செவ்வாய், மே 31, 2011

புத்த மார்க்க வின விடை -1

க. அயோத்திதாஸ் பண்டிதர் எழுதியது

புத்த சுவாமி விவரம்

01. உமது மார்க்கம் என்ன?
   புத்த மார்க்கம்

02. புத்த மார்க்கம் என்பது எப்படி?
   புத்தராகிய சற்குரு ஜகத் ஜோதியாய் தன்னருட் கொண்டு நிர்வாண பெரும்பாட்டையைத் திறந்து அவ்வழியில் தானே முதல் முதல் சென்றதால் அவ்வழிக்கு புத்த மார்க்கம் எனப்படும்.

03. புத்தகம் என்பது என்ன?
   புத்தருடைய நீதிவாக்கியங்களையும் ஞானவாக்கியங்களையும் எழுதி அடக்கி வைத்திருக்குங் கட்டுக்கு புத்தகம் என்று பெயர்.

04. பௌத்தர் என்பது என்ன?
   புத்தர் அறத்தைக் கடைப்பித்தவர்கட்கு பௌத்தர் என்றும் புத்தறர் என்றும் பெயர்.

05. புத்தர் என்பவர் யார்?
   நம்மை ஒத்த மனிதனாக பூமியில் பிறந்து அறிவை விருத்தி செய்துக்கொண்டு உலகத்தில் உள்ள சீவராசிகளுக்கு ஞானம் இன்னது என்றும் அஞ்ஞானம் இன்னது என்றும் விளக்கி சுக வழியைக் காட்டிய ஓர் சற்குரு.

06. இம்மகாத்துமா புத்தர் என்னும் காரண நாமதேயத்தைச் சூடாமுன் என்ன பெயரைக் கொண்டு அழைக்கப்பெற்றார்?
   சித்தார்த்தர் என்று அழைக்கப்பெற்றார்.

07. இவருக்கு சித்தார்த்தர் என்னும் பெயரை ஏன் கொடுத்தார்கள்?
   பூர்வ காலத்தில் இத்தேசத்தை அரசாண்ட முக்கிய அரசர்களுட்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தால் கலிவாகு சக்கிரவர்த்தி கணித்த அறுபது வருடத்தில் பிறந்த வருடத்தையே நாமகரணமிடும் வழக்கப்படி சித்தார்த்தி வருடம் பிறந்த புத்த சுவாமிக்கும் சித்தார்த்தா என்று அழைக்கப்பெற்றார்.

08. புத்த சுவாமியைப் போல முக்கிய அரசர்கள் இவ்வருட நாமத்தை வழங்கினார்களா?
   ஆம். நளவருடம் பிறந்தவனை நளராசன் என்றும் விக்கிரம வருடம் பிறந்தவனை விக்கிரமராசன் என்றும் மன்மத வருடம் பிறந்தவனை மன்மதராசன் என்றும் ஐயவருடம் பிறந்தவனை ஐயராசன் என்றும் வழங்கி வந்தார்கள்.

09. இவ்வகை சித்தார்த்தி என்னும் பெயரை மாற்றி புத்தர் என்னும் பெயரால் அழைக்கும்படி நேரிட்ட காரணம் என்ன?
   இவர் ஓர் சக்கிரவர்த்திக்கு ஏகபுத்திரனாகப் பிறந்து மண் என்றும் பெண் என்றும் பொன் என்றும் வழங்கும் செல்வத்திரள் தனது சுகபோகத்துக்குத் தக்கவாறு இருந்தும் உலகிலுள்ள சீவராசிகளை ஈடேற்ற வேண்டும் என்னும் கருணையினால் அவைகள் யாவற்றையும் துறந்து பலவகையான துன்பங்களை சகித்து சுகவழியாகிய ஞானத்தின் உண்மெய்க் கண்டு போதித்ததால் மெய்யன் என்னும் பொருட்பட பாலி கலையில் (புத்தம்) புத்தா என்று அழைக்கப்பெற்றார்.

10. இவர் எந்த சக்கிரவர்த்திக் குடும்பத்தில் பிறந்தார்?
   சாக்கைய குலத்தைச் சார்ந்த வீரவாகு என்னும் சக்கரவர்த்தியின் வம்ச வரிசையில் சுத்தோதயன் அல்லது மணமுகன் என்று வழங்கும் சக்கரவர்த்திக்கும் மாயாதேவி என்னும் சக்கரவர்த்தினிக்கும் பிறந்தவர்.

11. இவர் தந்தை எந்த தேசத்தை அரசாண்டு வந்தார்?
   மகத நாட்டை சார்ந்த கபிலவசத்து என்னும் பட்டணத்தை அரசாண்டு வந்தார்.

12. தற்காலத்தில் அத்தேசம் எங்குள்ளது?
   நேபாளத்தில் இருக்கின்றது. அதனை வட அயோத்தியாபுரி, சாக்கிய நகர், கயிலாசம், உத்தர கோசலம் என்றும் சரித்திரங்களில் எழுதி இருக்கின்றார்கள்.

13. சாக்கையர்கள் என்றால் என்ன?
   பூர்வகாலத்தில் கிரகங்களைக் கொண்டு வருங்காலம் போங்காலங்களை அறிந்து சொல்லக்கூடிய மேன்மையுள்ள ஓர் கூட்டத்தாருக்கு சாக்கையர், வள்ளுவர், நிமித்தகர், தீர்க்காதரிசி வருங்காலம் உரைப்போர் என்றும் வழங்கி வந்தார்கள்.

14. இவ்வகை சக்கையர் குடும்பத்தில் புத்தர் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் என்ன?
   அவருடைய சரித்திரங்களும் சாக்கையமுனி என்னும் பெயரும் போதுமான ஆதாரமாக இருக்கின்றது.

15. சாக்கையர் என்று வழங்கும் புத்தருடைய குடும்பத்தார் தற்காலம் எங்கு இருக்கின்றனர்?
   பூர்வகாலத்து அரசர், வணிகர், வேளாளர் என்ற முத்தொழிலாளர்களாலும் சிறப்புற்று இருந்த சாக்கையர்கள் தற்காலம் பறையர் என்றும், பஞ்சமர் என்றும், சாம்பார் என்றும், வலங்கையர் என்றும் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்து இருகின்றனர்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக