க. அயோதிதாஸ் பண்டிதர் எழுதியது
புத்த சுவாமி விவரம்
16. தற்காலத்திய வள்ளுவர்கள் ஆகிய சாக்கியர்கள் தங்கள் தெய்வத்தை மறவாது இருக்கின்றார்களா?
17. தற்காலம் வள்ளுவர்களும் பறையர்களும் சம்மந்தப்பட்டு இருக்கிறர்களா?
ஆம். வள்ளுவர்களைக்கொண்டே பறையர்கள் சகல காரியங்களையும் நடத்துகிறார்கள். பறையர்களுக்கு வள்ளுவர்கள் சகல உபகாரங்களையும் செய்து வருகின்றார்கள். ஆகவே பறையர்களுக்கு வள்ளுவர்களும், வள்ளுவர்களுக்கு பறையர்களும் சம்மந்தப்பட்டு இருக்கிறர்கள். நாளிது வரையிலும் பறையர் வள்ளுவர்களைத்தான் "ஐயர்" என்று வழங்குகிறார்கள்.
18. சக்கையர்கள் இவ்வகையாகத் தாழ்த்தப்பட்டு நிலை குலைவதற்கு முகாந்திரம் என்ன?
அன்னிய தேசங்களில் இருந்து இவ்விடம் வந்து குடியேறிய சில சாதியார் தாங்கள் சுய சீவனங்களுக்காக ஏற்படுத்திக்கொண்ட மதக்கோட்பாடுகளுக்கும், புத்தருடைய ஞானநீதிகள் பெரிதும் நேர்விரோதமாய் இருந்தபடியால் புத்த மதத்தை நசித்துவிடவேண்டும் என்னும் கேட்ட எண்ணங்கொண்டு அம்மதத்தைச் சார்ந்து சுத்தசீலத்தில் மேன்மைப் பெற்றிருந்த சாக்கையர்கள் பறையர் என்றும் கீழ்சாதிகள் என்றும் வகுத்து சகல விஷயங்களிலும் தலை எடுக்க விடாமல் நசித்து வருகிறார்கள்.
19. பறையர் என்று வழங்கும்படியானக் கூட்டத்தார் பூர்வ காலத்தில் கல்வியிலும் நாகரிகத்திலும் ஒழுக்கத்திலும் மேன்மை பெற்று இருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் என்ன?
திருக்குறள், ஞானகுறள், மூதுரை, ஞானவெட்டி, ஞானமதியுள்ளான் சிவவாக்கிய முதலிய நூற்கள் இயற்றி இருக்கும் விவேக முதிர்ச்சியினாலும் சோதிட நூற்களையும், வைத்திய நூற்களையும், ஞான நூற்களையும் பரம்பரையாகத் தங்கள் இருப்பில் வைத்திருந்து தற்காலம் அச்சிட்டு வெளிக்கு கொண்டுவந்த மகத்துவத்தினாலும் கணிதத்திலும் வைதியத்திலும் வித்துவத்திலும் மாறாமல் விருத்தி பெற்றுவரும் அனுபவங்களிலும் இக்குலத்தார் பூர்வ காலத்தில் சிறப்புற்று இருந்தவர்கள் என்பதையும், தற்காலத்திலும் இக்குலத்திலேயே வித்துவான்கள், புலவர் முதலிய சிரோஷ்டர்கள் அதிகரித்திருபதினாலுமே எளிதில் அறிந்துக்கொள்ளலாம்.
20. பறையர் என்று வழங்கும்படி ஆனவர்கள் பூர்வ சக்கிரவர்த்திகளின் வம்ச வரிசையைச் சார்ந்தவர்கள் என்பதற்கு அனுபவ ஆதாரம் என்ன?
சாக்கையர்கள் அன்னிய மதத்தவர்களால் நசுங்குண்டு நிலைகுலைந்து இருந்த போதிலும் தங்கள் விவாக காலங்களில் தலைப்பாகை, நெற்றிச்சுட்டி, அங்கி, நடுக்காட்டு, கேடயம், மார்பதக்கம், வெள்ளைக்குதிரை, வெள்ளைக்குடை, செடி முதலிய பதினெட்டு விருதுக்களுடன் கோலம் வந்து மூகூர்த்தம் நடத்திவரும் அனுபவங்களும் போதுமான ஆதாரமாய் இருக்கின்றது.
21. இன்னமும் இக்குலத்தார் பூர்வ சக்ரவர்த்திகளின் வம்சத்தார் என்பதற்கு ஆதாரம் ஏதும் உண்டோ?
உண்டு, பறையர்கள் மரணகாலங்களில் சவத்திற்கு முன் உயிர் விட்டவன் ஆயுதங்களாம் வாள், கொடி, குடை, கத்தி, முதலியவைகளை ஓர் கொம்பில் கட்டி, மகமேரு என்று தூக்கி வருவதாலும் இக்குலத்தோர் சக்கரவர்த்திகள் என்பதற்கும், மகமேரு மந்திரபிரானாகிய சாக்கைய புத்த பகவான் குலத்தார் என்பதற்கும் சந்தேகமே இல்லை.
22. இவர்கள் வாழும் கிராமங்களுக்கு பெரும்பாலும் சேரி என்று வழங்கி வரும் காரணம் என்ன?
சேர்ந்து வாழும் இடங்களுக்கு சேரி என்று பொருள்படும். இக்கருத்துப் பற்றியே பூர்வ புத்தமத அரசர்கள் வாழ்ந்த இடங்கட்கு சேரி என்று வழங்கி வந்தார்கள். அக்குலத்தைச் சார்ந்த இவர்கள் நாளிது வரையிலும் தாங்கள் வாழும் இடங்களுக்கு சேரி என்றே வழங்குகிறார்கள். இவற்றை ஜீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மேருமந்திர புராணம், சூளாமணி முதலிய காவியங்களில் காணாலாம்.
23. சக்கையகுல சக்கிரவர்த்தியின் வம்ச வரிசையில் பிறந்து உலகு எங்கும் சுற்றி ஞானநீதிகளைப் போதித்து வந்தார் என்பதற்கு ஆதாரம் என்ன?
தற்காலம் உலகத்தில் உள்ள பல திக்குகளிலும் பூமிக்குள் புதைந்து இருக்கும் புத்தரைப்போன்று விக்கிரகங்களும் உலகம் முழுவதும் உள்ள மனுக்களின் மொத்தத்தொகையில் அரையே அரைக்கால் பாகம் புத்த மதத்தவர்கள் இருக்கும் பெரும் தொகையும் அதற்க்கு போதுமான ஆதாரமாய் இருக்கின்றது.
24. அவ்வகை பெருந்தொகை உள்ள புத்த மதத்தவர்கள் எங்கு இருக்கின்றாகள்?
தீபெத், சீனம், பர்மா, ஜப்பான், சையாம், சிலோன், நேபால் முதலிய தேசத்தோர்கள் புத்த மதத்தவர்களாக இருப்பது அல்லாமல் ஆங்கிலேயர், அமெரிக்கர், ஜெர்மனியர், முதலியோர்களில் கல்வியில் சிறப்புற்ற அநேகர் புத்த மதத்தை தழுவி இருக்கின்கிறார்கள்.
25. புத்தர் உலகெங்கும் சுற்றி போதித்து வந்த ஞானநீதிகளால் உண்டான பலன் என்ன?
புத்த மதத்தவர்கள் வாழும் தேசங்களின் சிறப்பும் அவர்களுடைய ஒற்றுமையும் சமாதானமும் ஆறுதலும் இதற்கு பலனாகும்.
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக