வியாழன், டிசம்பர் 17, 2015

காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VIII மணிமேகலைக் கோயில்

காஞ்சீவரம் மணிமேகலைக் கோயில்
அமைவிடம் 
ஊர்                              : காஞ்சீவரம், PTVS பள்ளி அருகில்
தெரு                           : அறப்பெருஞ்செல்வி தெரு* 
வட்டம்                      : காஞ்சீவரம் வட்டம்
மாவட்டம்               : காஞ்சீவரம் மாவட்டம்

காஞ்சீவரம் மணிமேகலைக் கோயில் காஞ்சீவரம் நகர பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி. மீ தொலைவில் அமைந்துள்ளது.

* காவிரிப்பூம் பட்டினத்தில் பௌத்தப் பள்ளியின் தலைவராக இருந்த அறவண அடிகள், பிற்காலத்தில் காஞ்சிபுரத்தில் வந்து தங்கிப் பௌத்த மதத்தைப் போதித்து வந்தார் என்பதும் மணிமேகலையினால் பெறப்படுகின்றது. இன்றைக்கும், காஞ்சிபுரத்தில் அறப்பணஞ்சேரி என்னும் ஒரு தெரு உண்டு. அது 'அறவணஞ்சேரி' என்பதன் மரூஉ. அறவண அடிகள் தங்கியிருந்த சேரி (சேரி = தெரு) ஆதலின், அத் தெரு இப்பெயர் பெற்றது. இப்போது அப்பெயர் அறப்பெருஞ்செல்வி தெரு எனமாற்றப்பட்டிருக்கிறது. (பௌத்தமும் தமிழும்- ஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி) 

இந்த கோயில் மிகவும் பழமையானது. “ஸ்ரீதர்மராஜா திரௌபதி அம்மன்” கோயில் முற்காலத்தில் மணிமேகலைக் கோயிலாக இருந்தது. மணிமேகலை என்ற அறச்செல்வியை நினைவுகூரும் வகையில் இந்தத் தெரு “அறம்பெருஞ்செல்வி” என அழைக்கப்படுகிறது. (பௌத்த ஆய்வாளர் தி.இராசாகோபாலன்  நூல் போதி மாதவர்) 

காஞ்சீவரம் மணிமேகலைக் கோயில்
ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் வளாகத்தில் பழமையான இரண்டு அரச (போதி) மரங்கள் காணப் படுகின்றன. தற்போது உள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோயிலில் முன்பு இருந்த மணிமேகலை, புத்த பிக்குணிகள் சிற்பங்கள் உடைக்கப்பட்டு மூன்று கி.மீ. தூரத்தில் உள்ள நத்தப்பேட்டை ஏரி கரையில் போட்டுவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. உடைந்து சிதைவடைந்த சிற்பங்களைத் தவிர்த்து, முழு அளவில் உள்ள மணிமேகலை, புத்த பிக்குணிச்சிற்பங்களை ஏரிகரையில் திறந்த வெளியில் வைத்து இந்து முறைப்படி வணங்கி வருகிறார்கள். எழுத்தாளர்: மு.நீலகண்டன் காஞ்சியில் மணிமேகலை



மணிமேகலை கோவிலில் போத்தராஜா  என்று குறிப்பிடபட்டுள்ள இடத்தில் உள்ள சிலை தேவி சிலை.  போத்தராஜா (அ) போதிராஜா என்பது பகவன் புத்தரை குறிப்பதாகும். இக்கோவில் உள்ள தூண்களில் மணிமேகலை புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றது. அச்சிற்பங்கள் மீது நீல நிற வர்ணம் (Paint) பூசப்பட்டுள்ளதால் முகம் தெளிவாக தெரியவில்லை.
கடல் தெய்வம் மணிமேகலை வேறு காப்பியத் தலைவி மணிமேகலை  வேறு.
கடல் தெய்வம் மணிமேகலைக்கு உள்ள பிற பெயர்கள் 01. சமுத்திர மணிமேகலை 02. முது மணிமேகலை 03. தாரா தேவி. காப்பியத்தலைவி மணிமேகலைக்கு உள்ள பிற பெயர்கள் 01. அறச்செல்வி 02. அருளாழி 03. இறையருள் செல்வி 04. அன்னபூரணி என பல பெயர்களை கொண்டுள்ளாள். காஞ்சிவாரத்தில் காணப்படும் மணிமேகலை சிலை மணிமேகலா தெய்வமே தவிர காப்பிய தலைவி மணிமேகலை அல்ல.
மணிமேகலை (காப்பிய தலைவி) பல இடங்களை சுற்றி பௌத்த தொண்டை செய்து வருகையில், காஞ்சிபுரத்தில் பசிக் கொடுமை தலை விரித்து ஆடுதலை கேட்டு அங்கு சென்றாள். அவளை இளன்கிள்ளி வரவேற்றான். தான் கட்டி இருந்த புத்தர் கோவிலைக் காட்டினான். அதற்க்கு தென் மேற்கில் ஒரு சோலையில்  புத்த பிடிகையை அமைத்து, பொய்கை எடுத்து, தீவதிலைகையையும்   மணிமேகலா தெய்வத்தையும் வழிபடக்கூடிய கோவிலையும் அங்கு உண்டாக்கி பூசை, திருவிழா முதலியன அரசனை கொண்டு நடைபெறுமாறு செய்வித்து, அறம் வளர்ப்பாள் ஆயினாள் என்று உரைக்கிறார் சோழர் வரலாறு நூலின் ஆசிரியர் திரு.இராசா மாணிக்கம் Pg 104

தமிழக தொல்பொருள் ஆய்வு துறை, கல்வெட்டு ஆய்வாளர் Dr. பத்மா தெய்வ சுந்தரம் தாராதேவியே*1 மணிமேகலை தெய்வம் என்று உரைக்கிறார்.
01.மணிமேகலையில் காவியநாயகி மணிமேகலை, மணிமேகலா தெய்வத்திற்கு காஞ்சியில் சோழ மன்னன் உதவியுடன் கோவில் அமைத்தாள் எனக் கூறப்படுகின்றது
02  சுதமதி என்ற பெண்ணிடம் புகாரில் நடக்கும் இந்திர விழாவைக் காண வந்ததாக மணிமேகலை தெய்வம் கூறுகிறது, மணிமேகலா தெய்வத்தின் கோவில் காஞ்சியில்  இருந்ததால் அது அவ்வாறு காஞ்சியிலிருந்து  புகாருக்கு வந்ததாக கூறியது 
03. மணிமேகலா தெய்வம் பௌத்த சமயக் கடல் தெய்வம். சிலப்பதிகாரத்தில் கோவலன் தன் முன்னோன் ஒருவனைக்  கடல் கொந்தளிப்லிருந்து காப்பற்றிய குல தெய்வமான மணிமேகலா தெய்வத்தின் பெயரைத் தன் மகளுக்கு சூட்ட வேண்டும் என்றான். அத்தெய்வத்தை, "திரையிம் பௌவத்துத் தெய்வம்" என்கிறான் கோவலன். (மணிமேகலை துயிலெழுப்பிய காதை வரி 33)
புத்த ஜாதகக் கதைகளாகிய "சங்க ஜாதகமும்" மகாஜன ஜாதகமும்" மணிமேகலா தெய்வத்தை பற்றியும், அத்தெய்வம் கடலில் முழ்கிய வணிகர்களைக்  காப்பாற்றியது பற்றியும் கூறுகிறது. எனவே சங்க ஜாதகம் மற்றும் மகாஜன ஜாதகம் கதைகளில் கூறப்படும் மணிமேகலையும் தமிழ்க்காப்பிய மணிமேகலா தெய்வமும் ஒன்றேயாகும்.
04 தாரா தேவி வழிபாடு மத்திய இந்தியாவில் தோன்றி, கிழக்கு கடற்கரைப்  பகுதிகளில் பரவியது. கன்ஹரிம் குகையிலும், நாகார்ஜூன் கொண்டவிலும் லடாக் பகுதியிலும் காணப்பட்டு, கீழைக்  கடற்கரை ஓரங்களில் பரவலாக வழிபடப்பட்டது       
05 கடல் தெய்வமாகிய இத்தெய்வம் கடலில் தோன்றும் அபாயத்திலிருந்து பக்தர்களை காப்பாவள் என்று இத்தெய்வம் பற்றிய பாடல் ஒன்று கூறுகிறது. இந்தப் பாடல் முலம் தாரா தேவியும் மணிமேகலா தெய்வமும் ஒன்றே என்பதை அறியலாம்.  
"The Eminent sages in the world
Call me Tara, because sages
O! Lord I take my worshipers
across the ocean of various dangers"
(Ref The Sakthi cult and Tara (ed) D.C.Sircar Iconography of Tara P.117) 
தாரா தேவி வழிபாடு திபேத், நேபால், சைனா, ஜப்பான், மங்கோலியா ஆகிய நாடுகளுக்கு பரவியது. நேபாள சைனா அரசியர்கள் தாராதேவியின்  மறுஉரு என்றே கருதப்படுகிறார்கள். நேபாள நூல்களில் காஞ்சி தாரா தேவி: கி,பி ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த நேபாள நூல்களில் தாரா தேவி,  
'ஒட்டியானே மங்கா கோஷ்டே வஜ்ரா பாணி'
'பீடேஸ்வரி ஒட்டியான தாரா'
எனக் கூறப்படுகின்றாள்
திரு லோகேஸ் சந்திரா என்ற அறிஞர், ஒட்டியாணம் என்பது காஞ்சிபுரம் என்றும் அங்கு மங்காவாகிய (மங்கை) தாராதேவியின் பீடம் இருந்தது என்றும், அப்பீடம் உள்ள கோட்டத்தில் வஜ்ராபாணியின் உருவம் இருந்தது என்றும் தமது ஆய்வில் குறிப்பிடுகின்றார்.  (Tamil Civilization Vol 3 No 4 Kanchi and the Cultural Efflorescence of Asia P.18) 
வஜ்ராபாணி என்றல் வஜ்ரம் என்னும் ஆயுதத்தைத் தாங்கியவன் என்று பொருள்படும். இந்த  வஜ்ராபாணி இந்திரன் ஆவான். 
சிலப்பதிரத்தில் இந்திர விழவூரெடுத்த காதையில் அடியார்க்கு நல்லார் உரை எழுதும்போழுது ஒரு மேற்கோள் படலை எடுத்தாள்கின்றார். அப்பாடலும் கச்சியில் இருந்த காமக் கோட்டத்தில் மெய்சத்தான் காவல் இருந்ததை கூறுகின்றது.
"கச்சி வளைக் கைச்சி காமக் கோட்டங்காவல்
மெச்சி யினிதிருக்கும் மெய்ச்சாத்தன் கைச்செண்டு
கம்பக் களிற்று கரிகால்   பெருவளத்தூன்
செம்பொற்கிரி திரித்த செண்டு" 
எனவே காஞ்சிபுரத்தில் உள்ள தாரா தேவியின் கோட்டத்தில் காவலாக மெய்சாத்தனாகிய இந்திரன் இருந்தான் என்ற இந்த விளக்கத்தை உறுதிபடுத்தும் வகையில் கி.பி 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரியார் பாடல் வரிகள் அமைந்துள்ளன 
'கவுரி திருக் கோட்டமமர்ந்த
இந்திரர் தம்பிரானே'
 நேபாள நூலும் அடியார்க்கு நல்லாரின் மேற்கோள் பாடலும் ஒன்று போலவே அமைந்துள்ளன.
நேபாள நூல் - ஒட்டியாணம்
மேற்கோள் பாடல் - கச்சி
கச்சி என்ற ஊரே காஞ்சி என அழைக்கப்படுகின்றது. காஞ்சி என்றல் இடுப்பில் அணியும் அணி என்று பொருள். அதாவது ஒட்டியாணம் என்னும் பொருள் ஒட்டியாணம் என்ற அணி மணிமேகலை என்றும் அழைக்கப்பெறும்.
நேபாள நூல் - மங்கா கோஷ்டம்
மேற்கோள் பாடல் - காமக்கோட்டம்
நேபாள நூல் - தாரா
மேற்கோள் பாடல் - வளைக்கைச்சி (வளையல் அணிந்த கரங்களை உடையவள்)
நேபாள நூல் - வஜ்ரபாணி
மேற்கோள் பாடல் -மெய்ச்சாத்தன்
இவ்வாறு மங்காகோஷ்டம் அல்லது காமக்கோட்டமும் அதன் காவல் தெய்வம் வஜ்ரபாணி அல்லது மெய்ச்சாத்தனுமே இன்று காஞ்சிபுரத்தின் காளி கோட்டமாகிய காமாட்சியாகவும் அதை ஒட்டிய குமார கோட்டமாகவும் அமைந்துள்ளது. இன்றும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தின் மேற்குச் சுவரில் ஒரு சிறிய சன்னிதியில் சாத்தனின் உருவம் வைக்கப்பட்டு அதனருகில் அடியார்க்கு நல்லாரின்  மேற்கோள் பாடலும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. (சோழர் கால உற்பத்தி முறை - ஆய்வு வட்ட வெளியிடு- தலைப்பு காஞ்சி காமாட்சி கோயிலின் பௌத்த ஆதாரங்கள்) 
தமிழக தொல்பொருள் ஆய்வு துறை, கல்வெட்டு ஆய்வாளர் Dr. பத்மா தெய்வ சுந்தரம் அவர்கள் தாராதேவி காமாட்சியாக மாறிவிட்டதால் தாராதேவியின் சிறப்பு இயல்புகளாக கூறப்பட்டவை அனைத்தும் காமாட்சி அம்மனுக்கு ஏற்றி கூறப்பட்டு இருக்கின்றன என்றுரைக்கிறார். அவர் அளிக்கும் உதாரணங்கள் 
01. தாரா தேவியை பௌத்த நூல்கள் அகிலத்தின் இறைவியாகவும், போதிசத்துவர்கள் அனைவருக்கும் அன்னை என கூறுகின்றது. காமாட்சியை பிரம்மாண்ட புராணம் பிரம்மா, விஷ்ணு, சிவன் வணங்கும் தெய்வம்  என போற்றுகிறது.
02. தாரா தேவியை நேபாள நூல் ஒன்று " பீடேஸ்வரி*2 ஒட்டியான தாரா"  எனக் குறிப்பிடுகின்றது (Tamil civilization Vol 3 No 4 Kanchi and the Cultural Efflorescence of Asia P.18). காமாட்சியை பிரம்மாண்ட புராணம் மகா பீட பரமேஸ்வரி, சிம்மாசனேஸ்வரி  எனக் கூறுகிறது. சேக்கிழார் தம் நூலில் 'அரம்புரப்பவள் கோவிலான போக பீடம்' என்றும் 'சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும் யோகா பீட முளதேன்றும்' கூறுகிறார்.       
03. சிலப்பதிகாரத்தில் மாதவியின்  கனவில் தோன்றிய மணிமேகலா தெய்வம் அவள் மகள் மணிமேகலையின்  எதிர்காலம் பற்றி கூறுகிறது. பிரம்மாண்ட புராணத்தில் தசரதனின் மனைவியின் கனவில் காமாட்சி தோன்றியதாக கூறப்படுகிறது. 
04. மணிமேகலையில் மணிமேகலா தெய்வம் தான் நினைத்த போது தோன்றுவதும் மறைவதுமாக உள்ள தன்மை உடையதாக வர்ணிக்கப்.பட்டுள்ளது.பிரம்மாண்ட புராணத்தில் காமாட்சியும் தான் நினைத்த போது தோன்றுவதும் மறைவதுமாக உள்ள தன்மை உடையதாக வர்ணிக்கப்.பட்டுள்ளது. (சோழர் கால உற்பத்தி முறை - ஆய்வு வட்ட வெளியிடு- தலைப்பு காஞ்சி காமாட்சி கோயிலின் பௌத்த ஆதாரங்கள்) 
தமிழக தொல்பொருள் ஆய்வு துறை, கல்வெட்டு ஆய்வாளர் Dr. பத்மா தெய்வ சுந்தரம் அவர்கள் காம கோட்டம் என்பது பௌத்தத்தின் தாக்கம் உள்ள சாதவாகன மன்னர்கள் காலத்திலேயே தோன்றிவிட்ட தேவி கோவில்களே பின்னர் அக்கோவில்களில்  மாற்றப்பட்டு விட்டதாகவும் சைவ சமயத்தின் தேவி கோவில்களும் காம கோட்டம் என்று அழக்கப்படுவதையும் விளக்குகிறார்  
01. காம கோட்டம் என்பதிலுள்ள 'காம' என்பதற்கு 'விருப்பமுள்ள', விரும்புகிற தேவி உரைகின்ற கோவில் என்று பொருள் கூறுவர். கி .பி 11ஆம் நூற்றாண்டு முதல் சிவன் கோயிலில் உள்ள தேவி சன்னதிகள் அனைத்தும் காமக் கோட்டம் என்று அழைக்கப்படுவதை பல கல்வெட்டுகள் கூறுகின்றன. 
02. சாதவாகன  மன்னர்கள். காலத்தில்  'நகர'    'நிகம'  'காம' என்று மூன்று வகை ஊர்கள் இருந்தன. இதில் காம என்பது சிறிய ஊர். இந்த ஊரில் உள்ள தேவியின் கோட்டமே காமக்கோட்டம் ஆகும்.
03. காம கோட்டம் பற்றி காலத்தால் முந்தியக் கல்வெட்டு தொண்டை மண்டல சாத்தமங்கலம் என்ற ஊரிலுள்ள இரண்டாம் நந்திவர்மன் என்ற பல்லவ மன்னனின் கல்வெட்டாகும். (Damilica Vol.I (1970) P 121 சாத்தமங்கலம் கல்வெட்டுகள் இரா. நாகசாமி ). இம்மன்னன் கி.பி எட்டாம் நூற்றண்டில் வாழ்ந்தவன். இம்மன்னனது சமகாலத்தில் வாழ்ந்த சுந்தரர் தமது காஞ்சி ஒணகாந்தன்  தளி பதிகத்தில் 
'கச்சிமூதூர் காமக் கோட்ட முண்டாக நீர்போய் ஊரிடும் பிச்சைக் கொள்வதென்னோ' என சிவனைப் பார்த்து கேட்பது போலப் பாடியுள்ளார். சாதமங்கலமும் காஞ்சியும் பௌத்த சமயப் புகழ் பெற்ற இடங்களாகும். எனவே காமக்கோட்டம் என்ற பெயர் பௌத்த சமய தாராதேவி அல்லது மங்கையின்  கோட்டமே 
04. சதாவாகன மன்னர்கள் கல்வெட்டுகளில் பிராகிருத மொழியில் 'காம' என்று அழைக்கப்படும் ஊர் சம்ஸ்கிருத மொழியில்  கிராமம் என்று அழைக்கப்படும். காஞ்சி காமகோடி மடவளாகத்தில் 1962-63 ல் இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத்துறை அழகாய்வு செய்த போது அங்கு கி.பி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த சாதவாகன  மன்னன் ருத்ர சதகர்ணி  என்பவனின் காசு கிடைத்தது. (தமிழ் நாட்டு தொல்லியல் அகழாய்வுகள் (1995) பக் 126 சு. இராஜவேலு , கோ.திருமூர்த்தி)
அது போல 1971-72 ல் சென்னை பல்கலைகழகத் தொல்லியல் துறை, காமாட்சி அம்மன் கோவிலின் அருகில் அகழாய்வு செய்த போது சாதவாகனா காலத்தை சேர்ந்த மண்ணாலான காசுகள் அச்சடிக்கும் அச்சுகளும், (Mould) தேய்ந்து போன காசுகளும் கிடைத்துள்ளன.  (Indian Archaeology A Review 1971-72 Page 42-43)
காமக்கோட்டம் என்று பிராகிருத மொழியில் அமைந்த தேவி கோவில் பௌத்த சமயத்தில் சமஸ்கிருதம் செல்வாக்கும் பெரும் முன்னரே ஏற்படுத்தப்பட்டு விட்டது  எனத் தெரிகிறது. தமிழ் நாட்டின் தலைநகர்களாகவும், துறைமுகங்களாகவும் விளங்கிய புகழ் பெற்ற ஊர்கள் எல்லாம் களப்பிர மன்னர் காலத்திலும் அதற்க்கு முன்னரும் சாத வாகன மன்னர்கள் கால ஊரமைப்புடன் கூடியதாகவே விளங்கியிருக்கின்றன.(சோழர் கால உற்பத்தி முறை - ஆய்வு வட்ட வெளியிடு- தலைப்பு காஞ்சி காமாட்சி கோயிலின் பௌத்த ஆதாரங்கள்)

குறிப்புகள் 
*1 தாரா என்ற சொல்லிற்கு கடலை கடத்தல் என்று பொருள். எனவே தாராவை  மணிமேகலை தெய்வத்துடன் ஒப்பிடலாம். Dr G. சேதுராமன்

*2 பிடகத்தை (திரிபிடகத்தை) அறிவித்தவள் என்பதால் பிடகறி, பிடாறி என்று பெயர் பெற்றாள் என்றுரைக்கிறார் பண்டித அயோத்திதாசர்.

மணிமேகலை கோவில் படங்கள் 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக