வியாழன், ஆகஸ்ட் 18, 2011

புத்தரின் போதனைகள் -1


கரணிய மெத்த சுத்தங்
௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே,
எல்லா உயிர்களிடமும் எல்லையற்ற அன்பைக்காட்ட ஒருவர் பழகிக்கொள்ள வேண்டும்

02.தவறான கருத்துகளில் வீழ்ந்துவிடாமல், சீலத்தையும் உள்ளுரு நோக்கையும் கொண்டவராய், புலனாசையை அகற்றுகின்ற ஒருவர் மீண்டும் கருப்பைக்குள் பிறப்பெடுப்பதில்லை.

குத்தக பாட - மங்கள சுத்தங்
01.அறிவிலிகளை அகற்றுதலும், அறிஞர்களுடன் கூடுதலும், மரியாதைக்குரிய இடத்தில் மரியாதை தருவதுமான இதுவே மிகவுயர்ந்த அருள் வாழ்த்தாகும்

02.தீமையை நீறுத்தலும் விலக்கலும், போதையுட்டுவனவற்றைத் தவிர்த்தலும், தம்மத்தில் விழிப்பாகவிருத்தலும் ஆகிய இதுவே மிக உயர்வான அருட்பேறு ஆகும்.

மகாவக்கபாலி, 365 கிளாவத்துகதா
எனக்கு சேவை செய்ய விரும்புவோர், நோயாளிகளுக்குச் சேவை செய்யட்டும்

வசல சுத்தங் -1
01.கோபம், பழியுணர்வு, தீய எண்ணம், பொறமை, தவறான கண்ணோட்டம் மற்றும் ஏமாற்றும் போக்கு ஆகியவற்றை உடைய ஒருவனே தீண்டத்தகாதவன் ஆவான்.

02.தாவரங்களுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன
விலங்குகளுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன
பறவைகளுக்கிடையே பல வகைகளும் இனங்களும் உள்ளன
மீன்கள், பூச்சிகள், பாலுட்டிகள் ஆகியவற்றினிடையே
பல வகைகளும் இனங்களும் உள்ளன ஆனால்
மனிதரிடையே - வேறுபாடே இல்லை

ஆளவக சுத்தம்
செல்வவளம் பெற உழைப்பாளியாய் இருங்கள்
செய்யத்தக்கன செய்யுங்கள்
புகழ்பெற - வாய்மையுடையோ ராயிருங்கள்
நண்பர்களை பெற - தாராளமாயிருங்கள்
மெய்யறிவு பெற - அறிவுற்று தம்மத்தை கேளுங்கள்
வேதனையுறாதிருக்க -தன்னடக்கத்தோடு செயல்படுங்கள்
ஈகை, வாய்மை, பொறாமையுடைமை
ஆகியவற்றைக் கைக்கொள்ளுங்கள்


தேரா காதை  
01.தவத்திலும் பிரம்மச்சரியத்தினாலும், புலனடக்கத்தினாலும், மனக்கட்டுபாட்டினாலும் தான் ஒருவர் உன்னதமானவராவார்.

02.அலங்கரிக்கப்பட்ட இந்த உடலை பாரீர்
இது புண்களின் குவியல்
மெலிந்து தளர்ந்து உறுதி யிழந்த ஒரு கட்டி
சிந்தையை வெகுவாய் ஆட்கொள்ளும் இதனில்
இல்லை எதுவும் நீடிப்பதாக!
இல்லை எதுவும் நீடித்திருப்ப தாக

சம்யுத்த நிகாயம்
01 தொடக்கத்திலும் நடுவிலும் முடிவிலும் - தத்துவ வடிவிலும், பயிற்சி வடிவிலும் நன்மை அளிப்பது  தம்மமே.  தங்கள் கண்களுக்கு முன்னே அறியாமையின் ஒரு சிறு திரையே உள்ள உயரினங்கள் தம்மத்தின் தொடர்பில் வரவில்லை என்றால் அவர்களுக்கு பேரிழப்பு ஏற்பட்டுவிடும். 

02.தற்செயல்தாமோ தீச்செயல்தாமோ
நடத்துகின்றானொரு மானுடன் இங்கெனில்
உற்றசொத்தென அவனுக்குள்ளது
உடனவன்கொண்டு செல்வது இவையே

03.நன்னெறி யாண்டுளதோ ஆங்கு மெய்யறிவு உள்ளது
மெய்யறிவு யாண்டுளதோ ஆங்கு நன்னெறி உள்ளது
மீண்டும் மீண்டும் பிறப்பதோ இறப்பதோ
மீண்டும் மீண்டும் சவக்குழி புகுவதோ
தெள்ளிய பார்வையும் தேறிய பாதையும்
நிப்பானம் உய்விக்கும் பிறப்பினை அறுக்கும்

04அறிவுடையோன் எப்போதும் இன்புறுகின்றான்
தனக்குள் முழுமையாய்ச் சுதந்திரம் அடைகின்றான்
புலனாசைகளால் அவன் கறைப்படுவதில்லை
பற்றற்றவனவன் பாதிப்புறுவதில்லை


தீக நிகாய, மகாபரிநிப்பன சுத்தங்
"தோன்றியவை யாவும் மறையும் தன்மை கொண்டதே;
சோர்வுறாது தொடர்ந்து முயற்சி செய்தவண்ணம் இருங்கள்"
          இதுவே புத்தரின் இறுதி வார்த்தைகள் ஆகும்.

மஜ்ஜிமநிகாயம் 140 ஆவது சூத்திரம்
உண்மைகளை உணர்ந்துக்கொள்ள போதனைகள் புத்தரிடமிருந்து வருகிறதா அல்லது வேறு ஒருவரிடமிருந்து வருகிறதா என்று பார்க்கக் கூடாது. அப்போதனைகளில் உண்மை இருக்கிறதா என்று மட்டுமே பார்க்க வேண்டும்

அந்த்தாலக்கண சுத்த
பிணியுறும் போதோ முதுமையுறும் போதோ
உடல் உம்சொல்லைக் கேட்கிறதோ?
"இல்லை இல்லை - அது கேட்பதில்லை"

ஆணையிட்டுப் பிணியை ஒருவன் அகற்றவியலாது
ஆணையிட்டுப் முதுமையினைக் தடுக்கவியலாது
ஆணையிட்டுப் மரணத்தை நிறுத்தவியலாது

ஓவ்வொரு கணமும் மாறும் இவ்வுலகம்
மாறா ஆன்மாவை பெற்றிருப்பதெங்ஙனம்?
அதனால் இயலாது

சுத்த நிபாதம் 4 .6
உண்மையில் வாழ்க்கை மிகச் சிறிய தேயாம்
ஒருவர் நூற்றண்டுக்குள் மடிவது திண்ணம்
உடமைகள் யாவும் விட்டே செல்வார்
எனினும் எண்ணுவர் ' இது எனதென்றே"


ரோசிதச்ச சுத்தம்
நான் போதிப்பன யாவும்
துன்பமும் அவற்றின் துடைப்புமே


மகாமங்கள சுத்தம்
தந்தை தாயாரைப் பெணிடுதலும்
மனைவி மக்களை காத்திடுதலும்
அமைதியான தொழில்கள் யாவிலும்
ஈடுபட்டு வாழ்தலுமான வாழ்வே
பேறுகள் யாவிலும் நற்பேறாகும்

தம்ம பதம்

01.அவன் என்னை கடுமையாக பேசினான், என்னை  அடித்தான்
என்னை  தோற்கடித்தான், என்னிடமிருந்து எல்லாவற்றையும்
எடுத்துக்கொண்டான் என்பன போன்ற சிந்தனைகளுக்கு
அடைக்களம் தரும் ஒருவரிடம் வெறுப்பு தணிவதில்லை. (3) 

02.இந்த உலகத்தில், வெறுப்பை வெறுப்பால்
ஒருபோதும் அணைக்க முடியாது.
வெறுப்பின்மையால் (அன்பு) தான்
அதை அணைக்க முடியும்.
இதுவே நிலையான தர்மமாகும். (5)

03.இல்லனவற்றை உள்ளனவென்றும்
உள்ளனவற்றை இல்லனவென்றும்
தவறிய கருத்தை பேணிடுவோர்கள்
உண்மையை என்றும் அடைவதேயில்லை (11)

04.குறைபட வேய்ந்த கூரைவீட் டுள்ளே
ஊடுருவிப் பெய்யும் மழையினைப் போலே
முறைப்பட மேம்பா டுற்றிடா நெஞ்சில்
ஊடுருவிக் காமம் உட்புகுந் திடுமே. (13)

05.இங்கும் துன்புறுகிறான் பின்பும் துன்புறுகிறான்
இம்மை மறுமை இரண்டிலும் தீயவன்
துன்பம் உறுகிறான் துன்புற்று அழிகிறான்
தன்னுடைய மாசுறு செயல்களைக் கண்டே (15)

06.மனத்தை கட்டுப்படுத்துவது நன்று
மகிழ்ச்சியை அளிப்பது கட்டுடை மனமே (35)

07.புரிந்து கொள்வதே கடினமாம் மனம்,
மிகு நுட்பமானதால், விரும்புமிடம் அதுதாவும்,
அறிவோர் மனம் அடக்குவோ ராக.;
அடங்கிய மனது மகிழ்ச்சியை கொணரும். (36 )

08.மக்களென் உடைமை வளங்களென் உடைமை
முட்டாள் மனிதன் முழங்குவான் இங்ஙனம்
அவனே அவனுக்குரியவன் என்றேனில்
மக்களா உடைமைகள்? வளங்களா உடைமைகள்? (62 )

09.செல்வவள மாற்றத்தால் சிதைவுறா
உள்ளமே வாழ்விற்சிறந்த பேறாகும்
அசைவிலாமல் புயலைத் தாங்கும்
உறுதியான பறைபோல்
அசைவிலாமல் உறுதிகொள்வர்
அறிஞர் போற்றல் தூற்றலில் (81 )

10.ஆயிரம் யுத்தங்களில் ஆயிரக்கணக்கான
மனிதர்களை வெல்பவனை விட
தம்மைத் தாமே வெல்பவன் தான்
மேன்மை வாய்ந்த போர் வீரனாவான். (103)

11.தமது மூத்தோரை இடைவிடாமல்
மதிக்கும் பக்தி இயல்புடையவர்களுக்கு
நீண்ட ஆயுள், அழகு, மகிழ்ச்சி, வலிமை
என்னும் நான்கு பண்புகளும் வளர்கின்றன (109 )

12.நல்லுரை தம்மால் நமக்கென்ன லாபம்
என்றொரு போதும் எண்ணுதல் வேண்டாம்
துளித்துளி நீரால் குவளை நிரம்பும்
துறவியோ தன்மை மதிப்பால் நிறைகிறார்
சிறுகச் சிறுக தான் என்றால் கூட (122)

13.அனைவரும் தண்டனையைக் கண்டு பயப்படுகிறார்கள்,
அனைவரும் மரணத்தைக் கண்டு பயப்படுகிறார்கள்.
ஆதலால், அனைவரையும் தம்மை போல் கருதி,
கொலை செய்யாமலிருப்பீர்களாக!
கொலை செய்வதையும் ஊக்குவிக்காமலிருப்பீர்களாக! (129 )

14.எவரிடமும் கடுங்சொற்களைப் பயன்படுத்தாதீர்கள்.
அவ்வாறு கடுங்சொற்களுடன் பேசினால் மற்றவர்களும் உங்களிடம்
அப்படியே பேசுவார்கள். கோபமும் விவாதமும் உள்ள சொற்கள் துன்பமே. அதன் விளைவாக உங்களுக்கு தண்டனைதான் கிடைக்கும். (133)

15.தனக்கெந்த நன்மையும்
செய்யாத செயலினையும்,
தீமைமிகு செயலினையும்
செய்வது மிக எளிதே;
அனால்
நன்மை பயப்பதையும்
நல்லதையும் செய்வதற்கு
உண்மையில் மிக கடினம் (163)


16.பசியே பெரும் பிணி (203)
உடல் நலமே பெரும் வரவு,
நம்பிக்கை உரியவர்களே உத்தம உறவினர்கள்  (204)

17.பற்றி லிருந்தே துக்கம் உதிக்கிறது
பற்றிலிருந்தே அச்சம் உதிக்கிறது
பற்றினை முற்றும் விட்டவற்கில்லை
துக்கம்; அச்சம்  அதைவிடக் குறைவே (216)

18.சீலம் உள்நோக்கில் நிறைநிலை உற்றவர்,
எவரவர் தம்மத்தில் நிலைத்து நிற்பவர்
உண்மை உணர்ந்தவர் தன்கடன் கழித்தவர்,
இவரே மக்கட் இனிவராம். (217 )

19.வாய்மைகளில் சிறந்தவை - நான்கு உன்னத வாய்மைகளே
வழிகளில் சிறந்தவை - உன்னத எண் வழிப்பாதைகளே
நிலைகளில் சிறந்தது - நிப்பான நிலையே
மனிதரில் சிறந்தவர் - இவற்றை காண்பவரே (273)

20.புத்தர்கள் வழியை மட்டுமே காட்டுவார்கள் (276)

21." கூட்டுப்பொருட்கள் யாவும் நிலையற்றதே ஆகும்"
உண்மையான ஆழ்நோக்குடன் இதை உணர்ந்தறியும்
ஒருவர் துன்பத்திலிருந்து விடுபட்டவர் ஆகிறார்.
இதுவே தூய்மையடைவதர்க்கான வழி. (277)

22.உண்மையாகவே, தியானத்தினால் தெள்ளறிவு (ஞானம்) உதிக்கிறது. தியனமில்லை என்றால், ஞானம் தேய்கிறது.
பெறுவதும் இழப்பதுமாகிய இந்த இருவழிப் பாதையை அறிந்துக்கொண்டு, ஞானத்தை அதிகரிக்கும் வழியில் ஒருவர் தன்னையே வழிநடத்திக் கொள்ளவேண்டும். (282)

23.தம்மத்தின் தானம் அனைத்து தானங்களையும்  வெல்லக்கூடியது
தம்மத்தின்  சுவை அனைத்து சுவைகளையும் வெல்லக்கூடியது
தம்மத்தின் மகிழ்ச்சி அனைத்து இன்பங்களையும் வெல்லக்கூடியது
விருப்பின் (ஆசை யின்) அழிவு அனைத்து   துன்பங்களையும் வெல்லக்கூடியது (354) 

24.பகைவர் இடத்திலும் நட்புடனிருத்தல்
வன்முறைக் கிடையிலும் அமைதியாயிருத்தல்
பற்றுள்ளோர் இடையிலும் பற்றற்றிருத்தல்
உற்றவ உன்னத மனிதர் என்பேனே (406)

தம்மபதம் முழுவதும் பார்க்க கீழ்காணும் தொடர்பை அழுத்தவும்

குறிப்புகள்

01. புத்த தம்மம் அடிப்படை கொள்கைகள் - டாக்டர் எஸ். வி. எதிரிவீர
- தமிழாக்கம் டாக்டர் வீ. சித்தார்த்த

02. புத்தரும் அவர்தம் போதனைகளும் - சங்கைக்குரிய நாரத தேரர்
 -தமிழாக்கம் - பிக்கு போதிபாலர்

03. விபசன்னா செய்தி மடல் - தம்ம சேது, சென்னை  

செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

புத்தரின் பதில்கள் 3

மனித மாமிசம் உண்ணும்  ஆலாவகன் புத்தரிடம் கேட்டான்? 

இங்கே   மனிதனின் உடமைகளிற் சிறந்தது எது?
எதை நன்றாக பயிற்சி செய்தால் மகிழ்ச்சியளிக்கும்?
சுவைகளில்   மிகச் சிறந்த சுவை  எது?

சுவைகளில் மிகச் சிறந்த சுவை எது?
எப்படி வாழ்ந்தால் சிறந்த வாழ்க்கை எனப்படும்?
இந்த   வினாக்களுக்கு புத்தர் இவ்வாறு  பதிலளித்தார்.

இங்கே   தன்னம்பிக்கையே மனிதனின் சிறந்த உடமை
தம்மத்தை நன்கு பயின்றொழுகினால் மகிழ்ச்சியளிக்கும்
வாய்மையே சுவைகளில் மிகச் சிறந்த சுவை
புரிந்துணர்வோடு வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும்


அடுத்து ஆலாவகன் புத்தரைக் கேட்டான்?
வெள்ளத்தை ஒருவன் கடப்பதெப்படி?
கடலை ஒருவன் கடப்பதெப்படி?
துக்கத்தை ஒருவன் வெல்வதெப்படி?


புத்தர் பதிலளித்தார்
தன்னம்பிக்கையால் ஒருவன்
வெள்ளத்தை கடப்பான்

கவனத்தால் ஒருவன்
கடலை கடப்பான்

உழைப்பால் ஒருவன்
துக்கத்தை வெல்வான்

ஞானத்தால் ஒருவன்
தூய்மை அடைவான்

வியாழன், ஆகஸ்ட் 11, 2011

புத்தரின் பதில்கள் 2


புத்தரின் ஆசிரியர் யார்?


தம்மத்தை போதிக்க காசி செல்லும் வழியில், துறவியாக திரிந்து கொண்டிருந்த உப்பகன் என்ற பெயர் கொண்ட ஒரு துறவி அவரை பார்த்து, நண்பரே! உமது புலன்கள் மிகவும் தெளிவடைந்துள்ளன. உமது உடற்பொலிவு துயதாகவும் தெளிவாகவும் உள்ளது. நண்பரே!

யார் பொருட்டு நீர் துறவு மேற்கொண்டீர்?
உமது ஆசிரியர் யார்?
யாருடைய கொள்கைகளை நீர் பின்பற்றுகீறீர்? என்று கேட்டார்

புத்தர் பதிலளித்தார்
அனைத்தையும் வென்று விட்டேன்
அனைத்தையும் அறிந்து விட்டேன்
அனைத்திலும் பற்றறுத் தேன்
அனைத்தையும் துறந்து விட்டேன்

ஆவாவெலாம் அழித்து நிற்கும்
அரகந்த நிலையில் நானே
அமிழ்ந்து கிடக்கின்றேன்
அனைத்துமே முழுமையாக
அனைத்தையும் நானாய்த் தானே
அறிந்துமே புரிந்து கொண்டேன்

ஆசிரியர் என்றேனக்கு
யாருமே இல்லை இங்கு
நிகராக இருப்பவர் இல்லை
இவ்வுலகத்தில் எவ்விடத்தும்

தெய்வங்கள் உள்ளடங்க
எனக்கெதிர் நிற்க வல்லார்
யாருமே இல்லை இங்கு
மெய்யேதான் நான் இப்பாரில்
அரகந்த னாயிருத்தல்
ஒப்புயர்வற்ற ஆசான்
இங்கு நான் ஒருவனே தான்

பூரண மெய் ஞானம் பெற்றோன்
புவியில் நான் ஒருவனே தான்

தன்மையாடு சாந்தி
மேவிய வாழ்கின்றேன் நான்
தம்ம சக்கரத்தை காசி
நகரிலே நாட்டுதற்குச்
செல்கின்றேன், மரணமில்லாப்
பெருவாழ்வு முரசு தன்னைக்
கொட்டுதற்கே

திங்கள், ஆகஸ்ட் 08, 2011

புத்தரின் பதில்கள் -1புத்தரென்பவர் யார்?

ஒரு சமயம் துரோணர் என்ற அந்தணர் புத்தரை அணுகி வினவலானார்.

வணக்கத்திற்குரியவரே, தாங்கள் ஒரு தேவரா?
இல்லவே இல்லை, அந்தணரே. நான் ஒரு தேவனல்லன் என்று பதிலளித்தார் புத்தர்

அப்படியானால், போற்றுவதற்குரியவரே, தாங்கள் ஒரு கந்தர்வரா இருப்பீர்களா?
இல்லவே இல்லை, அந்தணரே நான் ஒரு கந்தர்வனல்லன்

அப்படியானால், தாங்கள் ஒரு யகசரோ?
இல்லவே இல்லை, அந்தணரே நான் ஒரு யக்னல்லன்

அப்படியானால், போற்றுவதற்குரியவரே, தாங்கள் ஒரு மனிதர்தான?
இல்லவே இல்லை, அந்தணரே நான் ஒரு மனிதனல்லான்

அப்படியானால், போற்றுவதற்குரியவரே, வணங்கி கேட்டுக்கொள்கிறேன், தாங்கள் யார்?
புத்தர் தனது மறுமொழியில், தேவன், கந்தர்வன், யக்சன் (அ) மகான் கட்டாயமாக பிறப்பெடுக்க வைக்கும். மானமாசுக்களை எல்லாம் அழித்தது விட்ட ஒருவர் தாம் என்று கூறியதுடன்.

" ஆசைக்குரிய அழகுத் தாமரை
நீரினால் தூய்மை இழந்திடுவ தில்லை"
நாவிவ் வுலகினால் மாசடைவ தில்லையால்
உத்தம அந்தணா நானொரு புத்தன்"
என்றார் புத்தர்
நிபாத சுத்த

~*~ புத்தர் தம்மை இந்துக்களின் கடவுளான மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறிக்கொள்ளவில்லை. மீண்டும் மீண்டும் பிறப்பவரே விஷ்ணு என்று பகவத் கீதை கூறுகிறது.

வெள்ளி, ஆகஸ்ட் 05, 2011

புத்த மார்க்க வினா விடை-3


க. அயோதிதாஸ் பண்டிதர் எழுதியது.

01 . புத்தராகிய சற்குரு ஞான நீதிகளைப் போதித்து வந்தார் என்பதில் ஞானம் என்பதின் பொருள் என்ன?
ஞானம் என்பது அறிவு என்னும் பொருளைத் தரும். அஃது சிற்றறிவு என்றும் பேரறிவு என்றும் இரு வகைப்படும்.

02. சிற்றறிவு என்றும் பேரறிவு என்றும் இரு வகை அறிவுகள் உண்டோ?
உண்டு, அதாவது, சிறு வயதுள்ள மனிதன் என்றும் பேரு வயதுள்ள மனிதன் என்றும் தேகியை (தேகத்தை) குறிப்பது போல அறிவினிடத்திலும் விருத்தி பேதத்தால் இரு வகைகள் உண்டு.

03. சிற்றறிவு என்பது என்ன?
தங்கள் மனதை வீண் விஷயங்களில் செல்லவிடாமலும், தேகத்தைச் சோம்பல் அடையச்செய்யாமலும், உலோகங்களால் செய்யுங் கருவிகளையும், மரங்களால் செய்யுங் கருவிகளையும் கண்டுபிடித்து, உலகில் உள்ள சீவராசிகளுக்கு சுகம் உண்டாக்கி வைப்பது அல்லாமல், தங்களையும் தங்களை அடுத்தோர்களையும் குபேர சம்பத்தாக வாழ்விக்கச் செய்யும் ஓர்வகை உத்திக்கு சிற்றறிவு என்று கூறப்படும்.

04. அவ்வகை சிற்றறிவினால் கண்ட வித்தைகள் எவை?
பஞ்சை நூலகத் திரிப்பதும், நூலை ஆடையாக்குவதும், மண்ணிற் பலன் உண்டாக்குவதும், மண்ணை இரும்பாக மாற்றுவதும், இரும்பை இயந்திரங்களாக்குவதும், இயந்திரங்களால் புகைரதம், புகைகப்பல், மின்சாரதந்தி, மின்சார ரத முதலிய சூத்திரங்களை உண்டு செய்வதேயாம். இவ்வகை சிற்றறிவுடையவனை சூஸ்திரனென்றும், சூத்திரனென்றும் கூறப்படும். இதுவே விருத்தி ஞானமாம்.

05 பேரறிவு என்பது என்ன?
சீவராசிகளாகக் தோன்றும் யாவும் அநித்தியம் (நிலையற்றது) என்று அறிந்து மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய முப்புரங்களையும் அறிந்து எல்லாக் கவலையும் அற்று இருப்பதை பேரறிவு என்றும் சொருப ஞானம் என்றும் உண்மை என்றும் கூறப்படும்.

06 இவ்வகை பேரறிவினால் உலகில் உள்ளோருக்கும் தனக்கும் உண்டாகும் பயன் என்ன?
தனக்கு உண்டாகும் பிறப்பு, பிணி. மூப்பு, மரணம் என்னும் நான்கு வகைத் துக்கங்களை ஜெபித்துக்கொள்வது அல்லாமல் தன்னை அடுத்தவர்களுக்கும் சுகவழியைப் போதிப்பான். இவ்வகை பேரறிவாளனை வடமொழியில் பிராமணன் என்றும் தென்மொழியில் அந்தணன் என்றும் கூறப்படும்.

07 அஞ்ஞனம் என்பது என்ன?
அஞ்ஞனம் என்பது அறிவின் விருத்தி இல்லாமல் என்று கூறப்படும். அதாவது தன்னுடைய அறிவினால் ஒன்றை விசாரித்து தெளியாமல் ஒருவன் சொல்லுவதை நம்பிக்கொண்டு பேசுவது, ஒருவன் எழுதி வைத்திருப்பதை நம்பிநடப்பது ஆகிய செய்கைகளை அஞ்ஞனம் எனபபடும்.

08 உலகத்தில் எழுதிவைத்திருக்கும் வேதங்களும் புராணங்களும் அவற்றின் போதனைகளும் அஞ்ஞனம் ஆகுமோ?
அவைகளை வாசித்த நிலையிலும், கேட்ட நிலையிலும் நிற்பது, கற்கண்டு என்று எழுதியிருப்பதையும் கற்கண்டு என்று போதித்த வார்த்தையும் கேட்டுக்கொண்டு அதை விசாரியாமலும், சிந்தியாமலும், கற்கண்டு கற்கண்டேன்னும் பொருகளை எல்லோரும் காணக்கூடியதாய் இருந்தாலும் அதின் இனிப்பாகிய சுவையை ஒவ்வொருத்தனும் சுவைத்தறிந்துக் கொள்ளக் கூடியவனாக இருக்கிறான்.

09. மெஞ்ஞானம் என்பது என்ன?
வாசித்தவைகளையும், கேட்டவைகளையும் சிந்தித்து தெளிவடைதலும் கற்கண்டு என்பவை எதிலிருந்து உற்பத்தியாகிறது? அதின் நிறம் ஏத்தகையது? அதின் சுவை ஏத்தகையது? என்று தேடி வாசரித்து சுவைத்து அறிந்த நிலையே மெஞ்ஞானம் எனப்படும்.

10. புத்தர் மரணம் அடைந்தார் என்றும், புத்தர் நிருவாணம் அடைந்தார் என்றும் கூறும் படியான இருவகை வார்த்தைகளின் பேதம் என்ன?
துன்பத்திற்கு இன்பம் எதிரிடையாகவும், துக்கத்திற்கு சுகம் எதிரிடையாகவும் இருப்பது போல, மரணத்திற்கு நிருவாணம் எதிரிடையாயிருக்கின்றது. எக்காலத்தும் நித்திரையில்லாமல் விழித்திருப்பவனை போலும், இரவென்பது இல்லாமல் பகலவனாய் இருப்பது போலும், பிறவியை நீக்கி நித்திய ஜீவனானவர்களுக்கு நிருவாணம் அடைந்தோர் என்றும், தேகத்தில் நோய்க்கண்டு பலவகைத் துன்பங்களால் கபமீறி சுவாசம் அடைக்குங்கால் பொருளின் பேரிலும், பெண்சாதி பிள்ளைகள் பெயரிலும் இருக்கும் பாசம் இழுத்து, பெரு நித்திரை உண்டாக்கி அநித்திய சிவனையடைந்து பிறவியின் ஆளானோர்களை மரணம் அடைந்தார் என்றும் கூறப்படும். ஆசாபாச பற்றுகளில் அழுந்தி மரணமடைந்தோர்களுக்கு பிறவியின் துன்பமும், ஆசாபாசங்கள் அற்று நிர்வாணமடைதோர்களுக்குப் பிறவியற்ற இன்பமும் உண்டாம்.

11. நிருவாணம் என்பது என்ன?
பொய்மை ஆகிய தேகத்திக்பேரில் அணைந்துள்ள வஸ்திரங்கள் எல்லாவற்றையும் கழற்றி எறிந்து விடுவதை தேக நிருவாணம் என்றும்; பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை என்று மனதில் அணைந்துக் கொண்டிருக்கும் பற்றுக்களை கழற்றி எறிந்துவிட்டு உண்மையாகிய ஒளியுற்றலை நிருவாண நிலை என்றும், அந்தர நிர்வாணம் என்றும், எல்லோரும் தரிசிக்க உண்மை ஜோதி வானோக்கி எழுதலை மகா பரிநிர்வாணம் என்றும் கூறப்படும். (ஆசை என்னும் இளமையிலிருந்து ஆசையற்று முத்தினான், முத்திபெற்றான், கடைத்தேறினான், மோக்கமுற்றான் நிருவாணமடைந்தான் என்று வழங்கி வருகிறார்கள்) இவ்வகையான சுகவழியை ஆதியில் போதித்தவுரம், அதின் அனுபவமாகிய சுகமுக்தியைக் காண்பித்தவரும், சற்குருவான புத்தராகையால் அவர் போதித்த சுயக்கியான வழியினின்று நிருவாணமுற்ற பின் அடியார்களை ஆதிக்க சமமானவர்கள் என்றும், சமஆதியானார்கள் என்றும், சமாதியானார்கள் என்றும் வழங்கி வருகிறார்கள்.

12. தன்னிற்றானே உண்மை அறிந்து சுகமடைய வேண்டுமேயல்லது பிறரால் யீடேற்றம் உண்டாவதில்லை என்னும் சுயக்கியானத்தைப் போதித்த புத்தரவர்கள் இவ்வுலகத்தில் எத்தனை வருடமிருந்தார்?

சாக்கிய சக்கரவர்த்தி திருமகனாக பிறந்து பதினாறாவது வயதில் அசோதரை என்னும் மலையசன் புத்திரியை விவாகம் செய்து, இருபதாவது வயதில் இராகுலன் என்னும் ஓர் புத்திரனைப் பெற்று, இருபத்தியோராவது வயதில் அரசாங்கத்தையும் தனது பந்துமித்திரரையும் விட்டு அரச மரத்தடியில் நிலைத்து தன்னையறிந்து காமமென்னும் மன்மதனையுங் காலனென்னும் மரணத்தையுங் செயித்து, முப்பதாவது வயதில் உண்மையின்று உலகேங்கும் சுற்றி சுயக்கியான சங்கங்களை ஏற்படுத்தி ஜீவகாருண்ய வாழ்க்கையையிருத்தி விட்டு, எண்பத்தைந்தாவது வயதில் காசியில் கங்கைக்கரை என்று வழங்கும் பேரியாற்றங்கரை பல்லவ நாட்டில் சோதிமயமாக எல்லோரும் தரிசிக்கும்படி நிருவாண திசையடைந்தார்.

13. பிறவி என்பது என்ன?
அணுவிலும் சிறிய சீவராசிகள் கண்களுக்குத் தோன்றும் உருவமாக எழும்புவதைப் பிறப்புபென்றும், அந்த தோற்ற உருவம் அழிந்துவிடுவதை இறப்பென்றும் கூறப்படும். இதில் கண்களுக்கு தோன்றும் தேகத்திற்கு பொய்மையென்றும், அதை தோற்றிவிக்கும் சத்துக்கு உண்மையென்றும், இருவகைகள் உண்டு. இவற்றுள் தேகத்தை தானென்று அபிமானித்திருக்கும் வரையில் பிறவியென்னும் துக்க சக்கரத்தில் சுழன்று திரிவான். தேகத்தை தானல்லவென்று நீக்கி உண்மையாகிய தன்னையறிந்தவன் பிறவியென்னும் துக்க சக்கரத்தை விடுவித்துக் கொள்ளுவது மல்லாமல் தேகனென்று சொல்லும் வார்த்தை நீங்கி தேவனென்று சொல்லும் மேன்மையடைவான்.

14 சிலர் தன் முயற்சியினால் சுகம்பெரும் வழிகளை நம்பாமல் மணி மாலைகளைக் கொண்டு ஜெபித்திருப்பது என்ன?
ஒரு வசனத்தை பலமுறை சொல்வதே ஜெபமாகும். அவற்றுள் எண் வழுவாமல் காக்க மணிமாலையை சுழற்றுவதன்றி மற்றியாதும் இதில் பயனில்லை.

15. கடவுளை வழிபடுவது என்றால் என்ன?
அவர் உலகில் பிறந்து நமக்கு அருளிய நியாயங்களில் நாம் நின்றோழுகுவதே கடவுளை வழிபடுவதேயாகும்.

16 கடவுளை மாத்திரம் நம்பிக்கொண்டு முக்திபெற முடியாதோ?
கடவுள் என்பதற்கு நன்மெய் என்ற பொருளிருக்க அம்மொழியை மட்டும் விசுவாசித்து வாக்கு, மனம், காயத்தால் தீயச்செய்கையில் நிலைப்பவர்க்கு முக்தியே இல்லை.

17 அறிவே ஆனந்தம் எனபதென்ன?
அறிவால் சர்வமும் உணர்ந்து புண்ணியத்தைக் கைக்கொள்வது மக்களின் முதற் பேறாகும் இதனை அறிவின் மயமென்றும் சொல்லப்படும்.

18 . இவைகளை வகுத்தார் யார்?
ஆதியங் கடவுளாகிய சாக்கைய புத்த சுவாமியே.

19 . இவ்வகை பேரானந்த ஞானங்களைப் போதித்த சற்குரு நிருவாண திசையடைந்து எத்தனை வருடமாகிறது?
இந்தகலியுகம் 5057 மன்மத - சித்திரை மாதம் ( மே 1955 ) பௌர்ணமி திதி வரையில் 2499 வருடமாகிறது. (தற்போது சித்திரை மாதம் மே 2011 பௌர்ணமி திதி வரையில் 2555 வருடமாகிறது)

20 . புத்தர் போதித்துள்ள அட்டாங்க மார்க்கத்தில் மனதையடக்க மந்திரங்கள் ஏதேனும் உண்டோ?
உண்டு. மந்திரம் என்பதற்கு ஆலோசித்தல் என்னும் பொருளை தரும் அதாவது, மனமென்னும் சத்துவிழிப்பில் எங்கிருந்து உதிர்கின்றன, நித்திரையில் எங்கு அடங்கின்றன, சொப்பனத்தில் எங்கு விரிகின்றன வென்று ஆலோசித்தல் மந்திரம் எனப்படும்.

21 . மனம் அடங்குவதற்கு தியானமாகிலும் ஏதேனும் உண்டோ?
உண்டு. தியானம் என்பதற்கு கியானம், ஞானமென்னும் பொருளைத் தரும், அதாவது மனதைப் பேராசையிற் செல்லவிடாமலும், பொறமையில் சூழவிடாமலும், வஞ்சினத்தில் நிலைக்கவிடாமலும், காம இச்சையில் விழவிடாமலும், ஜாக்கிரதையாக ஆண்டுவரும் அறிவுக்கு தியானம் எனப்படும்.

22 . மனம் அடங்குவதற்குப் பூசைகள் ஏதேனும் உண்டோ?
இல்லை. பூசையென்பதும், பூசனையென்பதும், பூசலென்பதும் தேகத்தை தடவலென்னும் பொருளைத்தரும். அதாவது கல்வியை கற்பிக்கும் குருவையானாலும், கை தொழிலை கற்பிக்கும் குருவையானாலும், ஞானத்தை போதிக்கும் குருவையானாலும் நெருங்கி அவருடைய கை, கால் முதலிய அவயங்களைப் பிடித்தலுக்கு பூசதலென்று பெயர். இவ்வகை பூசைக்கும் மனதுக்கும் யாதொரு சம்பந்தமில்லை.

23 . அருகமதம் வேறு, புத்த மதம் வேறென்று கூறுகின்றார்களே அதின் விவரம் என்ன?
வட தேசங்களில் உள்ளவர்கள் புத்தரென்றும், தென் தேசங்களில் உள்ளவர்கள் அருகரென்றும் (பல காரியத்திலும் நானகருனல்ல என்றும்) வழங்கி வருகின்றார்கள்.

24 . சமணமதம் என்பது என்ன?
புத்த தருமத்தை அனுசரித்து சங்கங்களில் சேர்ந்து மடத்தில் வாழ்கிறவர்கள் சகல சீவராசிகளின் பேரிலும் அன்புவைத்து சமமனமுண்டாகி வாழ்ந்தவர்கள் ஆகையால் சமனர் என்றும் சமணாள் என்றும் அழைக்கப்பெற்றார்கள்.

25 . சமணர்களை கழுவேற்றி விட்டதாக சொல்லுகின்றார்களே அதின் விவரம் என்ன?
வேட பிராமணர்கள் தங்கள் சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதங்களை உறுதி செய்துக் கொள்ளுவதற்கு சிற்றரசர்களையும் பெருங்குடிகளையுங் தங்கள் வயப்படுத்திக் கொண்டு புத்த தருமத்தை அனுசரித்து வந்தவர்களைக் கழுவிலேற்றிக் கொன்றதுமல்லாமல் பலவகை துன்பங்களையும் செய்து வந்தார்கள்.

26 . வேடபிராமணர்கள் இந்தியாவில் மாத்திரமா பௌத்தர்களை கழுவிலேற்றி வதைத்தார்கள் ஏனைய கண்டங்கட்கு போகவில்லையா?
எல்லா கண்டங்கட்கும் குடியேறி அக்கண்டங்களில் சிறந்து விளங்கிய சமணர்களையும் அவர்களை ஆதரித்து வந்தவர்களையும் கழுவிலும், மரத்திலும் கொன்று வேதங்கட்கு சுதந்திரம் பெற்று அவ்வக் கண்டத்தார்களைப் போலவே நிற்கின்றார்கள்.

27 . கழுவிலேற்றி கொன்ற சமணர்கள் நீங்கலாக மற்றவர்கள் எங்கு போய்விட்டார்கள்?
சற்குருவின் அருளினால் வேறு வேறு மதத்தவர்களாகிய அரசர்கள் இத்தேசத்தை வந்து கைபற்றிக்கொண்ட படியால் சமணர்களையும் அவர்களை சார்ந்தவர்களையுங் கொல்லுவதற்கு ஏதுமில்லாமல் பறையர் பறையரென்று தாழ்த்தி வஞ்சிளமென்னுங் கழுவிலேற்றி வதைத்து வருகின்றனர்.

28 . ஜைன மாதம் என்பது என்ன?
புத்தருடைய ஆயிர நாமங்களில் ஜைரரென்னும் பெயரும் அடங்கியிருக்கின்றன. அப்பெயரை வகுத்திக்குங் கூட்டத்தார் புத்த தருமத்திற்கு சிலவற்றையும் வேட பிராமணர்கள் ஏற்படுத்தியிருக்கும் மதக்கட்டுப்பாடுகளிற் சிலவற்றையும் அனுசரித்துக்கொண்டு ஜைத மதத்தரென வழங்கி வருகிறார்கள்.

29 . சின்னசாமி என்ற பெயரும் அதற்கெதிர் பெரியசாமி என்ற பெயரும் பௌத்தர்கள் வழங்குவதின் காரணம் என்ன?
தமிழ்மொழில் (ஜினசாமி) யாகிய புத்தரை சினசாமி சின்னசாமி சின்னச்சாமி என்றும் சாமிகட்கெல்லாம் முதலுமதிகாரியு மானதால் மகாசாமி என்றும் பெரியசாமி என்றும் வழங்குகிறார்கள். இதன் அர்த்தமுணராதார் சாமியில் சின்னதும் பெரியதும் உண்டோ என்று கேழ்க்கிறார்கள்.