தாமோதர் பள்ளத்தாக்கு திட்டங்களில் பாபாசாகேப்பின் பங்கு
01.1948 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் (DVC-Damodar Valley Project) நிறுவப்பட்டது. இந்தியாவின் முதல் பல்நோக்கு ஆற்றுப் பள்ளத்தாக்குத் திட்டம் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம் தான். தாமோதர் நதியானது ஹூக்ளி நதியின் துணை நதிகளில் ஒன்றாகும். இது மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் அமைந்துள்ளது. இத்திட்டம் ஜார்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் அமைந்துள்ள கோனார் ஆற்றின் குறுக்கே திறம்படக் கட்டமைக்கப்பட்டது.
02.பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் மார்ச் 1944 இல் CWINC மத்திய நீர்வழி மற்றும் நீர்ப்பாசன ஆணையத்தை (Central Waterways, Irrigation and Navigation Commission) அங்கீகரித்தார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 4, 1945 இல் வைஸ்ராயால் அங்கீகரிக்கப்பட்ட.து.
03.தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட இந்தியாவின் முதல் நபர் பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கரே ஆவார். இந்தியாவில் பல்நோக்கு நதித் திட்டங்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் அவரே.
Ambedkar poses for a photo with other members of the Viceroy’s Council
04. எல்லாவற்றிற்கும் மேலாக, டாக்டர் பாபாசாகேப் பின்வரும் திட்டங்களை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார், அவற்றிற்கான வரைவுத் திட்டங்களை வகுத்தார்.
1) தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் (இந்தியாவின் முதல் பல்நோக்கு நதிப் பள்ளத்தாக்குத் திட்டம்) — 1944-ஆம் ஆண்டில், 'டென்னசி பள்ளத்தாக்கு ஆணையத்தின்' (Tennessee Valley Authority) மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டது.
2) பக்ரா-நங்கல் அணை (இந்தியாவின் மிகப்பெரிய பல்நோக்கு நதிப் பள்ளத்தாக்குத் திட்டம்; இந்தியாவின் மிக உயரமான ஈர்ப்பு விசை அணை Highest gravity dam in India ).
3) சோன் நதிப் பள்ளத்தாக்குத் திட்டங்கள்.
4) ஹிராகுட் அணை (இந்தியாவின் மிக நீளமான அணை Longest dam in India ).
05. டாக்டர் பாபாசாகேப் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டத்தைச் செயல்படுத்திய திட்டமிடுபவர்களுக்கும் பொறியாளர்களுக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்கினார். 1946 ஆம் ஆண்டு வரை, தாமோதர் பள்ளத்தாக்குத் திட்டத்திற்கான பொறுப்பு பாபாசாகேப் அவர்களிடமே இருந்தது. அதன் பிறகு, அணை தொடர்பான முழுப் பணிகளும் 'தாமோதர் மேம்பாட்டுக் கழகத்திடம்' (Damodar Development Corporation) ஒப்படைக்கப்பட்டன.
06. 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில், புது தில்லியில் பாபாசாகேப் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தாமோதர் நதித் திட்டத்தின் கீழ் முதல் அணையின் கட்டுமானப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்காக 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப் பரிந்துரைக்கப்பட்டது.
தாமோதர் பள்ளத்தாக்கு திட்டம்
01.நம் நாட்டின் பல பகுதிகளில் இருந்த அணை திட்டங்களை படித்தறிந்தார் பாபா சாகிப். பிறகு வெளிநாட்டு அணை திட்டங்கள் பலவற்றையும் ஆழ்ந்து படித்தறிந்தார். பிறகு தாமோதர் பள்ளத்தாக்கு திட்டத்திற்கான அடிப்படைப் பணிகள் பாபா சாகிப் அம்பேத்கர் அவர்களால் தொடங்கப்பட்டுள்ளன.
02.எகிப்து நாட்டில் ஆஸ்வான் ஆற்றின் மீது கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட ஆங்கிலேய பொறியாளரை அழைக்கலாம் என்று வைஸ்ராய் வேவல் பாபாசகிப்பிற்கு ஆலோசனை வழங்கினார். அவரின் ஆலோசனையை நிராகரித்தார் பாபாசாகிப். ஒரு இந்தியப் பொறியாளர் ஒருவரால் தான் இப்பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்பது பாபாசாகிப்பின் விருப்பம்.
03.பஞ்சாபில் இருந்த தலைமைப் பொறியாளர் ஏ.என். கோசலா A. N. Khosla (Ajudhia Nath Khosla) அவர்களிடம் தாமோதர் பள்ளத்தாக்கு திட்டப்பொறுப்பை அளிக்க முன்வந்ததார். ஆனால் அப்பொறியாளர் பாபாசகிப் அம்பேத்கரின் தலைமையின் கீழ் பணியாற்ற முடியாது என்று மறுத்தார். இந்தியரால் தான் இப்பணி நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அம்பேத்கரின் பார்வையைப் புரிந்து கொண்ட பின்னரே ஏ.என்.கோசலா அப்பணியினை ஏற்றுக் கொள்ள சம்மதித்திருக்கிறார்.
04.தாமோதர் நதி பள்ளத்தாக்கு திட்டம் பாபாசகிப் அம்பேத்கரால் தொடங்கி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனால், இந்திய வரலாறு அத்திட்டத்துடன் தந்தையான அம்பேத்கரை இணைத்துப்பேச மறுத்து, கள்ள மவுனம் சாதிக்கிறது.
தாமோதர் பள்ளத்தாக்கு திட்ட பயன்கள்
01.வெள்ளப்பெருக்குப் பிரச்சினைகளின் காரணமாக, தாமோதர் பள்ளத்தாக்கு 'வங்காளத்தின் துயரம்' Sorrow of Bengal என்று அழைக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் கொண்ட மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலப் பகுதிகளில் வெள்ளக் கட்டுப்பாட்டு முறைகளை இத்திட்டம் வெகுவாக மேம்படுத்தியுள்ளது.
02. விவசாய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, மீன் வளர்ப்பு, காடு வளர்ப்பு மற்றும் பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்துவதிலும் இப்பள்ளத்தாக்குத் திட்டம் துணைபுரிகிறது.
03.நிலக்கரியை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் அனல் மின் நிலையங்களை அமைப்பதிலும், நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்துவதிலும் தாமோதர் நதிப் பள்ளத்தாக்குத் திட்டம் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது.
ரயில்போக்குவரத்தும் நீர்வழிப் போக்குவரத்தும்
01. இந்தியாவின் வனங்களும் (Forests) நதிகளும் (Rivers) மத்திய அரசாங்கத்தின் பொறுப்பின்கீழ் கொண்டுவரப்பட்டால், வெள்ளக்கட்டுப்பாடு, மண் பாதுகாப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
02. நீர்வளம் சம்பந்தப்பட்ட நமது கொள்கை பாசன வசதி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இருந்து வருகிறது. ரயில் போக்குவரத்துக்கும் நீர்வழிப் போக்குவரத்துக்கும் இடையே வேறுபாடு எதுவும் இல்லை. ரயில்வேக்களுக்கு மாகாண எல்லைகள் ஏதும் இல்லையென்கிற போது ஆறுகளுக்கும் அதேபோல் மாகாண எல்லைகள் எவையும் இருப்பதற்கில்லை. ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்துக்கு பாய்ந்து செல்லும் ஆறுகளுக்கு முக்கியமாக இது பொருந்தும்.
04. இதற்கு மாறாக ரயில்வேக்களுக்கும் நீர்வழிப் போக்குவரத்துகளுக்கும் இடையே நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வேறுபாடு இடம் பெற அனுமதித்து விட்டோம். இதன் விளைவாக ரயில்வேக்கள் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு (Jurisdiction of the Central Government) உட்பட்டவையாகவும், ஆறுகள் மாநில அரசாங்கங்களின் அதிகாரவரம்புக்கு (Jurisdiction of the State Government) உட்பட்டவையாகவும் ஆக்கப்பட்டுவிட்டன.
05. இந்தத் தவறால் ஏற்பட்ட பிரதிகூலங்கள், பாதகங்கள் அநேகம்; அவை கண்கூடானவை. இதற்கு இங்கு ஓர் உதாரணம்
ஒரு குறிப்பிட்ட மாநில அரசாங்கதுக்கு மின்விசை தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது இதன் பொருட்டு அந்த மாநில அரசு தனது நீர்வளங்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது. ஆனால் இதனை அது செய்ய முடியாது. ஏனென்றால் மின்விசை உற்பத்தி செய்வதற்கு அணைகட்ட வேண்டிய இடம் மற்றொரு மாநில அரசிடத்தில் அமைந்திருக்கிறது. அந்த மாநில அரசோ வேளாண்மையைப் பெரிதும் சார்ந்திருக்கும் மாநில அரசு அதற்கு மின்விசை தேவையில்லை. அதில் அதற்கு அக்கறையும் ஆர்வமும் இல்லை. மேலும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அதனிடம் போதிய பண வசதியும் இல்லை.
எனவே அணை கட்டுவதில் ஆர்வம் கொண்டுள்ள மாநில அரசை அவ்வாறு செய்ய அது அனுமதிக்காது. இது குறித்து நாம் என்ன புகார் செய்தாலும் சம்பந்தப்பட்ட அந்த மாநில அரசும் அதைப் பொருட்படுத்தாது. மாநில சுயாட்சி என்ற பெயரால் இத்தகைய நேசமற்ற போக்கை அது நியாயப்படுத்தவும் கூடும்.
06.ரயில்வேக்கள் விஷயத்தில் நாம் எத்தகைய நடைமுறையைக் கைக்கொள்கிறோமோ அதே நடைமுறையை நீர்வழிப் போக்குவரத்து விஷயத்திலும் பின்பற்றக்கூடிய விதத்தில் அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்துவது மிகவும் பயனளிக்கக்கூடிய ஒரு மாற்றமாக இருக்கும்..
குறிப்பு
01. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18
02. Dr. Babasaheb Ambedkar Writings and Speeches English Volume 10 : Dr. Ambedkar as member of the Governor-General’s Executive Council (1942-46)
