வெள்ளி, அக்டோபர் 21, 2011

புத்தரின் போதனைகள் -2


புத்தர் அறவுரைகள்
அஞ்சாமை
யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ,
யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச்
சிந்திப்பதில்லையோ, அவருக்கு
அச்சம் என்பதே இல்லை!

வாய்மை
எல்லாப் பொருளுக்கும் அழிவுண்டு ஆனால்
வாய்மை என்றைக்கும் நிலைத்திருக்கும்

வேதம்
வேதங்கள் என்பவை தண்ணீர் இல்லாத
பாலைவனம்; வழி இல்லாத காடுகள்,
அறிவுள்ள எம்மனிதனும் தன் அறிவு
வேட்கையைத் தனித்துக்கொள்ள
வேதங்களை நாடிச் செல்ல மாட்டான்.

தனியுடமை
ஒரு குலத்திற்கு ஆதிக்கவன்மையும்
மற்றக்குலத்திற்கு துக்கத்தையும்
துயரத்தையும் கொடுப்பதற்குக்
காரண கர்த்தாவானத்து தனியுடைமை தான்.

மனிதர்
௦மனிதர் எல்லோரும் சரிசமமானவர்.
மனிதனை மதிப்பிடுவதற்கு அறிவும்
ஒழுக்கமும் தாம் அளவுகோலே தவிர
பிறப்பு அன்று.

எல்லாரிடத்தும் ஈவிரக்கம் காட்டுவதைக்
கைவிடக் கூடாது. எதிரிக்கும் கூடச்
(சிலவறை முறையின் படி) ஈவிரக்கம் காட்ட
நாம் கடமைப்பட்டவர்கள்

கல்வி
கல்வி கற்கும் உரிமையை எல்லோரும்
பெற்றவராவர். ஒழுக்க நெறியில்லாத
படிப்பு மிகக் கேடானது

ஆய்வு
தவறில்லாதது ஒன்றுமில்லை.
எப்பொழுதும் கட்டுப்பட்டதும் ஏதுமில்லை.
எவையும் ஆய்வுக்கும் ஆராய்ச்சிக்கும்
உட்பட்டனவாகும்

முயற்சி
முடியாதது ஒன்றுமில்லை.
எல்லாமே காரண காரியங்களுக்கு
உட்பட்டிருக்கின்றன.

நிரந்தரமானதோ, மாற்ற முடியாததோ
ஒன்றுமில்லை. இன்று இருப்பது
நாளையில்லை. எதுவுமே மாற்றத்திற்கு
உட்பட்டது

மக்களியல்பு
பேசாமல் சும்மா உட்கார்ந்திருப்பவனையும்
வைகிறார்கள். மிகுதியாக பேசுபவனையும்
வைகிறார்கள். திட்டப்படாத மனிதனே
உலகில் இலன்.

எப்போதும் திட்டப்படுபவனாக அல்லது
எப்போதும் போற்றப்படுபவனாக மனிதன்
எப்போதும் ஒருவன் இருந்ததுமில்லை
இருக்கிறதுமில்லை இருக்கப்போவதுமில்லை.

அறிஞர்
பொற்கொல்லன் பொன்னிலுள்ள
களிம்பை அகற்றுவது போல
அறிஞர் கணந்தோறும் சிறிது
சிறிதாகத் தம் மாசினை
அகற்றிக் கொள்கின்றனர்.

தூய்மை
தண்ணிரைத் தெளித்துவிட்டு இது
தூய்மையான இடம் என்று கூறுவதால்
ஓர் இடம் தூய்மையாகி விடாது

தண்ணீரால் குற்றத்தைக் கழுவ இயலாது
மனிதன் மயக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும்.

மீன் புலால் முதலிய உணவுகளை
விலக்குவதாலோ, ஆடையின்றி
அலைவதாலோ, தலைமை
மழிப்பதாலோ, முடியை
வளர்ப்பதலோ, உடலில் துப்புரவற்ற
பொருள்களைப் பூசிக் கொள்வதாலோ
அவன் தூய்மையுடையவனாகான்

உயிர் மறுப்பு
உடலின் தோற்ற காலத்தில்
உள்ளே புகுந்து அது மடியும்போது
வெளியேறும் உயிர் ஒன்று இல்லை

சுவர்க்கம் - நரகம்
நீருள் நின்று தவம் புரிவதால்
இன்ப உலகு கிடைக்கும் என்றால்,
மீன்களே முதலில் இன்ப உலகிற்குரியது

பலியிடும் உயிர்கள் உடனே
இன்பவுலகு செல்வதானால், ஒருவன்
முதலில் தன் தந்தையை பலியிட்டு
இன்பவுலகிற்கு அனுப்பி விடலாமே!

முட்டாள்
குழம்பிலே தோய்ந்த்துள்ள கரண்டிக்குக்
குழம்பின் சுவை தெரியாது, வாழ்க்கை
முழுவதும் அறிவாளியுடன் பழகினாலும்
முட்டாளுக்கு உண்மை புலப்படாது.

தோற்றமும் அழிவும்
உலகத்தில் உள்ளும் புறமும்
அழிவற்ற பொருள் ஏதும் கிடையாது.
உலகத்தின் பொருள்கள் யாவும் நிமிடத்திற்கு
நிமிடம் மாறிக் கொண்டே இருக்கின்றன.
தோன்றுவன அழியும்

ஆசை
உலகத்தில் ஆசையைப் போன்ற
நெருப்பில்லை, வெறுப்பைப் போன்ற
பகையில்லை, மயக்கம் போன்ற
வலையில்லை, காமத்தைப் போன்ற
புயல்யில்லை

ஆசையை வென்ற மனிதனை வெல்ல
உலக்த்தில் எவருமில்லை!

அறிஞர் அறிவிலார் தொடர்பு
அறிவாளிகளின் கூட்டுறவு
உறவைக் காண்பது போன்று
இன்பத்தை அளிக்கும்

மூடர்ககளின் கூட்டுறவு
பகைவனுடைய சேர்க்கை போன்று
துன்பம் தருவதாகும்

சான்றோரும் தீயவரும்
தொலைவிலே இருந்தாலும்
சான்றோர்கள் இமயமலையைப் போன்று
தோற்றம் அளிக்கிறார்கள், ஆனால்
இரவில் செய்த அம்பு போலத் தீயவர்
இடம் புலப்படாமல் கிடக்கிறார்கள்

நல்லவன்
கையில் காயம் இல்லாதவன் நஞ்சைத்
தீண்டலாம். காயம் இல்லாதவனை நஞ்சு
ஓர் ஊறும் செய்வதில்லை. அப்படியே
தீமை செய்யாதவனுக்கு தீமை நேர்வதில்லை

ஆரவாரம்
கோவணாண்டி கோலமே சடைமுடியோடு
அழுக்கேறிய உடம்போ, பட்டினிக் கிடத்தலோ
மண்மீதும் மூச்சை அடக்கி உட்கார்ந்திருத்தாலோ,
ஆசையை வெல்லாத ஒருவனைத்
தூய்மையானவனாக்கி விடாது

நூல் குறிப்பு
போதி மாதவர் - ஆசிரியர் தி. இராசகோபாலன்
பக்கம் 155-160


1 கருத்து :