திங்கள், டிசம்பர் 17, 2018

காஞ்சிவரத்திற்கு வந்து பெருமை சேர்த்த பௌத்த அறிஞர்கள் IV ஆசாரிய புத்ததத்த மற்றும் தீபங்கர தேரர்

02. 02. ஆசாரிய புத்ததத்த மகாதேரர்
ஆசாரிய புத்ததத்த மகாதேரர் வாழ்ந்திருந்த காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். ஆசாரிய புத்ததத்த மகாதேரர் பாலிமொழியை நன்கு கற்றவர். பாலிமொழியில் உள்ள திரிபிடகம் நூல்களைத் கற்றுணர்ந்தவர். பாலிமொழியிலே இனிய கவிகளை இயற்றும் ஆற்றல் வாய்ந்தவர். இவர் தாம் இயற்றிய நூல்களில், தாம் பிறந்த சோழநாட்டையும் காவிரிப்பூம்பட்டினத்தையும் பூதமங்கலத்தையும் இனிமையான கவிகளால் புகழ்ந்து பாடியிருக்கிறார்.

காஞ்சிதொடர்பு:மாணவராகிய சுமதி என்பவர் வேண்டுகோளின்படி அபிதம்மாவதாரம் என்னும் நூலை காஞ்சியில் இயற்றினார்.

வண. புத்ததத்த  மற்றும் வண.புத்தகோசர்.
வண.புத்தகோஷரை விட வண.புத்ததத்தர் வயதில் மூத்தவர். சிங்கள மொழியில் இருந்து பாலி மொழியில் மொழிபெயர்ப்பு செய்த முதல்வர் வண. புத்த தத்த அவர்கள். அவர் 01. ஜினாலங்காரம் (The Jinalaokara)   02.தண்டவைச (The Dantavaísa)  03. தாதுவைச (The Dhátuvaísa)  04. போதிவைச (The Bodhivaísa ) மட்டும்  மொழி பெயர்ப்பு எழுதியிருந்தார்.

புத்தகோசரை சந்தித்த போது சிங்கள மொழியில் இருந்து பாலி மொழிக்கு மொழி பெயர்ப்பு செய்து முடிக்கும் பொழுது  தமக்கு ஒரு பிரதியை அனுப்பும் படி கேட்டுக்கொண்டார். அவரின் கேட்பின் படி புத்தகோசரும் தம் நூல்களை புத்ததத்தாவிற்கு அனுப்பி வைத்தார். வண. புத்ததத்த வண.புத்தகோசரின் அபிதம்மா வருணைகளை சுருக்கி அபிதம்மாவதாரம் என்றும் வினைய வருணைகளை சுருக்கி வினயவினிச்சய என்றும் எழுதினார் (Buddhadatta' s Manuals or Summaries of Abhidhamma, edited by A.P. Buddhadatta).

புத்ததத்த இயற்க்கை எய்தியபொழுது புத்தகோசர் புத்ததத்தரை மிகுந்த ஞானமுள்ளவர் என்று வருணித்தார்.

பங்களிப்பு: இயற்றிய நூல்கள்  
மதுராத்தவிலாசினீ  (Madhurattha Vilasini):   காவிரிப்பூம்பட்டினம் புத்தமங்கலத்தில் கணதாசர் என்னும் சோழ அமைச்சர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது இவர் தம் மாணவராகிய புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி மதுராத்தவிலாசினீ என்னும் நூலை எழுதினார். இந்நூல் சூத்திரபிடகத்தின் 5 ஆவது பிரிவாகிய குட்டகநிகாய என்னும் நிகாயத்தின் உட்பிரிவாகிய புத்தவம்சம் என்னும் 14 ஆவது பிரிவுக்கு உரையாகும். இவ்வுரை நூலைப் புத்தவம்சாட்டகதா (Buddhavamsattagatha) என்றும் கூறுவர். 
வினயவினிச்சயம் (Vinaya Vinicchaya): பூதமங்கலம் என்னும் ஊரில், வேணுதாசர் (Venn Dasa) என்பவர் கட்டிய விகாரையில் தங்கியிருந்தபோது வினயவினிச்சயம் என்னும் நூலைப் புத்தசிகா என்பவர் வேண்டுகோளின்படி இயற்றினார். Kalamba களம்ப (களபர Kalabara) குலத்தில் பிறந்த அச்சுதவிக்கந்தன்  (King Acyutavikrama) என்னும் அரசன் சோழநாட்டை அரசாண்ட காலத்தில் இந்நூலை எழுதியதாக இந்நூலில் இவர் கூறியிருக்கிறார். இந்நூல் 31 அத்தியாயங்களை கொண்டது. புத்தகோசரின் வினய பிடகாவை சுருக்கி வினயவினிச்சயம் என்று எழுதினார்.  
இவர் இயற்றிய வினய வினிச்சயம் என்னும் நூலுக்கு, இலங்கையை அரசாண்ட பராக்கிரமபாகு II (King Parakramavahu II)  (கி.பி 1247-1282) என்னும் அரசன் சிங்களமொழியில் ஓர் உரை எழுதினார். இப்போது அவ்வுரை நூல் கிடைக்கவில்லை என்றுரைக்கிறார் தமிழ் ஆராய்ச்சி பேரறிஞர் மயிலை சினி வேங்கடசாமி.  
அபிதம்மாவதாரம் (Abhidhammavatara): மாணவராகிய சுமதி என்பவர் வேண்டுகோளின்படி அபிதம்மாவதாரம் என்னும் நூலை காஞ்சியில் இயற்றினார். இது அபிதம்ம பிடகத்திற்குப் பாயிரம் போன்றது. பௌத்த பிக்கு மற்றும் மாணவர்களிடையே தொடர்ச்சியாக பயன்படுத்தப்பட்டு வரும் நூல். புத்தகோசர் மற்றும் மற்றவர்களிடமிருந்து விதிவிலக்காக உயர்ந்த கல்வியறிவு பெற்றவர்களின் புத்தகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நூல். பாதி உரைநடையாகவும் பாதி வசனமாகவும் எழுதப்பட்டது. புத்தகோசரின் அபிதம்மா வருணனைகளை சுருக்கி அபிதம்மாவதாரம்  என்று எழுதினார். 24 அத்தியாயங்களை கொண்டது.  
ஐந்து கந்தங்களின் அடிப்படையில் புத்தகோசர் மனோபாவத்தை விளக்குகிறார். ஆனால் புத்ததத்தரோ அவற்றை நான்காக (மனம் Mind, மனநல பண்புகள் Mental properties, பொருள் தரம் Material quality, நிப்பான Nibbana) வகைப்படுத்தி விளக்குகிறார். புத்தகோசரை விட சிறப்பாக புத்த தத்தருடைய விளக்கம் அமைந்துள்ளது. புத்ததத்த அபிதம்ம பாரம்பரிய ஆய்வுக்கு விலைமதிப்பற்ற பணியை செய்து இருக்கிறார் 
ரூபாரூபவிபாகம் (Ruparupavibhaga) : Rupa+Arupa+Vibhagha நாம ரூபத்தை விரிவாக விளக்குகிறார். 
ஜினாலங்காரம் (Jinalankara): 300 பாடல்களை கொண்ட ஜினாலங்காரத்தில் 250 பாடல்கள் மட்டுமே பர்மாவில் கிடைத்தது. இந்த 250 பாடல்களும் 30 அத்தியாயமாக பிரிக்கப்பட்டுள்ளது.    


02.03 தீபங்கர தேரர் 
வாழ்ந்திருந்த காலம்: புத்தப் பிரிய தேரர் (Buddhappiya) என்றும் வேறொரு பெயர் இவருக்கு உள்ளது. வாழ்ந்திருந்த காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவர் இயற்றிய பஜ்ஜமது என்னும் நூல் கி.பி.1100ல் இயற்றப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றபடியால், இவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்தவராவர்.

காஞ்சிதொடர்பு: சோழநாட்டில் பிறந்தவர், இவர் இலங்கைக்குச் சென்று ஆனந்த வனரதனர்  (Ananda Vanaratana) என்னும் தேரரிடம் சமயக் கல்வி பயின்று காஞ்சிவரத்திற்கு வந்தார். பாலிமொழியை நன்கு பயின்றவர். காஞ்சிவரத்திலிருந்த பாலாதிச்ச விகாரை  (Baladichcha vihara) என்னும் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்தார்.

பங்களிப்பு: பாலி மொழியில் இயற்றிய நூல்கள்
01. ஜ்ஜமது (Pajjamadu) : இந்நூல் நூற்று நான்கு (104) செய்யுள்களைக் கொண்டது. புத்தரது உருவ அழகினையும் தம்மத்தையும் சங்கத்தையும் இந்நூலில் வியந்து கூறியிருக்கின்றார்.  
02. ரூப சித்தி (Rupasiddhi) (அ) பாடரூப சித்தி: இந்நூல் பாலிமொழி இலக்கண நூல்.  ஏழு அத்தியாயமாக பிரிக்கப்பட்டுள்ளது.
01. இணைப்புகள் / சேர்ப்புகள் - Combination
02. பெயர்ச்சொல் - Noun
03. வாக்கிய அமைப்பு - syntax
04. கலவைகள் - Compounds (Adverb, Numbers, etc)
05.
06. வினைச்சொல் - Verb
07. வாய்மொழி பெறுதல் -Verbal derivation
இதற்கு ஓர் உரையும் உண்டு. இந்த உரையினையும் இவரே இயற்றினார். கக்காயானாவின் (Kaccayana) விதிகளை மறு ஒழுங்கு செய்து அவற்றை புரிந்து கொள்ள எளிதாக்குவதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். மேலும் நல்ல புரிந்துணர்வுக்காக மற்ற நூல்களிலிருந்து சில விதிகள் சேர்த்திருக்கிறார்.

Books

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக