திங்கள், செப்டம்பர் 19, 2016

மூன்று சங்கங்கள்

மதுரையில் 10,000 க்கும் மேற்பட்ட பௌத்த சங்கங்கள் இருந்தது. ஆனால் மதுரையில் மூன்று சங்கங்கள் (முதற் சங்கம்  நடு சங்கம் கடை சங்கம் என) இருந்தது என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை. (பண்டித அயோத்திதாசர் சிந்தனைகள் - தொகுதி இரண்டு - சமயம் - பக்கம் 538 )
01.  முதற் சங்கம் இருந்தது என்பதற்கு குறிப்புகள் ஏதும் கிடையாது.
02. அச்சங்கங்கள் எந்த மதத்தினை சார்ந்தது என்று திடம்பட கூற ஆதாரம் ஏதும் கிடையாது. 
03. தமிழ் சங்கங்கள் இருந்தது என்று ஏற்றுக்கொண்டாலும் அவை முதற் சங்கம், நடு சங்கம், கடை சங்கம் என்று வழங்கப்படவில்லை. அவைகள் முதற் சங்கம், இரண்டாம் சங்கம், மூன்றாம் சங்கம் என்றே வழங்கப்படும்.
04. கடை சங்கம் என்ற பின் நான்காம் சங்கம் தோன்றாது. ஆதாரம் அளிக்க வழியின்றி கடை சங்கம் என்று நிறுத்துக்கொண்டனர். 
05. தமிழ் மொழியை வளர்த்தவர்களும் சத்திய தன்மத்தை பரவ செய்தவர்களும் சமண முனிவர்கள். ஆதலினால் அவர்கள் கொண்டாடி வந்த புத்த, தம்ம, சங்க என்னும் முத்திரை மணிகளை முச்சங்கங்கள் என மாற்றிவிட்டார்கள். அதாவது முதலாவது தோன்றியது புத்தர், நடுவாக தோன்றியது தம்மம், கடைசியாக தோன்றியது சங்கம். இத்தனையே முத நடு கடை சங்கம் என வழங்கிவந்தார்கள்.
06. மெய்க்குருக்களின் போதனைகளையும் செயல்களையும் பொய்க்குருக்கள் மாறுபடுத்தி வயிறு பிழைக்க முயன்று முச்சங்களின் காலத்தை 10,000 வருட கணக்கை எழுதி வைத்திருக்கின்றார்கள். 100 வருட கணக்கை நுட்பமாக எடுத்து வரையறுத்து கூற வகையற்றவர்கள் 10,000 வருட கணக்கை எந்த அரசாங்க பதிவில் பதிந்து வைத்திருந்தார்கள்.  10,000 வருட கணக்கை எழுதி வைத்தவர்கள் எந்த யுகம் முதல் எது வரையில் என்பதை ஏன் எழுதாது விட்டனர்   

  • 4,500 ஆண்டுகள்    - முதற் சங்கம் 
  •  3,500 ஆண்டுகள்   - நடு சங்கம்   
  • 2,000 ஆண்டுகள்  - கடை சங்கம் 
  •  10,000 ஆண்டுகள்   - முச்சங்கம்
07. தமிழ் மொழியையும் இலக்கணத்தையும் அசோக அரசன் காலத்தில் மதுரையில் பிரபலபடுத்தபட்டதா அல்லது அசோக அரசன் காலத்திற்கு பின்  பிரபலபடுத்தபட்டதா என்பதை கல்வெட்டு சாசனங்கள் மற்றும் செப்பேடுகள் ஆராய்ச்சி செய்தால் விளங்கும்.
08. முச்சங்கங்கள் என்று பெயர் கொடுத்தவர்கள் சங்கத்தோரா அல்லது மக்களா?
09. முச்சங்கங்கள் மதுரையில் எங்கு நிறுவப்பட்டது? இதற்கான கல்வெட்டு ஆதாரம் எதும்  உண்டா?
10. ஞான நூல்களில் தோன்றிய முச்சங்கங்கள் என்னவென்றால் 
  • முதற் சங்கம் - ஓர் குழந்தை பிறந்தபோழுது அமுது ஊட்டி அன்னம் அளிக்க கூடும் கூட்டம் 
  • நடு சங்கம் - இல்லறமேற்கும் மணமக்களை வாழ்த்த கூடும் கூட்டம் 
  • கடை சங்கம் - இறந்த பின் கூடும் கூட்டம் 
ஆதாரம் - பட்டினத்தார் பாடல் 
முதற்சங்க முதூட்டு   மொய்குழு லார் தம் மெய்
நடுச்சங்க நல்விலங்கு பூட்டுங்
கடைச்சங்க  மாம்போத  னவூது  மம்மட்டோ விம்மட்டே நாம் பூமி வாழ்ந்த நலம்  

வெள்ளி, செப்டம்பர் 09, 2016

பகவன் புத்தரின் வருகை இலங்கை மற்றும் தென்இந்தியா

முனைவர் பிக்கு போதிபால அவர்கள் புத்த வேட்டிலும் மேலும் பல இடங்களிலும் அடிக்கடி அவர் கூறியது. காஞ்சிவரம் மற்றும் புத்தவேடு ஆகிய இவ்விரு இடங்களுக்கு பகவன் புத்தர் வந்து தங்கிருந்து பின் இலங்கைக்கு சென்றார் என்று. ஆனால் அவர் மொழியாக்கம் செய்த தீப வம்சம் என்ற நூலில் அதற்கான எந்த குறிப்பும் இல்லை.

இலங்கை வரலாற்றை கூறும் முதல் பாலி நூல் தீபவம்சம் என்பதால் மகாவம்சம் தீபவம்சத்தில் பகவன் புத்தர் இலங்கைக்கு மூன்று முறை வருகை புரிந்ததாக குறிப்பிடுவதை அப்படியே வழிமொழிகிறது. மூன்று முறையும் பகவன் புத்தர் வான்வழியாக இலங்கை சென்றதாக குறிப்பிடுகிறது. முதல் வருகை - புத்த நிலையை அடைந்த ஒன்பதாவது மாதம் இரண்டாவது வருகை -புத்த நிலையை அடைந்த ஐந்தாவது ஆண்டு மூன்றாவது வருகை -புத்த நிலையை அடைந்த எட்டாவது ஆண்டு.

தீபவம்சம் நூல் குறிப்பு
01. நிப்பான பேற்றை அடைந்த புத்தர் ஞானக் கண்களால் இலங்கையை கண்டார் (தீப வம்சம் இயல் ஒன்று செய்யுள் 45).

02. புத்தர் பெருமான் தனது இருத்தி (சித்தி) ஆற்றலால் வானில் மேலேழும்பி ஜம்பு தீபம் என்ற இந்திய நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தார் (தீப வம்சம் இயல் ஒன்று செய்யுள் 49).
ஆனால் பெருபான்மையான பௌத்த அறிஞர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் இக்கருத்தை ஏற்கவில்லை. காரணம்
01. பகவன் புத்தர் இலங்கைக்கு மூன்று முறை சென்றதாக தீபவம்சம் மற்றும் மகாவம்சம் ஆகிய இலங்கை நூல்கள் மட்டுமே கூறுகின்றன. தீபவம்சம் மற்றும் மகாவம்சம்களை தவிர வேறு சான்றுகள் ஏதுமில்லை. 
02. பகவன் புத்தர் வெறும் காலோடு பல மைல்கள் நடந்தே சென்று இருக்கிறார். மாட்டு வண்டியை கூட பயன்படுத்தியதில்லை. (அறிவர் அண்ணல் அம்பேத்கர்)   
தென்இந்தியா / காஞ்சிவரம் 
01.  கி பி 642ல் பல்லவர் காலத்தில் தமிழகம் வந்த சீன அறிஞர் யுவான் சுவாங் தாதகர் (புத்தர்) காஞ்சிக்கு அடிக்கடி வந்ததாக குறிப்பிடுகிறார். காஞ்சியில் 100 அடி உயரம் கொண்ட பௌத்த இஸ்துபம் இருப்பதை குறிப்பிடுகிறார். அசோகர் பகவன் புத்தர் சென்ற இடங்களில் எல்லாம் இஸ்துபங்களை நிறுவியதால், பகவன் புத்தர் காஞ்சி வருகை புரிந்ததாக குறிப்பு எழுதியிருக்கலாம். ஏனெனில் பகவன் புத்தர்  காஞ்சிபுரத்திற்கு வந்ததற்கு யுவாங் சுவாங் குறிப்பை தவிர வேறு சான்றுகள் ஏதும் இல்லை. ஆனால் தொல்லியல் துறையினால் இஸ்துபம் கண்டறியப்பட்டது (பார்க்க காமாட்சியம்மன் கோவில் கட்டுரை)    
02. பகவன் புத்தர் காஞ்சிக்கு வந்ததற்கு எந்த மொழி நூல்களிலும் சான்றுகள் இல்லை. 01. திரிபீடகம் 02. பாலி இலக்கிய நூல்கள் 03. தமிழ் இலக்கிய நூல்கள், 04. வடமொழி நூல்கள் 05. சிங்கள நூல்கள்.  
03. பகவன் புத்தர் வட இந்தியா முழுவதும் சென்றிருக்கிறார். ஆனால் தென்னிந்தியாவிற்கு வந்ததில்லை .என்பதே பலரின் கருத்து 
04. D.C. அகீர் அவர்களால் பகவான் புத்தர் தென்னிந்தியாவிற்கு வந்ததற்கு ஆதாரம் ஏதும் அளிக்க முடியவில்லை. ஆனால் பகவன் புத்தர் அவர் வாழ்நாளிலேயே  அவரின் போதனைகள் தென்னிந்தியாவிலுள்ள ஆந்திரா வரை வந்து சேர்ந்து இருக்கிறது என்பதற்க்கு ஆதாரம் ஒன்றை அளிக்கிறார்.
ஆந்திரவை சேர்ந்த பாவரி (Bavari) மற்றும் அவரை பின்பற்றும் 16 நபர்களை பற்றிய குறிப்புகள் திரிபிடகத்தில் காணப்படுகிறது. பாவரி இவர் ஒரு பிராமணர் அவருக்கும் பிறிதொரு பிரமணருக்கும் ஒரு கருத்து வேறுபாடு வருகிறது எனவே தம் சீடர்களை பகவன் புத்தரை சந்தித்து வரும் படி அனுப்பிவைக்கிறார். அவர்களும் பகவன் புத்தரை சந்திக்கின்றனர். குறிப்பு The Sutta Nipata - Sutta of Parayanavagga.(தென்னிந்தியாவில் பௌத்தம்  பக்கம் 19)
மணிமேகலையின் வான்வழி 
மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றதாகக் மணிமேகலைக் காவியம் கூறுகிறது. ஆகாய வழியே  மணிமேகலை பறந்து  சென்ற இடங்கள்.  
01. காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து மணிபல்லவத் தீவுக்கு (யாழ்பாணத்துக்கு வடக்கே உள்ள தீவு) 
02. சாவக நாட்டுக்கு (கிழக்கந்தியத் தீவுகளைச் சேர்ந்த ஜாவா தீவு) அங்கிருந்து மணிபல்லவத்துக்கு
03. மணிபல்லவத்திருந்து சேரநாட்டு வஞ்சிமாநகரத்துக்கு
ஆகவே மணிமேகலை உண்மையில் இருந்தவள் அல்லள் என்றும் அவள் கற்பனையாகக் கற்பிக்கப்பட்டவள் என்றும் கருதத் தோன்றுகிறது. மணிமேகலை ஆகாயத்தில் பறந்து சென்றாள் என்பது வெறுங்கற்பனைதான். ஏன் இப்படிக் கற்பித்தார் என்பதனை விளக்குகிறார் தமிழ் ஆராட்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி.
மணிமேகலைக் காவியம் சங்ககாலத்தில் எழுதப்பட்ட நூல். சங்ககாலத்தில் தமிழ்மகளிர் கடலில் பிராயாணம் செய்யக்கூடாது என்னும் மரபு இருந்தது. அந்த மரபை அக்காலத்துத் தமிழரும் தமிழ்ப்புலவர்களும் கடைப் பிடித்துக் கையாண்டார்கள். அவ்வாறே இலக்கணமும் எழுதி வைத்தார்கள். முந்நீர் வழக்கம் மகடூ உவோடில்லை என்று தொல்காப்பியம் கூறுகிறது. 
ஆனால், பௌத்த மதத்துப் பெண்மணிகளுக்கு இந்தத் தடை இல்லை. பௌத்த மதத்தைச் சேர்ந்த மணிமேகலை, கடல் கடந்த நாடுகளுக்குப் போகவேண்டிய அவசியம் நேர்ந்தபடியால் அவள் கடலில் கப்பற்பிராயணம் செய்தாள். கடல் யாத்திரை செய்தது பௌத்தமதத்தவருக்கு குற்றம் அன்று. ஆனால், இந்த வரலாற்றைக் காவியமாக எழுதிய சாத்தனார், பௌத்தருக்காக மட்டும் காவியம் எழுதவில்லை. பௌத்தரல்லாத தமிழருக்காகவும் மணிமேகலை காவியத்தை எழுதினார். ஆனால், பௌத்தரல்லாத தமிழருக்கு மகளிர் கடற்பிரயாணம் செய்வது உடன்பாடன்று. அஃது அவர்களுடைய மரபுக்கும் பண்பாட்டுக்கும் மாறுபட்டது. ஆகவே சங்கப் புலவரான சாத்தனார் தம்முடைய காவியத்தில் கற்பனையைப் புகுத்த வேண்டியவரானார். 
மணிமேகலை கடற்பிரயாணஞ் செய்தாள் என்னும் உண்மையைக் கூறினால் அக்காலத்துத் தமிழுலகம் இந்த நூலை ஏற்காது. ஆகவே அவர்களும் ஏற்கத்தக்க விதத்தில் மணிமேகலை ஆகாயவழியாக அயல் நாடுகளுக்குப் பறந்து சென்றாள் என்று கற்பனை செய்து காவியத்தை முடித்தார். 
அந்தக் காலத்துத் தமிழரின் பழக்கவழக்கப் பண்பாடுகளுக்கு முரண்படாமல் கற்பனை செய்தபடியால் மணிமேகலைக் காவியத்தை அக்காலத்துத் தமிழர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்த உண்மையை ஆராய்ந்தவர் மணிமேகலையைக் கற்பனை உருவம் என்று கருதமாட்டார்கள். மணிமேகலை உண்மையில் வாழ்ந்து இருந்த ஒரு பெண்மணி என்றே கொள்வார்கள். 

வியாழன், செப்டம்பர் 08, 2016

புத்தரா காரல் மார்க்சா ?

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் 

 நூல் தொகுதி 7 

( பகுதி 2 - இயல் 14 - பக்கம் 403 - 434)

பகவன் புத்தரின் தம்மத்திலும் காரல் மார்க்சின் புதிய பொருளாதார கொள்கையிலும் ஆர்வம் கொண்டவர் அறிவர் அண்ணல் அம்பேத்கர். பௌத்தர் மற்றும் பொருளாதார மேதையுமான அறிவர் அண்ணல் அம்பேத்கர் பகவன் புத்தரின் தம்மத்தையும் காரல் மார்க்சின் பொருளாதார கோட்பாட்டையும்  ஒப்பிட்டு அளித்துள்ளார்.

எளிமையை மனதில் கொண்டு சுருக்கமாக கொடுத்துள்ளேன். ஆர்வலர் மற்றும் ஆய்வாளர்கள் அறிவர் அண்ணல் அம்பேத்கரின் நூல் தொகுப்புபை படிப்பது பயனளிக்கும்.

பகவன் புத்தர் பண்டைய காலத்தை சேர்ந்தவர் (கி.மு. 563). காரல் மார்க்ஸ் நவீன காலத்தை சேர்ந்தவர் (கி.பி. 1818). புத்தருக்கும் காரல்  மார்க்ஸ்க்கும் 2381 (563+1818) ஆண்டுகள் கால இடைவெளி உள்ளது. புத்தரின் நோக்கமும் காரல் மார்க்சின் நோக்கமும் பொதுவானதாக இருக்கிறது ஆனால் நோக்கத்தை அடையும் வழிவகைகள் தான் வேறுபாடானதாக .உள்ளது என்றுரைக்கிறார் அறிவர்.  

A) கருத்தொற்றுமைகள்
01. உலகத்தின் தோற்றம்: பகவன் புத்தர் மற்றும் காரல் மார்ஸ் ஆகிய இருவரின் நோக்கம் உலகத்தின் தொடக்கத்தையும் முடிவையும் பற்றி விளக்குவதில்லை. உலகத்தை மகிழ்ச்சிக்குரியதாக மாற்றுவது தான் இருவரின் நோக்கம். கடவுள், ஆத்மா, சொர்க்கம், நரகம் போன்றவற்றை புத்தரோ காரல் மார்க்சோ கொண்டிருக்கவில்லை. 
மேற்கோள்பகவன் புத்தருக்கும் போத்தபாதா என்ற பிராமணருக்கும் இடையே நடந்த உரையாடல். 
மேற்கோள் விளக்கம்: போத்தபாதா என்பவர் பகவன் புத்தரிடம்   கீழ் காணும் வினாக்களை எழுப்புகிறார். உலகம் நிரந்தரமானதா? இல்லையா? உலகம் அளவுக்கு உட்பட்டதா? அளவற்றதா? ஆன்மாவும் உடலும் ஒன்றா? வெவ்வேறானதா? இவ்வினாக்களுக்கு பகவன் புத்தர் கருத்து ஏதும் தெரிவிப்பது இல்லை என்று விடையளித்தார். காரணம் கீழ்கண்ட வினாக்களுக்கு பகவான் புத்தர் விடையளிப்பது இல்லை.
 01) பயன் விளைவிக்காத வினாக்கள்
02) தம்மத்துடன் சம்பந்தபட்டாத வினாக்கள்
03) பற்றின்மை, காமத்தில் இருந்து தூய்மை பெற, அமைதியாய் இருப்பதற்கு, அறிவை பெறுவதற்க்கு, உயர் ஞானத்திற்கு உதவாத வினாக்கள். 

02. துன்பத்திற்கு காரணம்:
தனிஉடமையே உடைமையாளர்கள் உழைப்பாளர்கள் என்ற இரண்டு வர்க்க முரண்பாடுகளுக்கான காரணம் என்றுரைக்கிறார் காரல் மார்க்ஸ். துக்கம் என்பதற்கு சுரண்டல் என்று வைத்தால் பகவன் புத்தர் மற்றும் காரல் மார்ஸ் ஆகிய இருவரின் கோட்பாடுகளுக்கும் ஒன்றே என்றுரைக்கிறார் அறிவர் அண்ணல் அம்பேத்கர்..
மேற்கோள்: நான்கு உயரிய உண்மைகள் 
மேற்கோள் விளக்கம்: பகவன் புத்தரின் அட்டாங்க மார்க்கம் (எண் வகை பாதை) வர்க்க முரண்பாடு இருக்கிறது என்று ஒப்புக்கொள்கிறது. இந்த முரண்பாடு தான் துன்பத்திற்கு காரணம்.
01) துக்கம் உள்ளது
02) துக்கத்திற்கு காரணம் உள்ளது
03) துக்கத்திற்கு நிவாரணம் உள்ளது
04) துக்க நிவாரணத்தை அடைவதற்கு வழி அட்டாங்க மார்க்கம்.
03. தனிஉடமை:
தனிஉடமை ஒரு வர்க்கத்தாருக்கு அதிகாரத்தையும் மற்றொரு வர்க்கத்தாருக்கு துன்பத்தையும் தருகிறது.
மேற்கோள் பகவன் புத்தருக்கும் ஆனந்தருக்கும்  இடையே நடந்த உரையாடல்.  
மேற்கோள் விளக்கம்: பேராசைக்கு காரணம் உடமைதான். உடமைக்கு காரணம் விடாப்பிடி தன்மை. யாருக்கும் எதற்கும் எந்தவிதமான உடமையும் இல்லை என்றால் பேராசை தோன்றாது. 

04. பொது உடமை:
தனிஉடமையை ஒழிப்பதன் மூலம் சுரண்டலை ஒழிப்பது அவசியம்.
மேற்கோள் பிக்கு சங்க விதிகள்.  
மேற்கோள் விளக்கம்: ஒரு பிக்கு கீழ்கண்ட எட்டு பொருட்களை மட்டுமே தனிஉடமையாக வைத்திருக்கலாம். இந்த விதிகள் ரஷ்யாவில் கம்யூனிசத்தில் உள்ளவற்றை விட மிக கடுமையானது. தினசரி உடுப்பதற்கு ஆடைகள் ( 3 ) இடையில் கட்டுவதற்கு பந்தனம் ( 1 ) உணவு ஏற்கும் பாத்திரம் ( 1 ) சவரக்கத்தி ( 1 ) ஊசி ( 1 ) தண்ணீர் வடிகட்டி ( 1 )

B) முரண்பாடுகள்  
01) வன்முறை 
மார்சியம்: பொதுவுடைமையை நிறுவுவதற்கு உள்ள முதல் வழி வன்முறை. சுரண்டலை தடுக்க போராட்டம் மற்றும் கொடுஞ்செயலை ஊக்குவிக்கிறது. இது இரு வர்க்கங்களுக்கு இடையே எப்பொழுதும் வன்முறை தொடர்ந்த வண்ணமாக வைத்திருக்கிறது. குறிக்கோளை அடைவதற்கு பலரை கொன்று இருக்கிறது. .
பௌத்தம்: பகவன் புத்தர் காட்டிய வழி வன்முறையற்றது, அறநெறியுடையது. ஒருவன் தானே மனமுவந்து செல்லும்படி அவனது அறநெறி உணர்வை செம்மைப்படுத்துவது. 
மனிதனின் துன்பத்திற்கு காரணங்கள் இரண்டு 01. தம் சொந்த செயலினால் விளையும் தீமை 02. பிறர் செயலினால் விளையும் விளையும் தீமை. தீமையை தவிர்க்க வழிகளும் இரண்டு 01. தம் சொந்த செயலினால் விளையும் தீமையை தவிர்க்க வழி பஞ்ச சீலம் 02. பிறர் செயலினால் விளையும் தீமையை தவிர்க்க வழி உன்னத எண் வழி பாதை.
எண் வழிபாதையை பின்பற்றுவதற்கு இடையூறாக பத்து தடைகள் உள்ளது. எனவே தினசரி வாழ்க்கையில் கடைப்பிடக்க வேண்டிய ஒழுக்கங்கள். 01. அறியாமையை போக்கிக்கொள்ள அறிவுடையோருடன் பழகி அறிவை வளர்க்க வேண்டும் 02. தவறு செய்ய நாணாவும், நன்மை செய்ய பேணவும் (பழகவும்) வேண்டும் 03. உலக இன்பத்தை துறக்க வேண்டும் 04. பிறர் நன்மைக்காக பயன் எதிர்பார்க்காமல் தானமளித்தல் வேண்டும் 05. எடுத்துக்கொண்ட செயலை முழு திறனுடன் செய்யவேண்டும் 06.வெறுப்பை தணிக்கும் பொறையுடைமையை பின்பற்றவேண்டும் 07. உண்மையை பேசவேண்டும் 09.குறிக்கோளை அடைவதற்கு உறுதி ஏற்கவேண்டும் 10. எல்ல உயிர்களிடத்தும் அன்பு செலுத்தவேண்டும்.
வன்முறையை எதிர்த்த பகவன் புத்தர் நீதிக்கு அவசியமாயிருந்தால் வன்முறையை பயன்படுத்துவதை அவர் அனுமதித்தார்.
மேற்கோள் : புத்தருக்கும் வைசாலி படை தலைவருக்கும் (சிம்ம சேனாதிபதி)  இடையே நிகழ்ந்த உரையாடல். 
மேற்கோள் விளக்கம்: படைத்தலைவர் புத்தரிடம் எழுப்பிய வினா: நீங்கள் அகிம்சையை போதிக்கிறீர்கள். எனவே குற்றம் செய்த ஒருவனுக்கும் தண்டனையில் இருந்து விடுதலை அளித்திட வேண்டுமா? மக்களையும் செல்வங்களையும் காப்பாற்ற போர் செய்யக்கூடாதா? பகவன் புத்தர் அளித்த பதிலுரை, குற்றம் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும். குற்றமற்றவன் விடுவிக்கப்பட வேண்டும். குற்றம் செய்தவனை தண்டிப்பது நீதியின் தவறு அல்ல.போர் இருக்கலாம் ஆனால் அது சுயநல நோக்கங்களுக்காக இருக்கக்கூடாது. 

02) சர்வாதிகாரம்
மார்சியம்: பொதுவுடைமையை நிறுவுவதற்கு உள்ள இரண்டாவது வழி உழைப்பாளர்களின் சர்வாதிகாரம். இது இரு வர்க்கங்களுக்கு இடையே எப்பொழுதும் சர்வாதிகார ஆட்சி தொடர்ந்த வண்ணமாக வைத்திருக்கிறது. ஒன்று உடமையாளர்களின் சர்வாதிகார ஆட்சி (அ) உழைப்பார்களின் சர்வாதிகார ஆட்சி. 
பௌத்தம்: சர்வாதிகாரத்தை புத்தர் விரும்பவில்லை. அவர் எப்பொழுதும் ஜனநாயகவாதியாக இருந்தார்.  ஆதாரம்   
01. புத்தர் வாழ்ந்த காலத்தில் 14 முடியரசும் 4 குடியரசும் இருந்தது. புத்தர் பிறந்தது கோசல நாட்டில். அது ஒரு குடியரசு நாடு. புத்தர் பரிநிர்வாணம் அடைவதற்கு முன் தங்கியிருந்த வைசாலியும் ஒரு  குடியரசு நாடு. தமது வழக்கப்படி வைசாலியை விட்டு வேறு எங்கேனும் செல்ல முடிவு எடுத்தார். சிறிது தூரம் சென்றபின் வைசாலியை திரும்பி பார்த்து ஆனந்தரிடம் புத்தர் வைசாலியை பார்ப்பாது இது தான் கடைசி முறை என்றார். அந்த குடியரசிடம் அவ்வளவு பிரியம் வைத்து இருந்தார்.
02. ஆரம்பத்தில் புத்தர் உட்பட எல்லா பிக்குகளும் கிழிந்த துணிகளால் ஆனா ஆடைகளை அணிந்தார்கள். மாபெரும் மருத்துவரான ஜீவகன் முழுமையான துணியால் ஆனா ஆடை ஒன்றை புத்தர் ஏற்றுக்கொள்ள செய்தார். புத்தர் உடனே ஆடை பற்றிய விதிகளை மாற்றி எல்லோருக்கும் அது பொருந்துமாறு செய்தார்          
03. புத்தரின் வளர்ப்பு தாயான மகாபிரஜாபதி கோதமி பிக்குணி சங்கத்தில் சேர்ந்து இருந்தார். ஒருமுறை அவர் புத்தருக்கு குளிர் ஏற்பட்டிருப்பதாக  கேள்விப்பட்டார். உடனே அவர் புத்தருக்கு என தலைக்கு கட்டும் துணி ஒன்றை செய்து புத்தரை அணிந்துக்கொள்ள வேண்டினார். ஆனால் அதை புத்தர் ஏற்க மறுத்துவிட்டார். அது அன்பளிப்பாக இருந்தால் அது சங்கம் முழுவதற்கும் அது அன்பளிப்பாக இருக்கவேண்டும். சங்கத்தின்  ஒரு உறுப்பினருக்கு இருக்க கூடாது என்று மறுத்துவிட்டார். 
04. புத்தர் பரிநிர்வாணம் எய்துவதற்கு முன் இரண்டு முறை புத்தருக்கு பின் சங்கத்தை நிர்வகிக்க அதன் தலைவராக ஒருவரை நியமிக்கும் படி கேட்டுக்கொள்ளபட்டார். ஒவ்வொரு முறையும் அவர் மறுத்துவிட்டார். தம்மம் சங்கத்தை வழிநடத்தும் என்று மறுத்துவிட்டார்.    
 03) நின்று நிலைத்து நீண்டு பயனளிப்பது
மார்சியம்: காரல் மார்க்சின் தத்துவத்தின் பயன் குறுகிய காலத்திற்குரியது. ஏனெனில் சர்வாதிகாரம் பலத்தினை பயன்படுத்து கிறது. பலம் தற்காலிகமானது எனவே இது நின்று நிலைத்து நீண்டு பயனளிக்காது. 
காரல் மார்க்சின் தத்தும் பொருளாதார நன்மைகளை மட்டுமே கொண்டது. சமய வளர்ச்சியை கொண்டதாக அது இல்லை. பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்த  சகோதரத்துவம்  மற்றும் சுதந்திரம் ஆகிய இரண்டையும் தியாகம் செய்துவிடுகிறது. சர்வாதிகாரத்தில் கீழ்ப்படியும் கடமை மட்டுமே உள்ளது உரிமை ஏதும் இல்லை.   . 
பௌத்தம்: பகவன் புத்தரின் தத்துவத்தின் பயன் நீண்ட காலத்திற்குரியது. புத்தர் சர்வாதிகாரம் இல்லாமலே பிக்கு சங்கத்தில் பொதுஉடமையை நிறுவினார். எந்த  பலத்தையும் பயன்படுத்தாமல், கட்டாயம் இல்லாமல் தாங்களாகவே மனமுவந்து செய்யும் வகையில் மனித மனங்களை மாற்றுவதே புத்தரின் செயல் முறை. சகோதரத்துவம், சுதந்திரம், சமத்துவம். இந்த மூன்றும் சேர்ந்து இருப்பதால் புத்தரின் செயல் முறையே நின்று நிலைத்து நீண்டு பயனளிப்பது.
 இணைப்பு :  அம்பேத்கர் பேசும் எழுத்தும் நூல் தொகுதி 7