத்தை கொண்டும் உள்ளது.
    
B ) வெளிச்சுற்று சுவரில் வெளிபக்கமாக உள்ள புத்தர் சிலை 
இக்கோயிலின் வெளிச்சுற்று சுவரில் (கிழக்கு) வெளிபக்கமாக பகவன் புத்தர் பரிநிர்வாண சிலை இருந்தது. தென்னிந்தியாவில் பரிநிர்வாண கோலத்தில் உள்ள புத்தர் சிலை இந்த சிலை மட்டுமே (Story of Buddhism with special reference to South India (Published by the Commissioner of Museums, Govt Museum, Egmore, Chennai பக்கம் 100)). இந்த அறிய புத்தர் சிலையின் முகம் மிக மோசமாக சிதைக்கப்பட்டுள்ளது. இந்த பரிநிர்வாண சிலையை கோவில் நிர்வாகம் பழுது பார்த்து சீரமைக்க வெளிச்சுற்று சுவரிலிருந்து எடுத்து வைத்துள்ளது. இன்று வரை இந்த அறிய பகவன் புத்தர் சிலையை கோவில் நிர்வாகம் மீண்டும் புதுப்பித்து வைக்கவில்லை.

சிலையமைப்பு
சமகிடக்கை (சமசயனம்) இரு கால் பாதங்களும் இரு தாமரையின் மீது பதிந்தும், தலைக்கு ஒரு தலையணை காலுக்கு ஒரு தலையணை என இரு தலையணைகளை கொண்டு சமபடுக்கையில் உள்ளதுஞான முடி தீப்பிழம்பாக உள்ளது, தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் இரு தோள்கள் வரை உள்ள தோரணம் அமைக்கப்பட்டுள்ளது சிலை உயரம் 3 அடி உயரம் நூற்றாண்டு  கி.பி 8ஆம் நூற்றாண்டு, அரசு சோழர் கால சிற்பம்.
காலின் வலது புறத்தின் முடிவில் மற்றும் இரு தாமரைக்கு   கீழே மிக சிறிய உருவம் ஒன்று பதிக்கப்பட்டுள்ளது. வணங்கும் முத்திரையுடன் பகவன் புத்தரை வணங்கும் அந்த உருவம் வணக்கத்திற்குரிய ஆனந்தாரக இருக்கலாம். (D.C Ahir Buddhisim in South India பக் 137)  


முன்பிருந்த சிலை - (வண .ஆனந்தரை காணலாம்)  
தற்பொழுது இருக்கும் சிலையின் நிலை 

முனைவர் சி.இரத்தினம்
முனைவர் சி.இரத்தினம் அவர்கள் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் - ஓர் ஆய்வு என்ற தம் முனைவர் பட்ட நூலில் (ஆண்டு 1998) பக்கம் 83ல் அவர் குறிப்பிட்டுள்ளதை மறுப்பதற்கான காரணங்கள்.

01. வெளி சுற்று சுவரின் உட்புறத்தில் தீர்த்தங்கர் சிற்பங்கள் சில பொருத்தி வைக்கப்பட்டுள்ளது.

முனைவர் சி.இரத்தினம் அவர்கள் பகவன் புத்தர் சிலைகளை தீர்த்தங்கர் சிலைகள் என தவறாக குறிப்பிட்டுள்ளார். பரிநிர்வாண நிலையில் தீர்த்தங்கர் சிலைகள்  இதுவரை வடிக்கப்படவில்லை.  சிந்தனை கையில் அமைந்துள்ள சிலைகளில்  சீவர ஆடையும், ஞான முடியும்  மிக தெளிவாக தெரிகிறது. சிலையின் படம் பார்க்க இந்த தொடர்பு பயனளிக்கும்
02. தீர்த்தங்கரின் உருவச்சிலை எவ்வாறு ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்தன என்பது சரிவர தெரியவில்லை. காஞ்சிபுரம் சமணர் வாழ்ந்த ஊர். அங்கு பல சமண பள்ளிகள் இருந்தன. இக்கோவிலுக்கு திருப்பணி நிகழ்ந்த பொழுது சமணர் பள்ளியிலிருந்து தீர்த்தங்கர்கள் உருவச்சிலைகள் கொண்டுவந்து பொருத்தியிருக்கலாம். அவர் எழுப்பும் ஐயத்திற்கு அவருக்கு முன்பிருந்த அறிஞர்கள் அளித்துள்ள விளக்கங்கள்.  

02.01. ஆராட்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி:  பழைய புத்தர் கோயில்களை இடித்து அக்கற்களைக்கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும். அதனால்தான் இப்புத்த உருவங்கள் இச்சுவரில் காணப்படுகின்றன.

02.02 தொல்லியல் அகழாய்வு எகாம்பரேஸ்வர் கோயில் அருகில் உள்ள ஞானப்பிரகாசு சுவாமிகள் மாடத்தின் வளாகத்தில் 1969-70 ஆண்டு நடைபெற்ற தொல்லியல் அகழாய்வு ( KCM -2, KCM-2A, KCM -3) இந்த இடங்கள் பௌத்த இடங்கள் என்று சான்றளிக்கிறது.

02.03 C. மீனாட்சி: ஏகாம்பரேசுவர் கோவிலில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டன. எனவே இதனைச்சுற்றி உள்ள பகுதியில் புத்த மடாலயம் இருந்திருக்க வேண்டும். (பௌத்த கலை வரலாறு G சேதுராமன்  பக்கம் 190)
02.03.01. திரு W.I. தேவாரம் IPS C. மீனாட்சி அவர்களின் கருத்திற்கு சான்றளிப்பதாக ஏகாம்பரேசுவர் கோவிலுக்கு அருகில் உள்ள இடத்தில் காவல் நிலையத்தைக் கட்டத் தொடங்கிய காலத்தில் கிடைத்த பகவன் புத்தர் சிலையை காவல் துறை மாநில உயர் அலுவலர் திரு W.I. தேவாரம் IPS அவர்கள் 1992 ஆம் ஆண்டு சிவக்காஞ்சி காவல் நிலையத்தில் நிறுவியதை கூறலாம். சிவக்காஞ்சி காவல் நிலையம் 
02.03.02. G சேதுராமன்: இக்கோவிலின் வெளிப்பிரகார வடக்கு சுவரின் உட்பகுதியில் உள்ள நந்தவனத்தை ஒட்டிய ஒரு மடத்தில் புத்தரின் உருவம் காணப்படுகிறது. (பௌத்த கலை வரலாறு பக்கம் 191) இச்சிலை தற்பொழுது அங்கு காணப்படவில்லை. வடக்கு சுவர் இடிந்து விழுந்ததால், அச்சிலை சேதமடைந்து விட்டது .என கோவில் நிர்வாகம் எனக்கு பதிலுரைத்தது,  
02.02.03 போதி தேவவரம்: இக்கோவிலின் குளம் எதிரில் அமர்ந்த நிலையில் உள்ள புத்தர் சிலை காணப்படுகிறது.  (தமிழ் பௌத்தம் பக்கம்  41). இச்சிலை தற்பொழுது அங்கு காணப்படவில்லை.
02.03.04 Dr.K.சிவராமலிங்கம்: உடைந்த ஒரு சிறிய புத்தர் சிலை தலைபகுதி இக்கோவில் உள்ள ஒரு அறங்காவலர்களிடம் பாதுகாப்புடன் இருக்கிறது. (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu பக்கம் 72).
கரிகால சோழன்
கரிகால சோழன் இக்கோவிலை பூர்வத்தில் புதுப்பித்ததாக சொல்லப்படுகிறது. கரிகால சோழன் பற்றிய மேற்கோள் பாடல் காஞ்சி காமாட்சியம்மன் கோயில் உள்ளது. கரிகால சோழன்  சிலை  ஏகாம்பரநாதர் கோயில் உள்ளது. மேற்கோள் பாடல் விளக்கம், கரிகால சோழன் பகவன் புத்தரிடமிருந்து (சாத்தான் (அ) சாஸ்தா) தாமரை செண்டை  பெற்றுக்கொண்டு இமய மலையில் தனது வெற்றி அடையாளத்தைப் பொறித்தான் என்று குறிப்பிடுகிறது. சாஸ்தா என்னும் புத்தர் சிலை சென்னை அரசு அருங்காட்சியில் இருக்கிறது.